வேளாண்மை, எம்எஸ்எம்இ-க்கு கடன் கொடுப்பதில் சிறப்பு கவனம்: ஐஓபி அதிகாரி தகவல்

சிறு வணிகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்.எஸ்.எம்.இ), வேளாண்மைத் துறை ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது
காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசுகிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்பிரமணியகுமார். உடன் செயல் இயக்குநர்கள் கே.சுவாமிநாதன், அஜய் குமார் ஸ்ரீவஸ்தா.
காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசுகிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்பிரமணியகுமார். உடன் செயல் இயக்குநர்கள் கே.சுவாமிநாதன், அஜய் குமார் ஸ்ரீவஸ்தா.

சிறு வணிகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்.எஸ்.எம்.இ), வேளாண்மைத் துறை ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்பிரமணியகுமார் தெரிவித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்த 3-ஆம் காலாண்டு நிதிநிலை அறிக்கை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதை வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.சுப்பிரமணியகுமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாராக் கடனை குறைப்பதில் கவனம் செலுத்தியது. அதன் விளைவாக வாராக் கடன் 21.95 சதவீதமாக குறைந்துள்ளது. 2017- டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வாராக்கடன் ரூ.33,266.88 கோடியாக உள்ளது. முன்பு இது ரூ.34,502.13 கோடிக்கு மேல் இருந்தது. நிகர வாராக்கடன் இப்போது 14.32 சதவீதத்தில் இருந்து தற்போது 13.08 சதவீதமாக குறைந்துள்ளது. 2017-டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிகர வாராக்கடன் ரூ.17,761.22 கோடியாக உள்ளது. 2016-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் ரூ.19,900.75 கோடியாக இது இருந்தது. 
சிறப்பு கவனம்: சிறுவணிகம், வேளாண்மை, குறு, சிறு, நடுத்தர தொழில் ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பாதகமான சூழல் இருந்தது. இப்போது, 14.5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை எட்டியுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு கடன் கொடுப்பதை ஒவ்வொரு வங்கி கிளையிலும் இலக்கு வைத்து, எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்பது குறிக்கோள். ஒவ்வொரு வங்கியிலும் மாதத்துக்கு 8 சிறு, குறு தொழில் நடத்துவோருக்கு கடன் கொடுப்பர்.
வாகனக் கடன்: சில்லறை கடனைப் பொருத்தவரை, வீட்டுக்கடன், வாகனக்கடன் கொடுப்பதில் 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வீட்டுக் கடன் மட்டும் 32 சதவீதத்துக்கு மேலாக கொடுத்துள்ளோம். வாகனக் கடன் 33 சதவீதத்துக்கு மேலாக கொடுத்து உள்ளோம். எஸ்.எம்.இ. '300' திட்டத்தை கடந்த காலாண்டில் அறிமுகப்படுத்தினோம். ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடன் கொடுக்கிறோம். விவசாயத்தில் 18 சதவீதம் வரை கடன் கொடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 21 சதவீதம் கொடுத்துள்ளது. முன்னுரிமை துறைக்கு 40 சதவீதம் வரை கடன் கொடுக்க வேண்டும். எங்கள் வங்கி 48 சதவீதம் வரை கொடுத்துள்ளது.
சிறுதொழில் முனைவோருக்கு கடன்: பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது 58 சதவீதமாக இருந்தது. கடந்த இரண்டு காலாண்டுகளில் பெரு நிறுவனங்களின் கடன் வழங்குவது குறைந்துள்ளது. சில்லறை வணிகம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேளாண்மை தொழில் ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த மூன்றும் சேர்ந்து 52 சதவீதமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 64 சதவீதமாக இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மொத்த கடனில் 19.6 சதவீதம் சில்லறை கடன். முன்பு 14 சதவீதம் தான் இருந்தது. இப்போது சிறு தொழில் செய்வோருக்கு கடன் கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.
செயல் இயக்குநர்கள் கே.சுவாமிநாதன், அஜய் குமார் ஸ்ரீவஸ்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com