இரு மடங்கு ஆகுமா முட்டைத் தூள் ஏற்றுமதி? சலுகைகளை எதிர்நோக்கி உற்பத்தியாளர்கள்

இந்திய முட்டைத் தூள் ஏற்றுமதி ஆலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இரு மடங்கு ஆகுமா முட்டைத் தூள் ஏற்றுமதி? சலுகைகளை எதிர்நோக்கி உற்பத்தியாளர்கள்

இந்திய முட்டைத் தூள் ஏற்றுமதி ஆலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை கிராமங்களில் கோழி வளர்ப்பு என்பது உபதொழிலாக உள்ளது. தமிழகத்தில், குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, சேலம் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கோழிப் பண்ணைகளை அமைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். வறட்சிக் காலங்களில் விவசாயிகளை கைதூக்கிவிடுவது கோழி வளர்ப்புத் தொழில்தான். 
இத்தொழிலின் வளர்ச்சிக்கு முட்டை பதப்படுத்தும் ஆலைகள் பெரிதும் உதவுகின்றன. பண்ணைகளில் கூடுதலாக உற்பத்தியாகும் முட்டைகளைப் பதப்படுத்தி, தூளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் முட்டை விலை வீழ்ச்சியை முட்டை பதப்படுத்தும் ஆலைகள் தடுக்கின்றன. 
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இப்போது ரூ. 500 கோடிக்கு முட்டைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இதை ரூ. 1,000 கோடியாக உயர்த்த மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக முட்டை பதப்படுத்தும் ஆலைகள் காத்திருக்கின்றன.
இதுகுறித்து, இந்திய முட்டை பதனிடுவோர் சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.ஷிவ்குமார் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து பெரும்பாலும் ஜப்பானுக்குத்தான் முட்டைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பானில் முட்டை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கு, அந்நாடு சில சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால், இந்திய முட்டை ஏற்றுமதியாளர்களால் அந்த சலுகையை இதுவரை பெற முடியவில்லை.
ஜப்பானுக்கு நம் நாட்டிலிருந்து இப்போது ஆண்டுக்கு 1,360 டன் முட்டை வெள்ளைக் கரு தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ஜப்பான் சந்தையில் 12 சதவீத பங்கு ஆகும். அதேபோல, முட்டை மஞ்சள் தூள் இப்போது ஆண்டுக்கு 332 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ஜப்பான் சந்தை வர்த்தகத்தில் 14 சதவீத பங்கு ஆகும். முழு முட்டைத் தூள் ஆண்டுக்கு 1,036 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ஜப்பான் சந்தையில் 33 சதவீத பங்கு ஆகும்.
ஜப்பானைப் பொருத்தவரை, இந்திய முட்டை வெள்ளைக் கரு தூளுக்கு இப்போது 8 சதவீத இறக்குமதி வரியும், மஞ்சள் கரு தூளுக்கு 18.8 சதவீத இறக்குமதி வரியும், முழு முட்டை தூளுக்கு 21.3 சதவீத இறக்குமதி வரியும் விதிக்கப்படுகிறது. 
முட்டை வெள்ளைக் கரு தூள் வர்த்தகத்தில் ஜப்பான் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு ஐரோப்பிய நாடுகளுடன், இந்தியா கடும் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. 2012-இல் ஜப்பானுடன் செய்துகொண்ட பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தால் மெக்ஸிகோ நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வெள்ளைக் கரு தூளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2014-ஆம் ஆண்டில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஆஸ்திரேலியாவுக்கும் வெள்ளைக் கரு தூளுக்கு அதே சலுகையை ஜப்பான் வழங்கியுள்ளது. அதேபோல, முட்டை மஞ்சள் தூள், முழு முட்டை தூள் ஆகியவற்றுக்கும் அடுத்த 5 ஆண்டுகள் வரை இறக்குமதி வரியில் இருந்து 50 சதவீத விலக்கும், அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்கு 75 சதவீத வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் பல்வேறு சிறப்பு சலுகைகளைப் பெற்றுள்ளன. எனவே, இந்தியாவும், ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய முட்டைத் தூளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், இப்போது சலுகை பெற்ற நாடுகள் ஜப்பான் சந்தையில் முழு ஆதிக்கம் செலுத்தி இந்திய முட்டைத் தூள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்திய முட்டைத் தூள் ஏற்றுமதி வீழ்ச்சியைச் சந்திக்கும்.
வெளிநாடுகளில் உள்ள முட்டை ஏற்றுமதி ஆலைகளை ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள ஆலைகளில் பதப்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகள் அமைக்க அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, ஜவுளி ஆலைகளுக்கு அமல்படுத்துவதுபோல முட்டை ஆலைகளுக்கும் "டஃப்' திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com