வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா என தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளோடு விளங்கிய "வியட்நாம் வீடு' சுந்தரம் (77) உடல் நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா என தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளோடு விளங்கிய "வியட்நாம் வீடு' சுந்தரம் (77) உடல் நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

மஞ்சள் காமாலை நோய்க்காக கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சுந்தரம். நோயின் தாக்கத்தால் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த சுந்தரத்தின் உயிர் சனிக்கிழமை அதிகாலை பிரிந்தது.

கௌரவம் படத்தை இயக்கியவர்: திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தரம் நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இவர் எழுதிய "வியட்நாம் வீடு' என்ற கதை பல முறை நாடகங்களாக மேடை ஏறி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, 1970-ஆம் ஆண்டு "வியட்நாம் வீடு' கதை அதே பெயரில் படமானது. இப்படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானார் சுந்தரம். இப்படத்தின் வெற்றியால் சுந்தரம், "வியட்நாம் வீடு' சுந்தரம் ஆனார்.

"ஜஸ்டிஸ் கோபிநாத்', "ஞானஒளி', "கிரகப்பிரவேசம்' என தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய சுந்தரம், சிவாஜி நடித்த "கௌரவம்' படத்தின் மூலம் இயக்குநரானார். இவரது கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் வெளியான "கெüரவம்' ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற படமாக விளங்கியது. "பயணம்', "விஜயா', "தேவிஸ்ரீ கருமாரியம்மன்', "ஞானப்பறவை' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், முரளி, கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அண்மைக்காலமாக திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இறுதிச் சடங்கு: "வியட்நாம் வீடு' சுந்தரத்தின் உடல் திரையுலகினர் அஞ்சலிக்காக தியாகராய நகர் ராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சுந்தரத்தின் உடல் மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சுந்தரத்துக்கு மனைவி செல்லா, மகள்கள் அனு, சுவேதா உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com