நெருக்கடியில் ஜவுளித் துறை: ஏற்றுமதிக்கான சலுகைகள் தொடருமா?

ஏற்றுமதிச் சலுகைகள் அடுத்த 2 வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதால், தமிழக ஜவுளித் துறை நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. சலுகைகளைத் தொடர்வதே துறையின் வளர்ச்சிக்கும், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புக்கும்
நெருக்கடியில் ஜவுளித் துறை: ஏற்றுமதிக்கான சலுகைகள் தொடருமா?

ஏற்றுமதிச் சலுகைகள் அடுத்த 2 வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதால், தமிழக ஜவுளித் துறை நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. சலுகைகளைத் தொடர்வதே துறையின் வளர்ச்சிக்கும், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புக்கும் உதவுவதாக இருக்கும் என்கின்றனர் ஜவுளித் தொழில்துறையினர்.
இந்தியாவில் பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் தொழில்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி, ஜவுளித் தொழில் துறையினர் தங்களது தயாரிப்புகளான பின்னலாடை, ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும்போது அரசுக்குச் செலுத்தும் வரியினங்களை, அரசு பின்னர் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கும்.
வரியினங்களை திரும்ப வழங்கும் இந்த நடைமுறை "டியூட்டி டிராபேக்' எனப்படுகிறது. அதன்படி, வெளிநாலிடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்த பின்னர், பயன்படுத்திய மூலப் பொலிருள்களின் விவரம், ஆடைகளின் மொத்த மதிப்பு, மூலப் பொலிருள்களின் கொள்முதல் விலை உள்ளிட்ட விவரங்களை சுங்க வரித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஆடைகளின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீத வரி அவர்களுக்குத் திருப்பி வழங்கப்படும்.
புதிய டியூட்டி டிராபேக் திட்டத்தின்படி பருத்தி ஆடைகளுக்கு 7.5 சதவீதமும், விஸ்கோஸ் இழை ஆடைகளுக்கு 9.5 சதவீதமும், செயற்கை இழை ஆடைகளுக்கு 9.8 சதவீதமும் டியூட்டி டிராபேக் உள்ளது.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட நிலையில், மதிப்புக் கூட்டு வரி, சுங்க வரி ஆகியவை அதில் உள்ளடங்கிவிட்டன. புதிய வரியின்படி ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரியினங்கள், உள்ளீட்டு வரி வரவு (இன்புட் கிரெடிட்) வாயிலாகத் திரும்ப வழங்கப்பட்டுவிடும் என்பதால், தற்போதைய டியூட்டி டிராபேக் விகிதம் 2 சதவீதமாகக் குறைந்துவிடும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்த புரிதல் ஏற்படும் வரையிலும் மாற்று ஏற்பாடு தேவை என்று தொழில்துறையினர் கோரியதால், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை டியூட்டி டிராபேக் முறை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது. 
எனவே, அக்டோபர் மாதம் முதல் 2 சதவீதம் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏற்றுமதியாளர்கள் புதிய ஆர்டர்களை ஏற்றுக் கொள்ளவும், உறுதி செய்யவும் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போதைய விலைக்கு ஆர்டர்களை வாங்கிவிட்டு, வரிச் சலுகை இல்லாமல் போனால் ஆடைகளின் விலையை உயர்த்த நேரிடும். வாங்குபவர்களுடன் அப்போது சச்சரவு ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.
மாற்றுச் சலுகைத் திட்டம் வேண்டும் இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியதாவது: 
சுங்க வரி, வாட் வரி ஆகியவை ஜி.எஸ்.டி.க்குள் வந்து விட்ட நிலையில், தாற்காலிக நிவாரணம் வழங்கும் பேச்சு எழுந்தபோது, இவை வேண்டுமா, டிராபேக் வேண்டுமா என்று அரசால் கேட்கப்பட்டது. டிராபேக் சதவீதமே அதிகம் என்பதால் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்.
ஆனால், அக்டோபர் 1 முதல் சுங்கம், சேவை, வாட் போன்று என்னென்ன வரி கட்டுகிறோமோ அவற்றை மட்டுமே திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு 9 சதவீதம் வரை அரசின் சலுகை குறைகிறது. இதனால் புதிதாக ஏற்றுமதிக்கான ஆர்டர்களை உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு உடனடியாக மாற்று ஊக்கத்தொகைத் திட்டம் வேண்டும்.
தற்போது, தீபாவளிப் பண்டிகை நேரம் என்பதால் ஆர்டர்களைத் தவிர்க்க முடியாத சில ஏற்றுமதியாளர்கள், தங்களிடம் பொருள்களை வாங்குபவர்களிடம் விலையை அதிகமாகக் கேட்டு வருகின்றனர். அதேபோல, நூல் உற்பத்தியாளர், சாயமிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல படிநிலைகளில் இருப்பவர்களிடம் விலையை குறைத்துக்கேட்டு இழப்பை சமாளிக்க முயன்று வருகின்றனர்.
எனவே, விரைவில் டிராபேக் அல்லது வேறு விதமான சலுகையை அரசு வழங்காவிட்டால் ஜவுளி ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறைந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்படும் என்றார்.
