விஷால்: தமிழ்த் திரையுலகின் முதல்வன்!

தயாரிப்பாளர் சங்கத்தின் வில்லனாக முத்திரை குத்தப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட விஷால், இன்று அதே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக
விஷால்: தமிழ்த் திரையுலகின் முதல்வன்!

தயாரிப்பாளர் சங்கத்தின் வில்லனாக முத்திரை குத்தப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட விஷால், இன்று அதே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் நடிகர் சங்கத்திலும் அடுத்ததாகத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கி, தமிழ்த் திரையுலகின் தேர்தல் சாணக்கியனாக உருவாகியிருக்கிறார் விஷால்.  

ஒரு பேட்டி மூலமாக தனக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் உள்ள இடைவெளியை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தி முதல் காயை நகர்த்தினார் விஷால். அவருக்குத் தெரியாதா என்ன, இது நிச்சயம் தயாரிப்பாளர் சங்கத்தில் அதிர்வலையை உண்டாக்கும் என! ஆனாலும் அங்கிருந்துதான் தன்னுடைய வேலையைத் தொடங்கினார் விஷால். பேட்டியில் அவர் கூறியதாவது: எந்த நல்ல விஷயம் பேசி முடிவுபண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும். 

தற்போதைய நிர்வாகத்தை நாங்க 100 சதவிகிதம் மதிக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவுமே நடக்கலை. எப்படி நடிகர் சங்கத்தைக் கையில எடுத்துக்கவேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிடுற சூழல் இப்ப வந்திருக்கு. இது பதவிக்காக அல்ல. மறுபடியும் இளைஞர்கள் திரளணும்கிற அவசியமும் இல்லை. ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் மனசுக்குள்ளயும் இந்த எதிர்ப்பு உணர்வு இருக்கு. அது தேர்தலின்போது நிச்சயமா வெடிக்கும். அது 100 சதவிகிதம் உறுதி. ஏன்னா, தமிழ் சினிமா எங்க தாய்; சோறு போடுற தெய்வம். அதைக் காப்பாத்தணும்னா, எங்களுக்கு வேறு வழி இல்லை என்று விஷால் பேட்டியளித்தார். 

ஏதோ பகைமை உணர்வில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் என்று அந்தப் பேட்டியை ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் அவர் அன்று சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகியுள்ளன. முந்தையை நிர்வாக அமைப்பின்மீது தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்பு உணர்வு இருந்துள்ளது. அது விஷால் சொன்னதுபோலவே தேர்தலில் வெடித்துவிட்டது. 

ஆனால் தலைமைப் பதவிக்கு விஷால் சரியான நபர் என்று இதர தயாரிப்பாளர்கள் எப்படி முடிவுக்கு வந்தார்கள்? இத்தனைக்கும் தேர்தலில் எதிர் தரப்பினர் விஷால் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். நடிகனாக இருந்தே பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கியவர், சங்கத் தலைவரானால் என்ன ஆகும் என்றொரு அஸ்திரத்தை வீசினார்கள். விஷால் படத் தயாரிப்பாளர்கள் அவருக்கு எதிராகப் பேட்டியளித்தார்கள். தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், விஷால் ஆகியோர் போட்டியிட்டாலும் (கடைசி நேரத்தில் ராதாகிருஷ்ணன் அணியில் ஜி.சேகரன் இணைந்துவிட்டார்) அனைவருக்குமான முக்கிய எதிரியாக விஷாலே இருந்தார். தாணு தலைமையில் விஷாலுக்கு எதிராக நடிகர் சங்க முற்றுகைப் போராட்டம்கூட தேர்தல் சமயத்தில் நடந்தது. தாணு விஷாலைக் கடுமையாகக் சாடினார். விஷாலின் படங்களின் தோல்வி, திருமண விவகாரம் என தனிப்பட்டத் தாக்குதல்களும் விஷால் மீது சுமத்தப்பட்டது. நடிகர் சங்கத்துக்கு நேர்ந்தது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒருபோதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டன.  

