சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்

சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்

தோனி, கோலி என எத்தனை பேர் வந்தாலும் சச்சின் என்ற  வீரரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலிருந்து அகற்றி விட முடியாது.

தோனி, கோலி என எத்தனை பேர் வந்தாலும் சச்சின் என்ற  வீரரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலிருந்து அகற்றி விட முடியாது. சுமார் 25 ஆண்டுகள்  கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மைதானங்களில் சுமந்து திரிந்தவர். 100 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு தருணத்திலும் பூர்த்தி செய்ய 20 ஆண்டுகள் வரை அயராமல் உழைத்து வந்த உன்னத கேமர். விவேகம், நிதானம், ஏற்றுக் கொள்ளும் குணம், வெற்றி வரை தாக்குப் பிடித்த தருணங்கள், பரபரப்பு மிகுந்த பாகிஸ்தான் போட்டிகள், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் தேடித் தந்த பெருமை என அவர் கடந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும். 
 அப்படிப்பட்ட சச்சினின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது. 
சச்சினின் பிறப்பு முதல் இந்தியாவுக்கான அவர் களம் புகுந்த மைதானம், வெற்றி, தோல்வி, காதல், திருமணம் என எல்லாவற்றையும் பிரபதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு "சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்துக்காக "சச்சின் ஆந்தம்' என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில், படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 
 சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் சச்சின், கங்குலி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக, சிறு வயது சச்சினாக நடித்துள்ளது, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். ஜேம்ஸ் ஏர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்தை, 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பயோகிராஃபியாக எடுப்பதற்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  வெளியிடப்பட்டது. 
சச்சினை  வெள்ளித்திரையில் தரிசிப்பதற்கு வாய்ப்பாக இது அமையப்போகிறது என்ற ஆவல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இந்த மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. 
 இந்தப் படம் குறித்து பேசியுள்ள சச்சின்... "இந்த சினிமா, என் வாழ்க்கையில் நான் அனுபவித்த மிக முக்கிய கணங்களை மீண்டும் அசைபோடவைத்தது. நான் மிகவும் தனிமையான மனிதன். ஆனால், என் வாழ்க்கைக்கும் என் கிரிக்கெட் பயணத்துக்கும் துணையாக பலரை, குறிப்பாக ரசிகர்களைப் பற்றி நான் தெரியப்படுத்தியதோ அல்லது பேசியதோ இல்லை. ஆனால், இந்த சினிமா மூலம் அதைச் செய்திருக்கிறேன். இந்தப் படம், என் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சச்சின்.  
 தோனி மற்றும் சேவாக் போன்றோரும் இந்த பயோகிராஃபியில் இடம்பெற்று, சச்சினைப் பற்றி சிலாகிக்கிறார்கள். கிரிக்கெட்டில் ஜென்டில்மேன் எனவும் மிஸ்டர் கிரிக்கெட் எனவும் போற்றப்படும் சச்சின், சிறுவயதில் குறும்புத்தனத்துக்கு பஞ்சம் வைக்காத பலே கில்லாடி. அந்த சம்பவங்கள் அனைத்தும் மிக யதார்த்தமாக இப்படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. 
சச்சின் ஓய்வுபெற்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், கிரிக்கெட் என்றால் சச்சின்தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வரும் 26-ஆம் தேதி வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com