அடையாளம் அழித்தலின் ஆரம்ப நிலை (பெர்சோனா)

படம் தொடர்கிறது. எலிசபெத் வார்க்லெர் (லிவ் உல்மன்) ஒரு பிரபல நடிகை. பேரழகி.
அடையாளம் அழித்தலின் ஆரம்ப நிலை (பெர்சோனா)

Persona (பெர்சோனா)

படம் தொடங்கியதும் சம்பந்தமில்லாத காட்சிகளின் கலவை பார்வையாளனை குழப்பத்திற்குள் ஆழ்த்தும். யாரோ ஒருவரின் உள்ளங்கையில் ஓங்கி அறையப்படும் ஆணி, ஒரே வெட்டில் துண்டாடப்படும் மருகம், பழங்கால காரில் போலீஸ்காரர்கள், விளக்கின் சுடரலைதல், படுத்திருந்த சிறுவன் அது பிடிக்காமல் எழுந்து புத்தகம் வாசிக்க, அதுவும் பிடிக்காமல் தன்முன் பிரம்மாண்டமாகத் தெரியும் பெண்ணின் மங்கலான உருவப் படத்தை தடவிப் பார்த்தல் போன்றவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருந்தாலும் அவை கூட்டாக உணர்த்தும் செய்தி – இருண்மை, குழப்பம், அர்த்தமற்ற தன்மை. இருத்தலின் கேள்வி.

படம் தொடர்கிறது. எலிசபெத் வார்க்லெர் (லிவ் உல்மன்) ஒரு பிரபல நடிகை. பேரழகி. கணவனும் சிறு மகனும் கொண்ட அழகிய குடும்பம். பணம் புகழ் என தெள்ளிய நீரோடையாய் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கத்தானே வேண்டும்? அப்படியாகவில்லை எலிசபெத் சோக காட்சியொன்றில் நடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று வெடித்துச் சிரிக்கிறாள். அதன்பின் அவள் நீண்ட மெளனத்திற்குள் விழுகிறாள். எழ முடியாத மெளனம். அத்துடன் அவளின் இயக்கங்கள் முடங்கின. ஆஸ்பத்திரியில் அவளுடைய உடல் மற்றும் மன நலம் நன்றாகவே உள்ளது என்கிறாள் டாக்டர். அவள் சொல்லாத சொற்களுக்காய் அனைவரும் வருந்தவே சிகிச்சைக்கு ஆட்படுத்தப்படுகிறாள். வெறுமையான ஹாஸ்பிடல் வளாகத்தில் எலிசபெத் இருந்தால் எந்த முன்னேற்றமும் இருக்காது என ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தன்னுடைய கடற்கரை கெஸ்ட் ஹவுஸ்லில் நர்ஸ் அல்மாவின் துணையுடன் அனுப்புகிறாள் டாக்டர்.

இங்குதான் தொடங்குகிறது அடையாளம் அழித்தல் அல்லது துறத்தலின் ஆரம்ப நிலை. நர்ஸ் அல்மா (பிபி ஆண்டர்ஸன்). இருவர் மட்டும் வாழும் உலகத்தில் அல்மா மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறாள். பேச்சென்றால் அப்படி ஒரு பேச்சு சரளமாக, விரிவாக, தங்குதடையில்லாமல், ராப்பகலாக, எவ்வித கூச்ச நாச்சமும் இன்றி சகலத்தைப் பற்றியும் சகலரைப்பற்றியும். மிகப்பெரிய நடிகை எலிசபெத் கேட்கிறாள் என்றாள் சும்மாவாவென பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் அல்மா. எலிசபெத் பேசவில்லையே தவிர நன்றாக உள்வாங்கிக் கொள்கிறாள். சிலசமயம் அல்மாவின் பேச்சை ரசிக்கும்படியான சமிக்ஞைகளைத் புன்முறுவலாய் தருகிறாள். அல்மா தேனீர் தயாரிக்கும்போது அவளுக்கு உதவுகிறாள் எலிசபெத். இருவருக்கும் மெல்லிய நூலிழையாய் ஒருவர்கொருவருடனான ஈடுபாடு ஆரம்பாகிறது.