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாகப் பொறுப்பை வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. கடந்தமுறை பதவி வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தைக் குறை கூறி வந்த, நடிகர் விஷால் தனது தலைமையில் புதுக் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் களம் கண்டார். "நம்ம அணி' என்று உருவாக்கப்பட்ட இந்த அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதே போல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். சுரேஷ் காமாட்சி, கே.ராஜன், விஜயமுரளி உள்ளிட்டோர் இந்த அணியின் சார்பில் சங்க நிர்வாகத்தை கைப்பற்ற களத்தில் இருந்தனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த அணியின் சார்பில் ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.கதிரேசன் உள்ளிட்டோர் நிர்வாகப் பொறுப்பை கைப்பற்ற போட்டி களத்தில் இருந்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் வாக்களித்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 1059 வாக்குகள் பதிவாகின. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே நடிகர் விஷால் முன்னிலையில் இருந்தார். இறுதிச் சுற்றுக்குப் பின்னர் 478 வாக்குகள் பெற்று விஷால் பெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணனுக்கு 335 வாக்குகள் கிடைத்தன. கேயார் 224 வாக்குகள் பெற்றார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலளர் பதவி வகிக்கும் விஷால், இதன் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தலைவராகியுள்ளார். 

கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார் விஷால். அவருடைய தந்தையும், கடந்த 25 ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஷால். அவரை எதிர்த்து, நடிகர் ராதாரவி போட்டியிட்டார். தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த தாணு, நடிகர் ராதாரவிக்கு ஆதரவாக நேரடியாகச் செயல்பட்டார். இந்தப் போட்டி தயாரிப்பாளர் சங்கத்திலும் நீடித்தது. 

மேலே குறிப்பிட்ட விஷாலின் பேட்டி வெளியானபிறகு உடனே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கடந்த நவம்பர் 14-ல் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர், தயாரிப்பாளர் சங்கம் குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும் விஷால் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த வருத்தத்தைத் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் ஏற்க மறுத்ததால், கடந்த மாதம் விஷாலின் இடைநீக்கத்தை ரத்து செய்ய மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலை முன்னிட்டு இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என, விஷால் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நடிகர் விஷாலுக்கு எதிரான நடவடிக்கை சரியானதல்ல. இந்த விவகாரத்தில் சங்கமே உரிய முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து நீதிமன்றத்தில்  தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டி வரும் என நீதிபதிகள் தெரிவித்தார்கள். இதையடுத்து, விஷாலின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது. இடைநீக்கத்துக்கு எதிரான மூல வழக்கைத் திரும்பப் பெறுவதாக விஷால் தரப்பு அறிவித்தது. இதையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

இதனால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட இருந்த தடை நீங்கியது.

நடிகர் சங்கத் தேர்தலில் இருந்து விஷாலுக்கு உறுதுணையாக இருப்பவர்களில் முக்கியமானவர், கமல். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் விஷாலை முன்மொழிந்து கமல் கையெழுத்திட்டார். 

இதன்பிறகு நடிகர் சங்கத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்ததுபோலவே இதற்கும் அதே உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டார் விஷால். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து வாக்கு கோரினார். ‘தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,212 உறுப்பினர்கள் உள்ளனர். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும் உரிய வருவாய் கிடைக்காததால், பல தயாரிப்பாளர்கள் நலிந்துவிட்டனர். எங்கள் அணி கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், ஞானவேல் ராஜா, மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் நிர்வாகிகள் பதவிகளுக்கும், ஏனையோர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடுகிறார்கள். முந்தைய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்யாத நிலையில், எங்களைக் குற்றம் கூறி வருகின்றனர். எத்தகைய அவதூறையும் எங்கள் அணியினர் பொருள்படுத்தமாட்டார்கள். எங்களுடைய முக்கிய நோக்கம், தமிழ்த் திரையுலகில் தற்போது நிலவி வரும் வியாபாரச் சமமின்மையைச் சரிசெய்வதுதான். மேலும், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்துவோம். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்ற பின்னர், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 உதவித் தொகை, காப்பீடு, திருமண உதவித் தொகை ரூ. 2 லட்சம் வழங்கப்படும். ஏற்கெனவே நாங்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று, அறிவித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். நடிகர் சங்கத்துக்கு ரூ. 28 கோடியில் புதிதாகக் கட்டடம் கட்டி, அதன் மூலம் மாதம் ரூ. 50 லட்சம் வரை வருவாய் கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நான், அதில் வெற்றி பெற்றாலும் 2 ஆண்டுகளுக்கு எந்தப் பெரிய நடிகரையும் வைத்துப் படம் தயாரிக்க மாட்டேன். எனது கவனம் எல்லாம் 1,212 சங்க உறுப்பினர்களின் குடும்ப நலன் கருதியே இருக்கும்' என்று பேட்டியளித்தார்.