போட்டித் திறனை பாதிக்கும்
வரிச் சலுகைகளைக் குறைப்பது பிற நாடுகளுடன் நாம் போட்டியிடும் திறனை பாதிக்கும் என்கிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் பி.நடராஜ்.
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான வரிச் சலுகை நிறுத்தப்படும் நிலை உருவானால் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்படும். இதனால், ஆயத்த ஆடை உற்பத்தி மட்டுமின்றி பஞ்சாலைகள், நூற்பாலைகளும் வெகுவாக பாதிக்கப்படும்.
ஏற்கெனவே பஞ்சு வாங்கிய விலைக்கும், நூல் விற்கும் விலைக்கும் இடையே வித்தியாசம் அதிகரிப்பதால், ஆலைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிராபேக் சலுகை ரத்தானால் ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் பாதிக்கப்படும். மேலும், இது வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் போட்டியிடக் கூடிய நமது திறனையும் குறைக்கும். 
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படக் கூடாது என்றால், வரியைத் திருப்பியளிக்கும் சலுகையைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தெளிவு கிடைத்துவிட்டால் வியாபாரம் சிறக்கும்
வரியினங்களை திரும்ப வழங்கும் நடைமுறை விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்பட்டுவிட்டாலே, வியாபாரம் நன்றாக நடக்கும் என்கிறார் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிரபு தாமோதரன்.
ஜவுளித் துறையில் நேரடியாக ஜி.எஸ்.டி. செலுத்துவது என்பது முடியாத காரியம். ஏனெனில், இந்தத் துறையில் பருத்தி, ஆடையாக மாறுவது வரை பல இடங்களில் மற்றவர்களுக்கு ஜாப் ஒர்க் வழங்க வேண்டியுள்ளது. இதனால் யாருக்கு எவ்வளவு சதவீதம் வழங்குவது என்பது தெரியவில்லை. இதில் பலருக்கும் குழப்பமான நிலையே உள்ளது. எனவே, டியூட்டி டிராபேக் விவகாரத்தில் அரசு விரைந்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். 
எங்களைப் பொருத்த வரை இந்தச் சலுகை தொடருவதே நல்லது. ஆனால், அரசு என்ன முடிவு செய்யும் என்று தெரியவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் உடனடியாக அறிவித்துவிட்டால் ஒரு தெளிவு கிடைக்கும். அதன்பிறகு அதற்கேற்ப வியாபாரத்தைச் செய்ய முடியும் என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி சரிவு
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகரித்த ஏற்றுமதி, 2-ஆவது காலாண்டில் குறைந்துள்ளது. அதேபோல, ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் சரிந்திருப்பது புள்ளி விவரங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
நாட்டின் ஆடை ஏற்றுமதி சராசரியாக மாதத்துக்கு ரூ. 10,000 கோடியாக இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ. 11,000 கோடி வரையிலும் இது உயர்ந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 4 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 8,904 கோடியாக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, இந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ. 8,556 கோடியாகச் சரிந்துள்ளது. இது 3.91 சதவீதமாகும். இருப்பினும் இந்தச் சரிவுக்கு டியூட்டி டிராபேக் மட்டும் காரணமில்லை என்றுகூறும் பிரபு தாமோதரன், ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வதுதான் ஏற்றுமதியை பாதிக்கும் முக்கியக் காரணி என்கிறார்.
இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், டியூட்டி டிராபேக் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டால் மட்டுமே ஏற்றுமதியில் ஏற்பட்ட சுணக்கத்தைச் சரி செய்ய முடியும்.

சலுகைகளைத் தடுக்கும் உலக வர்த்தக ஒப்பந்தம்

ஏற்றுமதியாளர்கள் டியூட்டி டிராபேக் சலுகை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்தியா உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் இந்தச் சலுகையைத் தொடர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறுகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்
செயலர் டி.ஆர்.விஜயகுமார்.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி, இறக்குமதியாகும் இயந்திரங்கள், மின் கட்டணம், தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் சேமநல நிதி போன்றவற்றில் மட்டுமே சலுகைகள் வழங்க முடியும். உற்பத்தித் துறையில் அரசுக்கு வரும் வருவாயில் மட்டுமே சலுகைகளை வழங்க முடியும். தவிர, நேரடியாக மானியங்கள் எதையும் வழங்க முடியாது.
இந்த நிலையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com