ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு

மெக்சிகோ தேசத்து இயக்குனரான அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Gonzalez Inarritu)
ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு

மெக்சிகோ தேசத்து இயக்குனரான அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Gonzalez Inarritu) தனது மரண வரிசை திரைப்படங்களான Amoresperros, 21 Grams மற்றும் Babel படங்களின் மூலமாக உலகளவில் புகழ்பெற்ற இயக்குனராவார். அலெக்சாண்ட்ரோவின் சமீபத்திய திரைப்படமான Birdman or The unexpected virtue of ignorance  திரைப்படம் இவ்வாண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த மூலத் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்திருக்கிறது.

Birdman கதாப்பாத்திரம் ஏற்று நடித்த முன்னால் ஹாலிவுட் நடிகர் ஒருவர், தனது இறுதி காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் பிரயத்தனங்களை சுற்றி நகரும் இத்திரைப்படம் யதார்த்தத்திற்கும், புனைவெளிக்குமான இடைவெளியை ஆராய்கிறது. ஒரே ஷாட்டில் படம்பிடிக்கப்பட்டுள்ளதைப்போன்ற உணர்வை ஏற்படுத்தும் இத்திரைப்படம், இதுவரை உலகெங்கிலும் 122 விருதுகளை பெற்றிருக்கிறது. அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டிடம் பத்திரிகையாளர் எல்விஸ் மிட்செல் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவமிது. 

Birdman திரைப்படத்திற்கு The unexpected virtue of ignorance என்று மற்றொரு தலைப்பிட்டதன் காரணம் என்ன?

நான் எப்போதும் கூறி வருவதைப்போல, அறியாமை என்பது அனுபவத்தை காட்டிலும் வலிமையானது. சமயங்களில், மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் சிக்கிக்கொள்ளும்போது, அவர்களது அறியாமையும், அனுபவமின்மையுமே, அவர்களை அப்பழுக்கற்றவர்களாக எண்ணச் செய்து, எளிதாக அந்த சிக்கலிலிருந்து அவர்களை விடுவித்துவிடும். Birdman கதாப்பாத்திரம் அத்தகைய ஒன்றே.

ரேமண்ட் கார்வரின்நாம் காதலை பற்றி உரையாடும்போது, எதைப்பற்றி பேசுவோம்எனும் கதையை உங்கள் திரைப்படத்தில் எதனால் பயன்படுத்தினீர்கள்?

அது ஒரு பயங்கரமான யோசனை (சிரிக்கிறார்). என் இளம் வயதிலிருந்தே ரேமண்ட் கார்வரின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். அவர் எனக்கு மிகமிக பிடித்தமான எழுத்தாளர். ஆனால், அவருடைய கதை ஒன்றை எனது திரைப்படத்தில் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தது முற்றிலும் தற்செயலானதே. இது கிட்டத்தட்ட உங்கள் முதல் கேள்வியுடன் தொடர்புடையது. நீங்கள் எத்தகைய பணியினை செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்கின்ற தெளிவு உங்களிடம் இல்லாதபோது, ரேமண்ட் கார்வரை நாடகத்திற்கு பயன்படுத்திக்கொள்வது எளிதான, அதே சமயத்தில், நன்மையோ அல்லது தீமையோ விளைவிக்கக்கூடிய செயல். ரேமண்ட் கார்வர் இறக்கும் முன்பாக எழுதிய அழகான கவிதை ஒன்றின் வரிகளிலிருந்துதான், என்னுடைய திரைப்படம் துவங்குகிறது. அக்கவிதை நாம் நமது வாழ்க்கையில் எதை தேடி அலைகிறோம் என்பதை பற்றியது. ரேமண்ட் கார்வர் தனது 50வது வயதில் உயிரிழந்தார். அக்காலத்தில், அவர் தான் மற்றவர்களால் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். கிட்டத்தட்ட என்னுடைய மனநிலையும் அப்படிதான் சமீபமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறது. அதோடு, அந்த சிறுகதையும், வாழ்க்கையில் தொலைந்து, குழப்பமுற்று, அன்புக்காக ஏங்கும் மனிதர்களை பற்றியது. அச்சிறுகதையும், என் திரைப்படத்தின் நாயகன் ரிஜ்ஜன் தாம்சன் தேடி அலையும் கேள்வியும் ஒரே புள்ளியில் இணைந்தது.