இதையே விரிவாக ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் எடுத்துரைத்தார். நடிகர் சங்கத் தேர்தல் போல சொன்னதைச் செய்துகாட்டுவோம். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வென்றால் தயாரிப்பாளர்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், திருட்டு டிவிடி ஒழிக்கப்படும் என்று விஷால் கூறிய வாக்குறுதிகளைத் தயாரிப்பாளர்கள் நம்பினார்கள். 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்'  என்கிற ஒரு பாடல் மூலம் மட்டும் ஒன்றேகால் கோடி ரூபாய் வருமானம் தந்தது. 'ரம்மி' பாடல் ரிங் டோன் மூலமாக மட்டும் 78 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது என்று சமீபத்தில் பேசினார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார். இதுபோன்ற புதிய வருமானங்களை இதர தயாரிப்பாளர்களிடம் விளக்கினார் விஷால். தயாரிப்பாளர் சங்கத்துக்குப் புதிய ரத்தம் தேவை என்று எண்ணியவர்கள் விஷாலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். 

மேலும் நடிகர் சங்கம் ஆகட்டும் அல்லது பொதுமக்கள் தொடர்புடைய விஷயங்கள் ஆகட்டும் நலத்திட்டங்கள், திரையுலகச் செயல்பாடுகள் என தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வந்தார் விஷால். இது அவருடைய ஆளுமையை வெளிப்படுத்தியது. எல்லா நடிகர்களுக்கும் அறக்கட்டளை என ஒன்று இருந்தாலும் விஷால் அறக்கட்டளை தொடர்பான செய்திகள் மட்டும் தொடர்ந்து ஊடகங்களில் இடம்பெற்றன. மக்கள் தொடர்புப் பணியில் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கினார்.  

சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் ஆட்டோவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, ஆட்டோ ஓட்டுநர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்த நிலையில் ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், அக்குரைச் சேர்ந்த இவரின் குடும்பத்துக்கு உதவிடும் வகையில் அவரது மகள் மணிஷாவின் கல்விச் செலவை ஏற்றார் விஷால். மணிஷாவின் கல்வி முழுமைக்குமான செலவை தனது தேவி அறக்கட்டளை கவனித்துக் கொள்ளும் என அறிக்கை வெளியிட்டார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, தமிழகத்தின் கலாசாரம் பேண ஜல்லிக்கட்டு அவசியம் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். முக்கியமாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது மற்ற நடிகர்கள் சர்ச்சையில் சிக்கியபோது விஷால் அதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளவில்லை. நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் போராட்டமே முக்கியம். நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்தார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் திரையுலகினர் சிலர் மீது மக்களுக்குக் கோபம் இருந்தாலும் நடிகர் சங்கம் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளாமல் இருந்தது.  

கடந்த பிப்ரவரி மாதம், சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் இருளர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அடுத்த மாதம், ஏழைக் குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சை பெறும் வகையில், "ஹார்ட் டூ ஹார்ட்' எனும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி ஊராட்சியில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியனுடன் இணைந்து மரங்களை அகற்றினார். அவர் குடும்பத்துடன் கோயிலுக்குச் சாமி கும்பிடப் போனாலும் அது செய்தியானது. இப்படித் தேர்தல் நெருங்க நெருங்க ஏதாவதொரு காரணத்துக்காகத் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்றார் விஷால். 

