இரண்டு விதமான மனிதர்கள்! க்ளோரி திரைப்பட விமரிசனம்

ஜூலியா குழுவினர் அவரை விரட்டியடிக்காத குறையாக திருப்பி அனுப்புகிறார்கள்.
இரண்டு விதமான மனிதர்கள்! க்ளோரி திரைப்பட விமரிசனம்

இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். உழைப்புக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எளிமையான மனிதர்கள். இவர்களுடைய உழைப்பின் பலனால் சுகம் காணும் கூட்டத்தினர் இரண்டாம் வகையினர். வர்க்கபேதங்கள் எல்லா காலத்திலும், எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதன் ஒரு எடுத்துக்காட்டுத்தான் க்ளோரி என்ற பல்கேரியத் திரைபப்டம். உழைப்பவன் ஏழையாகவே இருப்பதன் காரணம் இதுதான். 

நம்மைச் சுற்றி நடப்பவற்றை சற்று உற்று கவனித்தால் தெரியும். சத்தமில்லாமல் கடின வேலை செய்து கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் கஷ்டத்தில் உழன்று கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள். நாம் தினந்தோறும் நடந்து செல்லும் சாலைகளை அமைத்தவர்களின் வாழ்க்கைமுறை பற்றியெல்லாம் யோசித்திருக்கவே மாட்டோம்.  சாலைகளில் பயணிப்பவர் நாம், விளிம்புநிலையில் நிற்பவர்கள் அவர்கள் என்பதுதான் அதன் காரணம். இந்த நிலமும், நீரும், காற்றும் அனைவருக்கும் சொந்தம் என்பது மாறி வலியவன் வாழ்வான் என்பதாக இந்த உலகம் மனித நேயமற்று இயங்கிக் கொண்டிருப்பது உண்மை. போர், வணிகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சியின் இயந்திரத்தன்மை என பல மாற்றங்கள் சிறியதும் பெரியதுமாக நிகழந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் சாமானியர்களான நாம் என்ன செய்ய முடியும்?

சமூக பிரச்னைகளை எல்லாம் அரசாங்கம்தான் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நம்மில் பலர் எளிதில் கடந்து போய்விடுவோம். தெருவோரத்தில் ஒருவன் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்தாலும் கூட பத்து மணிக்கு அலுவலகத்துப் போயே ஆக வேண்டும் என்று தலைதெறிக்க ஓடுவோம். அல்லது நேரம் அதிகமிருந்தால் கூட்டத்தினருடன் சேர்ந்து வேடிக்கைப் பார்ப்போம். மிகவும் நல்ல மனம் படைத்தவர்களாக இருந்தால் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்வோம். அதைவிட உத்தமராக இருந்தால் அவரை மருத்துவமனையில் சேர்த்து அந்த பில்லையும் கட்டுவோம். கடைசியில் சொன்னது எல்லாம் சினிமாவில் வரும் விஷயங்கள் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. நம் அருகில் நடக்கும் அநீதிகளையும் சக மனிதரின் துயரங்களையும் கண்டும் காணாமல் ஓடிக் கொண்டிருக்கும் சமூகம்தான் இது. ஏதாவது பிரச்னை என்றால் அரசாங்கம் சரியில்லை என்று கைகாட்டுவோம். அரசாங்கம் என்பது என்ன? அரசாங்கத்தை யார் தேர்ந்தெடுக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி வாக்களித்து நாம் தானே கட்சிகளைத் தேர்ந்தெடுத்து பதவிகளில் அமர வைக்கிறோம். பொறுப்பற்று ஒரு செயலை நாம் செய்தால் அதனால் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயம்தான்.

க்ளோரி என்ற பல்கேரிய திரைப்படம் ஒரு ரயில்வே பணியாளரின் நேர்மைக்குக் கிடைத்தது என்னவென்று பேசும் ஒரு திரைப்படம். இது சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்குபெற்று பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம். அரசுச் சக்கரங்கள் உலகம் முழுவதும் இவ்விதம் தான் இயங்குகிறது என்பதை இதுபோன்ற திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஆதரவை வைத்து அறிய முடிகிறது.

ட்ஸான்கோ பெட்ரோவ் ரயில்வே இலாக்காவில் ஒரு கடைநிலை ஊழியர். அவர் ஒரு லைன் மேன். தண்டவாளங்களை பரிசோதித்துக் கொண்டிருந்த ஒரு நண்பகல் வேளையில் ட்ஸான்கோவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு டாலர் நோட்டு அனாதரவாக அங்கே கிடந்தது. அதை எடுத்து சுற்றுமுற்றும் பார்த்த ட்ஸான்கோ தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். இன்னும் சற்று தூரம் நடந்து செல்கையில் மேலும் சில நோட்டுக்கள். பதற்றத்துடன் மேலும் நடக்க தண்டவாளம் நிறைக்கும் அளவிற்கு கொட்டிக் கிடந்தன டாலர் நோட்டுகள். நேர்மையான அந்த எளிய மனிதர் உடனே ரயில்வே நிர்வாகத்துக்குத் தகவல் தர, அவருடைய பாரம் குறைகிறது. ஆனால் அடுத்து அவரை ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே செய்திருந்த ஒரு ஊழலை மறைக்க, இவரை முதன்மைபடுத்தி அதை இருட்டடிப்பு செய்ய முடிவெடுக்கிறது.​

