பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு யார் காரணம்? 

இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு யார் காரணம்? 

இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.

அதற்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு என்ற மற்றொரு பூகம்பம் வெடித்திருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த அந்த வங்கியின் ஒரு கிளை அளித்த வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில், வைரத் தொழிலதிபர் நீரவ் மோடியின் கீதாஞ்சலி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களுக்காக, வெளிநாடுகளிலுள்ள இந்திய பொதுத் துறை வங்கிகள் தாராளமாக வாரி வழங்கியிருக்கின்றன.
ரூ.11,300 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ள இந்தக் கடன்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், அந்தக் கடன்களை திருப்பித் தருவதற்கான பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலையில் விழுந்துள்ளது.    
இதற்கான உத்தரவாதக் கடிதங்களை, வங்கிக் கிளையில் பணி புரிந்த இரு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
கிளைக்குப் புதிதாக வந்த அதிகாரி ஒருவர் அந்தக் கடிதங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிர்வாகத்துக்கு தகவல் தந்ததாகவும், பதறிப் போன வங்கி நிர்வாகம் மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இருந்தாலும், சொல்லி வைத்தது போல அந்தப் புகார் மனு சிபிஐ-யின் கைகளுக்குச் சேர்வதற்கு முன்னரே தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் இந்தியாவைவிட்டு மிக பத்திரமாக தப்பிச் சென்றார்.
ஆளில்லாத கடையில் ஆற்றும் டீயாக, அவர் நாட்டைவிட்டே போன பிறகு இந்த முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீரவ் மீதும், அவரது மனைவி, சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது. 
விஷயம் அரசியல்மயமாகி, இந்த முறைகேடு தொடர்பாக ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் பழி போடும் கோதாவில் இறங்கிவிட்டனர்.
கீதாஞ்சலி குழுமம் மற்றும் தொடர்புடைய மற்ற நிறுவன அலுவலகங்கள், இல்லங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முறைகேடு தொடர்பாக 2 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த முறைகேட்டுக்கு சூத்திரதாரி என்று கூறப்படும் நீரவோ, யாரும் தொட முடியாத இடத்தில் பாதுகாப்பாக அமர்ந்து இதுதொடர்பான செய்திகளை அமைதியாக பார்வையிட்டுக் கொண்டிருக்கலாம்.
பொதுத் துறை வங்கிகளிலிருந்து பல ஆயிரம் கடன் மோசடி செய்வதும், சம்பந்தப்பட்டவர் விஷயம் வெளிவருவதற்கு முன்னரே பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறுவதும் இது முதல்முறை இல்லை என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.
ஏற்கெனவே மல்லையாவும் இப்படித்தான் தப்பிச் சென்றார் என்பதை கூறவே தேவையில்லை.
இதில் இன்னொரு விஷயம், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு என்று அழைக்கப்படாலும், இந்த முறைகேட்டின் நீள அகலங்கள் இன்னும் அதிகம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இந்த விவகாரத்தில் மேலும் பல பொதுத் துறை வங்கிகளில், இப்போது கூறப்படும் ரூ.11,300 கோடி மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாக - ரூ.17,000 கோடிக்கும் மேல் - மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த முறைகேடு குறித்து தோண்டத் தோண்ட மேலும் பல பூதங்கள் கிளம்பலாம் என்று எச்சரிக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இத்தனை பெரிய மோசடி நடந்தது எப்படி. இந்த விவகாரத்துக்கு யார் காரணம்?
எல்லோரும் மிக வசதியாக "நீரவ் மோடி" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விடலாம்.
ஆனால், சினிமாவில் வருவது போல் நீரவ் மோடி முகத்தில் மீசை, மரு வைத்து, கத்தி, கன்னக்கோலுடன் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் நுழைந்து அந்த ரூ.11,300 கோடிகளை கொள்ளையடித்துச் சென்றுவிடவில்லை.
