ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர் சரிவு

ஜி.எஸ்.டி. அமலானதற்குப் பிறகு நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜவுளித் துறையினருக்கு மத்திய அரசு
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர் சரிவு

ஜி.எஸ்.டி. அமலானதற்குப் பிறகு நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜவுளித் துறையினருக்கு மத்திய அரசு கைகொடுத்து உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழில் முனைவோரிடையே எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 4 சதவீதமாக உள்ளது. நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைத் துறையின் பங்களிப்பு 22 சதவீதம். இதில், கோவை மண்டலத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 55 சதவீதமாகவும் உள்ளது.

இங்குள்ள சுமார் 4,000 பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், அதன் சார்புத் தொழில்கள் மூலம் சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக ரூ. 25,000 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் மட்டும் இங்கு நடைபெற்று வருகிறது.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறை, பருவ கால மாற்றங்கள், சர்வதேச பொருளாதாரச் சூழல், செலாவணி மதிப்பு மாற்றம், நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றம், தொழிலாளர் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அவ்வப்போது ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. 

இந்தத் துறையில் சிறிய அளவில் ஏற்படும் மாறுதல் கூட லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோரை பெரிய அளவில் பாதிக்கும். அந்த வகையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கடந்த ஓராண்டாகத் தொடரும் இறங்குமுகம், 2018-19 ஆம் நிதியாண்டின் முதல் மாதத்திலும் தொடர்வது ஏற்றுமதியாளருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ. 11,272 கோடியாக இருந்தது. இது 2018-19 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ. 8,859 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது 21.40 சதவீத வீழ்ச்சியாகும்.

"ஆயத்த ஆடை துறையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடுமையான தடைகளை எதிர்கொண்டு வருகின்றன. 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத ஏற்றுமதித் தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஏற்கெனவே திருப்பூரில் பல தொழிலாளர்களுக்கு வாரத்தில் 3, 4 நாள்கள் மட்டுமே வேலை கிடைக்கும் நிலை உள்ளது.

விரைவில் இதைத் தடுக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு மட்டுமின்றி, நிறுவனங்கள் கதவடைப்பு செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லக் கூடும்' என்கிறார் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென்மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல்.

ஏற்றுமதி வர்த்தகம் 15 சதவீதம் வரை சரிவடைந்திருப்பதும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவு ரூ. 24 ,000 கோடியாக சரிவடைந்திருப்பதும், இந்தத் துறைக்கு அவ்வளவு நல்ல செய்திகள் அல்ல என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் டி.ஆர்.விஜயகுமார்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ. 26,000 கோடியாக இருந்த திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2017-18-ஆம் நிதியாண்டில் 8 சதவீதம் குறைந்து ரூ. 24,000 கோடியாகி உள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி சுமார் 6 சதவீதம் வரை வளர்ச்சி கண்டு வந்தது. ஆனால், இது அக்டோபர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் அதிகபட்சம் 14 சதவீதம் வரை சரிவையே சந்தித்து வருகிறது.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு முன்னர் வரையிலும் வரிகளைத் திரும்பப் பெறும் (டியூட்டி டிராபேக்) சலுகை 7.5 சதவீதம், மாநில வரிச் சலுகை 3.5 சதவீதம், எம்.இ.ஐ.எஸ். திட்டத்தில் 2 சதவீதம் என மொத்தம் 13 சதவீத சலுகை ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்து வந்தது. ஜி.எஸ்.டி.க்குப் பிறகு அது 7.70 சதவீதமாக குறைந்துள்ளது. 

அத்துடன், ஜி.எஸ்.டி., மாநில வரி விகிதங்களில் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு வர வேண்டிய ரிட்டன் தொகை குறிப்பிட்ட காலத்தில் வராததும் ஏற்றுமதியாளர்களை வெகுவாக பாதித்துள்ளது.

