போருக்கு தயாராகும் பிராட்பேண்ட் சந்தைக்களம்

இந்திய தொலைத்தொடர்பு சேவையில் அவ்வப்போது அதிரடி மாற்றங்களுக்கு பஞ்சமில்லை.
போருக்கு தயாராகும் பிராட்பேண்ட் சந்தைக்களம்

இந்திய தொலைத்தொடர்பு சேவையில் அவ்வப்போது அதிரடி மாற்றங்களுக்கு பஞ்சமில்லை. எதிர்காலத்தில் வளமான வர்த்தக வாய்ப்புகளை வழங்கக்கூடிய இந்த துறையில் களமிறங்கி போராட எந்த நிறுவனங்களும் அஞ்சுவதுமில்லை. கடைசியில் களமிறங்கிய ஜியோ நிறுவனம்தான் அதற்கு சிறந்த உதாரணம்.

ஜியோவின் வரவு சாதாரண புயல்தான் என எண்ணியவர்களுக்கு அது ஒரு சுனாமி என்பது தொலைத்தொடர்பு சந்தையையே அலேக்காக புரட்டிப் போட்ட பின்புதான் தெரியவந்தது. ஜியோ வரவுக்கு பிறகு, செல்லிடப்பேசி சேவையில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களே நிகழ்ந்து விட்டது. 

மாதம் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.300 வரை கொடுக்க ரீசார்ஜ் மையங்களில் கால்கடுக்க நின்றவர்களுக்கு ஜியோ வரவு ஒரு மாயாஜால மந்திரவாதிதான். அழைப்பு கட்டணம் இல்லை, குறுஞ்செய்தி கட்டணம் இல்லை, குறைந்த கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா (மாசத்துக்கல்ல) என்ற போது வாயைப்பிளந்து நின்ற வாடிக்கையாளர்கள்தான் அதிகம். உண்மையில், ஜியோ வரவுக்குப் பிறகுதான் பல நிறுவனங்கள் இணையதள சேவைக்கான கட்டணங்களை பல மடங்கு குறைத்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

வேறு எந்தவொரு நிறுவனமும் செய்யாத சாதனையை ஜியோ கமுக்கமாக செய்து முடித்தது. அதுதான் அறிமுகமான இரண்டே ஆண்டுகளுக்குள் 15 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை வாரி சுருட்டியது. இதில், பல நிறுவனங்கள் ஆட்டம் கண்டுதான் போயின. 

இந்த ஆட்டம் அடங்குவதற்கு உள்ளாகவே தற்போது அடுத்த அதிரடியாக ஜியோ பிராட்பேண்ட் சேவையிலும் களமிறங்கவுள்ளதாக வெளியான தகவல் பிற நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான பணிகளில் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிறுக சிறுக பாடுபட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து தக்கவைத்திருக்கும் இத்துறையில் ஈடுபட்ட பிற நிறுவனங்களின் ஒரே கவலை, மலிவான கட்டணத்தில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி ஜியோ அவர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடுமோ என்பதுதான். இதனை உணர்ந்த பல நிறுவனங்கள் போட்டியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தற்போதே சிந்திக்கத் தொடங்கி விட்டன.

ஏற்கெனவே ஜியோவின் கட்டண போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாத பல நிறுவனங்களின் வருவாய், மற்றும் லாபம் அண்மைக் காலமாகவே சரிந்து வருகின்றன. இந்த நிலையில், வரும் 2019-க்குள் பிராட்பேண்ட் சேவையில் ஜியோ கால் பதித்துவிடும் என்ற தகவல் அந்நிறுவனங்களுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோரின் தேவை குறைவான கட்டணத்தில் தரமான பிராட்பேண்ட் சேவை. இந்த கனவு என்று பலிக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

அதிவேக பிராட்பேண்ட் பதிவிறக்க நாடுகள் (எம்.பி.பி.எஸ்.)

சிங்கப்பூர் 153.85
ஐஸ்லாந்து 147.51 
ஹாங்காங்க் 133.94 
தென்கொரியா 127.45 
அமெரிக்கா 75.94
இந்தியா 20.72

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com