பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் கல்பனா லஜ்மி காலமானார்!

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் கல்பனா லஜ்மி காலமானார்!

திரையில் பெண்கள் அழகுப் பதுமைகளாகவும் காட்சி நுகர் பொருள்களாக மட்டுமே பங்கேற்று வருகிறார்கள்.

திரையில் பெண்கள் அழகுப் பதுமைகளாகவும் காட்சி நுகர் பொருள்களாக மட்டுமே பங்கேற்று வருகிறார்கள். இன்றளவும் அந்த நிலை மாறியிருக்கவில்லை. திரையின் பின் ஜெயித்த பெண்கள் உலக அளவில் கூட குறைவுதான். மற்ற துறைகளை விட சினிமா பெண்களுக்கு பல விதத்திலும் சவாலான ஒரு துறை. அதில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கு மிகப் பெரிய சக்தி தேவைப்படுகிறது. அவ்வகையில் பாலிவுட் என்று அறியப்படுகின்ற ஹிந்தி திரையுலகில் கல்பனா லஜ்மி தவிர்க்க முடியாத பெண் இயக்குனர். கல்பனா லஜ்மியின் அம்மா லலிதா லஜ்மி பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். அவரும் ஒரு நடிகை. 1978-ல் ஆரம்பித்த கல்பனாவின் திரைப்பயணம் ஆழமான தடத்தைப் பதித்தது.

தனித்துவமான கலைப் படங்களை தயாரித்து இயக்கி தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை தக்க வைத்திருந்தவர் கல்பனா. பெண்ணியம் சார்ந்த கருத்துகளையும், வசனங்களையும் திரைப்படங்களில் எந்த சமரசமும் இன்றி அழுத்தமாகக் கூறிய இயக்குநர்களில் கல்பனா லஜ்மி குறிப்பிடத்தக்கவர். திரைத் துறையில் பெண்கள் அதிகம் கோலோச்சாத காலத்திலேயே தனக்கென தனி முத்திரை பதித்தவர். அதிரடி காட்சிகளும், ஆக்ரோஷ வசனங்களும் வெண் திரையை ஆக்கிரமித்திருந்த சூழலில், யதார்த்தங்களை மட்டுமே தனது படைப்புலகமாக கட்டமைத்துக் கொண்டவர் கல்பனா லஜ்மி.

1954-ம் ஆண்டு பிறந்த கல்பனா இளம் வயதிலிருந்து நாடகம் மற்றும் சினிமா மீது ஈடுபாடு கொண்டவர். புகழ்ப் பெற்ற இயக்குனர் ஷியாம் பெனகலிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் முதலில் சில டாக்குமெண்ட்ரி படங்கள் இயக்கினார். (D.G.Movie Pioneer – 1978, A work study in Tea Plucking – 1979, Along the Brahmaputra 1979) 1986-ல் ‘ஏக் பால்’ (ஒரு நிமிடம்) என்ற தனது முதல் திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். ஷபானா ஆஸ்மி, நஸ்ரூதின் ஷா நடித்துள்ள இத்திரைப்படம் சர்ச்சைக்கு உரியதாக மட்டுமன்றி தேசிய விருதும் பெற்றது.

சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு 1993-ல் டிம்பிள் கபாடியாவின் மிகச் சிறந்த நடிப்பில் கல்பனா இயக்கிய ’ருடாலி’ மிகப் பெரிய வெற்றியடைந்தது. கிட்டத்தட்ட முப்பது தேசிய மற்றும் உலக விருதுகளை அள்ளிக் குவித்த திரைப்படம் இது. சிறந்த வெளிநாட்டுப் படமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

தபு, கிரண் கேர் மற்றும் ஆரிப் சக்கரியாவை வைத்து 1997 தனது அடுத்த திரைப்படமான தர்மியானை இயக்கினார் கல்பனா. கலைத்தன்மை மாற்றுக் குறையாத கமர்ஷியல் ஹிட்டான அத்திரைப்படம் கல்பனாவிற்கு பெரும் புகழை அளித்தது. கிரண் கேர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

கல்பனாவின் அடுத்த திரைப்படமான தமான், சாயாஜி சிண்டே மற்றும் ரவீனா நடித்து வெளிவந்தது. திருமண உறவிற்குள் வன்முறையை நுட்பமாக பதிவு செய்த படமிது. கல்பனா லாஜ்மியின் ராசி தேசிய விருதுகளினால் ஆனது போலும். தமானில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ரவீனா தாண்டன் பெற்றார். 

