ஒரு ரஜினி ரசிகராக நீங்கள் யார் என்று நினைத்ததுண்டா?

வருக்கு வாய்த்துள்ள நடிகன் எனும் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாகவே செய்து
ஒரு ரஜினி ரசிகராக நீங்கள் யார் என்று நினைத்ததுண்டா?

தொண்ணூறுகளில் பதின் பருவம் வாய்க்கப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் ரஜினி ரசிகர்களாகவே இருப்பார்கள். இரண்டு நண்பர்களுக்கிடையே சண்டை வாக்குவாதம் ஏற்பட்டால் அது கமல் கட்சி ரஜினி கட்சி என்ற பிரிவினையால்தான் இருக்கும். தீபாவளி பொங்கல், புத்தாண்டு என பண்டிகை தினங்களில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்தால் போதும், ரசிகர்களுக்கு பண்டிகையைவிட இனிப்பான விஷயம் அது மட்டுமே.

சினிமா அந்தளவு மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த ஊடகம் என்பது மறுக்க முடியாத உண்மை. நான் எனது பால்யத்தில் முதன்முதலில் எம் ஜி ஆர் ரசிகையாகத்தான் இருந்தேன். ஐந்தாவது படிக்கும்போது எங்கள் பள்ளியில் திரையிடப்பட்ட புரூஸ் லீ படத்தைப் பார்த்த பிறகு உடனடியாக புரூஸ் லீ ரசிகையாக மனம் மாறிவிட்டேன். ஆனால் புரூஸ் லீ படங்களை அதன்பின் அதிகம் காணக் கிடைத்ததாலும், பள்ளியில் ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்கு திருநெல்வேலியில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றபோதுதான் அந்த திருப்பம் நிகழ்ந்தது.

என் பெரியப்பா மகன் ராஜா ஒரு தீவிர ரஜினி ரசிகனாக வளர்ந்து கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு சாயலில் ரஜினி போலவே காட்சியளித்ததற்குக் காரணம் அவனது நிறம் மற்றும் ரஜினியைப் பின் தொடர்ந்து அவனுடைய ஹேர் ஸ்டைல். என்னை சிறிது சிறிதாக மூளைச் சலவை செய்து, ஒரு மாதம் கழித்து நான் சென்னை திரும்பும் போது ஒரு ரஜினி ரசிகையாக மாறிவிட்டேன்.

அதன்பின் வீட்டில் ரஜினி படங்களுக்கு அழைத்துச் செல்லும்படி கூறத் தொடங்கினேன். என்னுடைய பெற்றோர்களும் வாரம் ஒரு சினிமா பார்க்கும் பழக்கமுடையவர்கள் ஆதலாலும், திரை அரங்கங்கள் சூழ்ந்த ஒரு வசிப்பிடத்தில் நாங்கள் வாழ்ந்ததாலும் அது சாத்தியமாகிவிட்டது. அப்படித்தான் பல ரஜினி படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். 

அபிராமி, சங்கம், ஆல்பர்ட், சாந்தி, தேவி, சத்யம் போன்ற திரையரங்குகளில் அன்றைய காலகட்டத்தில் பார்த்த கணக்கற்ற ரஜினி படங்கள் நினைவில் இன்றளவும் நிழலாடுகிறது. ஆரம்பத்தில் முதல் நாள் முதல் ஷோ அல்லது முதல் நாள் மூன்றாம் ஷோ பார்த்துக் கொண்டிருந்த பழக்கத்தை முதல் வாரத்தின் விடுமுறை நாளில் பார்ப்பதாக மாற்றிக் கொண்டேன். ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டங்களால் திரை அரங்கத்தில் டிக்கெட்டுகள் பறப்பதும், சூடன் கொளுத்தி ஆரத்தி எடுக்கப்படுவதும், வானுயர எழுப்பப்பட்ட கட் அவுட்டுகளுக்கு  பாலாபிஷேகம் நடைபெறுவதும் என கோலாகலாமாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் அந்த சடங்குகளில் எல்லாம் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதில்லை.

