புத்தகங்களும் திரைப்படங்களும் மட்டுமே புரட்சியை உண்டாக்கிவிடாது! – மிருணாள் சென்

அவர்கள் வழக்கம்போல தங்களது தினசரி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பார்கள்
புத்தகங்களும் திரைப்படங்களும் மட்டுமே புரட்சியை உண்டாக்கிவிடாது! – மிருணாள் சென்

நேர்காணல்: சுமிதா எஸ்.சக்கரவர்த்தி தமிழில்: ராம் முரளி


இந்திய திரைப்பட இயக்குனர்களில், சத்தியஜித் ரேவிற்கு பின் பெரும் மதிப்புக்குரியவரான மிருணாள் சென் கடந்த சில வருடங்களாக இந்திய மாற்று சினிமாவின் காட்பாஃதராகவே கருதப்படுகிறார். வங்காளதேசத்தில் பிறந்து வளர்ந்த மிருணாள் சென் தமது இளம் வயதில், கல்வி பயில்வதற்காக கல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்தார். கல்வி பயின்றுக்கொண்டிருந்தபோது, இடதுசாரி இயக்கங்கள் நடத்திக்கொண்டிருந்த நாடகங்களில் இணைந்து செயல்படத் துவங்கினார். அப்போதிலிருந்தே தமக்கான சீரிய அரசியல் பார்வையை கொண்டிருந்தார். 1956ஆம் ஆண்டில் தனது முதல் திரைப்படத்தை இயக்கியதை தொடர்ந்து பல ஆவணப்படங்களையும் திரைப்படங்களையும் மிருணாள் சென் இயக்கியிருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்தும் இந்திய சமூகத்தில் நிலவுகின்ற ‘தற்காலத்திய பிரச்சனைகளை’ மையமாக கொண்டிருந்தன. 1969ல் அவர் இயக்கிய Bhuvan Shome திரைப்படத்தின் மூலமாக இந்தியாவில் மிகக்குறைந்த செலவில் அரசே தயாரிப்பில் ஈடுப்பட்டு கலை திரைப்படங்களை உருவாக்கும் சூழல் உண்டாகியது. கல்கத்தாவில் கலகங்களும், நக்சலைட்டுகளின் வளர்ச்சியும், வங்கதேச போரும் ஒரு கொந்தளிப்பான சூழலை உருவாக்கியிருந்த காலகட்டத்தில் வெளியான Bhuvan Shome திரைப்படம் வெற்றியடைந்திருந்தது. 

அக்காலகட்டமே மிருணாள் சென் தமது திரைப்பட வாழ்க்கையில் மிகத் தீவிரமாக செயல்பட்ட காலமாகவும் கருதப்படுகிறது. The Interview (1971), Calcutta  ’71 (1972), Padatik (The Guerilla Fighter, 1973), Chorus (1974) என தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் அவருடைய அரசியல் செயல்பாடுகளே. மிருணாள் சென்னின் Aakaler Sandhaney  பெர்லினில் தங்க கரடி விருதினை பெற்றது. அதன்பிறகான அவரது திரைப்படங்கள் அனைத்தும் சர்வதேச விருதுகளை பெற்று கவனத்தை தொடர்ச்சியாக பெற்று வருகின்றன. தற்போது 92 வயதாகும் மிருணாள் சென்னிடம் சுமிதா S.சக்கரவர்த்தி மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவமிது.   

உங்களுடைய திரை பயணத்தின் எந்த தருணத்தில், இப்போது நீங்கள் வந்தடைந்திருக்கும் இடத்தை உணர்ந்தீர்கள்? நேற்றிரவு (ஏசியன் சொசைட்டி நடத்திய நவ இந்திய சினிமா எனும் கருத்தரங்கில்) நீங்கள் தொடர்ச்சியாக உங்களையும் உங்களது கலை செயல்பாடுகளையும் நீங்களே பரிசோதித்தும், மதிப்பிட்டும் வந்ததாக தெரிவித்தீர்கள். நீங்கள் உங்களது திரைப்படங்களின் மூலமாக அடைய நினைத்த இலக்கை அடைந்துவிட்டதாக கருதுகிறீர்களா?

உண்மையில், இது எல்லோருக்கும் நடக்கக்கூடியதுதான். அனைத்து திரைப்பட கலைஞர்களுக்கும் – இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால், கலை செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள எல்லோரும் தமக்குள்ளாக சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். நான் என்னுடைய திரைப்படங்களை உருவாக்கும்போது, காளையின் கண்களை என்னால் வீழ்த்த முடியும் என்றும், என்னால் மக்களுடன் எனது திரைப்படத்தின் மூலமாக தொடர்பேற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நினைத்துக்கொள்வேன். ஏனெனில், சமூகத்துடனான எனது எதிர்வினைகளையும், என்னை சுற்றியுள்ள உலகின் மீதான எனது கருத்துக்களையும் மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை அறிந்துக்கொள்வது எனக்கு மிகமிக முக்கியமானது. மக்கள் எனது கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிற அவசியமெதுவுமில்லை. ஆனால், ஒரு விவாதத்தை நம்முடைய திரைப்படம் தூண்டிவிட வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தூண்டும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் இதைதான் நான் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறேன்.

