நியூட்டன் மற்றும் அருவி படங்கள் எழுப்பிய சர்ச்சைகளும் முடிவுகளும்!

எகிப்திய படமான அஸ்மா எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவோர் மீதான அக்கறையில்
நியூட்டன் மற்றும் அருவி படங்கள் எழுப்பிய சர்ச்சைகளும் முடிவுகளும்!

இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கிய நியூட்டன், இந்திய அரசியலை குறிப்பாக ஓட்டு உரிமைகளை விமரிசித்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இப்படத்தில் அமித் எல்லாத் தரப்பு அரசியலையும் கவனத்தில் கொண்டிருக்கிறார். அரசு வேலைக்கு வரும் முதல் தலைமுறை ஊழியன் ஒருவனின் நேர்மை, அவனுடைய பெயர் நியூட்டன் என்று பத்தாவது படிக்கும் போது அவனே மாற்றிக் கொண்டதால் அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில் ஆரம்பிக்கும் அவனது சிக்கல் அவன் அரசுப் பணியில் அதுவும் மாவோவிஸ்ட் நிறைந்துள்ள தண்டகாரண்ய பகுதியில் நடைபெறும் தேர்தலில் ஒட்டுப் பதிவு செய்யும் ஊழியனாக பணி புரியும் வரை தொடர்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகளை, அரசு இயந்திரம் இயங்கும் முறைகளை, மிக நுட்பமாக இத்திரைப்படத்தில் பகடி செய்துள்ளார்கள்.

ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, சஞ்சய் மிஸ்ரா, ரகுவீர் யாதவ், அஞ்சலி பாட்டீல் என கதாபாத்திரங்களுக்காகவே உருவான நடிகர்கள். கடைசி வரை சில விஷயங்கள் இப்படத்தில் தீர்வில்லாமல் தொக்கி நிற்கும். நியூட்டனின் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பாராட்டுக் கிடைக்காமல் அவனது நேர மேலாண்மையைப் பாராட்டுவதாக படம் நிறைவு பெறும். இந்திய ஜனநாயகத்தின் நிஜமான முகத்தை அமித் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

நியூட்டன் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் ஆஸ்கருக்குத் தேர்வானது. ஆனால் கடைசிச் சுற்றுக்கான ஐந்து படங்களில் இடம் பெறவில்லை. இப்படம் 2001-ல் வெளிவந்த சீக்ரெட் பாலெட் என்கிற இரானிய படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டினர். 

இரானியப் படத்தின் தயாரிப்பாளர் மார்கோ மியூல்லர் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டினார். இயக்குநர் அனுராக் காஷ்யப், மியூல்லரிடம் நியூட்டன் படத்தினைப் பார்க்கச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நல்ல படம். இரண்டு கதைகளிலும் சில ஒற்றுமைகள் தென்பட்டாலும் நியூட்டன், சீக்ரெட் பாலெட் படத்தை காப்பி அடிக்கவில்லை என்று கூறினார் மார்கோ மியூல்லர். இத்தகவலைத் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் அனுராக் காஷ்யப். அதன்பிறகே நியூட்டன் படம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது.

‘அருவி’ படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பாராட்டுதல்களையும் அதே சமயம் சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. சில திரை விமரிசகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்படம் அரபு மொழியில் வெளிவந்த ‘அஸ்மா’ என்ற படத்தின் தழுவல் என்று குற்றம் சாட்டி எழுதி வருகின்றனர்.

மேலும் ‘அஸ்மா’ படத்தின் கதையும் ‘அருவி’ படத்தின் கதைக் களமும் ஒன்றுதான். ‘அருவி’ படத்தில் இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தகைய ப்ளாகாரிஸம் (plagiarism)  கண்டனத்துக்குரியது என்றனர்.  

எகிப்திய படமான அஸ்மா எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவோர் மீதான அக்கறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நோய் ஒன்றினை குறித்த புரிதலை உண்டாக்கும் நோக்கத்தில் அத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் முழுவதிலும் ஏராளமான எய்ட்ஸ் நோயாளிகளை ஆஸ்மா எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கிடையில் நிலவும் உணர்ச்சி பரிமாற்றங்கள், எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள், வாழ்தலுக்கான போராட்டம் என முழுக்க முழுக்க எய்ட்ஸ் நோயாளிகளின் மீதான பொது பார்வையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே அத்திரைப்படத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.  

அருவி திரைப்படத்திற்கும் ஆஸ்மாவுக்கும் இடையில் உள்ள ஒப்புமைகள் என்றால், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படும் பெண்ணும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும்தான். ஆஸ்மாவில் எய்ட்ஸ் என்பதுதான் அத்திரைப்படத்தின் மையமாக இருந்தது. ஆனால் அருவியில் அது மட்டுமே அல்ல. பிறப்பில் துவங்கி இயல்பாக பயணித்துக்கொண்டிருக்கும் அருவியின் வாழ்க்கையில் எய்ட்ஸ் என்பது ஒரு குறுக்கீடாகவே வருகிறது. அவள் ஏராளமான பொது விஷயங்களை பேசுகிறாள். எய்ட்ஸ் என்பது அவள் சமூகத்திலிருந்து ஒதுங்க வேண்டிய அவசியத்தின் காரணமாகவே அருவியில் கையாளப்பட்டிருக்கிறது.  படத்தின் இறுதி வரையிலும் நாம் பார்த்துக்கொண்டிருப்பது அருவியைதானே தவிர, ஒரு எய்ட்ஸ் நோயாளியை அல்ல.  

நியூட்டனை தி சீக்ரெட் பாலெட் படத்துடனும், அருவியை அஸ்மாவுடனும் ஒப்பிடுவது அல்லது ப்ளாகாரிஸம் என அதனை உருவாக்கிய கலைஞர்களை குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை. காரணம் இத்திரைப்படங்கள் கருத்தில்ரீதியாகவும் காட்சிபூர்வமாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவே உள்ளன. அவை அந்தந்த மொழி, இனம், நிலம் சார்ந்து தனித்துவமாகவே உள்ளன. அசலை நகலென்றும், நகலை வானளாவ புகழும் சூழல் இங்கு நிலவுகிறது. காட்சிக்கு காட்சி காப்பியடிக்கும் இயக்குநர்களையும், அயல் சினிமாவிலிருந்து பாடல்களின் மெட்டுக்களை அப்படியே ப்ளக் கின் செய்து பயன்படுத்தும் இசையமைப்பாளர்களையும் இந்த விமரிசகர்கள் ஏன் சாடுவதில்லை என்பது புரியாத புதிர். 

திரைப்படங்களுக்கு விமரிசனங்கள் தேவைதான். அது உண்மையில் ஒரு படைப்பாளியை அடுத்த கட்ட நகர்விற்குத் தயார் செய்வதாக இருக்க வேண்டும். மாறாக அக்கலைஞனின் அக உலகை உடைத்து ஆன்மாவைக் காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. நியூட்டன் இயக்குநர் அமித் மசூர்கர் மற்றும் அருவி படத்தின் இயக்குநர் அருண் பிரபுவும் இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு தங்களுடைய அடுத்த படைப்பிற்கு நகர்ந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com