இதைவிடவும் திரையுலகினருக்கு விஷால் மீது மிகுந்த நம்பிக்கை வருவதற்கு அவருடைய சில துடிப்பான செயல்பாடுகளும் முக்கியக் காரணமாக இருந்தன. கேபிள் டிவிகளில் அல்லது பேருந்துகளில் புதிய படம் ஒளிரப்புகிறார்கள் என்று விஷாலுக்குப் புகார் தெரிவித்துவிட்டால் போதும், அவ்வளவுதான், உடனே உரிய அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அச்செயல்களைத் தடுத்து நிறுத்துவதில் பெரிய வெற்றி கண்டார். இதனால் தமிழகம் முழுக்க இயங்கும் திருட்டு டிவிடி விற்பனையாளர்கள் மத்தியில் விஷால் பெயர் ஓர் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். கர்நாடகாவில் உள்ள ஒரு திரையரங்கில் இருந்து படம் திருட்டுத்தனமாகப் படமாக்கப்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டபிறகும் நடவடிக்கை எடுக்காததை வெளிப்படையாகக் கண்டித்தார். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட புதிய தமிழ்ப் படங்களை ஒளிபரப்பும் இணையத்தளங்களுக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். விஷால் தலைவரானால் தமிழ் சினிமாவைக் கதறவைக்கும் முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்கிற அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதுதான் தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது.

தவிரவும் தேர்தல் நடக்கவிருந்த சில நாள்கள் முன்பு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நாசர் தலைமையிலான நிர்வாகம் நடிகர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அணியினரின் முக்கியத் தேர்தல் அறிவிப்பாக நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் இருந்தது. இதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராயர் நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் செங்கல் எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினர். கார்த்தி, விஷால் ஆகிய இருவரும் நடிகர் சங்க கட்ட நிதியாக தலா ரூ.5 கோடி வழங்குவதாகக் கூறினார்கள். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய கட்டடம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 'நான்கு அடுக்கு மாடிகளுடன் உருவாக்கப்படவுள்ள இந்தக் கட்டத்தில் திருமண மண்டபம், உடற்பயிற்சி அரங்குகள், சந்திப்புகளுக்கான பிரத்யேக அரங்குகள், திரையரங்குகள் உள்ளிட்ட பல விதமான வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தக் கட்டடத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.50 லட்சம் அளவில் வருவாய்க்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தக் கட்டடம் உருவாவதை இனி யாராலும் தடுக்க முடியாது’ என்று செயல் வீரனாகப் பேட்டியளித்தார் விஷால். நடிகர் சங்கத் தலைவரான நாசர், விஷாலுக்கு ஏற்ற ஓர் இணை. விஷால் அணியினர் என்று நாசர் தலைமை தாங்கும் அணியைக் குறிப்பிட்டாலும் அதைச் சர்ச்சைக்கு இடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளார். 'நடிகர் சங்கம் என்பது எப்போதும் கடனில் சிக்கித் தவித்து வந்த ஒரு அமைப்பு. எங்களது நிர்வாகம் பதவியேற்ற பின்னர், கடனில் இருந்த சங்கத்தை மீட்டோம். இப்போது சங்கத்தில் இருப்புத் தொகை இருக்கும் அளவுக்கு, இச்சங்கத்தை வழி நடத்தி அழைத்து வந்துள்ளோம். யாரிடமும் கடன் பெறாமல் இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதற்குரிய ஒரு பகுதி தொகையை கார்த்தியும், விஷாலும் கொடுக்க முன் வந்திருப்பதற்கு நன்றி. இப்போதுதான் எனக்கு தூக்கம் வந்துள்ளது என்று நாசர் பேட்டியளித்தார். நடிகர் சங்கத்தில் நடிகர்களாக அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டார்கள். நட்சத்திர கிரிக்கெட், கடனிலிருந்து சங்கத்தை மீட்டது, சங்கத்தின் கணக்கு விவரங்களை இணையத்தளத்தில் (nadigarsangam.org) வெளியிட்டது, பண்டிகை தினங்களில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்குப் பரிசளிப்பது, கல்வி, மருத்துவம் தொடர்பான நிதியுதவிகளை உறுப்பினர்களுக்கு அளிப்பது, புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, திருட்டு டிவிடிக்காகக் குரல் எழுப்புவது, தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிரான கருத்துகளைத் துணிச்சலுடன் முன்வைப்பது என நடிகர் சங்க செயல்பாடுகளால் திரையுலகினர் மத்தியில் விஷாலின் மதிப்பு மேலும் உயர்ந்தது.  