திரைத்துறையில் எனது நுழைவென்பது மிகவும் தற்செயலானதே. எனது மாணவ பருவத்தில், நான் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறவனாக இருக்கவில்லை. அதோடு, திரைப்படங்களை இயக்குவது பற்றி அப்போது நான் சிந்தித்ததும் கிடையாது. ஆனால், அக்காலத்தில்தான் என்னை சூழ்ந்துள்ள அரசியலை நான் புரிந்துக்கொள்ள துவங்கினேன். 1953ல் நான் எனது முதல் படத்தை இயக்கினேன். அது ரொம்பவும் கொடூரமானதாக இருந்ததால், திரைப்படக் கலை எனக்கு பொருந்தாது என்று எனக்கே நானே சமாதானம் கூறிக்கொண்டேன். அதன்பிறகு, மருந்துகளை பற்றி எவ்வித பிரக்ஞையும் இல்லாமலேயே மருந்துகளை சில காலம் விற்றுக்கொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு பிறகு நான் மீண்டும் ஒரு படத்தை இயக்கினேன். இப்போது, அந்த படத்தை பற்றி நினைவுக்கூர்ந்துப் பார்கையில், மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அப்படத்தை உருவாக்கியிருந்ததை உணர முடிகிறது. ஆனாலும், அதில் நான் வெளிப்படுத்தியிருந்த அரசியல் கருத்துக்களின் மீது இப்போதும் எனக்கு ஏற்புண்டு. காலனித்துவ மக்களுக்கு எதிரான தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பாசிஸத்துக்கு எதிரான உலக ஜனநாயகத்தின் போராட்டத்திற்கும் மெலிதான தொடர்பொன்றிருக்கிறது என்பதையே நான் அப்படத்தில் சொல்ல முயன்றேன். நான் அப்படத்தை 58 – 59களில் உருவாக்கினேன். ஆனால், அப்படத்தின் கதை நிகழும் காலம் 1930. அப்போது தேசிய விடுதலை இயக்கம் இந்தியாவில் வலிமையுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தது. உலகளவில், ஜானநாயக அமைப்புகள் பாசிஸ அரசக்கு எதிராக போராடிக்கொண்டிருந்தது. மக்களுக்கு அப்படம் பிடித்திருந்தது. அதோடு, அவர்கள் என்னை புரிந்துக்கொண்டார்கள். அதுதான் சினிமாவின் மீதான எனது புதிய அணுகுமுறைக்கான துவக்கம். அதன்பிறகு, அரசியலோடு
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ள திரைப்படங்களையே இயக்கிக்கொண்டிருக்கிறேன். மாறிவரும் காலத்திற்கு ஏற்றாற்போல் நானும் மாறிக்கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய சொந்த காலத்தாலேயே துரத்தப்பட்டேன். அது எனது கழுத்தின் மீதேறி அமர்ந்துக்கொண்டு, என்னை தொடர்ந்து இயங்க உத்வேகப்படுத்தியது. அதைத்தான் நான் பல வருடங்களாக செய்துக்கொண்டிருந்தேன். சிலர் நான் இப்போது அரசியல் படங்களை இயக்குவதில்லை என்று சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு “இல்லை” என்றே பதில் சொல்வேன்.

ஏன் அவர்கள் அப்படி கருதுகிறார்கள்?

ஏனென்றால், ஒரு அரசியல் திரைப்படத்தை உருவாக்க, அரசியல் சூழல்களை திரைப்படத்தில் கையாள வேண்டுமா என்றால், தேவையில்லை என்றே பதிலளிப்பேன். ஆண் பெண் உறவு பற்றிய திரைப்படமொன்றை இந்திய சூழலில் எடுத்துவிட்டு, அதற்கு அரசியல்ரீதியாக அணுகுமுறையை உண்டாக்க முடியும். உங்களுடைய கருத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தே இதனை நாம் சாத்தியப்படுத்த முடியும். நாம் சமூக – அரசியல் அல்லது சமூக – பொருளாதாரம் சார்ந்த கருத்துக்களையே நம் திரைப்படங்களின் மூலமாக முன் வைக்க வேண்டும்.

தற்போது நான், மேற்கு வங்கத்தில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையை சுய விமர்சனம் செய்துப் பார்க்கிறேன். உங்களுக்கு தெரியுமா? மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிதான் ஆட்சி புரிந்து வருகிறது. அதே தருணத்தில், சமூகத்தில் நிலவுகின்ற சமநிலையற்றதன்மைக்கு எதிரான அரசின் தீவிர நடவடிக்கைகள் ஒரு திரைப்பட இயக்குனராக எனக்கு ஏராளாமான எண்ணங்களை எழுப்புகின்றன. அதோடு, கட்சிக்குள் சூழ்ந்துள்ள உட்பூசல்களும் என்னை வெகுவாக பாதிக்கின்றன. இத்தகைய சுய கட்டுபாடற்றதன்மை இந்திய கம்யூனிஸ கட்சி மட்டுமே எதிர்கொள்கின்ற பிரச்சனை அல்ல. உலகம் முழுவதுமுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளும் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இடதுசாரி கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அது தனது செயல்பாடுகளில் ஒருவித மெத்தனப் போக்கையே
கடைபிடித்து வருகிறது. இங்குதான் நான் எளிதாக பாதிக்கப்படுகிறேன். இங்குதான் எனக்கு நானே, பல கேள்விகளை கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய பணியினை கண்டுக்கொள்ளும் வரையில் நானும் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வித சிக்கல்களுக்கும் ஆட்படாமல் இருக்கிறேன். இத்தகைய யதார்த்த நிலையை எதிர்கொள்ள நாம் நம்மையும், நமது சுய நெறிகளையும் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும்.

