இன்றைய ஊடகங்களின் மனசாட்சியை உலுக்கும் ஸ்பீல்பெர்க்கின் ‘தி போஸ்ட்’ ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்

உலகில் வெகு சில படங்களே பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகின்றன.  வசூலை வாரிக்குவித்த
இன்றைய ஊடகங்களின் மனசாட்சியை உலுக்கும் ஸ்பீல்பெர்க்கின் ‘தி போஸ்ட்’ ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்

பத்திரிகை தினம் பற்றி வெளியான பத்திரிகை செய்தியொன்று இவ்வாறு கூறுகிறது, 'மனிதர்களின் உணர்வுகளையும், சிந்தனைகளையும் பன்மடங்காக பெருக்குவதன் மூலம் துடிப்புமிக்க சமூகமாக நாம் உருவாகிறோம். எண்ணிலடங்கா பெண்கள் மற்றும் ஆண்களின் அயராத உழைப்பால் பத்திரிகை சுதந்திரம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியிருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் ஆதரித்து சமூக வலைதளங்களில் எழுதி வரும் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் நாம் பாராட்ட வேண்டும் என்று அவரது பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது'. ஆனால் உண்மையில் பத்திரிகை சுதந்திரம் என்பது இந்தக் காலகட்டத்தில் எந்தளவுக்கு சாத்தியம் என்பதை சமீபத்தில் பார்த்த படமொன்றின் மூலம் ஆராய முயல்கிறேன்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஹாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை வெகு அழுத்தமாக பதித்தவர். ஸ்பீல்பெர்க் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் 1946-ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை அமோல்ட் ஸ்பீல்பெரி பொறியாளராகப் பணிபுரிந்தார். தாய் லேத் ஆல்டர் பியானோ இசைக் கலைஞர். சிறு வயதிலிருந்தே ஸ்பீல்பெர்க்குக்கு திரைப்படங்களின் மீது ஈர்ப்பிருந்தது. அவரது அப்பா பரிசளித்த கேமராவைப் பயன்படுத்தி தானே எழுதி ஒரு குறும்படத்தை இயக்கினார். அதை தன் நண்பர்களுக்கு அந்த வயதிலே 'படம்' காட்டியுள்ளார்.  அந்தப் படம் அவருக்கு பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்ததுடன் தன்னம்பிக்கையை விளைத்தது. அவரது பெற்றோர்கள் பிரிந்துவிட, தந்தையுடன் கலிஃபோர்னியாவுக்குச் சென்றார் ஸ்பீல்பெர்க். 

பெற்றோர்களின் பிரிவு, திரைப்படங்கள் மீதான கனவு, அன்புக்கு ஏங்கும் மனம் என பலவிதமாக அலைக்கழிக்கப்பட்ட ஸ்பீல்பெர்க்குக்கு படிப்பின்  மீது நாட்டம் செல்லவில்லை. தன் களம் எதுவென்று மிகத் தெளிவுடன் திரைத்துறையைத் தேர்ந்தெடுத்து டூயல் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் சுகர்லெண்ட் எக்ஸ்பிரஸ், ஜாஸ், இன்டியான ஜோன்ஸ் டெம்பிள் டூம்  போன்ற படங்களை இயக்கி, திறமையானவர் என்று மக்கள் மனத்தில் இடம் பிடித்தார். குழந்தைகளுக்கு கதை சொல்வதில் ஸ்பீல்பெர்க் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். குழந்தைகளின் மனம் கவரும் வகையில் ஈடி, BFG , ஜுராஸிக் பார்க் ஆகிய படங்களை இயக்கினார்.

