மூடப்படும் தொழில் நிறுவனங்கள்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள பொருள் உற்பத்தி நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி, நிறுவனங்கள் சார்ந்த பல்வேறு சட்டங்கள் கெடுபிடி உள்ளிட்டவற்றால் தங்களது கதவுகளை சப்தமின்றி மூடி
மூடப்படும் தொழில் நிறுவனங்கள்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள பொருள் உற்பத்தி நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி, நிறுவனங்கள் சார்ந்த பல்வேறு சட்டங்கள் கெடுபிடி உள்ளிட்டவற்றால் தங்களது கதவுகளை சப்தமின்றி மூடி வருகின்றன. 
கடந்த 2017-18 நிதியாண்டில் இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்பது அதிர்ச்சி செய்தி. மேலும், கடந்த நிதியாண்டில் நிறுவனங்களின் செயல்பாடு சுமார் 11சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. சமீப ஆண்டுகளில் கணக்கிட்டுப் பார்க்கையில், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 6.6% வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், 2016-17ஆம் நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 25 சதவீதமாக இருந்தது. வேலைவாய்ப்பு அதிகம் இல்லாத நிலையிலும், ஏன் அதிக நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை? தொழில்முனைவோராக ஆக ஏன் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நிறுவனச் சட்டங்கள் பல நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ள நிலையில், ஏன் இந்தத் தேக்கம், வீழ்ச்சி?
தொழில்முனைவோர் அல்லது தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டுச் செல்வதற்கு முக்கியமாக இரு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு நடவடிக்கை. இரண்டாவது, ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ய பல்வேறு பெயர்களில் நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள், இனி அது சாத்தியமில்லாத நிலையில், அதுபோன்ற நிறுவனங்களை மூடியுள்ளனர் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து.
இதுபோல, அதிகமாக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள மாநிலங்களைக் கணக்கில் கொள்ளும்போது, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் மட்டும் மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2,37,452. இவற்றில் சட்ட விரோத நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.30 லட்சம். ஆனால், அதற்கு முந்தைய நிதியாண்டுகளில் மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. அதுபோல, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில்,கடந்த நிதியாண்டில், நன்றாகச் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
2018 ஏப்ரல் நிலவரப்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 17.5 லட்சம். முறையாகச் செயல்படாததால் எடுத்த கெடுபிடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இவற்றில் சுமார் 5.4 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டன. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., மின்சாரப் பிரச்னை, மானியங்களை முறையாக வழங்காதது இவையெல்லாம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் மூடும் நிலைக்குச் செல்லக் காரணம். இதனால், சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
2008-13ஆம் ஆண்டுகளில் கடும் மின்வெட்டு காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், பணி வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், தொழில்முனைவோர் நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந் நிலையில், 2013-இன் பிந்தைய மாதங்களில் தொழில் வளர்ச்சி காணத் தொடங்கியது.
இந் நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. பணத் தட்டுப்பாட்டால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அதன் பிறகு நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரியினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என தொழில்முனைவோர் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com