அதனால்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் Ek Din Prati Din என்றொரு திரைப்படத்தை இயக்கினேன். அப்படம் ஆணாதிக்க மனோபாவத்திற்கு எதிரானது என்றபோதிலும் வெறுமனே பெண்ணியத்தை மட்டுமே நான் அதில்
முக்கியத்துவப்படுத்தவில்லை. அது அரசியல் – சமூக – பொருளாதார வெளிப்பாட்டையும் தனக்குள் கொண்டுள்ளது. இந்திய சமூகத்தில் நிலவுகின்ற ஏராளாமான தடைகளை அப்படம் முன்னிலைப்படுத்தியது. என்னுடைய மனைவி அப்படத்தில் தாய் வேடத்தில் நடித்திருந்தார். நான் உங்களுக்கு ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். கடந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் Ek Din Prati Din படத்தின் திரையிடலுக்கு பிறகு, ஒரு பத்திரிகையாளர் என் மனைவியிடம், “நீங்கள் உங்கள் கணவருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். அவருடன் பணியாற்றியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நானும் எனது கணவரும் ஒன்றாகதான் படப்பிடிப்பு தளத்திற்கு செல்கிறோம். அங்கு அவர் என்னைவிடவும் அதிகமாக பணி செய்வதைப்போல என்னிடம் காட்டிக்கொள்வார். அது உண்மையும்கூட. அன்றைய கடின வேலைக்கு பிறகு, இருவரும் வீட்டிற்கு வந்ததும் உடல் அயர்ச்சியில் என் கணவர் கட்டிலில் சரிந்துவிட்டு, என்னை ஒரு தேநீர் தயாரித்து எடுத்து வர சொல்வார். நான் கிச்சனை நோக்கி நகர்வேன்” என்று பதிலளித்தார். நான் உடனடியாக பிடிப்பட்டேன். ஆணாதிக்க மனப்பான்மைக்கு எதிராக திரைப்படம் எடுத்துக்கொண்டே, என் சொந்த வாழ்க்கையில் நானும் அதையே செய்துக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய அடுத்த திரைப்படமான Aakaler Sandhaneyல் உண்மையை நாடி செல்கிறவராக என்னையே நான் கேள்விக்குட்படுத்திக்கொண்டேன்.  யதார்த்தத்தை நெருங்கி செல்கின்ற திரைப்பட பணியாளர்களின் நேர்மையை எனது திரைப்படத்தில் நான் பேசு பொருளாக எடுத்துக்கொண்டேன். எந்த எல்லை வரையில் என்னால் யதார்த்தத்தை நெருங்க முடிகின்றது என்று எனக்குள்ளாகவே கேள்வியெழுப்பிக்கொண்டேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு, திரையில் நம்மால் பதிவு செய்யப்படுகின்ற யதார்த்த சூழலுக்கும், அத்தருணத்தை பதிவு செய்கையில், உண்மையில் அங்கு நிலவுகின்ற சூழலின் மீது நமக்கு உண்டாகின்ற அனுபவத்திற்கும் சிறிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. ஓவியரையும், எழுத்தாளரையும்போல திரைப்பட இயக்குனன் இந்த இடைவெளியை போக்கவே முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறான். Aakaler Sandhaney  திரைப்படத்தில் இதனை நீங்கள் உணர முடியும். அத்திரைப்படத்தில் வருகின்ற திரைப்பட இயக்குனன் சீரிய வரலாற்று அறிவை பெற்றிருப்பதன் மூலமாக, தமது அறிவை கொண்டு திரைப்பட ஊடகத்தை பயன்படுத்தி ஐந்து மில்லியன் மக்களை பலிகொண்ட பஞ்சத்தை தனது திரைப்படத்தை மீள் உருவாக்கம் செய்கிறான். ஆனால், நிகழ்காலத்திலும் பஞ்சத்தின் கடுமையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இக்காலத்தில் நிலவுகின்ற பஞ்சமென்பது 1943ல் நிலவிய பஞ்சத்தின் நீட்சியைப்போலவே இருக்கின்றது. அதனால், சமகால பஞ்சத்தின் கோரத்தை அறிந்துக்கொள்ளும் திரைப்பட இயக்குனர், அதனை எதிர்கொள்ள இயலாமல் ஓடி விடுகிறார். அந்த திரைப்படத்தின் இறுதியில் 1980ல் வாழ்கின்ற ஒரு பெண்ணை பற்றியை குறிப்புகளை நாம் பகிர்ந்துக்கொள்கிறோம். இது சிலருக்கு உவப்பானதாக இல்லை. ஆனால், எனக்கு அது மிகமிக அவசியமான கருத்தாகவே படுகிறது. அந்த பெண் தன் குழந்தையை பஞ்சத்தில் பறிக் கொடுத்தவள். அவளது கணவன் அவளை தனியே விட்டுவிட்டு ஓடி விடுகிறான். அவள் உண்மையை சேகரிக்க செல்லும் திரைப்பட பணியாளர்களை நோக்கி, “நீங்கள் எங்கே சென்றீர்கள் நகரத்துவாசிகளே? நீங்கள் பஞ்சத்தை பற்றிய திரைப்படம் எடுக்க வர மாட்டீர்களா? நீங்கள் எங்கே சென்றீர்கள்?”  என்று கேட்கிறாள். இது என் சம காலத்திய அழுத்தமான காட்சி பதிவாகவே எனக்குப்படுகிறது.

