பெண் இயக்குனரின் படத்துக்குத் தடையா?

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 35 வயதான மேசலோன் ஹமெளத் (Maysaloun Hamoud) என்ற பெண் இயக்குனருக்கு
பெண் இயக்குனரின் படத்துக்குத் தடையா?

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 35 வயதான மேசலோன் ஹமெளத் (Maysaloun Hamoud) என்ற பெண் இயக்குனருக்கு ஃபத்வா (இஸ்லாமிய சட்டத்தின்படி) விதிக்கப்பட்டுள்ளது. காரணம் அவர் இயக்கியுள்ள 'இன் பிட்வீன்' (In Between) எனும் திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள். ஹமெளத்தின் முதல் திரைப்படம் இது. முதல் படத்திலேயே கடும் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளார் இயக்குனர் ஹமெளத்.

இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் நகரில் வாழும் மூன்று இளம் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை அது. இதில் அப் பெண்களின் சமகால பிரச்னைகளை இயக்குனர் அலசியுள்ளார். சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்கள் தங்கள் சுய அடையாளங்களை மீட்டெடுக்க போராடுவதாகவும் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. பேசா பொருளைப் பேசத் துணிந்த அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இஸ்ரேலில் திரையிடப்பட்ட சில நாட்களிலேயே தடை செய்யப்பட்ட இத்திரைப்படம், பிரிட்டனில் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது.

இயக்குனர் மேசலோன் ஹமெளத்திடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘இந்தக் கதையை எழுதும்போது எனக்கு எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை. இது இந்தளவுக்கு பிரச்னையாகும் என்று நான் நினைக்கவில்லை’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்தக் கதையில் உள்ள பாத்திரங்களை எழுதும் போது, இவர்களை நீங்கள் எளிதில் கடந்து முடியாது என்று நினைத்தேன். ஆனால் அதற்கு இந்தளவுக்கு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதை நாயகியரான நூர், சல்மா, லைலா ஆகிய மூன்று இளம் பெண்களும் இந்தச் சமூகத்தில் தான் கண் மறைவாய் ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மதத்தாலும், பழமைவாதத்தாலும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள், அதை மீறி அவர்கள் வாழ்க்கை என்னவாகிறது என்பதை கற்பனை கலந்து துணிச்சலான காட்சியமைப்புக்களுடன் எடுத்துள்ளேன். இது எதிர்ப்பையும் சர்ச்சையையும் கொண்டு வரும் எனத் தெரியும், ஆனால் ஒரேடியாக கொலை மிரட்டல்களை எதிர்ப்பார்க்கவில்லை.

பழமைவாதிகளிடமிருந்து இந்தப் படம் தப்பி நிச்சயம் மீண்டும் திரைக்கு வரும். முதலில் இதற்கெல்லாம் சற்று பயந்திருந்தாலும், இப்போது நான் உறுதியாகவே இருக்கிறேன். எதிர்வினைகள் என்பது இருக்கத்தானே செய்யும்?  க்ளிஷேயான விஷயங்களை தவிர்த்துவிட்டு, புதிய சில விஷயங்களை யோசிக்க வேண்டும். நீங்கள் நினைப்பதை படம் எடுக்கவும்,  எல்லோரும் பார்க்க விரும்பும் ஒன்றை நாம் தொடர்ந்து உருவாக்கி வருவதும் உண்மையில் கலையோ சினிமோ அல்ல. கலையின் மூலம் கலகம் ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமூக மாற்றம் ஏற்பட்டால் அந்தக் கலைஞன் இந்த சமுதாயத்துக்குப் பங்களித்துள்ளார் என்று அர்த்தம்’ என்று கூறுகிறார் இயக்குநர் ஹமவுட்.

மேசலோன் ஹமெளத் என்று தனது படத்தின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். படத்துக்கான தடையைப் பற்றி அவர் கூறும் போது, ‘உள்ளூர் தலைவர்கள் இந்தப் படத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கினார்கள். தவிர படத்தை திரை அரங்குகளில் வெளியிட தடை விதித்து விட்டார்கள். மேலும் என் படத்தை ஹராம் என்று கூறியதுடன், எனக்கு பத்வாவும் விதித்தனர். ஆனால் இவை எல்லாம் என் படத்திற்கு எவ்வித பிரச்னையும் ஏற்படுத்தவில்லை. இந்த படத்தைப் பற்றி மக்கள் பேசத் துவங்கியுள்ளனர். அதுதான் எனக்கு மகிழ்ச்சி’ என்கிறார் ஹமெளத். 

இன் பிட்வீன் படம் ஓஃபிர் விருதுக்காக 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இளம் திறமையாளர் என்ற பிரிவில் ஹமெளத்துக்கு விருது கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com