"தடம்' மாறுமா சென்செக்ஸ் ? 

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் முன்னேறுமா? அல்லது சறுக்கலை சந்திக்குமா? என்பதுதான் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மட்டுமல்லாது வல்லுநர்களிடமும்
"தடம்' மாறுமா சென்செக்ஸ் ? 

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் முன்னேறுமா? அல்லது சறுக்கலை சந்திக்குமா? என்பதுதான் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மட்டுமல்லாது வல்லுநர்களிடமும் இப்போது எழுந்துள்ள தலையாய கேள்வியாக உள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் வரையிலான காலத்தில் பங்குச் சந்தைக்கு அவ்வளவு சரியான நேரமாக அமையவில்லை. இதனால், சென்செக்ஸ் மிகுந்த தடுமாற்றம் கண்டு சரிவைச் சந்தித்து வந்தது. ஆனால், இந்த ஜூலை மாதத்தில் சென்செக்ஸ் ஏற்றம் கண்டு இரு முறை புதிய உச்ச அளவைப் பதிவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள், வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஆனால், சென்செக்ஸ் முன்னேற்றத்துக்கு ஒட்டுமொத்த சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பங்குகள் காரணமாக இருந்துள்ளதா என்றால், இல்லை என்ற பதில்தான் சொல்ல முடியும். குறிப்பிட்ட சில முதல் தரப் பங்குகள் அதாவது மார்க்கெட் லீடர் என்று போற்றப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஹெச்ஸிஎல் டெக்,
இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டு சென்செக்ஸ் உயர்வுக்குக் காரணமாக இருந்துள்ளன. மேலும், இந்த நிறுவனப் பங்குகளின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 
அதேசமயம், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி-50 பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் இந்த ஆண்டு இதுவரை 18 நிறுவனப் பங்குகள் மட்டுமே பச்சைக் கம்பளத்தில் உள்ளன. 20 நிறுவனப் பங்குகள் 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 10 நிறுவனப் பங்குகள் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவும் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு தூங்காத இரவுகளைக் கொடுத்துள்ளன.
மேலும், நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள் கடந்த ஆண்டு பிற்பகுதியிலும், இந்த ஆண்டு தொடக்கத்திலும் பலத்த அடி வாங்கியுள்ளன. சில குறிப்பிட்ட நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள் 50 - 70 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வர்த்தகப் போர் அறிவிப்பு இந்த ஆண்டில் உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகளை புரட்டிப்போட்டது எனலாம். அதில் இந்திய பங்குச் சந்தைகளும் தப்பவில்லை. மேலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சந்தித்துள்ள வீழ்ச்சி, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு ஆகிய காரணங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இருப்பினும், நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது, பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேலும் உத்வேகப்படுத்தும் என்ற நம்பிக்கை சந்தை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. இது பங்குச் சந்தைக்கு சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த வார இறுதியில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதுவும் பங்குச் சந்தைக்கு சாதகமான விஷயமாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது, முன்னணி நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் பெரும்பாலானவை சந்தை வட்டார எதிர்பார்ப்புக்கும் மேலாகவே அமைந்துள்ளன. எனவே, இனிமேல் வெளியாகவுள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் நேர்மறையாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் அறிவிப்பின் தாக்கமும் குறைந்துள்ளது. 
இவை அனைத்தும் சந்தைக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வட்டாரம் கருதுகிறது. எனவே, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் மேலும் வலுப்பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
சென்செக்ஸ் கடந்த வாரம் புதன்கிழமை (ஜூலை 18) 36,747 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய 52 வார அதிகபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது. சென்செக்ஸ் 31,081 வரை சரிந்து புதிய 52 வார குறைந்தபட்ச அளவை கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் தற்போது கடந்த வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை 36,496 புள்ளிகளில் நிலைத்துள்ளது. அதாவது, 52 வார குறைந்தபட்ச அளவிலிருந்து பார்த்தால் சென்செக்ஸ் இதுவரை 5,414 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
நிஃப்டி, கடந்த வார இறுதியில் 11,010 புள்ளிகளில் நிலைத்துள்ளது. இதன் 52 வார அதிகபட்சம் 11,171 புள்ளிகளாகவும், குறைந்தபட்சம் 9,685 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. தற்போதைய நிலையில் நிஃப்டி 52 வார அதிகபட்ச அளவுக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிஃப்டி பழைய உச்ச அளவை பிரேக் செய்து 11,200 புள்ளிகளுக்கு மேல் நிலைத்தால் அடுத்ததாக 11,400 - 11,700 புள்ளிகளுக்கு செல்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக அதிக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 2019 மக்களவைத் தேர்தலுக்குள் புதிய உச்சத்தைத் தொடும் என்று சந்தை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு ஏற்றாற்போல சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும் இந்த நிதியாண்டின் இறுதியில் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கும், நிஃப்டி 11,700 புள்ளிகளுக்கும் உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற 2014-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை சுமார் 40 சதவீதத்துக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், பங்குச் சந்தையில் ஐடி, ஆட்டோ, எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக அளவு கிராக்கி இருப்பதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம், மெட்டல், ரியால்ட்டி மற்றும் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் அடி வாங்கி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
