ஹாலிவுட் திரைப்பட மேதை ஸ்டான்லி குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் 

திரைக்கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.  
ஹாலிவுட் திரைப்பட மேதை ஸ்டான்லி குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் 

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது.

உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரை பாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக். 

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள்

'நான் எல்லா படங்களையும் நிச்சயமாக பார்த்துவிடுவேன். என் வீட்டில் ஒரு சிறிய புராஜெக்டர் உள்ளது. அதனால், என்னால் எளிதாக எல்லா படங்களையும் பார்த்துவிட முடிகின்றது. என்னால் பணம் கொடுத்து வாங்கி பார்க்க முடியும் எந்த படத்தையும் நான் தவற விடுவதேயில்லை. எளிதாக கிடைக்காத படங்களையும் தேடிச்சென்றாவது பார்த்துவிடுவேன். நான் எந்த படத்தையும் தவற விடுவதேயில்லை'  

பல இயக்குனர்கள் தங்களது நெருக்கடி மிகுந்த பணிச் சுமையால் திரைப்படங்களை பார்ப்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லி வருகிறார்கள். இதனால் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுருங்கிவிடும் அபாயமுள்ளது. எழுத்தாளருக்குரிய இலக்கணமே எழுதுவதும் தொடர்ந்து வாசிப்பதும்தான். இரண்டும்தான் தொடர்ந்து இயங்குவதற்கான சக்தியை எழுத்தாளர்களுக்கு வழங்குகின்றது. ஒரு திரைப்பட இயக்குனரின் அத்தியாவசிய பண்பும் இதுவேதான். அவர் தொடர்ந்து திரைப்படங்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

தன்னை தாண்டி இயங்கும் இயக்குனர்கள் எதனை கண்டடைகிறார்கள், எதில் திருப்திக் கொள்கிறார்கள், எது அவர்களை கவர்ந்திழுக்கிறது, பெருகி வரும் தொழிற்நுட்பம் திரையில் எத்தகைய விளைவை ஏற்படுத்துகின்றது என்பதை தொடர்ந்து ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுதல் அவசியம். எத்தனை கடினமானதாக இருப்பினும், ஒரு இயக்குனரின் முழுமுதற் கடமை அனைத்தும் திரைப்படங்களையும் பார்த்து விடுவதுதான்.

காரிலிருந்து வெளியேறும்போது உண்டாகின்ற பதைபதைப்பை உணருங்கள்

டி.டபிள்யூ. கிரிஃபத் விருதினை பெறும்போது, பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிடம், 'ஒரு திரைப்பட உருவாக்கத்தில் மிகவும் சிக்கல் மிகுந்த பகுதி காரிலிருந்து வெளியேறுவதை படமாக்குவதுதான்’ என்று குப்ரிக் குறிப்பிட்டுள்ளார்.

உடனேயே 'சினிமா உருவாக்குவது போரும் அமைதியும் நாவலை, உயரிய கார் ஒன்றில் அமர்ந்து கொண்டோ அல்லது சொகுசு பங்களாவில் அமர்ந்தோ எழுதுவதைப் போலத்தான் என்றாலும், நாம் சொல்ல வந்த கருத்தை உரிய நேர்த்தியோடு இறுதியாக சொல்லி முடித்துவிட்டோம் என்றால், அப்போது உண்டாகின்ற உள்ளக் கிளர்ச்சிக்கு ஈடு இணையே இல்லை' என்றும் சொல்லி இருக்கிறார்.

எப்போதும் கிடைக்கின்ற வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டு எளிதாக கரை சேர்ந்துவிட முடியும். ஆனால், வழமையாக பின்பற்றப்படுகின்ற பாதையிலிருந்து விலகி இருப்பதுதான் நம்மை ஒரு உயர்ந்த கலைஞனாக உலகுக்கு அடையாளப்படுத்தும். மிகமிக சவாலான வலிகள் நிரம்பிய காரியம்தான் என்றாலும், அதற்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் அந்த வலிகளை கழுவி துடைத்தெறிந்துவிடும். 

எதையும் படமாக்கிவிட முடியும்

'நம்மால் ஒரு செயலை எழுதவோ, கற்பனையில் உருவாக்கவோ முடிகிறதென்றால், நிச்சயமாக நம்மால் அதனை செல்லுலாய்டில் செதுக்கிவிடவும் முடியும்'

கலைக்கு எல்லைகளே கிடையாது. குப்ரிக் குறிப்பிட்டுள்ளதைப் போல உலகின் மகத்தான இலக்கிய படைப்புகள் யாவும் எளிதில் சினிமாக மாற்றிவிட முடியாத பொதுப்பண்பில் ஊறிக் கிடக்கின்றன. ஆனால், மிகச் சிறந்த கலைஞன் ஒருவனின் மூளையில் அத்தகைய முரண்பாடுகளை அடித்து நொறுக்கக்கூடிய சிறிய அளவிலான சிந்தனைக்கூடவா உதிக்காமல் போகும்?

