என்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆசி புரியும் ஒரு குருவையும் இதுவரை நான் கண்டதில்லை! ரஷ்ய இயக்குனர் அலெக்சாண்டர் சுக்ரோவ் நேர்காணல்!

என்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆசி புரியும் ஒரு குருவையும் இதுவரை நான் கண்டதில்லை! 
என்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆசி புரியும் ஒரு குருவையும் இதுவரை நான் கண்டதில்லை! ரஷ்ய இயக்குனர் அலெக்சாண்டர் சுக்ரோவ் நேர்காணல்!

சமகால ரஷ்ய திரைப்படத்துறையில் அதிக கவனத்திற்குரிய இயக்குனராக கருதப்படுபவர் அலெக்சாண்டர் சுக்ரோவ். மனித இருப்பு குறித்த ஆதார கேள்வியினை தமது திரைப்படங்களில் எழுப்பிய டார்கொவ்ஸ்கியின் மரபினரான சுக்ரோவ் சம்பரதாய கதைப் படங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாதவர். திரைப்படக் கலையில் பல்வேறு பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ள இவர்,  ‘இலக்கியங்களின் மூலமாகவே எனது திரைப்படங்களை கண்டடைகிறேன். உண்மையில் சினிமாவின் மீது எனக்கு பெரிய அளவில் விருப்பமில்லை’ என்று சொல்கிறார். 2002–ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இவரது ரஷியன் ஆர்க் திரைப்படம் ஒரேயொரு முழுமையான இடைவெட்டில்லாத காட்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது. காட்சி பதிவுகளில், நிறங்களில், இசை சேர்ப்பில் ஒருவித அரூப நிலையை தோற்றுவிக்கும் சுக்ரோவ் நவீன ஓவியங்களை தமது திரைப்படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

அவரது தொடக்கக்கால திரைப்படங்கள் பெரும்பாலும் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. 1997- ல் வெளியான மதர் அன்ட் சன் (Mother and Son) திரைப்படத்தின் வாயிலாகவே வெளியுலகிற்கு சுக்ரோவ் அறியப்பட்டார். இப்படத்தில், நோய்மையில் பீடிக்கப்பட்டிருக்கும் தாயும், அவளது இளம் வயது மகனும் மனித தடயமற்ற புதிரான புல்வெளி பிரதேசத்தில் காணப்படுகிறார்கள். நோயுற்ற தாயின் இறுதி கணங்களையே இத்திரைப்படம் பதிவு செய்திருந்தது. இயற்கையிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடி அவர்கள் இயற்கையின் ஒரு அங்கம் போலவே படத்தில் இடம்பெறுகிறார்கள்.

ஒரு காட்சியில், தாயை தனியே விட்டுவிட்டு மகன் சிறிது தூரம் நகர்ந்து செல்ல, அவனது வருகையை எதிர்பார்த்து, தனது வலுவற்ற உடலை அவன் சென்ற திசையின் பக்கமாக தாய் திருப்புகிறாள். உடனே, அவளை சுற்றியிருக்கும் செடி கொடிகளும் அவளோடு இசைந்து மகனின் வருகைக்காக அவன் சென்ற திசையில் அசைகின்றன. ஒருவித மயக்க நிலையில் என்னுள் உண்டு பண்ணிய அக்காட்சியை இப்போதும் நினைத்துச் சிலிர்கிறேன்.

உலகின் பல்வேறு உயரிய விருதுகளை பெற்றிருக்கும் அலெக்சாண்டர் சுக்ரோவ் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். சென்ற ஆண்டு அவரது Francofonia திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

பால் ஸ்க்ரேடர்
பால் ஸ்க்ரேடர்

அலெக்சாண்டர் சுக்ரோவ்விடம் பிரபல அமெரிக்க திரைக்கதையாசிரியரும் இயக்குனருமான பால் ஸ்க்ரேடர் (Paul Schrader) மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவமிது.