என்னுடைய மற்றொரு திரைப்படம் நவ யுகத்திற்கு ஏற்றாற்போல், நாம் நமது வாழ்க்கைமுறையை நம்மை அறியாமலேயே எவ்வாறு மாற்றிக்கொண்டோம், நவ யுகதோடு நம்மை எவ்வாறு பொருத்திக்கொள்கிறோம் என்பதை பற்றியது. இத்திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் இவ்வாண்டு திரையிடப்பட்டது. இப்படத்தில், எத்தகைய பரபரப்பான நிகழ்வுகளும் நடைபெறாமலேயே நம்மை எவ்வாறு மாற்றிக்கொண்டோம் என்பதை ஆராய்ந்தேன். நான் அதனை மிகவும் நாடகீக பாணியிலேயே படமாக்கி இருந்தேன். நாம் திரைப்படங்களை எப்போதும் நாடகீக சம்பவங்களை கோர்த்தே உருவாக்குகின்றோம். ஆனால், யதார்த்தம் இதற்கு முற்றிலும் நேர்மாறானது. நமது சராசரி வாழ்க்கையில் மிகச்சில தருணங்களில் மட்டுமே நாடகீய சூழல்களை நாம் எதிர்கொள்கின்றோம். அதனால், ஏன் நாம் அதனைப் பற்றி திரைப்படம் எடுக்கக்கூடாது – நாம் நாள்தோறும் வியக்கத்தக்க அளவில் மாறி வருகிறோம். அதாவது, ஒன்று அழிவை நோக்கி நகர்கிறோம் அல்லது வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறோம். ஆனால், நமது சுய பிரக்ஞையே இல்லாமல், நாம்
நம்மை இத்தகைய மாற்றத்திற்கு ஒப்புக்கொடுத்து விடுகிறோம். எனது சில நண்பர்கள் நான் எப்போதும் இருப்பதைப்போல கோபமாக இல்லை என்று சொன்னார்கள். ஆனால், நாம் நமது கோபத்தை எப்போதும் பொதுவில் வெளிப்படுத்த வேண்டுமென்கிற அவசியமெதுவுமில்லை. நாம் நமது கோபத்தை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்த முடியும். தனி மனிதனின் வீழ்ச்சியையோ அல்லது வளர்ச்சியையோ பதிவு செய்வதன் மூலமாக நம்மால் யதார்த்தத்தை நெருங்கிச் செல்ல முடியும்.

நீங்கள் இக்கேள்விக்கு முன்பே பலமுறை பதிலளித்துள்ளீர்கள். இருப்பினும், நான் அதையே மீண்டும் உங்களிடம் கேட்கிறேன். உங்களுடைய திரைப்படங்களை பொதுவாக “அரசியல் சினிமா” என்றே வகைப்படுத்துகிறார்கள். உங்கள் கருத்தின்படி, அரசியல் சினிமா என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்?

கோடார்ட் முன்பொருமுறை சொன்னதுப்போல, நீங்கள் நேரடி அரசியல் திரைப்படங்களையும் இயக்கலாம் அல்லது, ஒரு திரைப்படத்தை இயக்கிவிட்டு அதற்கு அரசியல்ரீதியான அணுகுமுறையையும் கொடுக்கலாம். ஒரு அரசியல் திரைப்படத்தை இயக்க நேரடி அரசியலில் நடைபெறும் சம்பவங்களைதான் காட்சிப்படுத்த வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அரசியல் திரைப்படம் எடுக்க உங்களின் மைய கதாப்பாத்திரம் ஒரு அரசியல் சேவையாற்றுகிறவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களை சுற்றிலும் சூழ்ந்துள்ள அரசியலிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. அதனால்தான் இதனை தெளிவுற விளக்க முடியாது. பார்வையாளராக உங்களுடைய கூருணர்வும், ஒரு திரைப்பட இயக்குனராக என்னுடைய கூருணர்வும் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்ததே இது.

நீங்கள் ஆழமான தொடர்புக்கொண்டுள்ள கல்கத்தா நகரத்தின் இக்காலத்திய சமூக கலாச்சார விழுமியங்கள் ஒரு திரைப்பட இயக்குனராக உங்களது ஆக்கங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