கலைக்கு எல்லைகளே கிடையாது. ஒரு மனிதன் பறப்பதைப் பார்க்க வேண்டுமா? முடிக் கற்றை அடர்ந்து வியாபித்திருக்கும் கரடி ஒன்று சிறுவனின் முன்னால் மண்டியிட்டு நிற்க வேண்டுமா? சினிமாவில் அனைத்தும் சாத்தியமே.

உங்களுக்கு இந்த மூன்றும்தான் தேவை

'50களின் மத்தியில் சாதாரண ஒருவன் ஒரு திரைப்படத்தை இயக்குவது அத்தனை எளிதான காரியமல்ல என்றே பொதுவாக எல்லோரும் கருதினார்கள். சினிமாவென்பது ஏதோ மனித சக்திக்கு அப்பாற்பட்ட சிலரால் இயக்கப்படுவதைப்போல எல்லோரும் ஒதுங்கிக்கொண்டார்கள். மக்களின் அத்தகைய எண்ணம்தான் என்னை வெகு எளிதாக எனது முதல் திரைப்படத்தை இயக்கி முடிக்க வைத்தது. ஒரு திரைப்படத்தை இயக்க உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு கேமராவும்,ஒரு டேப் ரெக்கார்டரும், கொஞ்சம் கற்பனை வளமும்தான்”

1968ல் சார்லஸ் கொஹ்லர் என்பவருடனான நேர்காணலில் ஸ்டான்லி குப்ரிக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் குப்ரிக் எதனையும் நிகழ்த்திக்காட்டும் உறுதிமிக்கவர் என்பது புலனாகிறது. அவருடைய தந்தை மிக இளம் வயதிலேயே குப்ரிக்கிற்கு ஒரு கேமராவை பரிசளித்திருக்கிறார். கேமராவின் மாயாஜாலங்களால் ஈர்க்கப்பட்ட குப்ரிக் பள்ளி படிப்பை கை கழுவிவிட்டு “லுக்” பத்திரிகையில் புகைப்படக்காரராக சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்.  

'இதைக் கேட்க கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும் என்றாலும் வளர்ந்து வரும் இயக்குனர்கள் செய்ய வேண்டியதெல்லாம் கைக்கு அடக்கமான கேமரா ஒன்றினை வாங்கிக்கொண்டு, உங்களுக்கு பிடித்த வகையில் அதில் படங்களை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருப்பதுதான்’ அதனால் விரைவாக இம்மூன்றையும் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். 'வாழ்க்கையின் அர்த்தமற்ற போக்குகள்தான், ஒருவனை சிந்திக்க தூண்டுகிறது. தனக்கான அர்த்தத்தை தானே உருவாக்கிக்கொள்ள உந்தித் தள்ளுகின்றது. இலையின் பசுமையைப்போல இந்த உலகத்தின் பரிசுத்தத்தை முழுமையாக சுவீகரித்துக்கொள்ள குழந்தையால்தான் முடியும்.

குழந்தையால்தான் கட்டுப்படுத்தப்படாத வாழ்வின் அலையினை அதன் அசலான முகத்தோடு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் வயது ஏறஏற அவனே எல்லாவற்றையும் தராசில் வைத்து எடைபோடத் துவங்கிவிடுகின்றான். மரணம் அவனை துரத்துக்கிறது. தனது வாழ்வினுக்கான சட்டங்களை உருவாக்கிக்கொள்கின்றான். 

குழந்தை பக்குவடையும்போது, அவன் வாழ்வின் போலித்தனங்களையும், வலியையும், அழுகையையும் உணர்கிறான். இதனால் தனது சக மனிதனின் மீதே அவன் பேரச்சம் கொள்கிறான். எல்லாவற்றையும் நம்பிக்கையற்று நோக்குகிறான். அதுவே ஒரு குழந்தை வலுவான சிந்தனையை வளர்ந்துக்கொண்டுவிட்டால், அவனால் எந்த தடைகளையும் எளிதாக கடந்துவிட முடியும். அவனால் ஒரு புதிய சிந்தனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தப்படலாம். அர்த்தமற்ற வாழ்வினை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கமாட்டான்.

உலகினை பற்றிய மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை என்னவென்றால், அது பகைமையும், விரோதமும் நிரம்பி ஓடும் இடம் மட்டுமேயல்ல. இது ரொம்பவே வித்தியாசமான ஒரு இடம். ஆனால், வாழ்வுக்கும் சாவுக்குமான எல்லைகளை பொருட்படுத்தாமல், சக உயிர்களுக்கிடையிலான வாழ்க்கையின் வித்தியாசமின்மையையும், நாம் சந்திக்க விருக்கின்ற சவால்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்தால், நம் வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தம் பொருந்தியது என திடமாக நம்பினால், எத்தனை இருள் நிரம்பியதாக இருப்பினும் நம்மால் நமக்கான ஒளியை உருவாக்கிக்கொள்ள முடியும்'

திரைக்கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com