அமெரிக்காவின் அதிரடியால் ஆட்டம் காணும் உலக நாடுகள்

முதல் நிலை வல்லரசு நாடான அமெரிக்க எடுத்த ஓர் முடிவு உலக நாடுகளை ஆட்டம் காணச் செய்துள்ளது.
அமெரிக்காவின் அதிரடியால் ஆட்டம் காணும் உலக நாடுகள்

முதல் நிலை வல்லரசு நாடான அமெரிக்க எடுத்த ஓர் முடிவு உலக நாடுகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பிரசாரங்களின்போது உள்நாட்டு நலன் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் அரியணையில் ஏறினார். அதனை செயல்படுத்த முனைந்ததன் விளைவு பல நாடுகளின் வர்த்தக கொள்கைகளை புரட்டிப் போட்டுள்ளதுடன், அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளையும் பதம் பார்த்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் உருக்கு பொருள்களுக்கு 25 சதவீத வரியும், அலுமினிய தயாரிப்புகளுக்கு 10 சதவீத வரியும் விதிக்கும் கோப்புகளில் டிரம்ப் ஒரு வாரத்துக்கு முன்பாக கையெழுத்திட்டார். இந்த உத்தரவு, மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டது முதல் உலக நாடுகளின் வர்த்தகத்தில் ஒரு வித நிச்சயமற்ற தன்மை நிலவி வருவது பல்வேறு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருவதன்மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த முடிவு உலக வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் செயலாகவும் அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

வரி விதிப்பில் கனடா, மெக்ஸிகோ நாடுகளுக்கு மட்டும் விலக்களித்து அதிபர் டிரம்ப் சலுகை காட்டியுள்ளது அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன், சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல நெருங்கிய நட்பு நாடுகளை கடுப்பேற்றியுள்ளது.
அதன் விளைவாக, டிரம்பின் இந்த அதிரடிக்கு உலக நாடுகள் பலவும் தற்போதே பதிலடி தர ஆயத்தமாகி வருகின்றன. இன்னும் ஒரு சில நாடுகள் ஒரு படி முன்னேசென்று அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்க ஏற்கெனவே பச்சைக் கொடி காட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கு பாடம் கற்பிப்பதற்காக ஒரு சில நாடுகள் இதுபோன்ற பதிலடி தரும் நடவடிக்கைகளை எடுத்தாலும் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என பல பொருளியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். முக்கியமாக, நுகர்வோர் மற்றும் வர்த்தக நம்பிக்கையை அதுபோன்ற நடவடிக்கைகள் சிதைப்பதுடன், செலவினத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உலக பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் அவர்களின் கருத்து. அதனையே தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர் அண்ட் பூர்ஸ் ஆய்வறிக்கையும் வெளிப்படுத்தியுள்ளது.
வரி விதிப்பினால் வர்த்தக தடைகளை எதிர்கொண்டுள்ள நாடுகள் அப்பிரச்னைக்கு ஒருங்கிணைந்து தீர்வு காண முயல வேண்டும். வர்த்தக போர் என்பது சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அதனால் வெற்றி கிடைக்காது என்கிறார் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லாகர்டே.
இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்காவின் இந்த முடிவு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கான இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி சென்ற 2017-ஆம் ஆண்டில் 7 லட்சம் டன் மட்டுமே. இது, இந்தியாவுக்கான உள்நாட்டு தேவையில் 1 சதவீதத்துக்கும் குறைவான அளவு. எனவே, இந்திய உருக்கு நிறுவனங்கள் விற்பனைக்கு வேறு வழிகளை எளிதாக நாடிக் கொள்ளும். எனவே, நடுத்தர கால அளவில் இந்திய உருக்கு நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியில் நம்நாட்டின் பங்களிப்பு மிக சிறியதுதான் என்றாலும் அதன் முக்கியமான தவிர்க்க முடியாத கூட்டாளியாக இந்தியா உள்ளது என்பதை மறுக்க இயலாது என்கிறார் வர்த்தக துறை செயலர் ரீட்டா தியோதியா.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டாவது வரி விதிப்பிலிருந்து இந்தியாவுக்கு விலக்களித்திருக்க வேண்டும். எனவே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றது என்கிறார் ரீட்டா.
இந்த நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் பல பொருள்களுக்கு வரி விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது, உலக நாடுகளின் வர்த்தக உறவுகளில் சிக்கலை அதிகரிக்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com