அதன் பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க செய்த படங்களான இந்தியானா ஜோன்ஸ், சேவிங் ப்ரைவேட் ரயான், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், ஜுராஸ்ஸிக் பார்க்,  உள்ளிட்ட படங்கள் சர்வதேச அளவில் பணமும் புகழும் அவருக்கு ஈட்டித் தந்தன. வணிகரீதியாக அவர் பெரும் வெற்றி பெற்றவராக இருந்தாலும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்த ஷிண்லர்ஸ் லிஸ்ட் பலரின் மனத்தை உருக்கிய படம். இரண்டாம் உலகப்போரில் ஆயிரக்கணக்கான யூதர்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரு ஜெர்மானிய வியாபாரியை மையமாக வைத்து போரின் கொடூரங்களையும், போரினால் யூதர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பும், எஞ்சியவர்களின் மீட்சியையும் நுட்பமாக பதிவு செய்திருப்பார். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. சர்வதேச அரங்கில் மிக முக்கியமான விருதான ஆஸ்கர் விருதை ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்துக்காக பெற்றார் ஸ்பீல்பெர்க். உலகத் திரை ஆர்வலகர்களால் அன்று முதல் இன்று வரை பெரிதும் கொண்டாடப்படும் இயக்குநரானார். கலையம்சங்கள் உடைய வணிகத் திரைப்படங்களை இயக்க முடியும் என்பதை உணர்த்தியவர் ஸ்பீல்பெர்க். கடந்த ஆண்டு வெளியான தி போஸ்ட் என்ற திரைப்படம்மும் அதே வகையில் திரை ரசிகர்கள் பெரிதும் விரும்பும் ஒரு படமாகியுள்ளது.

அந்த வரிசையில் வந்து, நம்மை வசீகரிக்கும் ஒரு படம்தான் தி போஸ்ட்.   அறுபதுகளின் இறுதியில், அமெரிக்க பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்ட் தினசரியில் நடந்த ஒரு கதைதான் இந்த படம்.  கதை சுவராஸ்யமானது என்பதில் சந்தேகம் இல்லை.  பலருக்கு தெரிந்த கதை. ஆனால் ஏதோ தெரியாத ஒரு கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் திறனும் அபார சினிமா அறிவும் பெற்றவர்தான்.

அமெரிக்கா வியட்னாம் போர் பற்றி பல திரைப்படங்கள் வந்துவிட்டாலும் ஸ்பீல்பெர்க் எடுத்த களம் வித்யாசமானது. அறுபதுகளில் ஊடகத் துறையின் நிலையும், போர் நிகழும் காலங்களில் அவர்களது நிலைப்பாடுகளையும் வெகு நேர்த்தியாக பதிவு செய்துள்ளது தி போஸ்ட். அந்தக் காலகட்டத்தில் (1960-ம் ஆண்டு) இப்போதிருக்கும் நவீன வசதிகள் கிடையாது. அச்சுக்களை கோர்த்து, நாளிதழ்களை உருவாக்கிய காலகட்டம் அது.  கணினி போன்றவை கண்டுபிடிக்காத அந்த காலத்தில் அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் தங்களுக்கிடையே போட்டி போட்யிட்டு அரசியல் செய்திகளை வெளியிட்டு வந்தனர். அரசாங்கத்தின் அடிவருடிகளாகச் செயல்படாமல் தன்னிச்சையாக உண்மையும் நேர்மையுமாக பத்திரிகை தர்மத்தை கடைபிடித்தன சில ஊடகங்கள். அவை மக்களின் மனசாட்சியாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுப்பவையாகவும் விளங்கின. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் இருவருக்குமிடையே நடந்த போட்டியையும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சமூக பிரச்னையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் தி போஸ்ட்.

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் பென் ப்ராட்லீ (டாம் ஹாங்ஸ்) தொலைபேசியில் வெள்ளை மாளிகை அலுவலருடன் பேசுகிறார். அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகைக்கு வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர்கள் வரக் கூடாது என்பது பற்றிய விவாதம் அது. அதிபர்  நிக்ஸனின் மகள் திருமண புகைப்படங்களை எடுப்பது பற்றிய விவாதம் அது.

அச்சமயத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை கடுமையான நிதிப் பிரச்னையை சந்தித்து வருகிறது. கேத்ரீன் க்ரஹாம் (மெரில் ஸ்ட்ரீப்) குடும்பப் பத்திரிகையான அது, அவரது தந்தைக்கும் பிறகு கணவர் பிலிப்பிடம் கைமாறுகிறது. அதை நிர்வகித்து வருகையில் எதிர்பாராதவிதமாக அவர் தற்கொலை செய்துவிடுகிறார். பத்திரிகை கேத்ரீன் வசம் வரும் போது பண நெருக்கடியைச் சமாளிக்க தமது நீண்ட கால நம்பிக்கைக்குரிய பென்னிடம் அலோசனை பெறுகிறார். நிதி அலோசர்களிடமும் கலந்து பேசியபின் தனது நிறுவனத்தை பொது நிறுவனமாக்க முடிவு செய்து, பங்குதாரர்களை திரட்ட முடிவெடுக்கிறார்கள். வால்ஸ்ட்ரீட் பங்குச் சந்தைக்கு வாஷிங்டன் போஸ்ட் இவ்வாறு பயணம் செய்கிறது.