ஒரு திரையரங்குக்குள் ஆட்டோ நுழைவது குறித்து நடிகர்களுக்கோ திரையுலக நிர்வாகிகளுக்கோ என்ன கருத்து இருக்கமுடியும்? ஆனால் இதிலும் தன் கருத்தை வெளியிட்டார் விஷால். அவருடைய கத்தி சண்டை படம் வெளிவர இருந்தபோது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு விஷால் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்குத் திரையரங்குகளுக்குதான் வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நஷ்டம் ஒன்றும் இல்லை. மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதற்கும் அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர். ஆகவே இக்கடிதத்தின் வாயிலாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், நமது திரைப்படம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். திரையுலகம் தொடர்பாக எங்கு எந்தச் சிக்கல் என்றாலும் அதுகுறித்த கருத்தும் செயலும் விஷாலிடம் இருந்தன.  

நடிகர் சங்கத் தேர்தலின்போதே விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைவது குறித்தும் அதன் மோசமான வசூல் குறித்தும் எதிரணியினர் பேசிவந்தார்கள். சமீபத்தில் நடிகர் சங்கத்தை முற்றுகையிட வந்த தயாரிப்பாளர் தாணுவும் இதே விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் தாணு கூறியது: முன்பிருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து அவதூறாக விஷால் பேசி வருகிறார். இதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை வைத்துப் படம் எடுத்த பல தயாரிப்பாளர்களைக் கடனாளியாக்கிய பெருமை விஷாலுக்கு உண்டு. அதை மனதில் வைத்து அவர் பேச வேண்டும். தயாரிப்பாளர்கள் குறித்தோ, சங்க நிர்வாகம் குறித்தோ பேச விஷாலுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அரசியலில் இறங்குவதற்காக விஷால் திட்டமிட்டு வேலை செய்கிறார். அவரின் ஆசைக்கு அவருடன் இருப்பவர்கள் பலியாக வேண்டாம் என்றார். 

இயக்குநர் சேரனும் விஷாலின் படங்களின் வசூல் குறித்து விமரிசனம் செய்தார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது: விஷால், தான் நடிச்ச படங்கள்ல கூட ஒரே ஒரு படம், இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. உங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில இருக்காங்கனு தெரியுமா? உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவில் உங்களுக்கு கை தட்டக்கூட ஆள் இல்ல, ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு? எவ்வளவு பேசுறீங்க… அதை நியாயமா வாங்கிருந்தா உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க? உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன? அட்லீஸ்ட் இப்ப அவரு என்ன செய்றாருன்னு நினைத்ததுண்டா? அவருக்கு நீங்க செட்டில் பண்றதா சொன்ன 45 லட்சம் என்ன ஆச்சு? அதுக்கு அப்புறம் எத்தனையோ கோடிகள் சம்பாதிச்சும் உங்களுக்கு அந்த பணத்த கொடுக்குற மனசு ஏன் வரல… அவரு இப்போ மிகுந்த நெருக்கடியிலதான் இருக்காரு… அந்த தயாரிப்பாளரைப் பற்றி உங்களுக்கு கவலையோ அக்கறையோ இல்ல… அந்த சிறு நன்றியக் கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுறீங்க… என்று விஷாலைச் சாடினார். 

