திரைப்பட விருதுகள்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

தேசிய விருது பெற்ற படங்களும் கலைஞர்களும் எதன் அடிப்படையில் மாநில விருதுக்குத் தகுதி பெறவில்லை?
திரைப்பட விருதுகள்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

2009 - 2014-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. ஒருபக்கம் விருதுகளைப் பெற்றுள்ள நடிகர்கள், நடிகைகள், குணச்சித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகின் பல தரப்பினரும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். அதேசமயம் விருது கிடைக்காதவர்கள் உள்ளுக்குள் மட்டும் குமுறிக்கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இதே போல் அங்காடி தெரு படத்தில் நடித்த இயக்குநர் ஏ.எல். வெங்கடேஷ், தனக்கு விருது அளிக்காமல் எந்தத் தகுதியின் அடிப்படையில் பிரகாஷ் ராஜூக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பாடலாசிரியர் விருதுகளில் மட்டும் பெரிய இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். இந்த ஆறு வருட விருது அறிவிப்புகளில் எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருது கூட அறிவிக்கவில்லை. நானும் அவரும் இந்த ஆறு வருடங்களில் ஒரு விருதுக்குரிய பாடலைக்கூடவா எழுதவில்லை? விருதுக்குழுவினருக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது என்னுடைய கேள்வி எனத் தனது அதிருப்தியை வலுவாகவே பதிவு செய்துள்ளார் கவிஞர் பா. விஜய்.

இதில் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளது. தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு மாநில அரசு விருதுகள் மறுக்கப்பட்டுள்ளன. எனில் அந்த மாநில விருது அதைவிடவும் மிகச்சிறந்த படம், மிகச்சிறந்த கலைஞர்களுக்குத்தானே வழங்கப்பட்டிருக்கவேண்டும்! அப்படித்தான் நிகழ்ந்துள்ளதா? 

2009

தேசிய விருது

சிறந்த குழந்தை நட்சத்திரம்: ஜீவா, இன்பா, அரசு (பசங்க படத்தின் கதாபாத்திரங்கள்)
சிறந்த வசனம்: பாண்டிராஜ் (பசங்க) 
சிறந்த தமிழ்ப் படம்: பசங்க

மாநில விருது

சிறந்த படம் (முதல் பரிசு): பசங்க
சிறந்த உரையாடல் ஆசிரியர்: பாண்டிராஜ் (பசங்க)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: கிஷோர், ஸ்ரீராம் (பசங்க)

இந்த வருடம் எந்தவொரு சர்ச்சையும் இல்லை. மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. மூன்றுக்கும் தமிழக அரசு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்டமே இனிமேல்தான் உள்ளது. 


2010

தேசிய விருது

சிறந்த தமிழ்ப் படம்: தென்மேற்குப் பருவக்காற்று
சிறந்த இயக்கம்: வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடிகர்: தனுஷ் (ஆடுகளம்)
சிறந்த நடிகை: சரண்யா (தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த துணை நடிகர்: தம்பி ராமையா (மைனா)
சிறந்த துணை நடிகை: சுகுமாரி (நம்ம கிராமம்)
சிறந்த திரைக்கதை: வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த படத்தொகுப்பு: கிஷோர் (ஆடுகளம்) 
சிறந்த கலை இயக்கம்: சாபு சிரில் (எந்திரன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜெயன் (நம்ம கிராமம்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஸ்ரீனிவாஸ் எம். மோகன் (எந்திரன்)
சிறந்த நடனம்: தினேஷ் குமார் (ஆடுகளம்)
சிறப்பு விருது: ஜெயபாலன் (ஆடுகளம்)

மாநில விருது 

சிறந்த தமிழ்ப் படம்: மைனா
சிறந்த இயக்கம்: பிரபு சாலமன் (மைனா)
சிறந்த நடிகர்: விக்ரம் (ராவணன்) 
சிறந்த நடிகை: அமலா பால் (மைனா) 
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக் கனி (ஈசன்) ( சிறந்த குணச்சித்திர நடிகர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.) 
சிறந்த துணை நடிகை: சரண்யா பொன்வண்ணன் (களவாணி) 
சிறந்த திரைக்கதை: ஆற். சற்குணம் (களவாணி) *
சிறந்த படத்தொகுப்பு: பி. லெனின் (நம்ம கிராமம்) 
சிறந்த கலை இயக்கம்: சி. சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்) 
சிறந்த ஆடை வடிவமைப்பு: நட்ராஜ் (களவாணி)** 
சிறந்த பாடலாசிரியர்: பிறைசூடன் (நீயும் நானும்)
சிறந்த நடனம்: ராஜூ சுந்தரம் (பையா)

* - சிறந்த கதாசிரியர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது. 