உங்களது பின்னணியையும், உங்களுடைய கல்வி மற்றும் எதனால் நீங்கள் திரைத்துறையை தேர்வு செய்தீர்கள் என்பதையும் முதலில் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் மிகவும் கடினமான கேள்வியை கேட்டுள்ளீர்கள். இலக்கியத்தைப் போலவே ரேடியோவில் ஒலிப்பரப்பான நாடகங்களின் மீதும் எனக்கு மிகப் பெரிய அளவில் விருப்பமுண்டு. எனது வளர் பருவத்தில் ரேடியோவில் ஒலிப்பரப்பான மிகச் சிறந்த நடிகர்களின் கவனத்தை ஈர்த்த நாடகங்களை கேட்டு களிப்புற்ற தினங்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் என் கண்களை மூடி ரேடியோவில் ஒலிப்பரப்பாகும் நாடகத்திற்கு ஏற்ற காட்சி பிம்பங்களை எனது கற்பனையில் உருவாக்குவேன். பிற்காலத்தில், நான் ஒரு திரைப்பட இயக்குனராவேன் என்று அப்போது நினைத்ததில்லை. ஏனெனில், எனது குடும்பத்தில் எவருமே கலைத்துறையில் ஈடுபட்டதில்லை.

நான் சைபீரியாவின் மிகச்சிறிய கிராமமொன்றில் பிறந்தேன். இப்போது நான் பிறந்த கிராமம் நீரினுள் மூழ்கி கிடக்கிறது. அனல்மின் நிலையம் ஒன்றை அங்கு கட்டியெழுப்பியதால், எனது கிராமத்தை நீரினுள் மூழ்கடித்து விட்டார்கள். நான் பிறந்த கிராமத்தைப் பார்க்கும் எண்ணம் என்னுள் எப்போதாவது இனி உண்டானால், படகு ஒன்றை கடலினுள் ஓட்டிச் சென்று, தண்ணீரின் அடியில்தான் உற்று பார்க்க முடியும்.    

அதுவொரு அழகான காட்சித்துண்டு.

எனக்கு இதுவொரு முழுமையான காட்சியாக தெரிகிறது. அதோடு, திரைத்துறையில் பங்குக்கொள்வது என்னளவில், மிக நீண்ட பயணமாக கருதுகிறேன். பொதுவாக சொல்ல வேண்டுமெனில், நாம் ஒரு கலைஞனாக உருவாக முதலில் அடிப்படையிலான கல்வியை பயின்றிருக்க வேண்டும். அதனால்தான், வரலாற்று பிரிவில் பட்டப்படிப்பை முடித்த நான் கலைத்துறையில் செயலாற்றி கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

உங்களது திரைப்படக் கலை எவ்வாறு வளர்ச்சியடைந்தது?

நான் பிறந்து வளர்ந்து, எனக்கான சுய அடையாளத்தை தேடிக் கொண்டது யாவுமே ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ்தான் நடந்தது. என்போன்ற பின்னணியையும், உளவியல் குணாதிசியமும் கொண்ட எவரும் தங்களது செயல்பாடுகளில் மிகத் தீவிரத்தன்மையை கடைப்பிடிப்பதோடு, அடிப்படையிலான கூர் நோக்கும் இயல்பையும் பெற்றிருப்பார்கள். அதோடு, நான் தொடர்ச்சியாக ரஷியாவின் செவ்வியல் புதினங்களையும் படித்து வந்தேன் என்பதை மறந்து விடாதீர்கள். புதினங்கள்தான் என் மீது மிகப்பெரிய ஆளுமையை செலுத்தின. நான் பீட்டில்ஸ் இசையையோ, பிற நாட்டு சமகால இசை அமைப்பாளர்களையோ கேட்டதில்லை. வாக்னரும், ஸ்கர்லட்டியும் (Scarlotti) மட்டுமே எனது விருப்பத்திற்குரிய இசையமைப்பாளர்கள். இவ்வழியில்தான், எனது திரைப்பட கலையினுள் நுழைந்திருக்க வேண்டும். நான் மிக மிகத் தீவிரமான செயல்களில் ஈடுபடலானேன்.

சோவியத் யூனியன் உடைபடுவதற்கு முன்பாக, திரைப்பட தணிக்கை குழுவினரோடு உங்களுக்கு சில முரண்பாடுகள் இருந்ததை அறிகிறேன். கதை படங்களை அதிகளவில் இயக்கி ருந்தால் அரசாங்கத்துடனான உங்களது உறவு மேலும் சிக்கல் நிரம்பியதாக இருந்திருக்கும் என்று கருதுகிறீர்களா? ஏனெனில், கதைப் படங்களின் மூலமாக நேரடியாக உள் நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட முடியும்.