கேத்தரின் மிகுந்த செல்வாக்குடைய பத்திரிகை நிறுவனர் என்பதால் அவருக்கு பல உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் நட்பு இருந்தது. ராணுவ அமைச்சர் மெக்நமாரா கேத்ரினுக்கு நெருக்கமான நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் தன்னைப் பற்றிய சர்ச்சைகள் விரைவில் வரவிருக்கிறது என்று உளறிவிடுகிறார்.  கேத்தரின் இதை பென் ப்ராட்லீயிடம் கூற, ஏற்கனவே நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் நீல் ஷீகன் கடந்த சில மாதமாக எந்த கட்டுரையும் எழுதவில்லை என்பதால் ஏதோ ஒரு ஆய்வில் இருக்கிறார் என்பது உறுதியாக அந்த ஆய்வு எதுவென்று அவருக்கு புகைப்படலமாக விளங்குகிறது.  உலகப் புகழ்ப்பெற்ற ஊடகவியலாளரான நீல் ஷீகன் தற்போது என்ன செய்தியுடன் வெளிவரப் போகிறார் என்பதை அறியத் துடிக்கிறார் சக பத்திரிகையாளரான பென்.

தனது நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை ஒரு இளைஞனை அனுப்பி உளவறியப் பணிக்கிறார். அவன் நியூயார்க் டைம்ஸ் அலுவலகம் சென்று பரபரப்புடன் லிஃப்டில் ஏறிக் கொண்டிருக்கையில், ஆசிரியர் குழு விவாதிக்கும் சில விஷயங்கள் அவன் கவனத்தை கவர்கின்றன. அது அன்றைய தலைப்புச் செய்திக்காக நீலுக்காக ஒரு பத்தி விடப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் பென் ப்ராட்லீயிடம் தெரிவிக்கிறான். அதிகாலையில் ஓடோடிச் சென்று அந்த முதல் செய்தித்தாளை வாங்கி வாஷிங்டன் ஆசிரியர் குழுவினர் படிக்கிறார்கள்.

நீல் எழுதியிருந்த கட்டுரை தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாகி அதி முக்கிய செய்தியாகவும் இடம் பெற்றிருந்தது. அவர் 'பெண்டகன் பேப்பர்ஸ்' என்றழைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட்டிருந்தார். அமெரிக்கா வியட்நாம் மீது படையெடுத்தது, குறித்து அமெரிக்க அரசு நடத்திய ஆய்வறிக்கைதான் பெண்டகன் பேப்பர்ஸ்.  1950-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வியட்நாமில் உள்ள ஹோசிமின்னின் கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்தத் துடித்தது. எப்பாடுபட்டாவது கம்யூனிசத்தை வீழ்த்த வேண்டும் என்று தந்திரமாக திட்டமிட்டு, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு ரகசியமாக ஆயுதங்களை வழங்கியது. வல்லரசாக தன்னை நிறுவ அமெரிக்க அரசு எதற்கும் தயாராகவே இருந்தது. வியட்நாமில் கலவரத்தை பல காலமாக தூண்டி, அவ்வப்போது வெடிக்கச் செய்தது. ஆரம்பத்தில் நேரடியாக போரில் இறங்காவிடினும், ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சியளிக்க ராணுவ அதிகாரிகளை  நியமித்தது.

