தோல் தொழிலில் புதிய நெருக்கடி

ஜிஎஸ்டி நடைமுறைக்குப் பிறகு இந்திய தோல் தொழில் புதிய நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
தோல் தொழிலில் புதிய நெருக்கடி

ஜிஎஸ்டி நடைமுறைக்குப் பிறகு இந்திய தோல் தொழில் புதிய நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
இந்திய வர்த்தகத்தில் தோல் தொழில் மூலமாக ஆண்டுக்கு 1785 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு தோல் மற்றும் தோல் பொருட்கள் வர்த்தகம் நடைபெறுகிறது. உலக அளவில் தோல் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.39 சதவீதமாகும். மத்திய அரசு தோல் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. 
இத்தகைய சூழ்நிலையில் ஜிஎஸ்டி நாடு முழுவதும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. 
தோல் மற்றும் தோல் பொருட்களுக்கு 5, 12, 18, 28 என்ற விகிதங்களில் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி சம்பந்தமான கணக்குகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வழிமுறைகள் எளிதாக இல்லாததால் கூடுதல் பணிப்பளு ஏற்படுகிறது எனப் பரவலான புகார் குரல்கள் எழுந்துள்ளன.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு தோல் மற்றும் தோல் பொருட்களுக்கான வரி விகிதங்கள் அதிகரிப்பால் தோல் தொழில் கடும் சரிவை கண்டுள்ளது. இந்தியாவில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக ரூ.3,500 கோடி நடைமுறை மூலதனம் தேவைப்படுகிறது. ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கும், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத வணிகர்கள், தொழில் முனைவோரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு ரிவர்ஸ் சார்ஜ் முறையில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதாலும், மேலும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருப்பதால் கூடுதல் நடைமுறை மூலதனம் தேவைப்படுகிறது. நடைமுறை மூலதன பற்றாக்குறை காரணமாக தோல் தொழிற்சாலைகள் தொழிலை நடத்துவதற்கு பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. 
இத்தொழிலில் 80 சதவீத அளவுக்கு குறு, சிறு தொழில் முனைவோர்தான் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனத்தை கடனாக வழங்க வங்கிகள் கூட தயக்கம் காட்டுகின்றனர். அதனால் தோல் தொழிலை நடத்தி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தோல் ஏற்றுமதி 15லிருந்து 20 சதவீதம் வரை குறையக் கூடிய வாய்ப்பு உள்ளது.
தோல்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், தோல் பொருட்கள் மற்றும் காலணிகளுக்கு ஜாப் ஒர்க் பணிக்கும், தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், தோல் பொருட்கள், கையுறைகளுக்கு 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென்று தோல் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
45 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் தோல் தொழிற்சாலைகளின் மூலம் ஆண்டுக்கு 600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி) மதிப்பிலான தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தோல் மற்றும் தோல் பொருட்கள், தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு சேவை, ஜாப்ஒர்க் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 
கதர் மற்றும் கிராம தொழில்களுக்கு
வரிவிலக்கு இல்லை
கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்திற்கு தோல் சப்ளை செய்தபோது ஏற்கெனவே அமலில் இருந்த வாட் வரி சட்டத்தில் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் கீழ் பதிவு செய்தவர்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தோல் மற்றும் தோல் பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
தோல் மற்றும் தோல் பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைக்க வேண்டும். நடைமுறை மூலதன பற்றாக்குறையை போக்க நடைமுறை மூலதனக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாகப் பரிசீலனை செய்து, தோல் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து தோல் தொழிலில் ஈடுபட்டு வரும் முஹம்மத் சனாவுல்லா கூறியது: 6 மாதத்திற்கு ஒரு சீசன் என்ற முறையில், 6 மாதங்களுக்கு முன்பே தோல் மற்றும் தோல் பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிய தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலதிபர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுஆர்டர் பெறப்படுகிறது. ஜிஎஸ்டி அமல் செய்யப்படுவதற்கு முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு தோல் மற்றும் தோல் பொருட்களை சப்ளை செய்வதில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறோம். தற்போது ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரிவிகிதங்கள் அதிகரித்துள்ளதால் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கான பொருட்களின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் முன்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விலையிலேயே சப்ளை செய்ய வேண்டுமென கூறுவதால் நஷ்டத்தில் பொருட்களை சப்ளை செய்ய வேண்டியுள்ளது. நிறுவனத்திற்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக நஷ்டத்தில் பொருட்களை சப்ளை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை குறு, சிறு தொழில் முனைவோர் தான் சப்ளை செய்கின்றனர். ஜிஎஸ்டியால் தோல் மற்றும் தோல் பொருட்களுக்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதால் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடந்த 3 மாத காலமாக எந்தவித ஆர்டரும் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடமுள்ள பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. தொழில் முடங்கிப்போயுள்ளது. 3 மாத காலமாக தொழில் நடைபெறவேயில்லை. தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு சென்று சுத்திகரிக்க 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதனை மூலதன உள்ளீட்டு சலுகையாக (இன்புட் கிரெடிட்) பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com