6 முதல்தர பங்குகளுக்கு பின்னடைவு!
கடந்த 2017-இல் ஜூலை - டிசம்பர்வரையிலான காலத்தில் முதல் தரப்பங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த 6 நிறுவனப் பங்குகள் இந்த ஆண்டு நடுத்தரப் பங்குகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிறுவனப்பங்குகளின் 6 மாத கால சராசரி சந்தை மூலதன மதிப்பு ரூ.30,000 கோடிக்கும் கீழே சரிந்துள்ளதே இதற்குக் காரணம்.
பங்குப் பரிவர்த்தனை வாரியமான செபி, அண்மையில் முதல் தர, நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகள் பட்டியலை மறு வகைப்படுத்தியது. அதில் மேற்கண்ட பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு, ஜனவரி- ஜூன் வரையிலான 6 மாத கால சராசரிக்கும் கீழே சென்றதால் இந்த மாற்றத்தை செய்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு, முதல் தர நிறுவனப் பங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த டிவிஎஸ் மோட்டார், ஏசிசி, பஞ்சாப் நேஷனல் பேங்க், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் (ஆர்இசி) , பவர் பைனான்ஸ் ஆகியவை இப்போது நடுத்தர நிறுவனப் பங்குகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பங்குகளின் விலையும் கடும் சரிவைச் சந்தித்ததால் சந்தை மூலதன மதிப்பும் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது இந்நிறுவனப் பங்குகளின் மேல் முதலீட்டாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சற்று குறைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.
நடுத்தர, சிறு நிறுவன பங்குகள் பலத்த அடி வாங்குவது ஏன்?
கடந்த 2017-இல் மிகவும் அபரிமிதமாக ஏற்றம் கண்டிருந்த நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த ஆண்டு பிற்பகுதியிலும், இந்த ஆண்டு தொடக்கத்திலும் பலத்த அடி வாங்கியுள்ளன. சில குறிப்பிட்ட நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள் 50 - 70 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏராளமான நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து 52 வார குறைந்தபட்ச விலையை பிரேக் செய்து கீழே இறங்கி வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் நடுத்தரப் பங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இமாமி, கேடிலா, ஏசிசி, ஐடியா, சீமென்ஸ், பெல், பிஇஎல், அம்புஜா சிமென்ட், பிஎஃப்சி, கன்கார், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பிஎன்பி, பேங்க் ஆஃப் பரோடா, என்எச்பிசி, போஷ், ஆர்.இ.சி. லிட்., கம்மின்ஸ் இந்தியா, ஆயில் இந்தியா, ஏபிபி உள்ளிட்டவை 25 முதல் 70 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால், இந்நிறுவனப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள முதலீட்டாளர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
பங்குப் பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியமான செபி, கடந்த 2017, 6-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வரையறுக்கப்பட்டுள்ள முதல் தர, நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளில் மட்டுமே பரஸ்பர நிதித் திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டது.
மேலும், சில குறிப்பிட்ட நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகள் திடீர் திடீரென எந்தவித அடிப்படைக் காரணங்களும் இல்லாமல் அதீதமாக ஏற்றம் கண்டன. இதைக் கண்காணித்த செபி, அந்நிறுவனப் பங்குகள் வர்த்தகத்துக்கும் புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, அந்நிறுவனப் பங்குகளை முழுத் தொகை அளித்தால் மட்டுமே வாங்கவோ, விற்கவோ முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும், அந்நிறுவனப் பங்குகளின் ஒருநாளைய உச்சபட்ச (அப்பர் ஃப்ரீஸ்) ஏற்றம், மிகக்குறைந்த அளவு (லோயர் ஃப்ரீஸ்) 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதுவே நடுத்தர, சிறுநிறுவனப் பங்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதற்கு முக்கியக் காரணம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், செபியின் இந்நடவடிக்கைக்கு முதலீட்டாளர்களும், பங்குத் தரகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவறான வழியில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, பங்கு வர்த்தக நடவடிக்கைகளில் கிடுக்கிப்பிடி போடுவது வருந்தத் தக்கது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாறுமாறாக வர்த்தகம் நடைபெற்ற சில குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளின் வர்த்தகத்துக்கு கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை என்ற பெயரில் சில கட்டுப்பாடுகளை பங்குப் பரிவர்த்தனை வாரியம் விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களும், பங்குத் தரகர்களும் தங்களது கண்டனத்தை கடிதம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவு வீழ்ச்சி கண்ட முதல் தரப் பங்குகள்!
பஜாஜ் ஃபைனான்ஸ் 20%
ரிலையன்ஸ் 3%
பஜாஜ் பைன்சர்வ் 13%
டிசிஎஸ் 10%
ஏசியன் பெயிண்ட் 10%
இன்ஃபோஸிஸ் 9%
ஹெச்ஸிஎல் டெக் 9%
ஹெச்டிஎஃப்சி பேங்க் 8%
ஹெச்டிஎஃப்சி 8%
விப்ரோ 8%
அல்ட்ராடெக் சிமெண்ட் 7% 
மாருதி சுஸுகி 6%
பார்தி ஏர்டெல் 7%
கிராஸிம் 8%
ஐசிஐசிஐ பேங்க் 9%
டாடா ஸ்டீல் 9%
ஐஷர் மோட்டார்ஸ் 10%
லூபின் 11%
பவர் கிரிட் 12%
ஹெச்பிசிஎல் 12%
ஹிண்டால்கோ 14%
டாக்டர் ரெட்டி 14%
டாடா மோட்டார்ஸ் 17%
யுபிஎல் 18%

-மல்லி எம்.சடகோபன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com