பயிற்சிக்குப் பின், அமெரிக்கா வியட்நாமுடன் நேரடிப் போரில் இறங்கியது.  ஆனால் எதிர்பாராதவிதமாக அமெரிக்கா நினைத்ததை சாதிக்க முடியாமல் தவித்தது. பல்லாயிரணம் அமேரிக்க போர் வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் உயிர் இழந்தனர். வியட்னாம் வீரர்களின் கொரில்லா போர்முறையை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்க வீரர்கள் பின்னடையத் தொடங்கினர்.  அமெரிக்கா விட்டுக் கொடுக்க முடியாது என்ற முழக்கத்துடன் சிவிலியன் என்றும் பாராமல் மக்கள் குடியிருப்பான கிராமப் பகுதிகளில் நேபாம் எனப்படும் தீக்குண்டுகளை வீசியும், காடுகளில் பதுங்கியிருக்கும் வியட்நாம் வீரகளைக் கொன்றொழிக்க மரங்களின் இலைகள் உதிரும் வகையில், ஏஜென்ட் ஆரஞ்ச் போன்ற ரசாயன குண்டுகளை வீசி கொடூரமாக போர் புரிந்தது. வியட்னாம் வீரர்கள் அதனையும் சமாளித்து துணிவுடன் போராடினார்கள். கிட்டத்தட்ட அறுபதாயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஆனால் பத்திரிகைகள் வாயிலாக அமெரிக்கா தாங்கள்தான் போரில் வெற்றி பெறுவோம் என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை தந்து வந்தது. போர் நிலவரத்தை நேரில் பார்த்தறியாத பத்திரிகையாளர்கள் ராணுவம் தரும் செய்திகளை உண்மையென நம்பாமல், கள ஆய்வு செய்து சில பத்திரிகையாளர்கள் போரின் கொடூரத்தை நேர்மையாகப் பதிவு செய்தார்கள்.

உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கையில் அமெரிக்க ராணுவ அமைச்சர் மெக்நமாரா தலைமையில், அமெரிக்க வியட்நாம் போர் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு ஒரு அறிக்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜான்சன், ராணுவ அமைச்சர் மெக்நமாரா, மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரி டேனியல் எல்ஸ்பர்க் ஆகியோர் தனி விமானத்தில் பயணம் செய்கின்றனர்.. அப்போது டானி எல்ஸ்பர்கை அழைத்த மெக்நமாரா, அதிபர் ஜான்சன் முன்னிலையில், இந்தப் போரைப் பற்றி அவரது கருத்தைக் கேட்க, டானி எல்ஸ்பர்க் தற்போது வரை நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார். மெக்நமாராவும் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் தான் சொல்லி வருவதாக சலித்துக் கொள்கிறார். இந்தப் போரில் தோல்வியைத் தான் தழுவி வருகிறோம் என்கிறார். ஆனால்  விமானம் தரை இறங்கியதும், ராணுவ அமைச்சர் மெக்நமாரா பத்திரிகையாளர்களிடம் அமெரிக்கா வியட்நாம் போரில், பெரும் வெற்றியை நெருங்கி வருகிறது என்று என்று பேட்டியளிக்கிறார்.

அவரது தலைகீழ் வாதம் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்கிறார் எல்ஸ்பெர்க். தனது அலுவலகம் சென்று, மெக்நமாராவின் ஆய்வறிக்கைகளை  திருடி இரவோடு இரவாக நகலெடுக்கிறார்.  மெக்நமாரா அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி,  தற்போதைய அதிபர் நிக்சனுக்கு முன்னர் பதவியிலிருந்த அதிபர்களான ஜான்சன், கென்னடி ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், வியட்னாம் மீது போர் தொடுத்தால், அமெரிக்கா தோற்றுவிடும் என்ற உண்மை முகத்தில் அடித்தாற் போல அறிக்கைகளாக புலப்படுகின்றன.  அந்த அறிக்கைகளில் இறுதி முடிவாக, அமெரிக்கா வியட்நாமுடனான போரை தொடர்ந்து நடத்துவதற்கான காரணம், வெற்று கெளரவம் மட்டுமே என்றும் அடிக்குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த அறிக்கையின் நகல்களின் ஒரு பகுதிதான், நியூயார்க் டைம்ஸ் தலைமைச் செய்தியாளர் நீல் ஷீகமிடம் ஒப்படைப்படுக்கிறது. அதைத்தான் அன்று தலைப்புச் செய்தியாக அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். 

இச்செய்தியை பார்த்த, வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் பென் ப்ராட்லீ பதற்றம் அடைகிறார். தன்னுடைய பத்திரிகை இதைச் செய்யத் தவறிவிட்டதே. அதுவும் இக்கட்டான இந்த நிலையில் தாங்கள் அதைச் செய்திருந்தால், நிச்சயம் நிமிர்ந்திருக்க முடியும் என நினைக்கிறார். அவரது சக பத்திரிகையாளரான பென் பாக்திக்கியான் என்வரிடம், அந்த ஆவணங்களில் வெளியாகாமல் இருக்கும் பகுதிகளை கண்டுபிடித்துத் தருமாரு எரிச்சலுடன் கூறுகிறார். மிகவும் பரபரப்பான மனநிலையில் நிறுவனர் கேத்ரீனை சந்திக்கிறார் பென்.

