என்று நிறைவேறும் ஆஸ்கர் கனவு? தொடரும் ஏமாற்றம்!

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம்பிடித்து கடைசியில் ஆஸ்கரை வெல்லும் அந்த நாள் எந்நாளோ...
என்று நிறைவேறும் ஆஸ்கர் கனவு? தொடரும் ஏமாற்றம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 4-ஆம் தேதி 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. நிச்சயம் இந்தப் பட்டியலில் இந்தியப் படம் இடம்பெறாது என்று தெரிந்தாலும் இந்தமுறையும் கடைசிக்கட்டத்தை அடையாமல் தோற்றிருப்பது வேதனையை அதிகமாக்குகிறது. ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படங்களின்  பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம்பிடித்து கடைசியில் ஆஸ்கரை வெல்லும் அந்த நாள் எந்நாளோ என்கிற ஏக்கம் இன்னொருமுறை உருவாகியிருக்கிறது. 

உலக அளவில் சிறந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். அந்தத் திரைப்படங்களை ஆஸ்கர் குழுவினர் ஆராய்ந்து, அவற்றை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.

ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்காக இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 திரைப்படங்களுள் நியூட்டன் என்கிற ஹிந்தித் திரைப்படம் தேர்வானது. ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) அனுப்பி வைத்தது. நியூட்டன், இந்திய அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்ட ஒரு படம்.

நியூட்டன் படம், 2001-ல் வெளிவந்த சீக்ரெட் பாலெட் என்கிற இரானிய படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. எனவே இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டுகள் அடுத்ததாக எழுந்தன. இதனால் நியூட்டன் பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் இரானியப் படத்தின் தயாரிப்பாளர் மார்கோ மியூல்லர் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டினார். இயக்குநர் அனுராக் காஷ்யப், மியூல்லரிடம் நியூட்டன் படத்தினைப் பார்க்கச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதன் அடிப்படையில் படத்தைப் பார்த்த மியூல்லர் அனுராக் காஷ்யப்பிடம் தெரிவித்ததாவது: நல்ல படம். கதையில் ஒற்றுமை தென்பட்டாலும் எங்களுடைய சீக்ரெட் பாலெட் படத்தை காப்பி அடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவருடைய இந்தப் பதில் கறையைச் சரி செய்தது. எனினும் ஆஸ்கரில் நியூட்டனுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.  

கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கான பட்டியலைத் தேர்வு செய்வதற்காக 9 படங்கள் தேர்வாகின. அதிலிருந்து 5 படங்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளன (A Fantastic Woman, The Insult, Loveless, On Body and Soul, The Square). அந்த 9 படங்களில் ஒன்றாகவே இந்தியப் படமான நியூட்டன் தேர்வாகவில்லை. எனவே ஆஸ்கர் பெறும் கனவு இந்த வருடமும் நிறைவேறவில்லை.

கடைசியாக 2001-ல் அமீர் கானின் லகான் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு முன்பு 1958-ல் மதர் இந்தியாவும் 1989-ல் சலாம் பாம்பேவும் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இந்த மூன்றும் பரிந்துரைக்கப்பட்ட 5 படங்களில் ஒன்றாக இருந்தாலும் இதுவரை ஒரு இந்தியப் படம் கூட ஆஸ்கர் வென்றதில்லை. 

ஒவ்வொருமுறையும் இது நினைவில் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலேயே இந்தியப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவதாகவே விளக்கம் அளிக்கப்படுகிறது. எனினும் கடந்த 16 வருடங்களாக ஓர் இந்தியப் படம் கூட டாப் 5 பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை என்பது உண்மையிலேயே வேதனையளிக்கும் விஷயம். பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தியப் படங்கள் பங்கேற்றாலும் விருதுகள் பெற்றாலும் ஆஸ்கர் கனவு என்பது எட்டாத உயரமாகவே உள்ளது. வானத்திலிருந்து குதித்து வருவது போல முதல்முறையாக ஆஸ்கரை வெல்லக்கூடிய இந்திய இயக்குநர் யாராக இருப்பார் என்கிற கேள்வியும் ஆர்வமும் வருடாவருடம் ஏற்படுகின்றன. நம் வாழ்நாளில் அக்காட்சியைக் காண சந்தர்ப்பம் கிடைக்குமா இல்லை, வருடாவருடம் இந்த ஏமாற்றம் தொடருமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com