ரயில்வே பப்ளிக் ரிலேஷன் ஆபிஸரான ஜூலியா ஸ்டேகோவா தன்னுடைய குழுவினருடன் ஸ்டான்கோவை படமெடுக்கிறாள். அவருடைய இந்தச் செயலைப் போற்றி அவருக்கு பரிசளிப்பு விழாவொன்றினை ஏற்பாடு செய்து ரயில்வே நிர்வாக அதிகாரியிடமிருந்து புத்தம் புதிய டிஜிட்டல் கடிகாரம் ஒன்றினை பரிசளிக்க வைக்கிறாள். திக்குவாய் பிரச்னையுள்ள ஸ்டான்கோவாவால் ஜூலியா தன் கையிலிருந்த கடிகாரத்தை அவிழ்க்கையில் எதுவும் பேச முடியாமல் போகிறது. தொலைக்காட்சி முன்பும், பாராட்டு விழாவின் போதும் கூட திக்கித் திக்கி அவர் பேசிய வார்த்தைகள் அனைவரையும் பொறுமை இழக்கவே செய்கிறது. அவருடைய நேர்மையின் விழாவாக அதை அவர்கள் கொள்ளாமல் ஒருவரை பாராட்டுவதன் மூலம் தன்னிலை உயர்த்திக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதை உணர்ந்த ட்ஸான்கோ விழா முடிந்ததும் அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

நேர்மைக்குக் கிடைத்த பரிசாக புதிய கடிகாரம் அவர் கைகளில் இருந்தாலும் பழைய கடிகாரம் அவருடைய தந்தை பரிசளித்தது. பல வருடங்களாக அதை அணிந்த சுவடு அவர் கைகளில் அச்சாக பதிந்திருந்தது. தவிர அன்பான மகனுக்கு என்று அவர் தந்தை வாழ்த்துக்களை பொரித்து பரிசளித்திருந்த அந்த கைக்கடிகாரம் காலம் தாண்டி அவர் தந்தையின் பாசத்தின் நினைவாக அவருடன் எப்போதும் உடன் இருந்து வந்தது. இத்தகைய சிறப்புக்களும் பிரத்யேக பொக்கிஷமாகவும் அவர் பாதுகாத்து வந்த பழைய கடிகாரத்தை திருப்பிக் கேட்டபோது மறுநாள் தருகிறேன் என்று ஜூலியா குழுவினர் அவரை விரட்டியடிக்காத குறையாக திருப்பி அனுப்புகிறார்கள்.

ஜூலியா திறமையான ஒரு அதிகாரியாக இருந்தாலும் சின்ன சின்ன சந்தோஷங்களோ, மகிழ்வான தருணங்களோ அவள் வாழ்வில் இருப்பதில்லை. காரணம் அவள் இயந்திரத்தனமான வேலை சூழல்களிலும், தன்னை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் அவசரத்திலும் எப்போதும் இருப்பதால் அதிகாரத்தின் இருக்கையில் மனத்தை இறுக்கமாகவே வைத்துப் பழக்கியிருந்தாள்.

நாற்பது வயதுக்கு மேல் குழந்தைப்பேறு கடினம் என்று அவளை கெஞ்சி பணிய வைத்து கருத்தரிக்கும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். இந்த காலகட்டத்தில் தான் ட்ஸான்கோவுக்கு விருது கொடுக்கும் விழாவினை அவள் மேற்கொள்கிறாள். விழா முடிந்த கையோடு களைப்பில் வீட்டுக்குச் சென்றுவிடும் ட்ஸான்கோவின் கடிகாரத்தை மறதியாக எங்கோ வைத்துவிடுகிறாள். கதை இங்கிருந்து தான் உண்மையில் தொடங்குகிறது. தன்னுடைய கடிகாரத்தை ட்ஸான்கோ திரும்பப் பெற்றாரா? ஜூலியாவின் அலட்சியம் அவரை எந்த அளவுக்கு துன்புறுத்தியது என்பதையும் மிக அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

வெளிப்பார்வைக்கு சிறிய கதையாக இது தோன்றினாலும், அதிகாரத்துக்கும் ஆக்கிரமிக்கும் எதிராக எறியப்பட்ட சிறு கல் தான் இத்திரைப்படம். படம் முடிந்த பின்னரும் அதைப் பற்றிய சிந்தனையில் பார்வையாளர்கள் இருந்தால் நிச்சயம் அது வெற்றி பெற்றது எனக் கொள்ளலாம். நாடு கடந்து, மொழிகள் கடந்து இத்திரைப்படம் சொல்லும் அப்பட்டமான கருத்து, உண்மையின் தரிசனமாக நினைவில் நீங்காமல் நிலைத்துவிட்டது.

இயக்குநர் – கிரிஸ்டினா க்ரோஸிவா / பெடர் வல்சோனவ்

நாடு – பல்கேரியா

நடிகர்கள் – ஸ்டேஃபன் டெனோலியுபவ் (ட்ஸான்கோ பெட்ரோவ்), மார்கிடா கோஷெவா (ஜூலியா ஸ்டேகோவா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com