ரசிப்புத்தன்மை என்பது வெறித்தனமாக மாறக்கூடாது, அது எதுவாக இருந்தாலும் நம்முடைய சொந்த வாழ்க்கையும், மனத்தையும் ஆட்படுத்த விடக் கூடாது என்ற தெளிவு எனக்கு இருந்தது. அதற்குக் காரணம் நான் அப்போது தீவிரமாக புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உடையவளாக இருந்தேன். அதன் காரணமாக ஒரு காலகட்டத்துக்குப் பிறகு நடிகர்கள் மீதிருந்து அபிமானம் மெள்ள மாறத் தொடங்கி இயக்குனர்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

அவ்வகையில் எனக்கு என்றும் பிடித்தமான இயக்குநர்கள் மணி ரத்னம், பாரதி ராஜா, பாலு மகேந்திரா என்று மாறியது. அதிலும் என் நினைவிலிருந்து நீங்காத படமான மூன்றாம் பிறையை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்ப்பேன். மணி ரத்னத்தின் எந்தப் படத்திலிருந்து எந்தக் காட்சியைப் பற்றி வேண்டுமானாலும் மணிக் கணக்காக பேசுவேன். பாரதி ராஜாவின் அசலான கிராமத்து பதிவுகளை வெகுவாக ரசிப்பேன். ஆனாலும் ரஜினி விருப்பத்துக்குரிய நடிகராகத்தான் எப்போதும் இருந்து வருகிறார். 

ரஜினி சூப்பர் ஸ்டாரா, சூப்பர் ஆக்டரா அல்லது சூப்பர் மனிதரா என்றெல்லாம் ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கும். அதைப் பற்றிய ஆராய்ச்சியும் தேவையற்றது. திரையில் தோன்றும் ஒரு நடிகர் நம்மை அந்த கதாபாத்திரமாகவே நம்பச் செய்யும் வல்லமை பெற்றிருந்ததால், அவர் யாராக இருந்தாலும் சரி நல்ல நடிகரே. அவ்வகையில் ரஜினி மிக நல்ல நடிகர் என்றே சொல்வேன். மேலும் இன்று உலக மொழிகளில் பல்வேறு படங்களைப் பார்த்த பின்னரும் நான் ஒரு ரஜினி ரசிகர் என்று சொல்வதில் பெருமையே கொள்கிறேன்.

ராபர்ட் டி நீரோ, அல்பாசினோ, ஜானி டெப், கிறிஸ்டியன் பேல், டாம் ஹான்க்ஸ், டாம் க்ரூயிஸ், ஆண்டனியோ பெந்த்ராஸ் என எனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியல் நீளமானது என்றாலும் இவர்களை எல்லாரையும்விட, ஒரு மாற்றுக் குறைந்தவரல்ல ரஜினி. என்னைப் பொருத்தவரையில் சூப்பர் ஸ்டார் என்பவர் ஒருவர்தான். Fanatic fan, die hard Rajiji Fan என்ற அடைமொழிகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ரஜினியின் ஆன்மிக ஈடுபாடும், அவர் தன்னை அறிந்து, தன் மனத்துக்குள் அகவிழி திறக்கும் ஒரு மனிதராக இருப்பதாலும் எனக்கு அவரைப் பிடிக்கும்.  

ரஜினியைப் பற்றி புகழ்ந்து இதற்கு மேல் சொல்லப்பட எதுவும் இல்லை எனும் அளவுக்கு நிறைய எழுதப்பட்டுவிட்டன. எனக்குப் பிடித்த ரஜினி படங்களிலிருந்து இரு காட்சிகளை மட்டும் அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

ரஜினி படங்களில் பாட்ஷாவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. காரணம் அமைதியின் உருவமாக ஒரு கதாபாத்திரமாக இருந்து வந்த மாணிக்கம், தனது கடந்த காலத்தில் பாம்பேயில் ஒரு மிகப் பெரிய தாதாவாக இருந்தார் என்பதும், அவருக்கும் ஆண்டனி என்பவனுக்கும் நடந்த மோதல்களில் வெற்றி பெற்றாலும், இனி வன்முறை வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுங்கி எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து ஆட்டோ ட்ரைவராக தொடர்வதும் சுவாரஸ்யமான கதை. ஆண்டனிக்கும் பாட்ஷாவுக்கும் நடக்கும் அத்தனை சந்திப்புக்களும் அதிரடியானவை.

