டொயோட்டாவின் புதிய 'யாரிஸ்' கார் அறிமுகம்

டொயோட்டாவின் புதிய 'யாரிஸ்' கார் அறிமுகம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) நிறுவனத்தின் புதிய 'யாரிஸ்' கார் புது தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) நிறுவனத்தின் புதிய 'யாரிஸ்' கார் புது தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் என்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடுத்தர செடன் வகையைச் சேர்ந்த புதிய மாடலான 'யாரிஸ்' கார் விற்பனை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. அன்றைய தினம் மட்டுமே 1,000 கார்கள் வரையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய மாடல் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு வேக நிலைகளில் இது இயங்கக்கூடியது. கியர்களை கைகளால் மாற்றிக் கொள்ளும் (மேனுவல் டிரான்ஸ்மிஸன்) வசதி கொண்ட யாரிஸ் மாடலின் விலை ரூ.8.75 லட்சம் முதல் ரூ.12.85 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தானியங்கி கியர் வசதியை உள்ளடக்கிய மாடலின் விலை ரூ.9.95 லட்சம் முதல் ரூ.14.07 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள யாரிஸ் மாடல் சந்தையில் சிறப்பான வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி தற்போது 3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. யாரிஸ் மாடல் அறிமுகத்தையடுத்து, நடப்பு ஆண்டில் விற்பனை வளர்ச்சி 7-8 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாரிஸ் காரின் விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவு தொடங்கிய ஒரு மாதத்துக்குள்ளாகவே இரண்டு மாதங்களுக்கு தேவையான ஆர்டர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்துவிட்டது. இம்மாத இறுதிக்குள் 4,000 கார்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பெட்ரோல் பிரிவில் விற்பனையாகும் முதல் மூன்று மாடல்களில் டொயோட்டா யாரிஸ் முக்கிய இடத்தை பிடிக்கும் என்றார் அவர்.
அதிக போட்டிகள் நிறைந்த நடுத்தர செடன் பிரிவில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன. அதில், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸுகி சியாஸ் ஆகியவையே முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com