நீங்கள் சொல்வதை பார்த்தால், தல்ஸ்தோயின் A Confession-ஐ நீங்கள் தழுவி இருப்பதாக தோன்றுகிறதே?

ரேமண்ட் கார்வர் உயிர் துறக்கும் முன்பாக, தல்ஸ்தோயின் A Confession –ஐ தான் வாசித்துக் கொண்டிருந்தார். A Confession  தல்ஸ்தோயால், புகழின் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. தல்ஸ்தோய் மிகுந்த புகழ்பெற்ற எழுத்தாளர். எனினும், இந்த புத்தகத்தை அவர் தற்கொலை செய்துக்கொள்ளும் மனநிலையில் எழுதியிருந்தார். அவர் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்திருந்தாலும், அவரது வாழ்க்கை வெறுமையால் நிரம்பியிருந்தது. வாழ்வதற்கான அர்த்தங்களை தேடினார். கிட்டத்தட்ட ரேமண்ட் கார்வரும், அதே வயதில் தல்ஸ்தோய் போலவே ஆழ்ந்த மன நெருக்கடிக்கு உள்ளானார். எனக்கு, தல்ஸ்தோய் பிடிக்கும். ரேமண்ட் கார்வரையும் பிடிக்கும். 51 வயதை கடந்தவனாக, நானும் கிட்டத்தட்ட இதே விதமான நெருக்கடியைத்தான், மனதில் உணருகிறேன். வாழ்க்கை என்பது என்ன? அதன் அர்த்தம் என்ன? என்று சிந்திக்க சிந்திக்க மனம் சோர்ந்துவிடுகின்றது. நாம் எல்லோருமே இதேபோலத்தான் அன்புக்காக ஏங்குகிறோம். ரேமண்ட் கார்வரின் கவிதை நம் எல்லோருடைய மனதையும் விவரிப்பதைப்போல எழுதப்பட்டிருந்தது. அதனால், அக்கவிதையை என் திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டேன். படத்தில், ரிஜ்ஜர் தாம்சனின் முன்னாள் மனைவி, “நீங்கள் அன்பையும், மரியாதையையும் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள்” என்கிறாள். இதுதான், அந்த கதாப்பாத்திரத்தின் குணம். நம்மில் பலரும் இதுப்போலத்தான், அன்புக்கும், மரியாதைக்குமான இடைவெளியை சரியாக புரிந்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த இடைவெளியை புரிந்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.

Amoresperros திரைப்படத்திலும், ஒருவன்என் வாழ்க்கையில் என்ன மிச்சமிருக்கிறது?” என்று கேட்கிறான். A Confessionனிலும் இதே கேள்விதான் ஆராயப்படுகிறது. 21 Grams திரைப்படத்திலும் சீன் பீன் கதாப்பாத்திரம் இதே கேள்வியைதான் கேட்கின்றது.

நான் ஒரே கதையைத்தான் எனது அனைத்து திரைப்படங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இல்லை. இல்லை. நான் அதனால் இக்கேள்வியை கேட்கவில்லை. மைக்கேல் ஜாக்சனும், ரேமண்ட் கார்வரும் உங்கள் வயதில், இதேப்போலத்தான் எண்ணியிருக்கிறார்கள். தங்களது இறுதி காலத்தில் முழுக்க முழுக்க விரக்தி அடைந்த நிலையிலேயே பேசியிருக்கிறார்கள்.

நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. மேகத்தில் எவ்வளவு கருமை படிந்திருக்கிறது என்பதை பொறுத்தது அது. ஆனால், வாழ்க்கையில் நீங்கள் திருப்தி அடையும் காலம் ஒன்றுண்டு என்று நினைக்கிறேன். அப்போது, நீங்கள் உங்கள் வாழ்நாளில் அதி முக்கியமாக கருதி வந்த விஷயங்கள், ஒன்றுமில்லாதவை என்று உணருவீர்கள். நமக்கான நேரம் குறுகி வருகிறது, மெழுகுவர்த்திகள் சுடர் விடுகின்றன. இனியும் நமது நிழல் இப்பூமியில் உலவப் போவதில்லை என்று கருதுவீர்கள். இத்தகைய எண்ணங்கள்தான் தல்ஸ்தோய்யின் A Confessionனில் நிரம்பியிருக்கின்றன. ஆனால், தல்ஸ்தோய் இந்த புத்தகத்தை எழுதி முடித்த பின்பும் 30 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.