ஐஸ்வர்யா ராய்க்காக அவர் எழுதி வைத்திருந்த அரசியல் திரைக்கதை ‘சிங்ஹஸன்’ தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கல்பனாவால் திரையாக்கம் செய்ய முடியவில்லை. தன்னுடைய தூரத்து உறவினரான தீபிகா படுகோனை வைத்து இப்படத்தை எடுக்க நினைத்தார் கல்பனா. ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோதனைகளால் அதை அவரால் எடுக்கமுடியாமல் போனது.

2003 ஆம் ஆண்டு கல்பனா இயக்கிய ’கியோன்’ என்ற திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் அதனால் சோர்வடையாத கல்பனா 2006-ல் தனது அடுத்த படமான சிங்காரியை இயக்கினார். சுஷ்மிதா சென் நடித்த அப்படம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பெரும் சவாலாக இருப்பது குடும்ப வாழ்க்கை. இரண்டையும் சமன் செய்ய தனித் திறமையும் மிகப் பெரிய பொறுமையும் வேண்டும். கல்பனா தன்னுடைய பதினேழு வயதில் சந்தித்த ஒரு மனிதரின் மீது காதல் வயப்பட்டு அவருடனே வாழ்ந்து வந்தார். அவர் மிகச் சிறந்த பாடகர் மற்றும் பிரபலமான இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகா. அப்போது பூபனுக்கு 45 வயது. 38 ஆண்டுகள் தொடர்ந்து அவருடன் வாழ்ந்த கல்பனாவை தனது 80 வயதில் பூபன் திருமணம் செய்ய முடிவெடுத்தார். தன்னுடைய அன்பான காதலிக்கு மனைவி என்ற அங்கீகாரத்தை தான் இறக்கும் முன் குடுக்க நினைத்திருப்பார் பூபன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கல்பனா. தன்னைப் பொறுத்தவரை மனைவி என்பது வெறும் வார்த்தை, சமூகத்திற்கான ஒருவித அடையாளம் அவ்வளவுதான். ஆனால் எல்லாவற்றையும் கடந்து எங்கள் உறவில் புற விஷயங்களுக்கு அவசியம் இல்லை என்று ’மனைவி பதவி’யை மறுத்துவிட்டார்.மேலும் தனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. திருமண உறவை விட மேலதிக நம்பிக்கையும் மரியாதையும் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் அளித்துள்ள நிலையில் இது சாதாரண விஷயம் தான் என்று நினைத்தார் கல்பனா.

பூபனை முதன்முதலாக தன் மாமா ஆத்மா ராம் மூலமாக சந்தித்தார் கல்பனா. ஆரன்ஞ் நிற சட்டை அணிந்திருந்த அந்த ஒடிசலான உருவத்தைப் பார்த்ததும் கல்பனாவிற்கு பிடித்துப் போய்விட்டதாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் பழகிய பின் பூபனின் ஹசாரிக்காவின் மனதிற்குள்ளும் வீட்டினுள்ளும் புகுந்தார் கல்பனா லாஜ்மி. 38 வருட காலமாக ஒரே கூரையின் கீழ் ’லிவ்விங் டுகெதர்’. முறையில் வாழ்ந்து வந்த கல்பனாவின் வாழ்வு முறை அவருடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லை. பூபனின் குடும்பத்தாரும் இதை வரவேற்கவில்லை. இது சராசரி இந்திய மனப்பான்மை இதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. என் மனதின் உண்மையான விருப்பத்திற்கு செவி குடுத்தே இன்று வரை வாழ்ந்து வருகிறேன். திருமணம் செய்ய வற்புறுத்துவது, குழந்தைப் பெற்றுக் கொள்ள நிர்பந்திப்பது போன்றவற்றிலிருந்து தள்ளியே இருந்து வருகிறேன். எனக்குக் குடுக்கப்பட்ட வாழ்க்கையை எனக்குப் பிடித்த வகையில் வாழ்கிறேன். இதில் என்ன தவறு என்று வாழ்ந்து மறைந்தவர் கல்பனா.