உங்களுடைய கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுவரையில் யாரும் இதுப்போன்ற கேள்வியை என்னிடம் கேட்டதில்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு முழுமையான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும், உங்களால் அவர்களது நடவடிக்கைகளின் மூலமாகவே சிக்கல் உருவெடுத்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். அரசாங்க திரைப்பட இயக்கம் என்னோட கொண்டுள்ள முரண்பாட்டுக்கு அரசியல் நோக்கு காரணமல்ல. என்னிடம், சோவியத் யூனியன் பற்றி எவ்வித கேள்விகளும் இல்லை. இருந்தாலும், அதன் மீது எனக்கு பெரிதளவில் அக்கறையில்லை. அதனால், அரசை கேள்வி எழுப்புவதைப் பற்றி சிந்திப்பதில் கூட எனக்கு விருப்பமில்லை. நான் எப்போதும் திரைப்பட அழகியலின் வழியாகவே வழி நடத்தப்பட்டுள்ளேன். அதாவது, மனித ஆன்மாவில் உறைந்துள்ள அழகியல் மற்றும் அதன் மீது சில ஒழுக்க விதிகளை நிறுவவே எனது திரைப்படங்கள் முற்படுகின்றன. நான் காட்சிரீதியிலான கலை வடிவத்தில் பங்குக கொண்டுள்ளதுதான், அரசாங்கத்தை சந்தேகத்திற்குள்ளாக்கி உள்ளது. என்னுடைய திரைப்படங்களின் தன்மை மற்றவர்கள் இயக்குகின்ற திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

அரசுக்கு உண்மையில் என்னை எதற்காக தண்டிக்க வேண்டுமென்பதே புரியவில்லை. இந்தக் குழப்பம் அவர்களுக்கு என் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அரசின் இத்தகைய நிலைப்பாடு, ஒரே சமயத்தில் எனக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்திருக்கின்றன. ஒருபுறம், மக்களுக்கு காண்பிப்பதற்கு எனது திரைப்படங்கள் தடை செய்யப்படுகின்றன. மற்றொரு புறம், எனது புதிய திரைப்படங்களுக்கான முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்விதமான முரண்பாடு சர்வாதிகார ஆட்சிக்கே உரித்தானது என்றே சொல்வேன். ஏனெனில், சர்வாதிகாரிகள் படைப்பு செயல்முறைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.

எந்தக் கலைஞர்கள் – திரைப்பட இயக்குனர் - என்றில்லாமல் உங்களை நீங்கள் கண்டுக்கொள்ள உதவினார்கள்?

நான் என்னை சுற்றி உள்ள சாராசரி மனிதர்களிடமிருந்துதான் பெரிதும் கற்றுக் கொண்டேன். அவர்கள் கலை செயல்பாடுகளில் துளி அளவும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஆனால், அவர்கள் ரொம்பவும் மென்மையான, நேர்மையான, தன்மையான, அழகான மனிதப் பிறவிகள். அதோடு, படிப்பாளிகளும் கூட. ஆனால், என்னை மிகப் பெரிய அளவில் தாக்கத்திற்குள்ளாக்கியவர் என்றால் ஆண்டன் செகாவ்வைதான் சொல்வேன்.

நான் மதரீதியிலான பிண்ணனியில் இருந்து வந்தவன். எங்கள் தேவாலயம் காட்சிகளை முழுமையாக நிராகரிக்கிறது. அவர்கள் காட்சி படிமங்களுக்கு எதிரானவர்கள். நீங்கள் எதை வெளிப்படுத்த வேண்டுமென்றாலும், வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். என்னுடைய இருபது வயதுகளில்தான் காட்சி என்பதும் ஒரு வகையிலான கருத்துருவாக்கமே என்பதை உணர்ந்துக்கொண்டேன். எனக்கு அதனை உணர்ந்துக்கொள்ள சில காலம் தேவைப்பட்டது. நீங்கள் இலக்கியத்தை பற்றியும் ரேடியோ நாடகத்தை பற்றியும் பேசினீர்கள். நீங்கள் கருத்துருவாக்கத்தின் (ideology) அறிவார்ந்த மொழியினை எப்போது உணர்ந்துக்கொண்டீர்கள்?

எனது பின்புலம் உங்களுடைய பின்புலத்திற்கு எவ்வகையிலும் தொடர்புடையதல்ல. எனது பெரும்பாலான செய்கைகளை எனது உள்ளுணர்வே தீர்மானிக்கிறது. என்னுடைய ஆன்மாவையும், ஆன்மீகத்தன்மையையும் வளர்த்தெடுக்க உதவக்கூடிய ஒருவரையும் நான் சந்தித்திருக்கவில்லை. இப்படி சொல்லலாம். என்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆசி புரியும் ஒரு குருவையும் இதுவரை நான் கண்டதில்லை.