தல்ஸ்தோய், கார்வர், மைக்கேல் ஜாக்சன் மற்றும் ரிஜ்ஜின் தாம்சன் நால்வரும் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள். ஆனாலும், தங்களது இறுதி காலத்தில் மன நிம்மதியின்றி வாழ்ந்ததன் காரணமென்ன?

அதைத்தான் இப்படத்தில் நான் ஆராய விரும்பினேன். என்னளவில், மிகச்சரியாக இப்பணியினை மேற்கொண்டேன் என்று முழுமையாக நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு, நீங்கள் அவசர அவசரமாக முரண்பட்ட கருத்துக்களை உங்கள் மனதினுள் அடுக்குகிறீர்கள். எனக்கு இத்தகைய முரண்பாடுகளின் மீது நம்பிக்கை இல்லை. நான் அவற்றை அறவே வெறுக்கிறேன். முரண்பாடு திரைப்படத்தில் நாம் கையாள மிகவும் ஏதுவான ஒரு கருதான். அது ஒரு அறிவுப்பூர்வமான கருவும் கூட. அதனை நாம் மிகவும் சிறப்பாக நமது திரைக்கதைகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில், இத்தகைய முரண்பாட்டை ஒரு கருவியாக மிகுதியாக பயன்படுத்தியன் காரணமாக, இன்று பாப் கலாச்சாரமே அழிவுறும் நிலையில் உள்ளது. இனியும் நாம் அதையே மீண்டும்மீண்டும் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது. நான் என் சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். முரண்பாடு என்பதை கலையில் சலிக்க சலிக்க பயன்படுத்திவிட்டார்கள். இனி அதில் உபயோகிக்க எதுவுமே மிஞ்சி இருக்கவில்லை. அதனால், நான் நகைச்சுவையை கருவியாக பயன்படுத்துவதன் மூலமாக நாம் இழைத்த தவறுகளை சரிசெய்து விட முடியும் என்று நம்புகிறேன். நமது ஈகோவை தலைக்கீழாக பார்வையிடும்போது, அது மிகுந்த கோமாளித்தனம் நிறைந்தது என்பதை உணர முடியும். ஆனால், அது மிகவும் துயர் மிகுந்த நகைச்சுவை. அபத்த நகைச்சுவை.

அபத்த நகைச்சுவை அதீத துயரைக்கூட சிரிக்க வைத்து விடுகிறதே?

நீங்கள் துயரத்தை ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் அது மிகவும் வேடிக்கையாகத்தான் இருக்கும். இவ்வகையிலான நகைச்சுவையே நான் பெரிதும் விரும்புகிறேன். நான் ரிஜ்ஜின் தாம்சனின் கதாப்பாத்திரத்தை டான் குயுக்ஸோட்டை போலவே உருவாக்க விரும்பினேன். தன்னை ஒரு மிகத் தீவிரமான பெருங்கலைஞனாக காட்டிக்கொள்ள ஒருவன் செய்யும் எத்தனிப்புகளையும், ஆனால், யதார்த்தம் அவன் செயல்பாட்டிற்கு முற்றிலும் நேர்மாறாக இருப்பதையும் சுற்றியே என் திரைக்கதையை எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன். இதுதானே, நம் எல்லோருடைய கதையாகவும் இருக்கிறது (சிரிக்கிறார்).

உங்கள் திரைப்படங்களில் கவிந்திருக்கும் துயரைப் பற்றி உரையாடும்போதுகூட, “அவர் அதிகம் சிரிக்க விரும்பும் மனிதர்என்றுதான் பேசுகிறேன்

நான் உருவாக்கும் மிகத் தீவிரமான திரைப்படங்களில் அத்தகைய விழுமியங்களும் இல்லாவிட்டால், மிகுந்த சிக்கலாகிவிடும். உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்கள் எல்லோருக்கும் யதார்த்தத்தில் மிகவும் இறுக்கமான மனிதர்களாக இருப்பார்கள். நானும், அவர்களைப்போலத்தான். என் திரைப்படங்களில், நிச்சயமாக நகைவச்சுவை மெலிதாக இழையோடி இருக்கும்.    