நான் கல்கத்தாவை ஆழமாக நேசிக்கிறேன். நான் கிழக்கு வங்காளத்தில் (வங்காளதேசம்) பிறந்து அங்கேயே கல்வியும் பயின்றிருக்கும்போதிலும், என்னையொரு கல்கத்தா நகரத்தை சேர்ந்தவனாகவே நான் கருதுகின்றேன். என்னுடைய சக திரைப்பட இயக்குனரான ரித்விக் கட்டக்கை போலல்லாமல், நான் முழுமையான கல்கத்தாவாசியாகவே உணர்கிறேன். கிழக்கு வங்காளத்தின் மீதான துயரார்ந்த நினைவுகள் எதுவும் என்னிடமில்லை. ரித்விக் கட்டக்கினுடைய கூருணர்வுகள் கிழக்கு வங்காளத்திலிருந்தே ஆழமாக வேர் கொண்டுள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் கல்கத்தா நகரம்தான் எனது எல் டோரடோ. நான் அதிகமாக பயணங்களில் ஈடுபடுகிறவன். வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு முறையாவது நான் வெளி நாடுகளுக்கு சென்று வருவேன். ஆனால், கல்கத்தாவுக்கு வெளியே பத்து நாட்களுக்கு மேலாக நான் தங்கியது கிடையாது. அசெளகர்யமான சூழல்களும், எண்ணற்ற சிக்கல்களும் ஏற்பட்டபோதும் கல்கத்தா நகரத்துடன் நான் உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளேன். இதனை நான் தாழ்வு மனப்பான்மையில் குறிப்பிடவில்லை. கல்கத்தா தொடர்ந்து எனது சிந்தனையை தூண்டுகிறது. எனக்கு உணவு வழங்குகிறது. என்னை இளமையாக உணர செய்கிறது. ஆனால்,
நான் கல்கத்தாவை பற்றி திரைப்படம் எடுக்கின்றபோது, நான் ஒருவித நம்பிக்கையற்றத்தன்மையை கட்டமைக்கிறேன். உண்மையில், இது கல்கத்தாவுக்கு மட்டுமேயானதல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும், இன்னும் சொல்வதென்றால், மூன்றாம் உலக நாடுகள் அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் நான் இத்தகைய நம்பிக்கையற்றத்தன்மையை உருவாக்குகிறேன். இன்னும் ஒரு அடி முன்னால் வைத்து, இது ஒட்டுமொத்த உலகத்தையும் பற்றிய எனது மதிப்பீடு என்றுக்கூட சொல்வேன். நாம் அவருவருக்கத்த கலாச்சாரத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பொதுக் கலாச்சாரம் ஒன்றினை நோக்கி மிக விரைவாக நாம் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறைகளின் ஏற்பட்டுள்ள அபரிவிதமான வளர்ச்சி நியூ யார்க்கை சேர்ந்தவனுக்கும், கல்கத்தாவை சேர்ந்தவனுக்கும் ஒரு பொதுவான கலாச்சாரத்தை கட்டமைக்கிறது. நான் நமது தேசிய திரைப்படத்துறையையும் கேள்விக்குட்படுத்த விரும்புகின்றேன். திரைப்படம் தான் உருவாக்கப்படுகின்ற தேசியத்தின் நிலப்பரப்புகளை, அதன் கலாச்சாரத்தையும், மொழியையும், அதன் உணவு பழக்கங்களையும் பதிவு செய்வதையே தேசிய சினிமா தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. அதோடு, அது அந் நாட்டின் பணத்திலும் படமாக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான். ஆனால், நீங்கள் இதனையெல்லாம் மிகவும் மேலோட்டமாக மட்டும் பதிவு செய்கிறீர்கள். இங்குதான் உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்துக்கு, என்னுடைய Ek Din Prati Din திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். ஏழு உறுப்பினர்கள் கொண்ட குடும்பமொன்றில் பணிக்கு செல்கின்ற ஒரே நபரான இளம் பெண்ணொருத்தி ஓரிரவு வீட்டிற்கு வராததால் உண்டாகும் சிக்கல்களையே அப்படத்தில் நான் பேசியிருப்பேன். இதனால் அக்குடும்பத்தின் அமைதி குலைந்து ஒருவித கொந்தளிப்பான சூழல் உண்டாக்குகிறது. சமூக அமைப்பை ஒரு குறுக்குவெட்டு பார்வையில் அப்படத்தில் நான் அணுகியிருப்பேன். ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் அப்படம் திரையிட்டபோது, பெரும் வரவேற்பை அத்திரைப்படம் பெற்றது. குறிப்பாக, பெண்கள் அப்படத்தால் மிகவும் கவரப்பட்டார்கள். திரையிடலுக்கு பிறகு, பல பெண்கள் திரைப்படத்தை பற்றி நிறைய கேள்விகளை எழுப்பினார்கள்.  நான் ஸ்காண்டிநேவிய நாடுகளை சேர்ந்து சிலரை மட்டும் கருத்தில்கொண்டு, “என்னுடைய சுய அறிவின்படி உங்களுடைய சமூகம்  தாராளமய சமூகம் என்றே கருதுகிறேன். உங்களுடைய
சமூகத்தில் ஓரிரவு வீட்திற்கு வராமலிருப்பது அத்தகைய பெரும் பிரச்சனையை எழுப்பும் விஷயமாக கருதப்படுவதில்லை. என்னுடைய திரைப்படத்திற்கான உங்களுடைய எதிர்வினை என்ன?” என்று கேட்டேன். அவர்கள் உடனடியாக என்னுடைய திரைப்படம் ஆணாதிக்க மனோபாவத்தை பற்றியது என்றும் இதுவொரு உலகளாவிய பிரச்சனை என்றும் பதிலளித்தார்கள். இவ்வகையிலாக சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை எனது திரைப்படங்கள் பெற்றுவிடுகின்றன. நான் எனது தேசிய சூழலை திரைப்படமாக பதிவு செய்ய விழைகின்றபோது, அது இந்தியாவிற்கு வெளியே உள்ள பார்வையாளர்களாலும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. இத்தகைய போக்கு தொடர்ச்சியாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆணாதிக்க மனோபாவத்தை பற்றிய ரோமன் போலன்ஸ்கியின் மிகச்சிறந்த திரைப்படமான Knife in the water-ஐ நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய சிறு கூறு அத்திரைப்படத்தில் பொதிந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. இவ்வாறாகதான் தேசிய சினிமா எனும் கருத்துருவின் மீது நான் கேள்வி எழுப்புகிறேன். திரைப்படம் அதன் விரிவடைந்த தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தனக்கே உரித்தான பிரத்யேக திரைமொழியை கொண்டிருக்கிறது. அதற்கு, இந்த நாட்டு சினிமா என்கின்ற அடையாளங்கள் எதுவும் அவசியமில்லை.

உங்களுடைய திரைப்படங்களில் மற்றைய கலைகளின் தாக்கம் எந்தளவிற்கு படர்ந்திருக்கிறது? குறிப்பாக, நாடகக் கலையும் நாவல்களும் உங்களது திரைப்படங்களில் வெகுவாக ஆதிக்கம் செலுத்துவதை உணர முடிகிறது. இத்தகைய தாக்கங்கள் எப்போதும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் தேவையில்லாமல், கலைகளுக்கு இடையில் இடைவெளிகளை உருவாக்குகிறோம். இது கலைகளுக்குள்ளான வெளிகளை உடைக்கின்ற காலம். ஒரு திரைப்பட இயக்குனனாக, நான் நாடக கலையின் மீதே அதிகமான நெருக்கத்தை கொண்டிருக்கிறேன். நாடக கலையின் நுட்பங்களை எனது திரைப்படங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன். அதோடு, எண்ணற்ற கவிதைகளும் என்னை ஆழமான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. திரைப்பட கலையின் அழகியலை பற்றி எழுதும்போது, நாடகமும், கவிதைகளும் உண்டாக்குகின்ற காட்சி படிமங்களின் காரணமாக இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பினை வெளிப்படுத்திவிடுகிறேன். நாவல்களும் என்னை பெரிய அளவில் ஈர்க்கின்றன. நாவல்களிலிருந்து திரைப்படங்களை உருவாக்குகின்றபோது, நிறைய பயனுள்ள உரையாடல்களை சாத்தியப்படுத்த வாய்ப்புள்ளது. ஃபுயூட்வாங்கர் (Feuchtwanger) பேட்டில்ஷிப் பொட்டம்கின்னின் வடிவத்திலிருந்து நாவல் எழுதும் உந்துதலை பெற்றிருக்கிறார். இதே வகையில், ஐன்ஸ்டீன் ஹாலிவுட்டில் தான் இருக்கவிருந்த திரைப்படத்தில் மொனோலாக் வடிவத்தை பயன்படுத்துவதை பற்றி ஜேம்ஸ் ஜாய்ஸ்ஸுடம் நீண்ட விவாதத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால், அது நிகழவில்லை. அதனால், எல்லா கலைகளுக்குள்ளும் இயல்பாகவே தொடர்பு இருந்துக்கொண்டிருக்கிறது. தூய்மைவாதிகள் சொல்கின்ற பக்கம் செல்ல நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில், திரைப்படக்கலை என்பது பரந்த அளவில் மற்ற கலைகளின் அழகியல் தனக்குள் சுவீகரித்துக்கொள்ளக்கூடியது.
ஏனெனில், திரைப்படக்கலை முற்றிலும் நவீன கலைவடிவம்.    

