பங்குச் சந்தைகளில் தொடரும் மந்த நிலை

பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தால் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தைகளில் தொடரும் மந்த நிலை

பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தால் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் அம்பலமானது. இந்த விவகாரம் வங்கித் துறையை ஆட்டம் காணச் செய்யும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.
இந்த மோசடி விவகாரம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குலைத்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் வங்கித் துறை பங்குகளை லாப நோக்கம் கருதி அதிக அளவில் விற்பனை செய்தனர். இந்த விவகாரரத்தில், அடுத்த கட்ட நகர்வை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டனர்.இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 1.60 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.56 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.38 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.12 சதவீதமும் வீழ்ச்சி கண்டன. இவை தவிர, உள் கட்டமைப்பு துறை (1.12%), மோட்டார் வாகனம் (1.11%), மருந்து (1.10%), எண்ணெய்-எரிவாயு (1.01%), மின்சாரம் (0.99%), வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (0.91%), வங்கி (0.57%) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் கணிசமான அளவுக்கு குறைந்தன.
மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக 8 சதவீதம் சரிவடைந்தது.
கடன் சுமை நிறைந்த பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் வாங்க உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் பங்கின் விலை 5.82 சதவீதம் அளவுக்கு குறைந்து போனது.
வர்த்தகத்தின் இடையே, யூகோ வங்கி பங்கின் விலை 4.58 சதவீதமும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 7.19 சதவீதமும், அலகாபாத் வங்கி 6.30 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடா 5.48 சதவீதமும், சிண்டிகேட் வங்கி 6.45 சதவீதமும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 6.79 சதவீதமும், கார்ப்பரேஷன் வங்கி பங்கின் விலை 3.17 சதவீதமும் சரிந்தன. இவை தவிர, பாரத ஸ்டேட் வங்கி 1.51 சதவீதமும், பெடரல் வங்கி 2.61 சதவீதமும், இண்டஸ்இன்ட் வங்கி 1.68 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 0.39 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 0.27 சதவீதமும் இழப்பை சந்தித்தன.
வங்கி துறை சாராத, டாக்டர் ரெட்டீஸ், அதானி போர்ட்ஸ், ஸன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 2.75 சதவீதம் அளவுக்கு குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 236 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 33,774 புள்ளிகளில் நிலைத்தது. டிசம்பர் 21-க்குப் பிறகு சென்செக்ஸ் இந்த அளவுக்கு சரிவடைந்தது இதுவே முதல்முறை.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 73 புள்ளிகள் குறைந்து 10,378 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com