சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எதிரொலி

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எதிரொலி

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 22-ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படலாம், ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படலாம் போன்ற பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் சந்தை வட்டாரத்தில் நிலவியது. 
மேலும், சிறிய மற்றும் நடுத்தர வகை நிறுவனங்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் உள்ளீட்டு வரியை வேகமாக திருப்பி அளிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற நிலைப்பாடும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. 
வேலைவாய்ப்பு புள்ளிவிவரம், வரி சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. இதுவும், இந்தியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது.
உலக அளவில் உலோக பொருள்களின் விலை அதிகரித்து வருவதையடுத்து, அத்துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு அவற்றின் விலை 3.14 சதவீதம் வரை உயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, எண்ணெய்-எரிவாயுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 2.09 சதவீதமும், பொதுத் துறை 1.81 சதவீதமும், மின்சாரம் 1.24 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.23 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 1.16 சதவீதமும், தொழில்நுட்பம் 1.01 சதவீதமும், மருந்து துறை நிறுவனப் பங்குகளின் விலை 0.91 சதவீதமும் அதிகரித்தன.
பிஎஸ்இ ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனப் பங்குகளின் விலை 1.09 சதவீதம் வரை அதிகரித்தது.
வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.519.03 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர். அதேசமயம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.656.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக செபி வெளியிட்ட தாற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத கால அளவில் உருக்கு விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 59.80 லட்சம் டன்னை எட்டியது என டாடா ஸ்டீல் தெரிவித்தது. இதையடுத்து, சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள அந்த நிறுவனத்தின் பங்கின் விலை 4.73 சதவீதம் உயர்ந்து ரூ.691.40-ஆனது.
ஸன் பார்மா 3.19 சதவீதம் உயர்ந்து ரூ.530.40-ஐ தொட்டது.
என்டிபிசி, எஸ்பிஐ, யுனிலீவர், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லூபின், கோல் இந்தியா, மாருதி சுஸுகி, எல் & டி, அதானி போர்ட்ஸ், விப்ரோ, ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. 
இவைதவிர, கோட்டக் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவிலான ஏற்றத்தை சந்தித்தன.
அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி, டாக்டர் ரெட்டீஸ், பவர் கிரிட் பங்குகளின் விலை 1.42 சதவீதம் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் அதிகரித்து 31,814 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 91 புள்ளிகள் அதிகரித்து 9,979 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com