உங்களுடைய பெயர் அவ்வப்போது டார்கொவ்ஸ்கியோடு தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது. அவர் உங்களை எவ்விதத்தில் பாதித்திருக்கிறார்?

அது மிகவும் தற்செயலானதே. டார்கொவ்ஸ்கியே குறிப்பிட்டுள்ளதைப் போல நாங்கள் முழுவதும் வேறுபட்ட மனிதர்கள். நான் திரைப்பட கல்லூரியின் இறுதியாண்டில் பயின்று கொண்டிருந்த போதுதான், முதல்முதலாக அவருடைய திரைப்படத்தைப் பார்த்தேன். அவரது திரைப்படங்களின் அழகியல் எனக்கு ஆச்சர்யமூட்டுபவையாக இல்லை. உண்மையில், என் மனத்தின் பிரதிபலிப்பாகவும், எனக்கு உரியதாகவுமே அவரது கலைப்பணி எனக்கு தோன்றியது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் கடினமான கேள்வி என்றே கருதுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்றவில்லையே தவிர, அவருக்கும் எனக்குமிடையே மிக நெருக்கமான நட்பு மேலோங்கியிருந்தது. அவர் ஏன் எனது படங்களை விரும்பினார் என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது.

டார்கொவ்ஸ்கியை நான் இப்போது நேசிப்பதை விடவும் இன்னும் அவரை ஆழமாக நேசிக்காததை நினைந்து எனக்கே குற்றவுணர்வு உண்டாகிறது. எனது மூளை அவரை ஆழமாக நேசிக்க வற்புறுத்தினாலும், மனதில் ஏதோவொரு குறுக்கீடு அதனை தடுக்கிறது. உங்களது திரைப்படங்களை முதல்முறையாக பார்த்தபோது, என்னுடைய எதிர்வினை – இதைத்தான் நான் டார்கொவ்ஸ்கியிடம் எதிர்பார்த்தது என்பதாகத்தான் இருந்தது.

அது அற்புதமானது. உண்மையிலேயே அற்புதமானது. இது மீண்டுமொருமுறை நானும் டார்கொவ்ஸ்கியும் ஒரே ஏணியில் ஓரிரு படிகள் இடைவெளியில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரச் செய்கிறது.

மதர் அன்ட் சன் (Mother and Son) திரைப்படம் எத்தனை நாட்களில் படமாக்கப்பட்டது?

மொத்தமாக இருபது தினங்களில் படம் பிடிக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

படத்தில் வரும் இருண்மையான அடர்த்தியான மேகமூட்டத்திற்காக நீங்கள் சரியான வானிலையை எதிர்பார்த்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்ததா?

இந்த விஷயத்தில், ஒன்றை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கடவுள் அப்போது எங்களுடன் இணைந்து உதவி புரிந்து கொண்டிருந்தார். அதோடு, நாங்கள் அழகான, பரிசுத்தமான இயற்கை பகுதிகளை தேர்வு செய்து, அங்கு தான் எங்கள் உட்புற அரங்குகளை அமைப்போம். நாங்கள் ஸ்டுடியோவில் படமாக்கவில்லை. எங்கள் படப்பிடிப்புத் தள வடிவமைப்பு மிகவும் சிக்கலான கட்டுமானத்தை கொண்டிருந்தது. நாங்கள் காட்டின் அருகிலிருந்த மணல்மேட்டின் மீது தளத்தை அமைத்தோம். அதனால் மேல்புறமாக திறந்து, எங்கள் அரங்கை வேறு திசைக்கு மாற்றும் வசதி எங்களுக்கு இருந்தது. சூரிய ஒளியை பதிவு செய்து, நமக்கு ஏற்ற வகையில் அதனை பயன்படுத்திக் கொள்ள ஒளிப்பதிவாளருக்கு இது பெரிதும் துணை புரிந்தது.

உங்கள் படத்தின் காட்சிகளில் ஒருவிதமான மயக்க நிலையை தோற்றுவித்திருந்தீர்கள். காட்சிகளில் எவ்வாறு திரிபு (distortion) நிலையை சாத்தியப்படுத்த முடிந்தது?

