மூலப்பொருள் விலை கடுமையாக உயர்வு: முடங்கும் அபாயத்தில் அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழில்

மூலப்பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மூலப்பொருள் விலை கடுமையாக உயர்வு: முடங்கும் அபாயத்தில் அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழில்

மூலப்பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்குத் தீர்வு எப்போது கிடைக்கும் என்று இந்த துறையினர் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
பலவிதமான பொருள்களை நுகர்வோரிடம் பாதுகாப்பாக சேர்ப்பதில் அட்டைப் பெட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேளாண்மை உற்பத்திப் பொருள்கள், நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள், வெளிநாடுகளில் இருந்து இருக்குமதியாகும் உணவுப் பொருள் உள்பட பல பொருள்கள் இதில் அடங்கும். சுற்றுப்புறச் சூழலுக்கு பாதகம் ஏற்படுத்தாத இந்த அட்டைப் பெட்டிகளைத் தயாரிப்பதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தொழிலில் நேரடியாக 1 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் 25,000-க்கும் மேலான அட்டைப்பெட்டி தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 20,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) அட்டைப் பெட்டி தயாரிப்புத் தொழில் முக்கியப் பங்களித்து வருவது குறிப்பிடத்
தக்கது.
மாதம்தோறும் மூலப்பொருள் விலை உயர்வு: நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தத தொழிலில் கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிறகு, புயல் வீசத் தொடங்கியது. அட்டைப் பெட்டி தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான கிராப்ட் பேப்பர் விலை கடுமையாக உயர்ந்தது. பிப்ரவரி மாதம் டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், மார்ச் மாதத்தில் டன்னுக்கு ரூ.2 ஆயிரமும் விலை உயர்ந்தது. இதை சமாளிக்க அட்டைப் பெட்டி விலையை 25 சதவீதம் உயர்த்தினர் தயாரிப்பாளர்கள்.
டன்னுக்கு ரூ. 5,000 உயர்வு: இந்நிலையில், தற்போது மீண்டும் மூலப்பொருள் விலை டன்னுக்கு ரூ. 1,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அட்டைப் பெட்டித் தயாரிப்புத் தொழில் மேலும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய அட்டைப் பெட்டி தயாரிப்பு சங்கத்தின் தலைவர் ராஜாசங்கர் கூறியது:
ஒரு டன் மூலப்பொருள் குறைந்தபட்சம் ரூ.23,000 ஆக இருந்தது. தற்போது வரை டன்னுக்கு ரூ. 5,000 உயர்ந்து, ரூ. 28,000 ஆக இருக்கிறது. இதுதவிர, கலால் வரி 6 சதவீதம் உள்பட பல வரிகள் சேர்த்து ஒரு டன் மூலப்பொருளுக்கு மொத்தம் ரூ. 30,000 செலவிடப்படுகிறது. இப்படி மாதம்தோறும் விலை ஏற்றப்படுவதால், தொழிலைத் தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து, தொழிலை நடத்தி வந்தநிலையில், தற்போதயை நிலையால், துயரத்தின் உச்சத்தில் உள்ளோம். இதேநிலை தொடர்ந்தால், மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படும். தவிர, இதைச் சார்ந்த மற்ற தொழிலாளர்களும் பாதிக்கும் நிலை இருக்கிறது. இதற்கு தமிழகஅரசு தீர்வு காணவேண்டும்.
அட்டைப்பெட்டி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருளை வழங்கும் காகித ஆலைகள் கூட்டு சேர்ந்து, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்தி வருகின்றன. இதை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கிராப்ட் பேப்பர் அதிக அளவு இருக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருள் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பழைய அட்டை விலை ஏற்றம் கண்டதாக காகித ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பழைய அட்டை விலை குறைந்துள்ளது. ஆனாலும் மூலப்பொருள் விலையை காகித ஆலைகள் உயர்த்தி வருகின்றன என்றார் ராஜாசங்கர்.
ஆனால் "செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தவில்லை; மீண்டும் பயன்படுத்தப்படும் பழைய காகிதம் விலை உயர்ந்தது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கழிவு காகிதம் விலை அதிகரித்தது ஆகிய காரணங்களால், கிராப்ட் பேப்பர் விலை உயர்ந்துள்ளது' என்று காகித ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது பற்றி தமிழ்நாடு காகித ஆலை கூட்டமைப்பு செயலாளர் நந்திகேஸ்வரன் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து காகிதக் கழிவு இறக்குமதி குறைந்துள்ளது. காகிதக் கழிவுகளை மொத்தமாக சீனா கொள்முதல் செய்து கொள்வதால், இந்தியாவுக்கு இறக்குமதி குறைந்துள்ளது. மூலப்பொருள்கள் பற்றாக்குறையால், காகித ஆலைகள் தற்போது 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உற்பத்தியைக் குறைத்துள்ளன. இந்த நிலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையில், அகில இந்திய அட்டைப் பெட்டி தயாரிப்பு கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், மிகப்பெரிய சவால்களை சந்தித்து வரும் அட்டைப் பெட்டி தயாரிப்புத் தொழிலைக் காப்பாற்றுவது தொடர்பாக விவாதித்தனர்.
மேலும், மூலப்பொருள் மீது செயற்கைத் தட்டுப்பாட்டை தடுக்க இந்திய போட்டி ஆணையத்தில் (சிசிஐ) புகார் தெரிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
தொடர் நடவடிக்கைகளின் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com