ஒரு காட்சியில் ரஜினி கமிஷ்னரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் தன் தரப்பு நியாயங்களை வேகமாகக் கூறிக் கொண்டே, சட்டென்று குரலை உயர்த்தி நான் இதைக் கேட்டு வேலை செய்யலை, என்று தலையைக் காட்டி, இதைக் கேட்டுத்தான் என்று இதயத்தைக் காண்பிப்பார். மனசாட்சியும் மனிதமும் உள்ள ஒரு டான் அவர் என்பதை இதைவிட சிறப்பாக எப்படிச் சொல்லிவிட முடியும். காக்கிச் சட்டையைப் போட்டு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை நான் போடாமல் செய்கிறேன் அவ்வளவுதான் என்று கூறுவார். ஆண்டனி பாட்ஷாவை அழைத்து சமரசம் பேச முயல்வார். அவரிடம் பாட்ஷா தனது நண்பனுக்காக இந்தப் பழிவாங்கும் வேலையைச் செய்கிறேன் என்று சொல்வார். இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்ற புகழ்ப்பெற்ற வசனம் அந்த இடத்தில் மிக அழுத்தமாக இடம்பெறும். வாழ்க்கையில் பயம் இருக்கணும், ஆனா பயமே வாழ்க்கையாகிடக் கூடாது உள்ளிட்ட எழுத்தாளர் பாலகுமாரனின் வசனங்களை ரஜினியின் குரலில் கேட்கும்போது உண்மையில் மெய்சிலிர்க்கும். 

தமிழ் திரையில் தோன்றிய மிக அழுத்தமான கதாபாத்திரங்கள் தான் பாட்ஷாவும் ஆண்டனியும். ரஜினி ரகுவரன் என்ற இரண்டு நட்சத்திரங்கள் அந்த கதாபாத்திரங்களுக்கு என்றும் அழியாத உயிர் கொடுத்துள்ளனர். சில கதைகளை எத்தனை படித்தாலும் சலிக்காது. சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. எனக்கு பாட்ஷா அத்தகைய படம். 

ரஜினி படங்களில் அம்மா சென்டிமென்ட் பற்றி எழுதவேண்டுமெனில் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன. ஆனால் மிகவும் குறுகச் சொல்வதென்றால் எம்ஜிஆர் படங்களில் உள்ள மிகப் பெரிய வெற்றி ரகசியம் அவரது தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் படங்கள். அம்மா என்றால் உருகாதவர்கள் யார் இருக்க முடியும்? திரையில் தாய்மையை காட்சிப்படுத்தும் போது அக்காட்சிகள் மனத்தை உருக்கி நெகிழச் செய்து கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.

மன்னன் படத்தில் ரஜினி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் வயோதிக தாய்க்கு செய்யும் பணிவிடைகளை மறக்க முடியாது. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற பாடகர் ஜேசுதாசின் உருக்கமான குரலில் கேட்கும்போது மனதின் அடியாழத்திலிருந்து ஒரு உணர்வு ஏற்படும். ரஜினியின் மிகையற்ற நடிப்பும், மெல்லிய சோகமும் அந்தப் பாடலில் அவர் நடித்திருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு இயல்பாகவும் இருக்கும். தளபதி படத்திலும் சின்னத் தாய் அவள் பாடல் காட்சியும் மிக வித்யாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட ஒரு மறக்க முடியாத காட்சி. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் மற்றும் காட்சி அமைப்புக்கள் கொண்ட பாடல் அது. 

இன்னும் எத்தனை எத்தனை காட்சிகள். எத்தனை விதமான பங்களிப்புக்கள். நடிகர்கள் ஒரு கட்டம் வரைக்கும் தான் தனக்காகவும் தன் புகழுக்காகவும் நடிக்கிறார்கள். அவை சலிக்க சலிக்கக் கிடைத்தபின் ஓய்வெடுக்கவே விரும்புவார்கள். ஆனால் ரஜினி மட்டும் இன்றளவும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்காக மட்டும்தான்.

லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்துக்காக அவர் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த வாழ்க்கையில் அவருக்கு வாய்த்துள்ள நடிகன் எனும் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறார். அவருக்காக ஒரு கவிதை,

எத்தனை எத்தனை
வாழ்க்கையை ஒரே
வாழ்க்கையில் 
வாழ்ந்து விடுகிறான்
ஒவ்வொரு முறை
வேஷமிடும் போது
சுயத்தை மறக்கும் ஞானி
ஒவ்வொரு முறை
ஒப்பனையைக் கலைக்கும் 
போதும் கூடு
திறம்பும் பறவை 
திரைக்கு அர்ப்பணிக்கும்
மனத்தை வேறு எதற்கும்
விற்க முடிவதில்லை அவனால்
அற்புதக் கலைஞர்களின்
பெயர்களை
காற்றில் அல்ல
காலத்தில் எழுதி வைக்கிறது
கலை

காலத்தின் கணக்கற்ற பக்கங்களில் நீங்காது நிலைபெற்றுவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com