அயல் தேசத்து இயக்குனர்களின் பாதிப்பு உங்களது திரைப்படங்களில் எவ்விதத்தில் பங்காற்றுகிறது? சத்தியஜித் ரே இத்தாலிய நியோ ரியலிச சினிமாக்களிலிருந்தும், கிரிஸ் கர்னாட் அகிரா குரோசாவா பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். யார் அல்லது எது உங்களது திரைப்படங்களில் பாதிப்பை உண்டாக்கியிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?     

இத்தாலிய நியோ ரியலிச சினிமா எனது அறிவுப்பசிக்கு பெரும் தீனியாக இருக்கிறது. நான் இத்தாலிய நியோ ரியலிச சினிமாவால் பெரிதும் கவரப்பட்டுள்ளேன். உங்களது கதாப்பாத்திர வடிவமைப்பில் பெரிதும் பங்காற்றுகின்ற சூழல்களின் மீது பெரிய அளவில் மரியாதை செலுத்துங்கள் என்று குறிப்பிட்ட ஸவந்தியின் (Zavattini) மீது எனக்கு அதிகளவில் ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது. அவர் மேலும், “நாம் புற உலக யதார்த்தத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருக்கிறோம். அதோடு, அதனை அணுகவும் பேரச்சம் கொண்டுள்ளோம்” என்றும் குறிப்பிடுகிறார். இத்தகைய விழுமியங்களை எடுத்துக்கொண்டு அதனை நான் எனது திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், நான் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமகாலமே மற்ற எவற்றையும்விட எனது திரைப்படங்களில் அதிகளவில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது.

இந்தியாவின் எத்தகைய பார்வையாளர்களுடன் உங்களது திரைப்படங்களின் மூலமாக தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்? படித்த நகரத்து மனிதர்களின் மீது கவனம் செலுத்துகிறீர்களா அல்லது கிராம மக்களை சென்றடைய விரும்புகிறீர்களா?
என்னுடைய திரைப்படங்களை மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களை சென்றடைகின்றது என்பதை போன்ற மகிழ்ச்சிகரமான செய்தி எனக்கு வேறொன்றில்லை. அப்படியொரு நிலையை எனது திரைப்படங்கள் அடையாதபோது, நான் உருக்குலைந்து போனதை போல உணருவேன். ஆனால், நான் அப்போது தெளிவாக நின்று, பரந்த அளவிலான மக்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஏன்?

ஏனெனில், நாம் எடுத்துக்கொள்கின்ற கதைக்களனோ அல்லது திரைப்பட நுட்பங்களோ பெரும் திரளான மக்களை ஈர்ப்பதில்லை. இங்கு நான் ஒரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். மிக பிரபலமான ஊடகமாக கருதப்படும் திரைப்படத்தின் செல்லுபடியாகும்(Validity) காலத்தை நான் கேள்வியெழுப்ப நினைக்கிறேன். எனக்கு இதுவொரு அபாயகரமான விஷயமாகவே படுகிறது. ஒரு தீவிர வாசகர், படித்துக்கொண்டிருக்கும்போது எப்படி வாக்கியங்களுடன் குறுக்கீடு செய்கிறாரோ அதுபோலத்தான் திரைப்படங்களையும் பார்க்க பழக வேண்டும். ஓவியத்தை பார்க்கும்போதோ, இசையை ரசித்துக்கொண்டிருக்கும்போதோ, படித்துக்கொண்டிருக்கும்போதோ நாம் உண்டாக்குகின்ற குறுக்கீடு ஏன் திரைப்படங்களை பார்க்கும்போதும் நிகழக்கூடாது. திரைப்பட இயக்குனராக நான் எந்த அளவிற்கு மிகப்பெரிய பார்வையாளர்கள் வட்டத்துடன் வலுவான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விழைகிறேனோ அதே அளவில், என்னுடைய திரைப்படங்கள் எவ்வாறு புரிந்துக்கொள்ளப்படுகிறது என்பதும் எனக்கு மிகமிக முக்கியத்துவமானது. திரைப்படத்துறை பார்வையாளர்களின் கூருணர்வின் மீது எத்தகைய அவலமான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள
முடிகின்றது. நான் தொடர்ச்சியாக இவ்வகையிலான போக்கினை எதிர்த்தபடியேதான் திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

எனது முந்தைய கால திரைப்படங்களில் கையாளப்பட்ட முறைமைக்கும் இப்போது கையாளப்படும் முறைமைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதை என்னால் உணர முடிகின்றது. என்னுடைய படங்களின் சீரிய தரத்தைப்போலவே இப்போது பார்வையாளர்களிடமும் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. முன்பு, நான் படங்களை இயக்கியபோது, ஒருவேளை இதுவேக்கூட எனது இறுதித் திரைப்படமாக இருக்கலாம் என்ற எண்ணத்திலேயேதான் திரைப்பட பணிகளில் ஈடுபடுவேன். ஆனால், இப்போது
நானொரு சந்தைப்படுத்தலுக்கு ஏற்ற பண்டமாக மாறியிருப்பது புரிகிறது. ஏனெனில், சிலர் என்னிடம் இப்போது திரைப்படங்களை இயக்க அணுகுகிறார்கள். முந்தைய காலத்தில், இதுபோன்ற அனுபவம் எனக்கு உண்டானதில்லை. இப்போது, எனது திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் அயல்நாடுகளில்கூட இருக்கிறார்கள் என்பதாலேயே இது சாத்தியமாகியுள்ளது. என்போன்ற தொடர்பாளருக்கு கிடைத்த மிகப்பெரிய விஷயமாக இதனை கருதுகிறேன்.           

