மிஸ்டர் பீனா அப்படிச் செய்தார்?

மிஸ்டர் பீன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது அட்டகாசமான அதே சமயம்
மிஸ்டர் பீனா அப்படிச் செய்தார்?

மிஸ்டர் பீன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான காமெடி. ஒருவர் எத்தகைய மனநிலையில் இருந்தாலும் அவரை சிரிக்க வைத்துவிடும் நடிப்பாற்றல் அவரது சிறப்பு. மிஸ்டர் பீன் எனும் கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தவர் ரோவன் அட்கின்ஸன். அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய சில விஷயங்கள் பலருக்குத் தெரியாது.   

ரோவன் அட்கின்ஸன் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே நன்றாகப் படிக்கக் கூடியவர் ஆதலால் சர்வதேசப் புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்குதான் நடிக்கும் ஆர்வம் ரோவனுக்கு ஏற்பட்டது. 

ரோவனுக்கு அப்போது இருந்த பெரும் பிரச்னை பேச்சாற்றல். சற்று திக்கிப் பேசும் இயல்புடைய ரோவனை அவர் விரும்பிய காமெடி குழுவிலிருந்து ஒதுக்கி வந்தனர். தொலைக்காட்சிகளிலும் இந்த குறைபாட்டால் அவரை நிராகரித்தனர். அழகில்லை, பெர்சனாலிட்டி போதவில்லை போன்ற காரணங்களைச் சொல்லி சினிமா வாய்ப்புக்களும் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார். இத்தனை அவமதிப்புக்களுக்கும் இடையே அவர் கைவிடாத ஒன்று அவருக்குத் துணையாக கூடவே இருந்தது. அது அவரது கனவு. தன்னை பெரிதும் நம்பிய அவர் எதற்காகவும் மனம் தளரவில்லை.

ரோவனாக இல்லாமல் வேறு யாராக நடித்தாலும் அவரால் நன்றாக சரளமாகப் பேச முடிந்தது. இதை உணர்ந்த அவர் தனக்காக உருவாக்கிய கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன்ஸ். அது உலகளாவிய புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது. அவரை வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றனர். அழகில்லை, உடல்வாகு சரியில்லை என்று சொன்ன சினிமா உலகமும் அவரை மதிக்கத் தொடங்கியது.

வெற்றிக்கு தேவை அழகும், உடலமைப்பும் இல்லை கடின உழைப்புத் தான் என்பதை தன் விடா முயற்சியின் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் ரோவன். 

அன்று முதல் இன்று வரை வெற்றிப் பாதையில் சீராகப் பயணித்து வருகிறார் ரோவன். அவரது திருமண வாழ்க்கையும் சாகசம் நிறைந்தது தான். பி.பி.சி தொலைக்காட்சியில் மேக் அப் கலைஞராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனேத்ரா சாஸ்திரி என்பவரை சந்தித்தார். தனது சக நாடகக் கலைஞருக்கு மேக் அப் ஆர்டிஸ்டாக இருந்த சுனேத்ராவைப் பார்த்ததும் ரோவனுக்குப் பிடித்துவிட்டது.

நண்பருக்கு தன்னுடைய மேக் அப் கலைஞரை மாற்றிக் கொடுத்துவிட்டு சுனேத்ராவிடம் தன் முகத்தை மட்டுமல்லாது தன் மனதையும் ஒப்படைத்தார் ரோவன். இருவரும் இரண்டு வருடங்கள் காதலித்து 1990-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்சமின் என்று ஒரு மகனும் உள்ளனர்.

வேலையிலும் வாழ்க்கையிலும் எவ்வித பிரச்னையும் இன்று சுமுகமாகவே சென்று கொண்டிருந்த நிலையில், 2014-ம் ஆண்டு விவாகரத்து கேட்டு இங்கிலாந்தின் சென்ட்ரலில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ரோவன். அதற்குக் காரணம் அவர் வாழ்க்கையில் இன்னொரு காதல் பூத்ததுதான். ரோவன் 1990-ம் ஆண்டு சுனேத்திராவைத் திருமணம் செய்தது பிப்ரவரி மாதம், விவாகரத்து வழக்குக் கோரி மனு தாக்கல் செய்த மாதமும் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதமே.

இவர்களின் பிரிவுக்குக் காரணம் லூயிஸ் ஃபோர்ட் என்ற நகைச்சுவை நடிகையுடன் ரோவனுக்கு ஏற்பட்ட காதலே காரணம். 24 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ரோவன் சுனேத்ரா தம்பதியரின் வழக்கு ஒன்றரை ஆண்டுகளாக நடந்து, அதன் தீர்ப்பை 65 விநாடிகளில் நீதிபதியால் வாசிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று இருவருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை.

விவாகரத்து முடிந்த சில தினங்களில் லூயிஸ் ஃபோர்ட் ரோவனின் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். ரோவனின் மண முறிவைப் பற்றியும் அவரது புதுக் காதல் பற்றியும் அவரது மகள் லில்லி கண்டித்தார்.

தற்போது ரோவன் ஒரு வீட்டிலும், சுனேத்ரா மற்றும் பிள்ளைகள் இன்னொரு வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர். தனது கோமாளித்தனமான நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்த ரோவனின் வாழ்க்கை சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. ஆனால் தனது வாழ்க்கையை சரி செய்து கொள்ள தனக்குத் தெரியும் என்று கூறிய ரோவன் தற்போது லூயிஸுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com