அந்தச் சந்திப்புக்குக் காரணம் மெக்நமாரா கேத்தரீனின் நண்பர், நிச்சயம்  கேத்தரீன் கேட்டுக் கொண்டால் அறிக்கையின் நகலை தரலாம் என்று நினைக்கிறார்.   ஆனால் கேத்தரின் இதற்கு ஒப்பவில்லை. நட்பை பயன்படுத்தி, அரசாங்க ரகசியத்தை எப்படி கேட்க முடியும், அப்படியே கேட்டாலும அதைத் எப்படி தருவார் எனக் கேட்க, பென் மீண்டும் வலியுறுத்துகிறார். பென்னிடம் தன் கோபத்தை வெளிப்படுத்திய கேத்தரீன் இறுதியில் மெக்நமாராவை சந்திக்க முடிவு செய்கிறார்.

இந்நிலையில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த நிக்சனையும், வெள்ளை மாளிகையையும், நியூயார்க் செய்திக் கட்டுரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.  நாட்டின் முக்கியமான ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக அரசு வழக்கு பதிவு செய்ததுடன், இதற்கு மேலும் அத்தகைய செய்திகளை வெளியிடக் கூடாது என்றும் தடை உத்திரவு போட்டது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் கட்டுபட்டாத  நியூயார்க் டைம்ஸ் தொடர்ந்து வெளியிடுவோம் என்று நிலைப்பாடு எடுக்கிறது. இதனை எதிர்த்த நிக்சன் தரப்பு, உடனடியாக நீதிமன்றத்தில் நியூயார்க் டைம்ஸ் மெக்னமாரா அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவினைப் பெறுகிறது.  நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மேல் முறையீடு செய்கிறது. இந்நிலையில், தன் பத்திரிகை ஆசிரியரான பென் பிராட்லீக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பென் பாக்திக்யான், அந்த அறிக்கைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பிய எல்ஸ்பர்கை கண்டுபிடிக்க முயல்கிறார். பல தொலைபேசி அழைப்புக்குப் பிறகு அவரை சந்திக்கிறார். எல்ஸ்பர்க், நியூயார்க் டைம்ஸிடம் கொடுத்தது ஒரு சிறிய பகுதியைத் தான். தற்போது அவர் வசம் கிட்டத்தட்ட எட்டாயிரம் பக்கங்களை உள்ளடக்கிய முழுதான அறிக்கை, மொத்தமாக 47 கோப்புகளாக உள்ளது. அதை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளிக்க முடிவு செய்த எல்ஸ்பெர்க் பென்னிடம் வைக்கும் ஒரே கோரிக்கை அவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி பதிப்பிக்க வேண்டும் என்பதே. எல்ஸ்பர்க் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை அவருக்குக் கிடைக்கும். மறைந்து வாழும் அவர் அமெரிக்க ஏதோபத்தியாயத்தை எதிர்க்கும் நேர்மையாளராக இருப்பதால் பத்திரிகையாளர்களின் பேருதவியை நாடுகிறார். அதன் பொருட்டே அமெரிக்காவின் இரு பெரிய பத்திரிகை நிறுவனங்களுக்கும் அந்த அறிக்கைகளை தன் உயிரைப் பணயம் வைத்து ஒப்படைக்கிறார்.

துணை ஆசிரியர் பாக்திக்யான், அவருக்கு வாக்களித்து ஆவணங்களை பென் ப்ராட்லீயின் வீட்டுக்கு எடுத்து வருகிறார். அறை முழுவதும் தாள்களை வைத்து எதில் தொடங்குவது எப்படி கட்டுரையை எழுதுவது என வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு அந்த நள்ளிரவில் பரபரப்பாக பக்கங்களைப் படித்து கூடுமானவரை முக்கிய தகவல்களைத் திரட்டுகிறது. அவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டு, கேத்தரீனை சந்திக்க விரைகிறார் பென்.  கேத்தரீனுடைய பிறந்தநாளான அன்று மெக்நமாரா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளும் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அங்கு கூடியிருந்தனர். கேத்தரீனை தனி அறைக்கு அழைத்து அவரிடம் முக்கிய ஆவணங்கள் கிடைத்த விபரத்தை கூறுகிறார் பென்.