** - (சிறந்த தையற்கலைஞர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.)

அடேங்கப்பா 2010-ல் தமிழ் சினிமா தேசிய விருதுகளை அள்ளிக் குவித்துவிட்டது. ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன், நம்ம கிராமம் ஆகிய படங்கள் விருதுகளை அள்ளிவிட்டன. மொத்தம் 13 விருதுகள். கடைசியாக இத்தனை விருதுகளை எப்போது அள்ளியது? 

ஆனால் இந்தப் படங்களுக்குத் தமிழக அரசின் திரைப்படத் தேர்வுக்குழுவிடம் எந்தவித மரியாதையும் கிடைக்கவில்லை. தேசிய விருதுகளை அள்ளிய ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன் ஆகிய படங்களுக்குத் தமிழக அரசின் விருது எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். விதிவிலக்காக சிறந்தப் பின்னணிப் பாடகிக்கான விருது (சின்மயி) எந்திரனுக்குக் கிடைத்தது. தேசிய விருது பெற்ற இப்படங்கள் எதன் அடிப்படையில் மாநில விருதுக்குத் தகுதி பெறவில்லை?

தேசிய அளவில் துணை நடிகர் என்கிற பெயரில் வழங்கப்படும் விருது தமிழ்நாட்டில் குணச்சித்திர நடிகர் என்கிற பெயரில் விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சிறந்த துணை நடிகராக விருது வாங்கிய தம்பி ராமையா, மாநில அளவில் அதே மைனா படத்துக்குச் சிறந்த நகைச்சுவை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். என்னே ஒரு நகைமுரண்! அதேபோல சரண்யா பொன்வண்ணனுக்கும் விருது கிடைத்துள்ளது. ஆனால் தேசிய அளவில் தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக விருது வாங்கிய அவர், மாநில அளவில் களவாணி படத்துக்காக வாங்கியுள்ளார். ஏதோ ஒன்று என இருவரும் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். 

நம்ம கிராமம் படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் தேசிய விருதை ஜெயன் பெற்றார். தமிழக அரசு விருது எந்தப் படத்துக்குத் தெரியுமா? களவாணி படத்துக்கு! அந்தப் படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கு எப்படி என்ன தேவை இருந்தது எனத் தெரியவில்லை. 

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்ற வைரமுத்துவுக்கு மாநில அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என்றொரு விருதே தமிழக அரசின் விருதுப் பட்டியலில் இல்லை. 

தமிழக அரசு விருது எந்த விதத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று அலசுவதற்கு இந்த ஒரு வருட விருதுப்பட்டியலை மட்டும் பார்த்தாலே போதும்.

2011

தேசிய விருது

சிறந்த தமிழ்ப் படம்: வாகை சூட வா
சிறந்த புதுமுக இயக்குநருக்கான படம்: ஆரண்ய காண்டம்
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: அழகர்சாமியின் குதிரை
சிறந்த துணை நடிகர்: அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த படத் தொகுப்பு: கே.எல். பிரவீன் (ஆரண்ய காண்டம்)

மாநில விருது

சிறந்த படம்: வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்: நாசர் (தெய்வத்திருமகள்)
சிறந்த படத் தொகுப்பு: ராஜா முகமது (வாகை சூட வா)

தேசிய விருதில் 2010 அளவுக்கு மகசூல் கிடைக்கவில்லை. இந்தமுறை 5 விருதுகள்தான். சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக அழகர்சாமியின் குதிரை தேர்வானது தமிழகத்துக்குக் கொஞ்சம் ஆச்சர்யத்தை வரவழைத்தது உண்மை. இந்த வருடம் அப்புக்குட்டியின் நடிப்புக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்தது. ஆரண்ய காண்டம் மிகச்சரியாகத் தேசிய அங்கீகாரம் பெற்றது.  