இத்தகைய போக்கு கடந்த ஐந்து வருடங்களாக இருந்துக்கொண்டிருக்கிறதா?

கடந்த ஐந்திலிருந்து ஏழு வருடங்களாக இப்போக்கு இருந்துக்கொண்டிருக்கிறது. மிகமிக மிதமாகவும், அதே சமயத்தில், வலிமையாகவும் இது நடந்துக்கொண்டிருக்கிறது. அதற்காக நான் உடனே ஒரு அலங்கரிக்கப்பட்ட திரைப்படத்தை எடுத்துவிட மாட்டேன். சிலர் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல வாழ்க்கை அழகாகவும் எளிதாகவும் நகர்ந்துக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஓரிரு திரைப்படங்களை உதாரணமாக சொல்வார்கள். ஷியாம் பெனகலின் சக்ரா (Chakra) திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். வெகுஜன பார்வையாளர்களின் தேவையை பூர்த்திச் செய்துக்கொண்டே, நாம் விரும்புகின்ற வகையில் திரைப்படங்களை எடுக்கிறவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், சக்ராவில் பலவும் தேவையற்றதாகவும், சகிக்க முடியாததாகவும் இருந்தது. பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை நோக்கமாக கொண்டே இவ்வகையிலான ஜோடிப்புகள் விமர்சையாக திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் என்னை மிக எளிதாக காயப்படுத்துவிடுகின்றன.  ன்னைப்போன்றவர்களை அபாயகரமான இடத்திற்கு நகர்த்திச் செல்லும்
போக்கு இது.   

நீங்கள் உங்களது திரைப்படங்களோடு சமரசம் செய்துக்கொள்ள விரும்பியதில்லையா?

நிச்சயமாக இல்லை. இப்போதுவரையிலும், நான் எனது மனசாட்சிக்கு நேர்மையாக இருந்தே எனது திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறேன். பெருந்திரளான பார்வையாளர்களை நெருங்க முடியாததால், சிலமுறை நான் சிதைந்திருக்கிறேன். பல சமயங்களில் பட்டவர்த்தனமான தோல்வியையும், எதிர்பாராத வெற்றியையும் அடைந்திருக்கிறேன். ஆனால், நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நம்முடைய துப்பாக்கியின் குறி ஒரு அங்குலம்கூட ஒருபோதும் விலகிவிடக்கூடாது என்பதில் நாம் நிச்சயத்துடன் இருக்க வேண்டும். நாம் பொருளற்ற வகையில் பிரபலமடைதல் கூடாது. அவ்வப்போது என்போன்றோருக்கு இதெல்லாம் நிகழக்கூடியதுதான். திரைப்பட விழாக்களில் நாம் தனித்து தெரியத் துவங்கும் தருணத்திலேயே நமது பிரபலத்துவம் கட்டமைக்கப்பட்டுவிடுகிறது. அதிக பிரபலமடைந்த திரைப்பட விழாவில் ஒன்றில், ஏதேனுமொரு இயக்குனர் கொண்டாடப்பட்டு, ஹாலிவுட் அவரை அணுகுகிறது என்றால், அதோடு அவருடைய படைப்புத்திறன் உதிர்ந்துவிடும் என்றே கருதுகிறேன். பலருக்கும் இது நிகழ்ந்திருக்கிறது. நான் அவர்களுடைய பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் அவர்களில் பலரும் என்னுடன் நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றவர்கள்.

திரைப்பட தணிக்கைக் குழுவினருடன் எதிர்கொண்ட பிரச்சனைகளை பற்றி சொல்ல முடியுமா?

திரைப்பட தணிக்கைக் குழுவினருடன் இதுவரையில், பெரியளவில் மோதல்கள் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. ஒரு திரைப்பட இயக்குனராக, நாம் செயல்பட வேண்டிய எல்லையை நான் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன். அதே சமயத்தில், இந்தியாவிற்கு வெளியிலும் எனக்கு பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதால், என்னுடைய திரைப்படத்தை அணுகும்போது தணிக்கைக் குழுவினர் அதிக விழிப்புடனே செயல்படுகிறார்கள். அதோடு, முந்தைய ஆண்டுகளைவிட அரசின் போக்கு சிறிய அளவில் மேம்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் தணிக்கைக் குழுவினரின் மிகமிக முட்டாள்தனமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது படத்துக்கு தக்கவாறு அவர்களது அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. இருப்பினும், நான் அமைதியாகதான் இருக்க வேண்டும். வருங்காலங்களில், தணிக்கைக் குழுவினரின் அணுகுமுறை எவ்விதத்தில் இருக்கும் என்பதுப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

உங்களுடைய Aakaler Sandhaney திரைப்படம் சத்தியஜித் ரேயின் Ashani  Sanketயின் உந்துதால் உருவாக்கப்பட்டதா? ஏனெனில், இரண்டு திரைப்படங்களும் 1943ல் ஏற்பட்ட பஞ்சத்தையே பேசுபொருளாகக் கொண்டுள்ளன.

