மைக்ரோமேக்ஸின் பாரத் 4ஜி போனில் வரம்பற்ற இலவச அழைப்பு, டேட்டா: பிஎஸ்என்எல் திட்டம் அறிவிப்பு

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.2,200 விலையுள்ள பாரத் 4ஜி போனில், மாதத்துக்கு ரூ.97 கட்டணத்தில் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா சலுகை திட்டத்தை பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
மைக்ரோமேக்ஸின் பாரத் 4ஜி போனில் வரம்பற்ற இலவச அழைப்பு, டேட்டா: பிஎஸ்என்எல் திட்டம் அறிவிப்பு

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.2,200 விலையுள்ள பாரத் 4ஜி போனில், மாதத்துக்கு ரூ.97 கட்டணத்தில் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா சலுகை திட்டத்தை பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி நிதி நிலைமையும் மேம்படும். மேலும், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை அதிகரிக்கச் செய்வதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் அவர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்ததாவது:
உள்நாட்டு நிறுவனம் மைக்ரோமேக்ஸýடன் இணைந்துள்ளது பெருமைக்குறிய விஷயம். இதன் மூலம், கிராமப்புறப் பகுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவை அளிப்பது சாத்தியமாகியுள்ளது. மைக்ரோமேக்ஸின் பாரத் போன் மூலம் ரூ.97 மாத கட்டணத்தில் வரம்பற்ற இலவச அழைப்புகள், டேட்டா சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம். வரும் 2018 ஜனவரியில் 4 ஜி சேவையை தொடங்க ஆயத்தமாகி வருகிறோம் என்றார் அவர். 
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா கூறியதாவது:
மைக்ரோமேக்ஸின் 4ஜி வோல்டி தொழில்நுட்பம் அடங்கிய பாரத் போனுடன் பிஎஸ்என்எல் இணைந்து குறைந்த கட்டண திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இரட்டை சிம் வசதி கொண்ட இந்த பாரத் போனின் விலை ரூ.2,200-ஆகும். 3ஜி தொழில்நுட்பத்திலும் இது செயல்படக்கூடியது. சந்தையில் இதர பிராண்ட் போன்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைந்த விலை கொண்ட 4ஜி போனாகும் என்றார் அவர். 
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு, புது தில்லி, மும்பை தவிர, நாடு முழுவதும் 9.8 கோடி மொபைல் வாடிக்கையாளர்களும், 1.60 கோடி தரைவழி தொலைபேசி சந்தாதாரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com