தொலைதொடர்புத் துறையில் 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் தொலைதொடர்புத்துறையில் பணியாற்றும் 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொலைதொடர்புத் துறையில் 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

இந்திய தொலைதொடர்பு வர்த்தகத்துறையில் ஏற்பட்டு வரும் இழப்பின் காரணமாக 1,50,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் தொலைதொடர்பு வசதியானது 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறையை நோக்கி பயணிக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அப்போது அந்த நிறுவனத்தின் சிம் கார்டுகள் மட்டும் அல்லாமல் 1 வருடத்துக்கான இலவச சேவையையும் வழங்கியது. 4ஜி தொழில்நுட்பத்தில் அளவில்லா அழைப்பு, 100 எஸ்.எம்.எஸ், நாள் ஒன்றுக்கு 4ஜி வேகத்தில் 1 ஜிபி வரையிலான இன்டர்நெட் என சலுகைகளையும் வழங்கியது.

மேலும், இக்காலகட்டத்தில் 4ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட மொபைல் ஃபோன்களும் சந்தையில் குறைந்த விலையில் விற்பனையைத் துவங்கின. இதனால் பலர் தாங்கள் முன்பு உபயோகப்படுத்திய இதர நெட்வொர்க் சேவைகளில் இருந்து ஜியோவுக்கு மாறினர். இதன்காரணமாக இந்தியாவின் தொலைதொடர்புத்துறையில் கோலோச்சி வந்த தனியார் துறையான ஏர்டெல், பெரும் பின்னடைவைச் சந்தித்து. அதுவரையில் அதிக விலையில் இருந்த ஏர்டெல் சலுகைகள் ஜியோவின் வரவுக்குப் பின் குறைக்கப்பட்டது.

இதனால் தொலைதொடர்புத்துறை வர்த்தகத்தில் இதர நிறுவனங்களின் லாபம் கடந்த 6 மாதங்களில் மட்டும் 67 சதவீதமாக குறைந்தது. மொத்த தொலைதொடர்புத்துறையின் பங்கு வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மட்டும் 34 சதவீதம் ஆகும். ஜியோவின் வரவால் ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 72 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2016-17 காலகட்டத்தில் மட்டும் அந்நிறுவனத்துக்கு ரூ. 373.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு நிறுவனமான வோடஃபோன் 10 சதவீத சரிவை சந்தித்தது. வர்த்தக நிறுவனங்களின் கூற்றின் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் (2016-17) மட்டும் தொலைதொடர்புத்துறையின் பொது வர்த்தகத்தில் ரூ. 1.88 லட்சம் கோடிக்கு பங்கு வர்த்தகத்தின் நிகர லாபத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் ரூ. 1.84 லட்சம் கோடிக்கு மேலும் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2016 நதியாண்டில் தொலைதொடர்புத்துறையின் பங்கு வர்த்தகத்தின் நிகர லாபம் 6.8 சதவீதம் தான் என்ற நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாய் 24 சதவீதம் உயர்த்தப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தின் போது ஜியோ அல்லாத இதர நிறுவனங்கள் ரூ. 3,45 லட்சம் கோடிக்கு உரிமம் பெற்றன. இது 2028-29ம் ஆண்டு நிதியாண்டு வரை வேறுபடும். அதுமட்டுமல்லாமல் 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டின் போது நடந்த இழப்பு காரணமாகவும் தொலைதொடர்புத்துறை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வருவாய் இழப்புகளை ஈடுகட்டும் நோக்கத்தோடு தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஐடியா நிறுவனம் வோடஃபோனுடன் இணைந்தது. 

ஜியோவின் இந்த தொலைதொடர்பு சூறாவளியில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியும் தப்பவில்லை. அவரது நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ. 25,000 கோடி வர்த்தக சரிவை கண்டுள்ளது. இதனால் தனது நிறுவனத்தை ஏர்செல் உடன் இணைத்து விட்டார். டாடா நிறுவனமும் ரூ. 34,000 கோடி வியாபார சரிவை சந்தித்துள்ளது.  

இதுபோன்ற தொடர் வருவாய் இழப்பு, பங்கு வர்த்தக இழப்பின் காரணமாக அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் அதனை ஈடுசெய்யும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அலைக்கற்றையால் ஏற்படும் இழப்புகளை தடுக்கும் விதமாக நிறுவனங்களை இணைப்பதன் மூலம் பங்கு வர்த்தகத்தை மேம்படுத்தியும் வருகின்றன.

ஆனால் இந்த இணைப்பு நடவடிக்கைகள் மற்றும் நிகர லாபத்தின் சரிவு உள்ளிட்ட காரணங்களால் அந்நிறுவனங்களின் பணிபுரியும் பலரது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது வரை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1,200 பேரையும், டாடா நிறுவனம் 5,000 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக (Crisil) நடத்திய ஆய்வின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இனி வரும் காலங்களில் தொலைதொடர்புத்துறையில் நிகழும் பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை இதன்காரணமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com