வசீகரிக்கும் வளர்ச்சியில் அழகு சாதன பொருள்கள் துறை

சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் வசீகரிக்கும் துறை எது என கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் அது தான் அழகு சாதன பொருள்கள் துறை என்று.
வசீகரிக்கும் வளர்ச்சியில் அழகு சாதன பொருள்கள் துறை

சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் வசீகரிக்கும் துறை எது என கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் அது தான் அழகு சாதன பொருள்கள் துறை என்று. அழகை விரும்பாதோர் அதனை நேசிக்காதோர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது? மனிதரின் இந்த அடிப்படை குணாதிசயம் தான் இத்துறையின் அசுர வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.

சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, நிறத்துக்கான ஒப்பனைப் பொருள்கள், நறுமணம் மற்றும் வாய்ப் பாரமரிப்பு ஆகிய அனைத்துமே அழகு சாதன பொருள் துறையின் முக்கிய அங்கங்கள். 

கடந்த 2006-08-ஆம் ஆண்டுகளுக்கிடையில் இத்துறையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம்தான். ஆனால், தற்போதைய நிலையில் இதன் வளர்ச்சி விகிதம் விண்ணை முட்டும் அளவுக்கு விறுவிறுப்பைக் கண்டு வருகிறது. 

1991-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டங்களில் அதாவது தாராளமயமாக்கலுக்கு முன்பு அழகியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கான தேவைகள் மக்களிடம் அதிகளவில் காணப்பட்டதா என்று சொன்னால்... அந்த அளவுக்கு இல்லை என்றுதான் பதில் கூற வேண்டி வரும்...
ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு அதுவும், இந்திய பெண்கள் உலக அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு கிரீடங்கள் சூடிக் கொண்ட பிறகுதான் அழகியல் குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பொது வெளியில் தலைகாட்டத் தொடங்கியது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அழகு சாதன பொருள்கள் துறையின் வளர்ச்சி என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு வெளிப்பட்டது. 

உலகமயமாக்கல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பிறகுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைகளை மொய்க்கத் தொடங்கின. அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் கைகளில்தான் தங்களின் நாளைய வளர்ச்சி உள்ளது என்பதை நிறுவனங்கள் அப்போதே தீர்க தரிசனமாக உணரத் தொடங்கி விட்டதுதான்.

பன்னாட்டு வருகைக்கு ஏற்றாற் போல இந்திய சூழலும் சிறிது சிறிதாக மாறியது. பொருளாதார வளர்ச்சி வேகத்தால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு, தாரளமயமாக்கலால் ஏற்பட்ட மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் ஆகியவை இந்தத் துறையின் அசுர வளர்ச்சிக்கும், அதன் ஆக்டோபஸ் கரங்கள் மூலை முடுக்கெல்லாம் நீளுவதற்கும் அடிப்படை காரணங்களாகி விட்டன. 

இதற்கு, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக, பல்வேறு ஊடகங்களில் கொடுக்கப்படும் பெரிய அளவிலான விளம்பரங்கள் அழகு சாதனப் பொருள்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வருகின்றன. 

தற்போது, தனிநபர் பராமரிப்பு என்பது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்களை நவீனமாக்கி அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதற்காக, ஊதியத்தின் கணிசமான தொகையை செலவிடவும் அவர்கள் தயங்குவதில்லை. 

ஊடக விளம்பரங்களின் தாக்கம் அழகியல் குறித்த விழிப்புணர்வை பெண்களைத் தாண்டி தற்போது ஆண்களையும் அதன்பால் ஈர்க்கச் செய்துள்ளது. இதன் காரணமாக, இத்துறையின் வளர்ச்சி தற்போது இரட்டிப்பு வேகம் எடுத்துள்ள நிலையில் எதிர்காலத்தில் இது ஜெட் வேகத்தில் பயணிக்கும் என இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சான்றாக, கடந்த 2009-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையின் போதும் இந்தியர்கள் அழகு சாதனப் பொருள்களுக்கு ரூ.35,660 கோடியை செலவிட்டதை அவர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை. 

இந்தியாவில் அழகு சாதனப் பொருள்கள் துறை தற்போது ஆண்டுக்கு 13-18 சதவீதம் என்ற அளவில் மிக துரித வளர்ச்சியை பெற்று வருகிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் இத்துறையின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்பதை குறிப்பிட்டே வேண்டும்.

சர்வதேச நாடுகளின் அழகு சாதனப் பொருள்கள் துறையின் சந்தை மதிப்பு ரூ. 18 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.42,250 கோடி. நகர்ப்புற விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சியின் வேகம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இத்துறை ஆண்டுக்கு ஒட்டு மொத்த அளவில் 25 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.1.30 லட்சம் கோடியையும், 2035-இல் ரூ.2.27 லட்சம் கோடியையும் எட்டும் என்பது நிபுணர்களின் கணிப்பு. 

நாகரீக மாற்றத்தால் பொதுமக்களிடையே இயற்கை அழகு சாதனப் பொருள்கள் மீதான ஈர்ப்பு அதிகமாகி வருகிறது. இதையடுத்து, நிறத்துக்கான ஒப்பனை பொருள்கள், நறுமணம், சருமப் பாதுகாப்பு, அலங்கார ஒப்பனைகளுக்காக, இயற்கை மூலிகை மற்றும் ஆயுர்வேதத்தால் ஆன அழகு சாதன பொருள்களை உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டு வெளியிடுவதுடன் அதனை பல்லாயிரம் கோடி செலவழித்து விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றன. இதனால், அத்தகைய பொருள்களுக்கு எதிர்காலத்தில் தேவை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இத்துறையின் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இவ்வளவு வரியா?

இந்தியாவில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களுக்கு செலவிடும் தொகையை விட அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குதான் அதிகம் செலவிடப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு இந்தியா எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி. அமலுக்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதன பொருள்களுக்கு மிக அதிகபட்சமாக 40.8% சுங்க வரி விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 காஸ்மெட்டிக் (அழகு சாதன) பிராண்ட்


1 லாக்மி
2 லோட்டஸ்
3 விஎல்சிசி
4 லோரியல் பாரிஸ்
5 மேபெல்லின்
6 ரெவ்லான்
7 ஹிமாலாயா 
ஹெர்பல்ஸ்
8 கலர் பார்
9 எல்லி 18
10 எம்.ஏ.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com