நீங்கள் விவரிப்பத்தைப் போல அது மிகவும் சிக்கலான ஒன்றல்ல. மிக மிக எளிதானதே. நான் திரையில் பார்க்கும் பிம்பங்கள் நிலையானவை, ஒரே விதமான வடிவமைப்பை கொண்டவை என்பதை துவக்கத்திலேயே மறுத்துவிட்டேன். என்னுடைய முதல் இலக்கே, காட்சிகள் தட்டையாகவும் இருக்க வேண்டும். அதே தருணத்தில், கிடைமட்ட (Horizontal) வடிவத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான். இரண்டாவது, என்னுடைய காட்சி அழகியலிலும், அதன் கலையம்சத்திலும் விசாலத்தன்மையை பெற்றிருக்க வேண்டும். நான் இயற்கையின் ஸ்தூலமான வடிவத்தை படம் பிடிக்கவில்லை. நான் இயற்கையை மீள் உருவாக்கம் செய்கிறேன். மதர் அன்ட் சன் திரைப்படத்தில் நான் சில கண்ணாடிகளையும், பெரிய கண்ணாடி பேனல்களையும், வண்ணக் கலவைகளையும் அதோடு சில பிரஷ்களையும் பயன்படுத்தினேன்.

நீங்கள் கண்ணாடி பேனல்களை லென்சின் முன்னால் வைத்து படம் பிடித்தீர்களா?

ஆமாம். லென்சின் முன்னால் மட்டுமல்ல. பக்கவாட்டிலும், கேமராவிற்கு பின்னாலும் பெரிய கண்ணாடி பேனல்களை வைத்தோம். காட்சியின் தேவைக்கேற்ப கண்ணாடிகளை பயன்படுத்தினோம். இது மிகவும் கடினமான, நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய செயல்முறை. நான், எதார்த்த உலகை சிதைத்து, எனக்கான உலகை கட்டமைக்கிறேன். 

மதர் அன்ட் சன் திரைப்படத்திற்கு பிறகு, பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளதாக குறிப்பிட்டீர்கள். ஆவணப்படத்திற்கும் கதைப் படங்களுக்குமான வித்தியாசங்களாக நீங்கள் உணர்ந்தது என்ன?

நான் இரண்டையும் வெவ்வேறு விதமாக கையாளுவதில்லை. ஆனால், ஆவணப் படத்திற்கும் கதைப் படங்களுக்குமான ஒரே வித்தியாசமாக நான் கருதுவது நாம் காட்சியை உருவாக்க பயன்படுத்தும் கருவியையே (அ) இப்படியும் சொல்லலாம், ஒரு வீட்டை உருவாக்க பயன்படுத்தும் கருவிகள். திரைப்படத்திற்கு இயக்குனர் பெரிய வடிவிலான உறுதியான கற்களை பயன்படுத்துகிறார். ஆனால், ஆவணப்படத்தில் வீடு என்பது மிகவும் வலுவற்றதாக, வெளிப்படையான, புல் போன்ற கட்டமைப்பை கொண்டிருக்கும்.

எனக்கு சரியாக புரியவில்லை.

நான் ஆவணப்படங்களை எதார்த்தவாத கலையாக பாவிக்கவில்லை. எனக்கு பரிசுத்த உண்மையின் மீது பெரிய விருப்பமில்லை. என்னால் யதார்த்தை புரிந்து கொள்ள முடியுமென்றும் நான் நம்பவில்லை.

நீங்கள் ஆவணப்படம் இயக்க விரும்பினால், அதன் வடிவத்தை முற்றிலுமாக சிதைத்துவிட்டு பிறிதொரு வடிவமாக அதனை உருவாக்குவீர்களா?

ஆவணப்படமாக இருந்தாலும், கதைப்படமாக இருந்தாலும் மனிதர்கள் தாங்களும் அந்த கலை வடிவத்தில் பங்கு கொள்கிறோம் என்பதில் துளி வருத்தமும் தெரிவிப்பதில்லை என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். அதனால்தான், நான் மக்களை படம் பிடிக்க விரும்புவதில்லை. என்னால் அவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது எனக்கு அவர்களை நேசிக்கத் தெரியவில்லை.

என்னுடைய ஆசிரியர் ஒருவர், ஒரு சட்டகத்தில் இடம்பெறும் எதுவும் கலைதான் என்று குறிப்பிட்டார். சட்டகத்தில் இடம்பெறும் சிறிய குடுவை என்பது குடுவை அல்ல, கலை என்று சொன்னார்.

நான் அதனை முற்றிலுமாக மறுக்கிறேன். கலை என்பது உங்களுடைய ஆன்மாவிலிருந்து பலவிதமான சோதனைகளை கடந்து பிரசவிக்கிறது. குடுவை என்பது எப்போதுமே குடுவைதான். கலைஞனுடைய வரலாறு என்பது எப்போதுமே துயர வரலாறாகவே இருக்கும்.