கடல் அலையை ரசிக்கிறார்கள், புத்தகம் வாசிக்கிறார்கள், காளான் பிய்த்தெடுக்கிறார்கள், சமைக்கிறார்கள், இசை கேட்கிறார்கள், மழை நாளின் அடர்குளிரை போர்வையாலும் தேனீராலும் இணக்கமான நெருக்கத்தாலும் ரசித்து கடக்கிறார்கள். அன்றைய இரவில் அல்மா தன்னுடைய ரகசியம் ஒன்றினை எலிசபெத்துடன் பகிர்ந்து கொள்கிறாள். காதலுடன் கடற்கரை ரிசார்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள் அவன் நகரம் சென்றிருக்கவே இவள் தனியாக பீச்சுக்கு போய்விடுகிறாள். அங்கு இளம்வயதுப் பெண்ணொருத்தி உடலில் பொட்டுத் துணியில்லாமல் ஸன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் ஆசையாக இருக்கவே உடைகளைக் களைந்துவிட்டு அவளருகே போய் படுத்துக் கொள்கிறாள். அப்பெண்ணின் பெயர் காத்ரினா என அறிகிறாள். இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கையில் தங்களை யாரோ பார்ப்பதை உணர்கிறார்கள். இளவயதுப் பையன்கள் இருவர் அவர்களை மறைந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தைரியமான பையன் அருகில் வரவே காத்ரினா அவனுடன் உறவு கொள்கிறாள். ஆவலான அல்மாவும் அவனை தன்னிடம் வருமாறு அழைக்கிறாள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனும் சேர்ந்து கொள்கிறான். அவசரமாக ரிசார்ட்டுக்குச் சென்ற அல்மா அன்றிரவு காதலுடனும் இணைகிறாள். மறக்க முடியாத அற்புதமான உறவாக அது இருந்தது என்பதை அல்மா எலிசபெத்திடம் சொல்லும்போது குற்றவுணர்வின்றியே சொல்கிறாள். உணர்ச்சி அலைக்கழிப்பில் இக்கதையைக் கேட்டபின் துயில் கொள்கிறார்கள்.

அடைமழைப் போன்ற அல்மாவின் தொடர்பேச்சு நமக்கே அலுக்கத் தொடங்குகையில் மெல்ல அவர்களுக்குள் விரிசல் விழத் தொடங்குகிறது. எலிசபெத் யாருக்கோ எழுதிய கடிதத்தில் அல்மாவின் விஷயத்தை விலாவரியாக எழுதிவிட்டாள். போஸ்ட் செய்யும் முன் படித்துவிட்ட அல்மா உடைந்து போகிறாள். தான் பெரிதும் நேசித்த பெண்ணின் நம்பிக்கை துரோகம் அவளை ஆத்திரமூட்டுகிறது. ஏன் இப்படி செய்தாய் பேசு பேசுடி என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் அல்மா. அதற்கு எலிசபெத்திடமிருந்து பதில் ஏதுமில்லை. எப்போதும் போல தீவிரமான மெளனம். நீ சாகஸக்காரி ஏமாற்றுகாரி என்று வசைபாடுகிறாள் அல்மா எரிச்சலுற்ற எலிசபெத் அவளை அறைந்து தள்ளுகிறாள். ஆவேசமான அல்மா கொதிக்கும் நீரை அவள் மீது ஊற்ற தலைபடுகிறாள். அதிர்ச்சியில் உரைந்துப் போன எலிசபெத்தைப் பார்த்த அடுத்த நொடி கரைந்து போகிறாள் அல்மா. தனியாக சென்று ரத்தம் ஒழுகும் தன் மூக்கை கழுவி சுத்தம் செய்துகொண்டே குலுங்கி அழுகிறாள் அல்மா. அவளிடம் வரும் எலிசபெத் அவள் கூந்தலை கோதுகிறாள். இருவரும் கண்ணாடியில் பார்க்கையில் ஒருவர் மற்றொருவராக மாறிக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள். அல்மா தன் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை, நான் நீயாக முடியாது நீ நானாகவும் ஆகமுடியாது என மறுக்கிறாள். ஆனால் இறுதியில் அவள் அவளுடன் ஐக்கியமாவதை அவளால் தடுக்க இயலவில்லை.

எலிசபெத்தின் உடைபடாத மெளனம் தன் தீவிரத்தன்மையை ஒருபோதும் இழக்கவில்லை. அல்மாவும் அதற்கு மேல் செய்வதற்கு ஏதுமில்லாமல் சொல்வதற்கு ஏதுமில்லை. எல்லா வார்த்தைகளும் தீர்ந்துபோய்விட்டன. தன்னுள் இறங்கிய நடிகையின் பிம்பத்தை சுமந்துகொண்டு அவ்விடத்தைவிட்டு அகல்கிறாள். இறுதிக்காட்சியில் ஷூட்டிங் நடக்கிறது. கேமரா இயங்குகிறது, பெர்க்மென் தெரிகிறார் – அபத்தமான இவ்வாழ்வில் எது நிச்சயம் எது நிச்சயமின்மை. யார் நிரந்தரம் எது அழிவு எது முரண் எது நிலையென்ற பலவகையான கேள்விகளை எழுப்பாமல் எழுப்புகிறார்.

இருவருக்குள் நிகழும் விதயங்களை வெகு அருகில் நின்று பார்ப்பதை போன்ற உணர்வினை ‘பெர்சோனா’ அளிக்கிறது. பெர்கமனின் சினிமா பார்வை வெகு நுணுக்கமானது. கமர்ஷியல் படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தன்னுடைய கலைப்படமான பெர்சோவினால் பெரும் புகழையும் விருதுகளையும் அடைந்தார் அசல் திரைக்கலைஞர் இங்மர் பெர்க்மென்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com