நிச்சயமாக இல்லை. நான் வங்கத்தில் நிலவிய பஞ்சத்திற்கு இடையில் வாழ்ந்திருக்கிறேன். அதனால், எனது மனதில் பல வருடங்களாகவே பஞ்சத்தை பற்றிய திரைப்படம் எடுக்க வேண்டுமென்கிற எண்ணம் இருந்தது. நான் 1960ல் Baishey Sravan என்றொரு திரைப்படத்தை இயக்கினேன். அப்படம் ஐந்து மில்லியன் மக்களை பலிகொண்ட பஞ்சம் நிலவிய வருடங்களில் ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கு இடையிலான உறவில் நிலவிய முரண்பாடுகளை பற்றியது. நான் அப்போது எண் விளையாட்டுகளில் (இறந்தவர்களின் எண்ணிக்கை) அதிக கவனத்தை குவிக்கவில்லை. அத்தகைய அபாயகரமான பேரழிவு எப்படி ஆண் – பெண் உறவுக்கு இடையில் அதீத குரூரத்தை உண்டாக்குகின்றது என்பதையே கவத்தில் கொண்டிருந்தேன். அவர்கள் முழுதாக மனித பண்புகளை தொலைத்து மரணத்தின் நிழலில் நின்றுக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் அவ்வாறு மாறியதற்கு பஞ்சமே பிரதான காரணம் என்பதையே நான் அதில் தெளிவுப்படுத்த விரும்பினேன். 1960ஆம் ஆண்டின் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம்தான் (Baishey Sravan) அயல் நாடுகளில் திரையிடப்பட்ட எனது முதல் திரைப்படமாகும். அதனால், நீங்கள் குறிப்பிட்ட Ashani  Sanket திரைப்படத்திற்கும் என்னுடைய Aakaler Sandhaney திரைப்படத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. ரேயின் மீதான விமர்சனமாக நான் இதனை குறிப்பிடவில்லை. ரேவை நான் மகத்தான படைப்பாளியாக கருதுகிறேன். அவர்தான் இந்திய சினிமாவில் முன்னோடியாக இருந்தவர். அதோடு, மாற்று சினிமாவிற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர். ஆனால் அவருடைய Ashani  Sanket என்னை ஈர்க்கவில்லை. பஞ்சத்தைத் பற்றிய அத்திரைப்படம் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் நவ சினிமாக்கள் உருவெடுக்கப்போகின்றனவா? 50களில் பிரெஞ்சும், 60களில் கிழக்கு ஐரோப்பாவும், 70களில் ஜெர்மனியும் சினிமாவை தங்கள் வசம் வைத்திருந்ததைப்போல 80களை இந்திய திரைப்படங்களின் காலக்கட்டம் என்று வரையறுக்கலாமா?

என்னால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்திய சினிமாவில் இப்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் மாற்றங்களை வைத்துப் பார்க்கின்றபோது, ஒருவேளை வருங்காலங்களில், இந்திய சினிமா ஒரு வழிகாட்டுதலை நிகழ்த்தலாம். இப்போதெல்லாம், வளர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் தொடந்து எனக்கு அதிருப்தியைதான் உண்டாக்கி வருகின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கப்படும் திரைப்படங்களை பற்றிய உங்களது அபிப்ராயம் என்ன? குறிப்பாக லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உருவாக்கப்படும் திரைப்படங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

அங்கிருந்து உருவாக்கப்படும் பல திரைப்படங்கள் என்னை கவர்ந்திருக்கின்றன. அவர் தங்களது சமூகத்தில் நிலவுகின்ற அநீதிகளை, தங்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை திரைப்படங்களின் மூலமாக மிகவும் வலிமையாக உருவாக்குகிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் திரைப்பட இயக்குனர்கள் பல அடுக்குகளில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வாழ்த்துக்கள் அவர்களுக்கு எப்போதும் உண்டு. ஆனால், சில முரண்பட்ட கருத்துக்களையும் நான் வெளிப்படுத்த வேண்டும். பலமுறை என்னிடம் அயல்நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களின் அவல நிலையை படமாக்கச் சொல்லி அணுகியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் “எப்போதுமே
எனக்கு அவ்விவகாரங்களில் ஈடுபாடு இல்லை” என்பதே. சில ஆப்பிரிக்க இயக்குனர்கள் பாரீஸிலும் லண்டனிலும் வாழ்கின்ற ஆப்பிரிக்க மக்களின் துயரத்தை தங்களது திரைப்படங்களின் கதைக்களன்களாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களது நாட்டில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை தங்களது திரைப்படங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்.

நவ இந்திய சினிமா சமூகத்தில் தீவிரமான மாற்றங்களை உண்டாக்கும் என்று நம்புகிறீர்களா?

சில மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், திரைப்படம் ஒன்றும் துப்பாக்கி இல்லையே. உடனடியாக மாற்றங்களை உண்டாக்கிவிட. திரைப்படம் ஒரு சூழலை உண்டாக்குகிறது. அவ்வளவுதான். துப்பாக்கி தன்னுடைய பணியினை செய்திடும். புத்தகங்களும் திரைப்படங்களும் மட்டுமே  புரட்சியை உண்டாக்கிவிடாது. அவ்வப்போது, எனது நண்பர்கள் சிலர் புரட்சிகரமான திரைப்படம் ஒன்றை இயக்கச் சொல்லி என்னை வற்புறுத்துவார்கள். அவர்கள் திரையில் ஒரு புரட்சியை பார்ப்பார்கள். அதோடு, எல்லாமும் முடிந்துவிடும். அதோடு, ஒரு போராளியின் பணி முடிவடைந்துவிடுகிறது. இயல்பு வாழ்க்கையில் புரட்சிக்கார நடவடிக்கைகளுக்கு வெகு சிறிய அளவில் பங்காற்றிக்கொண்டு, அவர்கள் வழக்கம்போல தங்களது தினசரி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com