கேத்தரீன் பிறந்த நாள் விழாவிலிருந்து கிளம்பி நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பென்னிடம் கூறி அனைவரையும் வரவழைக்கிறார். ஆனால் அவர்கள் அந்த அறிக்கையை பிரசுரித்தால் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் பத்திரிகை என தண்டனை அளிப்பார்கள். அதிலிருந்து மீள முடியாது எனவே அதனை பதிப்பிக்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.  மேலும் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட வேண்டிய நெருக்கடியான நிலையில், பத்திரிகை ஆசிரியர் சர்ச்சையில் சிக்கி சிறைக்கு சென்றால், பணம் முதலீடு செய்ய ஒருவரும் முன் வர மாட்டார்கள், எதற்கு தேவையில்லாத வேலை என்று ஒப்புதல் தர மறுக்கிறார்கள். அவர்களுடைய விவாதம் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டிருக்க நிறுவனத்தின்  வழக்கறிஞரை அழைக்கிறார்கள். அவரும் மற்ற பங்குதாரர்களைப் சொன்னதையே வழிமொழியவே நிலைமை இறுக்கமாகிறது.

அவர்கள் அனைவரின் வாயை அடைக்கும் விதமாக கேத்தரீன் பதிப்பிக்கலாம் என்று சொல்லிவிட்டு, பென்னிடம் அந்த அறிக்கையைப் பதிப்பிக்கலாம் என்று கூறுகிறார். தொடர்ந்து வழக்கறிஞர் பென்னிடம் விவாதம் செய்கிறார். அச்சுக்கு செல்ல சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் கட்டுரை பிழை திருத்தம் செய்யப்பட்டு, மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யப்படுகிறது. ஒருவழியாக அந்தக் கட்டுரை அச்சில் ஏறுகிறது. இதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டதா, நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது, நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் எதிர் எதிர் அணியில் இருந்தாலும், பத்திரிகை தர்மத்தைக் கடைபிடிக்க, உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல செயல்பட்ட விதம் காலத்தைத் தாண்டிய சரித்திரம். சத்தியம் ஜெயிக்கும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் தருணம் அது. பத்திரிகை சுதந்திரம் பற்றிய தீர்ப்பை நீதிபதிகளுள் ஒருவரின் அறிக்கையை வாஷிங்டன் பத்திரிகையாளர் தொலைபேசியில் கேட்டு சொல்லும் காட்சியானது மனத்தை நெகிழச் செய்துவிடும். 

உலக சமாதானம் என்ற போர்வையிலும், உதவி செய்கிறேன் என்று கைகுலுக்கும் நோக்கிலும் அமெரிக்காவின் சதித் திட்டங்களை அவ்வப்போது  உலகறியச் செய்வது ஊடகங்கள் தான். தங்களை வலுவான கரமாக முன் நிறுத்தும் அதே சமயத்தில் கீழான வகையில் அதை நிறைவேற்ற அவர்கள் கைகொள்ளும் முயற்சி மனசாட்சி உள்ள ஒருவரும் ஒப்புக் கொள்ள முடியாதது. இது அமெரிக்கா மட்டுமல்லாமல் அதிகாரத்தை மட்டுமே விரும்பும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் பொருந்தும். நம் நாட்டில் உள்ள பத்திரிக்கைகளின் நிலைமையையும், இங்கு செயல்படும்(?) பத்திரிக்கை சுதந்திரத்தையும், ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் அத்துமீறல்கள், அடக்குமுறைகள், சமூக அவலங்களை கேள்விக்குட்படுத்தியவ்ரகளை  கொலை செய்வதும், ஆவணப்படுத்தியவர்களை இருட்டடிப்பு செய்தும், பத்திரிக்கையாளர்களை சுயவிருப்பத்திற்காக பகடைக் காய்களாகவும், துருப்புச் சீட்டாகவும் பயன்படுத்துவதும், ஊடகங்களை அச்சுறுத்தி கைப்பாவையாக்கி வைத்தும், அரசின் குரலே ஊடகக் குரலாகவும் மடை மாற்றம் செய்தும், எதிர்க்கத் துணியும் ஊடகங்களை அழித்தொழித்தும், பல்வேறு அவதூறு வழக்குகளை பதிவு  செய்தும் அடக்கியாள்கிறது பல நாடுகளின் அரசாங்கங்கள். அதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. இது காலம்தோறும் நடந்தேறி வருவதுதான். ஆட்சிகள் மாறும் ஆனால் பாசிஸ்ட் அரசாங்க நிலைப்பாடுகளில் மாற்றமிருக்காது. அரசியல் எனும் போர்வையில் பயங்கரவாதம் கையோங்கியிருக்க, அதன் கோரப் பிடியில் நாடும் பத்திரிக்கைகளும் சிக்கி விட்டன.