மாநில விருதில் ஆரண்ய காண்டம், அழகர் சாமியின் குதிரை ஆகிய படங்களுக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. அப்புக்குட்டிக்கும் எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. வாகை சூட வா மட்டும் மாநில, தேசிய அளவில் சிறந்த (தமிழ்ப்) படமாகத் தேர்வாகியுள்ளது.

இந்த வருடம் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது விமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாகை சூட வா படத்துக்காக. இதே வருடத்தில்தான் ஆடுகளம், அவன் இவன், தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, மயக்கம் என்ன, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களின் நாயகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. ஆனால் மெரீனா படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் தமிழக அரசு விருதுகளை நம் நடிகர்கள் எதிர்பார்ப்பார்களா?

2012

தேசிய விருது

சிறந்த தமிழ்ப் படம்: வழக்கு எண் 18/9
சிறந்த ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி (பரதேசி)
சிறந்த ஒப்பனை: ராஜா (வழக்கு எண் 18/9)
சிறந்த நடனம்: பண்டிட் பிர்ஜூ மகாராஜ் (விஸ்வரூபம்)

மாநில விருது  

சிறந்த படம்: வழக்கு எண் 18/9
சிறந்த ஆடை வடிவமைப்பு: கெளதமி (விஸ்வரூபம்)
சிறந்த ஒப்பனை: தினகரன் (சுந்தர பாண்டியன்)
சிறந்த நடனம்: பண்டிட் பிர்ஜூ மகாராஜ் (விஸ்வரூபம்)

கமல் படத்துக்கும் மாநில அரசின் விருது கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்துக்காக கெளதமிக்கு விருது. சரி, சுந்தர பாண்டியன் படத்தில் சிறந்த ஒப்பனைக்கு அப்படியென்ன வேலை? கடைசிக்காட்சிக்காக மட்டும் வழங்கியிருப்பார்களா?

2013

தேசிய விருது

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம்: தலைமுறைகள்
சிறந்த தமிழ்ப் படம்: தங்க மீன்கள்
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாதனா (தங்க மீன்கள்)
சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
சிறந்த படத் தொகுப்பு: சாபு ஜோசப் (வல்லினம்)
சிறந்த குறும்படம்: தர்மம் 

மாநில விருது

சிறந்த படம்: இராமனுஜன்
சிறந்த படம் (இரண்டாம்) பரிசு: தங்க மீன்கள்
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாதனா (தங்க மீன்கள்)
சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
சிறந்த படத் தொகுப்பு: லியோ ஜான் பால் (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா)

தலைமுறைகள் படத்துக்குச் சிறந்த கதாசிரியருக்கான மாநில அரசின் விருது மட்டும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகராக ராஜா ராணி படத்துக்காக ஆர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய விருதுகளுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் பெரிய புகாரில்லை.

2014

தேசிய விருது

குழந்தைகளுக்கான சிறந்த படம்: காக்கா முட்டை
சிறந்த தமிழ்ப்படம்: குற்றம் கடிதல்
சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)
சிறந்த பின்னணிப் பாடகி: உத்ரா உன்னி கிருஷ்ணன் (சைவம்)
சிறந்த படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார் (சைவம்)
சிறந்த நூல் (சிறப்புப் பரிசு): பிரைட் ஆஃப் தமிழ் சினிமா (ஜி. தனஞ்ஜெயன்)


மாநில விருது

சிறந்த படம்: குற்றம் கடிதல்
சிறந்த படம் (சிறப்புப் பரிசு): காக்கா முட்டை
சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு): பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: விக்னேஷ், ரமேஷ் (காக்கா முட்டை)
சிறந்த பின்னணிப் பாடகி: உத்ரா உன்னி கிருஷ்ணன் (சைவம்)
சிறந்த படத்தொகுப்பு: ரமேஷ் (நிமிர்ந்து நில்)
சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார் (சைவம்)


பாரதிராஜா தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்தது. வைரமுத்துவின் நண்பரான பாரதிராஜா, நா. முத்துக்குமாரைச் சிறந்த பாடலாசிரியராகத் தேர்வு செய்துள்ளார். காக்கா முட்டை, குழந்தைகளுக்கான படம் மட்டும்தானா என்கிற கேள்வியை எழுப்புகிறது. பாபி சிம்ஹாவும், உத்ரா உன்னிகிருஷ்ணனும் தேசிய விருது பெற்று ஆச்சர்யப்படுத்தினார்கள்.