Birdman திரைப்படம் ஒருவனுடைய கனவின் மரணத்தைப் பற்றி பேசுகிறது இல்லையா?

காலத்திற்கேற்ப ஓட இயலாத கலைஞன் ஒருவனின் ஆவேசம்தான் Birdman இல்லையா. என்னை பொறுத்தவரையில், கலைக்காக நாம் மேற்கொண்ட பிரயத்தனங்கள் யாவும் காலத்தை விஞ்சி நிற்க வேண்டுமென்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. நம்முடைய பங்களிப்பு என்பது இப்பிரபஞ்ச வெளியில் கன நேர நிகழ்வு மட்டுமே. அதனால்தான், பூமியின் ஆயுளின் முன்னால் மனித ஓட்டம் எத்தனை சில்லரைத்தனமானது என்பதை விளக்க, படத்தில் சாம் கதாப்பாத்திரம் டாய்லெட் பேப்பரின் சுருளை எடுத்து வரும். அது என் மகளிடமிருந்து நான் கற்றுக்கொண்ட சுய பாடமே. முடிவற்ற காலத்தின் முன்னால், நாம் கொள்கின்ற சுய ஆவேசம் எத்தனை அவசியமற்றது என்பதை எனக்கு அழகாக புரியச்செய்த செயல் அது. அதனால், நான் ரிஜ்ஜனின் கதாப்பாத்திரத்தின் மூலம் இதேக்கேள்வியை ஆராய விரும்பினேன். காலத்தை விஞ்சி நிற்க, அவன் எண்ணற்ற கதாப்பாத்திரங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும்போது, அவனது சொந்த ஈகோவே அவனை, “நீ ஒன்றிற்கும் லாயக்கற்றவன்” என்று சொல்லும்.

நிலையாமை பற்றி பேசுகையில், படத்தின் இறுதிக்காட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அது மிகவும் தைரியமான ஒரு காட்சி.

படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான், எனக்கு அப்படியொரு முடிவை வைக்கலாம் என்று தோன்றியது. துவக்கத்தில் முடிவு வேறு விதமாக இருந்தது. ஆனால், அந்த முடிவில் எனக்கு ஏனோ உடன்பாடில்லை. அது நேர்மையற்று இருந்தது. அதனால், நாங்கள் தொடர்ந்து முடிவு குறித்து சிந்தித்தபடியே இருந்தோம், திடீரென்று ஒருநாள், அதிகாலையில் எனக்கு இப்படியான முடிவு தோன்றியது. உடனே படுக்கையில் இருந்து எழுந்து, எனக்கு நானே, “இதுதான் சரியான முடிவு” என்று சொல்லிக்கொண்டேன்.

இந்த படத்தை ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படம் பிடிப்பது என்று எப்போது முடிவு செய்தீர்கள்?

நான் திரைக்கதையை எழுதி முடித்த உடனேயே, இதன் வடிவம் எனக்கு தெளிவாகியது. படத்தொகுப்பாளர் வால்டர் முர்ச்சுடனான கலந்துரையாடலில், நமது வாழ்க்கை கையடக்க கேமராவால் பதிவு செய்யப்படுவதைப்போல உணரப்படுகிறதா? அல்லது ஸ்டெடி கேமராவால் பதிவு செய்யப்படுவதைப்போல தொடச்சியான காட்சி பிம்பங்களால் உணரப்படுகிறதா? என்று கேட்டேன். பிறகு, ஒரு 51 வயது மனிதனாக, வாழ்க்கை தொடச்சியான காட்சிகளின் கோர்வைகளால்தான் நகர்கின்றது என்பதை புரிந்துக்கொண்டேன். காலையில் நாம் நம் கண்களை திறப்பதிலிருந்து அன்றைய நாள் முழுவதையும் எவ்வித வெட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக நாம் நமக்குள் பதிவு செய்துக்கொள்கிறோம். நம் வாழ்க்கையை நினைவில் மீட்டெடுத்து பார்க்கின்றபோதும், வாழ்க்கையை பற்றி உரையாடும்போதும் மட்டுமே வெட்டு தேவைப்படுகிறது. அதனால், நான் இடைவெட்டில்லாத தொடர்ச்சியான காட்சிகளால் படத்தை நகர்த்துவது என்று முடிவு செய்தேன். அதோடு, படத்தொகுப்பாளர் வால்டர் முர்ச்சு என்னிடம் பகிர்ந்துக்கொண்ட தகவல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நம் கண்கள் ஒரு புள்ளியிலிருந்து, மற்றொரு புள்ளிக்கு நகர்கையில் இயல்பாக அவ்விடத்தில் ஒரு சிறிய இடைவெளி தோன்றிவிடுகின்றது. ஆனால், நம் மூளை முதல் புள்ளியின் நினைவை அந்த இடைவெளியில் இட்டு நிரப்புவதனால் நம்மால் அந்த இடைவெளியை உணர முடிவதில்லை.