கல்பனாவும் பூபனும் வெற்றிகரமாக 38 வருடம் ஒன்றாக வாழ்ந்தார்கள் அதற்கு காரணம் அவர்களுக்குள் பொஸஸிவ்னெஸ் இருந்ததில்லை. தனி மனித சுதந்திரத்தை மதித்தார்கள். பூபனின் வாழ்வில் பிற பெண்கள் இருந்தது போல கல்பனாவும் தனக்கு பிடித்த மற்றொருவரை சிறிது காலம் காதலித்தார். பூபனின் முன்னாள் மனைவி பிரியம்வதா அடிக்கடி போன் செய்து பூபனின் நலம் விசாரிப்பார் மும்பாயில் இருக்கும் இவர்கள் வீட்டிற்கும் அடிக்கடி வந்து செல்வார்.  பூபனின் வெற்றிக்கு 95% காரணம் கல்பனாதான். குடிகாரர். மேலும் கோபக்காரரான பூபனை சாந்தப்படுத்தி அவரை புகழின் படிக்கட்டுகளை மேன்மேலும் அடையச் செய்தார் கல்பனா. பூபனைப் பற்றி கூறும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டே பேசுவார், 'அவர் மிகவும் அன்பானவர் எங்கள் இருவருக்கும் பல சண்டைகள் வந்துள்ளன.ஆனால் அதையும் மீறி எங்களுடைய கெமிஸ்ட்ரியும் மாறாத அன்பும் எங்களை பிரிய விடாமல் ஒன்றாகவே வாழ வைத்திருக்கிறது’ என்றார் கல்பனா.

84 வயதான அந்த இசைமேதை பூபன் ஹசாரிகா உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்த போது, காதல் துணைவி கல்பனா அருகிலேயே இருந்து முழுக்க முழுக்க அவரை கவனித்துக் கொண்டார். இதனால் அவரால் படம் எடுக்க முடியவில்லை மற்ற வேலைகளை திறம்பட செய்ய முடியவில்லை. ஆனால் அது எல்லாம் தன்க்கு முக்கியமில்லை என்கிறார் கல்பனா பூபனை நான் பெரிதும் காதலிக்கிறேன். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் முக்கியமானது என்கிறார். எல்லாவற்றையும் கடந்த அன்பு இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. பாசிட்டிவ் பெண்னான கல்பனா சொல்கிறார் ‘இருளுக்குப் பின் நிச்சயம் ஒளி வரும். நான் ஒரு இருட்டான காலகட்டத்தை கடந்து மூன்று வருடமாக கடந்து வருகிறேன், என்னால் ஒரு படத்தைக் கூட அந்த நேரத்தில் இயக்க முடியவில்லை. ஆனால் வெளிச்சம் வெகு தூரத்தில் இல்லை. நிச்சயம் மீண்டு வருவேன். என்றார். பூபனின் மறைவிற்குப் பின் மனமொடிந்த நிலையில் இருந்த கல்பனா சில ஆண்டுகளில் உடல் நலிவுற்றார். 64 வயதான இவர், அம்பானி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிறுநீரகக் கோளாறு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 23.09.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

ஹிந்தி திரையுலகில் அழியாத் தடம் பதித்துள்ள கல்பனா லஜ்மியை அவரது ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவரது உடலுக்கு நடிகர்கள் சபானா ஆஸ்மி, ஹுமா குரேஷி, சோனி ரஸ்தான், இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் சார்பில் அந்த மாநில அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கல்பனா லஜ்மியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com