உங்களுடைய திரைப்படங்களை பற்றி பொதுவாக பேசும்போதும், அதில் கையாளப்படும் ஓவிய கலாச்சாரத்தைப் பற்றி பெரியளவில் விவாதிக்கப்படுகிறது. உங்களை வெகுவாக பாதித்த ஓவியர்களை பற்றி பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், என்னிடம் இது போன்ற கேள்வியை ஒருவர் கேட்டால், எனக்கு ஒரு புதிர்வழிதான் நினைவுக்கு வரும். எல்லா காலத்திற்குள்ளும் சென்று வரக் கூடிய சிக்கலான புதிர்வழி அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்ய ஓவியர்களாகஅது இருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மானிய ரொமாண்டிக் ஓவியங்களாக இருக்கலாம். ரெம்ப்ராண்ட்டாகவும் (Rembrandt) இருக்கலாம். எனக்கு அமெரிக்காவின் ஆண்ட்ரு வ்யேத் (Andrew Wyeth) ரொம்பவும் பிடிக்கும். எனக்கு பழங்கால ஓவியர்களை மிகவும் பிடிக்கக் காரணம் அவர்கள் வியக்கத்தக்க வகையில் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள். கலைஞனாக உருவாக இது போன்ற தொடர்ந்த உழைப்பும், திறனை கூர்மைப்படுத்தலும் மிகமிக அவசியம். அதனால்தான், திரைத்துறையில் பெரியளவில் மாஸ்டர்கள் உருவாகவில்லை என்று நினைக்கிறேன்.

திரைப்பட கலையும், ஓவியமும் இப்போது கணினித் துறையின் வளர்ச்சியால் ஒன்றோடு ஒன்று இயைந்து செயலாற்றுகின்றன. இப்போது பல ஓவியர்கள் கணினியிலேயே வேலை செய்கிறார்கள். நீங்கள் இந்த போக்கை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை. தொழிற்நுட்பம் என்னை வெற்றிக் கொள்வதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். ஓவியக் கலை சில விதமான கருவிகளோடு பிறக்கின்றது என்றால், எல்லா காலத்திலும் அக்கருவிகள் நிலைத்திருக்க வேண்டுமென்பதே எனது எண்ணம். கணினியில் பணியாற்றுவது என்பதும் ஒருவகையிலான காண் கலைதான். ஆனால், நாம் இப்போது தூய கலை வடிவத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். நாம் வேறேதோ தளத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

உங்களது திரைப்படங்களில் மேற்குலகில் திரையிடப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

துவக்கத்தில், பார்வையாளர்களிடமிருந்தும், திரைப்பட விழாக் குழுவினரிடமிருந்தும் கிடைத்த பாராட்டுக்கள் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தன. ஆனால், சில காலத்திற்கு பின், மேற்குலகில் எனது திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எனக்கு வருத்தத்தையே கொடுத்தது. உதாரணமாக, சிலர் சிரிக்கக் கூட செய்கிறார்கள். என்னால் மேற்குலகத்தினரை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் ரஷ்ய மக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். ரொம்பவும் தனிமையானவர்கள். ரஷ்யர்களை விடவும் தனிமையை அனுபவிப்பவர்கள். இன்னும் தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டுமென்றால் ஆன்மிகரீதியாக மிகவும் வலுவற்றவர்களாகவும், பிரத்யேக கொள்கைகளை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், என்னுடைய திரைப்படத்தை பார்க்கும் சிலர் என்னிடம் வந்து உரையாடும் போதும், எனது திரைப்படங்களில் நான் உருவாக்கும் உலகை புரிந்து கொள்வதோடு அதனை ஏற்றுக் கொள்ளவும் செய்யும் போதும், பெருமையாக உணர்கிறேன். ஆனால், மேற்குலகை பொறுத்தவரையில், என்னால் அவர்களது உணர்வுகளை ஒரு போதும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

இறுதியாக ஒரேயொரு கேள்வி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? நகரத்திலா அல்லது கிராமிய சூழலிலா?

நகரத்தோடும் கிராமிய சூழலோடும் என்னை முழுமையாக பொருத்திப் பார்க்க முடியவில்லை. நகரம் ஒரு போதும் எனது மனத்துக்கு நெருக்கமானதல்ல. ஆனால், எனது தேவைகளுக்காகவும், திரைத்துறை சார்ந்து இயங்குவதாலும் தற்போது நகரத்தில்தான் வசித்து வருகிறேன்.

தமிழில் : ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com