ஜான் ஹாஸ்டன் நாம் ஒவ்வொரு முறை நம் கண்களை மூடுவதும், ஒரு இடைவெட்டைப் போலத்தான் என்று கூறுகிறார். நாம் எவ்வளவு நேரம் நம் கண்களை திறந்து வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு ஒரு ஷாட்டை வைக்கலாம்.

இதையேதான், வால்டர் முர்ச்சும் கூறினார். அதுவொரு, மிக நீண்ட உரையாடல்.

கீட்டன் எவ்வாறு உங்கள் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று வியப்பாக இருக்கிறது. நீங்கள் உங்கள் நடிகர்களிடம் அதிகமாக வேலை வாங்குவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். யாரோ ஒருவர், “எனக்கு அலெக்சாண்ட்ரோவை மிகவும் பிடிக்கும்.. ஆனால், அது மிகவும் கடினமானதுஎன்றார்.

(சிரிக்கிறார்) எனக்கு இதனால் அவப்பெயர் உண்டாகியுள்ளது என்று தெரியும். ஆனாலும், நான் இதை சரியான காரணத்தால்தான் செய்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போதும் என் கதாப்பாத்திரங்களின் தேவை புரியும். அதனால், என் படத்தில் நடிக்கும் நடிக/ நடிகையர்களுக்கு என்னால் இயன்ற அளவுக்கு என் திரைக்கதைக்கான கதாப்பாத்திரமாக உருமாற உதவுவேன். நான் அவர்களிடம் எதிர்பார்பதெல்லாம், என்னை அவர்கள் முழுமையாக நம்ப வேண்டும் என்பது மட்டுமே. இது நல்லதா அல்லது கெட்டதா என்பதுப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. முழுமையாக உண்மையாக இருந்தால், அவர்கள் என்னுடன் பணியாற்றலாம். இல்லையெனில், அவர்கள் வெளியேறிவிட வேண்டியதுதான். அத்தகைய பொறுப்புணர்ச்சிதான் கலைஞனுக்கான அடையாளம். நான் என் நடிகர்களிடம், பிலிப் பெட்டிட்டின் புகழ்பெற்ற டிவின் டவர் புகைப்படத்தை கொடுத்து விடுவேன். அதில், ஒரு மனிதர் இரு கோபுரங்களுக்கிடையில் ஒரு நீண்ட கயிற்றை கட்டி நடந்துக்கொண்டிருப்பார். நான் என் நடிகர்களிடம், “நாம் அதை செய்யப் போகிறோம். நீங்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை அந்த கயிற்றின் மீதேறி நின்ற பிறகு செய்ய முடியாது. நான் என் தவறுகளை பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் எதையும் போலியாக செய்யப்போவதில்லை. நாம் படம் பிடித்துவிட்ட பிறகு, நமது சிறுசிறு தவறுகளை இறுதிக்கட்ட பணியின்போது பூசி மொழுக முடியாது. பெருத்த யானை கூட்டமொன்று ஒரே சமயத்தில், அந்த கயிற்றில் நடப்பதைப் போல நாம் நடக்கப் போகிறோம். வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிடுவேன். பணிகள் மிகத் தீவிரமாக நடக்க துவங்கிவிடும். நான் மீண்டும் மறுநாளும் இதே செய்கையை தொடருவேன்.  

தமிழில்: ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com