இந்த வருடமும் 2009 போல பெரிய புகார்கள் இல்லை. ஆனால் ஒன்று புரியவில்லை. 2009 முதல் 2014 வரை தமிழ் சினிமா ஒரு துறையில் மட்டுமே மற்ற மொழிப் படங்களையும் விடவும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. படத்தொகுப்பு. இந்த 6 வருடங்களில் சிறந்த படத்தொகுப்பான விருதுகளை நான்கு முறை பெற்றுள்ளது. ஆனால் அந்த நான்கு முறையும் தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர்களுக்கு மாநில அரசின் விருது கிடைக்கவில்லை!


*

கேரள அரசு திரைப்பட விருதுகளை அறிவிக்கும்போது அது தேசிய அளவில் செய்தியாக மாறும். அதைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும். காரணம், அதற்கு அத்தகைய மதிப்பு உண்டு. ஒருமுறை நம் பாரதிராஜா கூட தேர்வுக்குழுவுக்குத் தலைமை வகித்தார். அந்தளவுக்கு அங்கு குறைந்தபட்சம் ஒரு தரத்தை வெளிப்படுத்தி விருது பெறுவதை மதிப்பான ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் விருது அறிவிக்கப்பட்ட நொடி முதல் அதிருப்திகள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ள கலைஞர்கள் மாநில விருதுகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை மறுக்கமுடியுமா? பல விருதுகள் பல்வேறு விதமாகக் கேள்விகளை எழுப்பியுள்ளன. மாநில அரசின் விருதுகள் குறித்து ரசிகர்கள்தான் முன்பு கேள்வியெழுப்பி வந்தார்கள். இப்போது திரைத்துறையினரும் அதே கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 

இந்நிலையில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களின் ஒரே விடிவெள்ளி, தேசிய விருதுகள்தான். அங்குதான் அவர்களுக்குரிய குறைந்தபட்ச மரியாதை அளிக்கப்படுகிறது. தேசிய விருதைக் குறி வைத்து படம் எடுத்தால் பெரும்பாலும் இலக்கை எட்டிவிடமுடிகிறது. தலைமுறைகள், சைவம், நம்ம கிராமம், ஆரண்ய காண்டம் போன்ற படங்களுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம் இதற்குச் சிறந்த உதாரணம். அதேபோல வணிகப் படமாக இருந்தாலும் அதில் ஒரு உச்சபட்ச தரம் வெளிப்படும்போது அதற்கும் உரிய மரியாதை தேசிய அளவில் கிடைக்கிறது. ஆடுகளம். ஆனால் இதே எதிர்பார்ப்பை மாநில விருதின் மீது வைக்கமுடிவதில்லை. கிடைத்தால் அதிர்ஷ்டம் என்கிற நிலைமையே இன்னும் நீடிக்கிறது. 

ஆடுகளம் படம் தேசிய விருதுகளை அள்ளிக்குவித்ததும் தமிழக அளவில் முட்டை மதிப்பெண் வாங்கியதையும் எதை வைத்து நியாயம் செய்யமுடியும்? கேரள விருதுகளுக்குச் சமமாக தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இனியாவது ஏற்பட வாய்ப்புண்டா? தேசிய அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படங்களுக்கு உள்ளூரிலும் ஒரு மதிப்பு கிடைக்குமா? மாநில விருது என்பது சலுகையும் இல்லை, அதிர்ஷ்டமும் இல்லை, உயர் தரத்துக்கான மதிப்பீடு என்கிற எண்ணத்தை இனிமேலாவது ஏற்படுத்துமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com