இந்தப் படத்தில் நடித்த அனைவரும் மிகையற்ற நடிப்பால் படத்தை மிகவும் ஒன்றிப்  பார்க்க வைத்துள்ளனர். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில்  ஸ்பீல்பெர்க் பதிவு செய்ய விரும்பியது பத்திரிகைகளின் கடமையைத்தான். உண்மையை ஒளிக்காமல் மறைக்காமல், எவ்வித அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக தன்னிச்சையாக மக்களுக்கு தகவல்களை அளிக்க வேண்டும் என்பதே ஊடகத்தின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும். ஊடகம் சீரழிவை நோக்கி திசை மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தி போஸ்ட் மிக முக்கியமான ஒரு படம். இது இன்றைய ஊடகங்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் என்பது உண்மை.

இந்தியாவில் சுதந்திர காலகட்டத்தில் பத்திரிகைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்கியது. சுதந்திர இந்தியாவிலும், அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்து பல ஊடகங்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டின. ஆனால் காலப்போக்கில் அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகளிடம் அடங்கிவிட்டது. எழுத வேண்டிய விஷயங்களைப் புறம் தள்ளி, தேவையற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்தும், வர்த்தகம் மற்றும் விளம்பரங்களில் சிக்கி வியாபார நோக்குடன் செயல்படுவது வேதனைக்குரியது. பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் உண்மையாக இருப்பேன் என்று முடிவு செய்து, தங்களது நிலைப்பாடுகளை, நேர்மையான பதிவுகளை மாற்று ஊடகங்களான சமூக வலைத்தளங்களில் அரங்கேற்றி அரசுக்கும் அநீதி செய்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட துணிய வேண்டும். ஆனால் இன்றைய தேதியில் பல ஊடகவியலாளர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையை மறைப்பதற்கு பிரயத்தனப்பட்டு, எரியும் பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப கேலிக் கூத்தான விஷயங்களைச் செய்து வருகின்றனர். சர்க்கஸ் கோமாளிகளைப் போன்ற அவர்கள் எந்த ஆட்சியிலும் நெர்மையாளராக இருந்ததில்லை. பிழைப்புவாதம், அச்சுறுத்தல், சுயநலம் போன்றவற்றில் சிக்குண்டு உண்மையான ஒரு பத்திரிகையாளரையும் தலைகுனியச் செய்து வருகிறார்கள்.  அஞ்சு வாழ நினைப்பவர்கள் வேறு பணிகளுக்கு செல்லலாம் தானே? ஏன் பத்திரிகை துறைக்கு வர வேண்டும்? காரணம் அண்டிப் பிழைக்கும் இந்த குணமுள்ளவர்கள் இதில் கிடைக்கும் பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை சொந்த நலனுக்கு பயன்படுத்தி வருவதால் சமூகத்தின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய ஊடகம் நிற்கக் கூட நிழலின்றி உடைந்து சிதறி வருகிறது. இன்னும் சில நேர்மையான ஊடகங்கள் இருந்து வருவதால் தான், மாற்றுக் குரல்கள் எழுந்தபடி இருப்பதால்தான் இத்தகைய பொய்யான ஊடகவியாலர்கள் சிறிதேனும் அஞ்சுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாளிகள் அல்ல. பெரும்பான்மையான மக்களுக்கு ஊடக குற்றவியல்கள் தெரிந்தே இருக்கிறது. பிரபல ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடும் முன்னால் ட்விட்டரில் அச்செய்தி வெளியாகிறது. முகநூலில் பல விவாதங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. அதன் விளைவே சென்னையில் மெரினாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மெழுகுவர்த்தியாக வெளிச்சம் காட்டியது. ஒடுக்கப்படுவோர் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக உருமாறி வருகின்றனர் எனபதே இக்காலத்தின் மாற்றம். ஊடகங்கள் இப்போதுகூட விழிப்புணர்வு பெறாவிட்டால், மக்கள் அதனை கடுமையாக புறக்கணிப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com