அல்லது காவல்துறை எச்சரிக்கை அறிவிப்புகளில் வருகிற மாதிரி வங்கி அதிகாரிகளின் சட்டையில் மை ஊற்றி, அவர்களது கவனத்தைத் திருப்பிவிட்டு கோடிகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிடவில்லை.
அப்படியெல்லாம் செய்திருந்தால் அவர் ஒருவரை மட்டும் குற்றவாளி என்று சொல்லி விடலாம்.
ஒருவேளை வங்கிக் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பது இதுதான் முதல் முறை என்றால் கைது செய்யப்பட்ட இரு வங்கி ஊழியர்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி விடலாம்.
ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் பிரச்னை தலைவிரித்தாடுவதும், அந்த வங்கிகளுக்குக் கைகொடுத்த மத்திய அரசு பல ஆயிரம் கோடிகளை கூடுதல் மூலதனமாக அளிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இவையெல்லாம், பொதுத் துறை வங்கிக் கட்டமைப்பை கேள்விக்குறியாக்கியிருக்கின்றன.
இந்தியாவின் வங்கித் துறையைக் கட்டியாளும் பொதுத் துறை வங்கிகள் இன்னும் அரசுப் பிடியில் இருப்பதுதான் பல பிரச்னைக்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். வங்கிகளின் பெரும்பான்மை பங்கு முதலீட்டாளராக மத்திய அரசு இருப்பதால், அவற்றின் மீது மத்திய ரிசர்வ் வங்கி சுதந்திரமான நடவடிக்கைகளை எடுக்க முடிவதில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும், பொதுமக்களும் பாதுகாப்பான முதலீட்டுக்கு பொதுத் துறை வங்கிகளையே நம்புவதால், வங்கிகளை தனியார்மயமாக்க அவர்களும் விரும்ப மாட்டார்கள். இது, மத்திய அரசுகளுக்கு அரசியல் நெருக்கடியைக் கொடுக்கும்.
தற்போது சேமிப்புகளுக்கான உத்தரவாதத்தை ஒரு லட்சம் ரூபாயாகக் குறைக்கும் யோசனையை - அதாவது வங்கி இழப்பைச் சந்திக்கும்பட்சத்தில் சேமிப்பாளர்கள் எவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்திருந்தாலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி பொறுப்பேற்காது - பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து இதற்கு ஒரு உதாரணம்.
இதன் காரணமாகத்தான், சிறப்பாகச் செயல்படாத வங்கிகளும், நல்ல முறையில் இயங்கும் வங்கிகளுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
காரணம், வங்கிகள் அரசின் குழந்தைகளாக இருப்பதுதான்.
இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து கூடுதல் மூலதனம் அளிக்கும். வங்கிக்கும், வங்கியில் முதலீடு செய்திருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், கடன் அளிப்பது, வசூலிப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஊழியர்கள் முழுத் திறனுடன் செயல்படுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கடனளிப்பு விஷயத்தில் பொதுத் துறை வங்கிகளின் இடர்பாடுகளைக் குறைக்கும் வகையில், அவற்றின் பணிகளைச் சுருக்குவது மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் அவர்கள்.
மேலும், வங்கிகளில் சேமிப்பது மட்டுமன்றி, பாதுகாப்பான முறையில் அரசிடம் முதலீடு செய்வதற்கான வேறு வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தந்தால், பொதுத் துறை வங்கிகளை அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று சிலர் யோசனை கூறுகின்றனர்.
1990-களில் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, தொழில்துறை மட்டும் தாராளமயமாக்கப்பட்டது. அதாவது, அரசின் லைசன்ஸ் கட்டுப்பாடு இல்லாமல் தொழில்துறை சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. 
ஆனால், அந்தத் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான நிதியளிக்கும் வங்கித் துறை இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பது, வளர்ச்சிக்கு கால்கட்டுப் போட்டதைப் போன்றது என்பது சிலரது வாதமாக உள்ளது.
எப்படி இருந்தாலும், பொதுமக்களுக்கோ, பொதுத் துறை வங்கிகளுக்கோ, தொழில்துறைக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வங்கிக் கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையே இத்தகைய முறைகேடுகள் அழுத்தம் திருத்தமாக உணர்த்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com