ஹெச்பிசிஎல் நிறுவனம் ரூ.7,110 கோடியில் வர்த்தக விரிவாக்கம்

பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் விநியோக நிறுவனமான ஹெச்பிசிஎல் விரிவாக்க திட்டங்களுக்காக நடப்பு ஆண்டில் ரூ.7,110 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹெச்பிசிஎல் நிறுவனம் ரூ.7,110 கோடியில் வர்த்தக விரிவாக்கம்

பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் விநியோக நிறுவனமான ஹெச்பிசிஎல் விரிவாக்க திட்டங்களுக்காக நடப்பு ஆண்டில் ரூ.7,110 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எம்.கே. சுரானா தெரிவித்ததாவது:
இந்தியாவில் தனிநபர் எரிசக்தி பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக எண்ணெய்-எரிவாயு துறைக்கு பிரகாசமான அதேசமயம் சவாலான எதிர்காலம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறப்பான வர்த்தக வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் மூலதன செலவினங்களுக்காக ரூ.5,860 கோடியை ஒதுக்கீடு செய்தோம். இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.7,110 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். 
ஹெச்பிசிஎல் நிறுவனத்தை ஓஎன்ஜிசியுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இணைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.61,000 கோடி மூலதன செலவினத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் ஹெச்பிஎல்லை இணைப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவே கையகப்படுத்தலின் மதிப்பை முடிவு செய்யும்.
ஓஎன்ஜிசியுடனான இணைப்புக்குப் பிறகு எம்ஆர்பிஎல் நிறுவனத்தை ஹெச்பிசிஎல் ஏற்று நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஹெச்பிசிஎல்லுடன் எம்ஆர்பிஎல் இணைவதற்கு நியாயமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஓஎன்ஜிசியுடன் ஹெச்பிசிஎல் இணைந்து செயல்படுவது என்பது எண்ணெய்-எரிவாயு உற்பத்தி துறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதுடன், குறைந்த செலவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய உதவும். நாட்டின் பெட்ரோ கெமிக்கல் தயாரிப்பு முனையம் மற்றும் சுத்திகரிப்பு துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கவும் உதவும். மேலும், தேசிய அளவில் இயற்கை எரிவாயுக்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன், அதன் மூலம் மாசுபாடு குறைந்த பொருளாதாரத்துக்கு இட்டுச் செல்ல முடியும். 
விரிவாக்க திட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் பார்னர் என்ற இடத்தில் ரூ.43,129 கோடி செலவில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல் கெமிக்கல் ஆலையை கூட்டுத்திட்டத்தின் மூலம் அமைப்பது தொடர்பாக அந்த மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 74 சதவீத பங்குகளை ஹெச்பிசிஎல் நிறுவனமும், எஞ்சிய பங்களிப்பை ராஜஸ்தான் அரசும் வழங்கும். இதுதவிர, விசாகப்பட்டினத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலையையும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஹெச்பிசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமாக மிகப்பெரிய மசகு எண்ணெய் ஆலை உள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தி திறன் 4.28 லட்சம் டன். நாட்டின் ஒட்டுமொத்த மசகு எண்ணெய் உற்பத்தியில் இது 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்பிசில் நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளை ஓஎன்ஜிசிக்கு ரூ.35,000 கோடிக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மேற்பார்வையிடவும், அந்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைச்சர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது நினைவுகூரத்தக்கது. 
ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள 51.11 சதவீத பங்குகளை (தற்போதைய விலையில் அதன் மதிப்பு ரூ.28,800 கோடி) ஓஎன்ஜிசி கையகப்படுத்திய பிறகும், ஹெச்பிசிஎல் நிறுவனம் தனி நிர்வாக குழு, தனிப்பட்ட பிராண்ட் அடையாளம் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவே விளங்கும்.
இந்த இணைப்புக்குப் பிறகு, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு விடும். ஓஎன்ஜிசியின் துணை நிறுவனமாக ஹெச்பிசிஎல் இயங்கும். இதையடுத்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக அது உருவெடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com