சேரன் - விஷால் மோதலுக்கு ஒரு கடந்தகாலமும் உண்டு. சென்னையில் படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் சேரன், தமிழகத்தில் திருட்டு டிவிடி அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று பேசினார். இதனையடுத்து அவருடைய பேச்சுக்குப் பரவலாகக் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் ட்விட்டரில் கூறியதாவது: ஒருபட விழாவில் இலங்கைத் தமிழர்கள் குறித்து இயக்குநர் சேரன் பேசியிருப்பது தேவையற்ற விமரிசனம். இலங்கைத் தமிழர்கள்மீது குற்றச்சாட்டுகளை வைப்பதைத் தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது நிம்மதியாக வாழட்டும் என்றார். அதற்குச் சில மாதங்கள் கழித்து வேறு விதத்தில் பதிலடி தந்தார் சேரன்.

இப்படி எங்குத் திரும்பினாலும் விஷால்... விஷால்... விஷால்...!

இங்கு ஒன்று கவனிக்கவேண்டிய விஷயம். தேர்தலில் பலமுனைப் போட்டி இருந்தாலும் அனைவரும் பேசிக்கொண்டிருந்தது ஒருவரை மட்டும்தான். அத்தனை மூலைகளில் இருந்தும் விஷாலுக்கு நெருக்கடிகள் உருவாகின. ஆனால் இதற்குப் பதிலுக்குப் பதில் அளித்து சேற்றை இறைக்கவில்லை. அவர் தன் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டுவந்தார். விவசாயக் கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். நீ பேசிக்கொண்டு இரு, நான் என் வேலைகளைப் பார்க்கிறேன் என்று திரையுலக மற்றும் சமூகம் சார்ந்த கடமைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் விஷால்.

சங்கத்தில் உள்ள ஆயிரம் தயாரிப்பாளர்களும் விஷாலை நினைக்கும்படியான சம்பவங்களே தொடர்ந்து நடைபெற்றன. நடிகர் சங்கத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், தயாரிப்பாளர் சங்கத்திலும் எதிரொலிக்கும் என்று பலரும் எண்ணுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. இத்தனைக்கும் தேர்தலில் பெரும்பான்மையான ஆதரவு விஷாலுக்குக் கிடைக்கவில்லை. விஷாலை எதிர்த்த ராதாகிருஷ்ணனுக்கு 335 வாக்குகளும் கேயாருக்கு 224 வாக்குகள் கிடைத்தன.  அந்தளவுக்குக் கடுமையான போட்டி. விஷாலின் படையில் நம்பிக்கையளிக்கும் நட்சத்திரங்களும் இருந்ததால் இந்த அணி மற்ற அணிகளை விடவும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சங்கத்தில் உள்ள பாதி பேராவது எண்ணினார்கள். 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் விஷால் செய்தியாளர்களிடம் மத்தியில் கூறியதாவது: எங்கள் கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மகத்தானது. இளைஞர்களின் முன்னெடுப்பால் இந்த வெற்றி நிகழ்ந்துள்ளது. இளைஞர்கள் நினைத்தால் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், வரலாறு காணாத மாற்றங்களைச் சந்திக்கும் என்றார். தமிழ் ராக்கர்ஸ் குறித்த கேள்விக்கு, இப்போது வந்து பார் என்று சூளுரைத்தார். 

நூறு பேர் ஒன்று திரண்டு வந்தாலும் வில்லன்களிடம் தமிழ் சினிமாவின் கதாநாயகன் தோற்கவே முடியாது. தயாரிப்பாளர்களின் வருமானத்தை அதிகரிப்பது, திருட்டு டிவிடியை ஒழிப்பது, புதுப்படங்களை ஒளிபரப்பும் இணையத்தளங்களை முடக்குவது என செயற்கரிய செயல்களை நிச்சயம் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஷால். தெலுங்கு, மலையாளத் திரையுலகில் இப்பிரச்னைகள் இல்லை என்று சொன்ன விஷால் அதேபோன்றதொரு சூழலைத் தமிழ் சினிமாவுக்கும் அளிக்கவேண்டிய இடத்தில் உள்ளார். அதற்குத்தான் 478 வாக்குகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com