வரிச் சலுகை இல்லை என்பதால் புதிய ஆர்டர்களை எடுக்க அஞ்சுவதால் பெருமளவில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே லாபம் இல்லாமல், டியூட்டி டிராபேக் சலுகையை மட்டுமே நம்பி, வியத்நாம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் கடுமையான போட்டியை சந்தித்து வந்த இந்திய ஏற்றுமதியாளர்கள், அந்தச் சலுகையும் கடந்த அக்டோபருடன் கைவிட்டுப் போனதால் நம்பிக்கை இழந்திருந்தனர்.

ஆனால் அண்மையில் ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ஓரளவுக்கு பலனை அனுபவிக்க முடிந்தது. வரும் ஆண்டுகளிலும் ஏற்றுமதி ரூ. 30,000 கோடி அளவுக்கு உயரும் என்று நம்பிக்கையூட்டுகிறார் விஜயகுமார்.


ஜவுளித் துறையின் சிக்கலுக்கு வெளியுறவுத் துறை உதவுமா?
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்துக்கு தற்காலிகத் தீர்வைக் காட்டிலும் நிரந்தரத் தீர்வே பயனளிக்கும் என்றாலும், ஜவுளித் துறையின் தற்போதைய சிக்கலுக்குத் தீர்வு கிடைப்பது வெளியுறவுத் துறையின் கைகளில் இருக்கிறது என்கிறார் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன். அவர் மேலும் கூறியதாவது:

ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்து வரும் பிரச்னைக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது, புதிய சந்தைகளைத் தேடுவது, அது வரையிலேனும் டியூட்டி டிராபேக் சலுகையை திரும்ப வழங்குவது என்பதே தீர்வாக இருக்கும்.

வெறுமனே அரசின் சலுகைகளை வைத்துக் கொண்டு மட்டும் இந்தத் தொழிலை நீண்ட காலத்துக்கு செய்ய முடியாது என்பதை ஏற்றுமதியாளர்கள் உணர்ந்துவிட்டனர். இதனால், தங்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, காலத்துக்கு ஏற்ற டிசைன் வடிவமைப்பு போன்றவற்றிலும் அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவும், வங்கதேசமும் ஒரே ஐரோப்பிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது, வங்கதேச ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபமும், இந்திய ஏற்றுமதியாளருக்கு லாபமே கிடைக்காத நிலையும் நிலவுவதற்கு, வங்கதேசப் பொருளுக்கு வரி இல்லை என்பதே காரணமாக உள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு போதிய ஆர்டர்கள் இருந்தாலும், விலை கட்டுப்படியாகவில்லை என்பதுதான் தற்போதைய பிரச்னையாக உள்ளது. நமது போட்டி நாடுகள் ஏராளமான நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருப்பதால், இறக்குமதி வரி இல்லை என்பது அவர்களுக்கு சாதகமாக உள்ளது.

இந்தியப் பொருள்கள் தரமானவை என்று பெருமை பேசினால் போதாது, அவற்றுக்கான உலக சந்தையை விரிவாக்கம் செய்ய தனியாக திட்டம் வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக தென்கொரியா தனது தூதரகம் உள்ள 130 நாடுகளிலும் தூதரக அலுவலகத்துடன் வர்த்தக அலுவலகங்களையும் அமைத்துள்ளது.

அதன்மூலம் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருளை விற்பனை செய்வதற்கு சந்தையைத் தயார் செய்கின்றனர். தூதரகங்கள் வெளிநாட்டு உறவுகளுக்கானது மட்டுமே என்பதை அந்த நாடு மாற்றி அமைத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.


உள்ளூர் உற்பத்தியாளர்களை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு வரவழைத்து, அங்கே நமது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, அதன் மூலம் ஆர்டர்களைப் பெறுவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய உற்பத்திப் பொருள்களுக்கான உலக சந்தையை விரிவாக்குவதற்கு என தனித் திட்டம் வகுக்க வேண்டும்.

இதன்மூலம் சந்தை மீண்டும் பழைய வளர்ச்சிக்கு வரும் வரை, இங்கு கஷ்டப்படும் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது டியூட்டி டிராபேக் போன்ற சலுகைகளை அமல்படுத்த வேண்டும். 

அதேநேரம் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையும் மிகப் பெரியது என்பதால், உற்பத்தியாளர்கள் உள்நாட்டுச் சந்தையிலும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com