சரியான நேரம்; தவறான முடிவு

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததற்கு நாடு முழுவதும் பரவலான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததற்கு நாடு முழுவதும் பரவலான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. தங்களது பணப்புழக்கத்தில் குறைவு ஏற்பட்டாலும், தொழில்களில் நெருக்கடி உருவானபோதும், வங்கிகளில் கால்கடுக்க நிற்க நேரிட்ட நிலையிலும், பெருவாரியான மக்கள் அரசின் இந்த அதிரடி அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான யுத்தமாகவே மோடியின் நடவடிக்கையை மக்கள் கருதுவது பல கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது. அதேசமயம், பாஜகவின் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி அரசியல் நடத்த விழைகின்றன.
குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. காங்கிரஸின் தரம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், நெறிசார்ந்த அரசியல் நடத்தும் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடுதான் வருத்தமளிக்கிறது.
கருப்புப் பணத்துக்கு அதிக ரொக்கப் பணப் புழக்கமே காரணம். மின்னணுப் பணப் பரிமாற்றம் கருப்புப் பணத்தைக் கட்டுக்குள் வைக்கும் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. அந்த வகையில் மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது கட்டாயமாகவுள்ளது.
இந்தச் செயல்பாட்டை தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இடதுசாரிகள் வரவேற்றிருக்க வேண்டும்.
நாட்டிலுள்ள தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் தினக்கூலிகளாகவுமே உள்ளனர். அவர்களது எதிர்காலத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்நிலையில் அவர்களது ஊதியத்தை வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானால், அதன் காரணமாக அவர்களது தொழிலுக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
கட்டடத் தொழிலாளியோ, துப்புரவுத் தொழிலாளியோ, விவசாயக் கூலியோ யாராயினும், அவர்களின் பட்டியலை வேலை அளிப்பவர்கள் நிர்வகித்தாக வேண்டும். இது ஒருவகையில் அவர்களுக்கு பணிப் பாதுகாப்பையும் அளிக்கும்.
தவிர, எதிர்காலத்தில் அவர்களை தொழிற்சங்க இயக்கமாக்குவது எளிதாகவும் இருக்கும். பணி வருகைப் பதிவேடு, ஊதியப் பதிவேடு ஆகியவற்றைத் தொடர்ந்து, அனுபவ அடிப்படையில் ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும்.
ஆனால், குறுகிய அரசியல் லாபத்துக்காக, ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் மக்களிடையே நிலவும் சிரமத்தை அரசுக்கு எதிரான அதிருப்தியாக மாற்றும் முயற்சியில் இடதுசாரிக் கட்சிகள் இறங்கியுள்ளன. மேலும், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க இதை அரிய வாய்ப்பாக இடதுசாரி தலைவர்கள் கருதுகின்றனர்.
உண்மையில், கருப்புப் பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கிவைத்துள்ள பண முதலைகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை இடதுசாரிகள் ஆதரித்திருக்க வேண்டும். முதலாளித்துவத்துக்கு எதிரான போராளிகளாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் அவர்கள், ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக நின்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
வரலாற்று நிகழ்வுகளில் ஓர் அரசியல் கட்சி அல்லது இயக்கம் என்ன முடிவெடுக்கிறதோ, அதைப் பொருத்தே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் இடதுசாரிகள் பலமுறை தவறிழைத்திருக்கிறார்கள். இன்று பிராந்தியக் கட்சிகளை விட செல்வாக்கு குறைந்தவர்களாக அவர்கள் மாறியிருப்பதன் காரணம் அதுவே.
சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பது இந்திய இடதுசாரிகளுக்குப் புதிதல்ல. 1942-இல் நாடு முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டிருந்தபோது, ஜெர்மனியின் ஹிட்லரை பிரிட்டனும் ரஷியாவும் இணைந்து எதிர்த்தன. ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கெட்ட பெயரைச் சம்பாதித்தது.
அதேபோல, நாடு சுதந்திரம் பெற்றதை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த இனிய வேளையில் ஆயுதப் புரட்சிக்கு 1948-இல் அழைப்பு விடுத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் பி.டி.ரணதிவே. அதை பிரதமர் நேரு மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
1950-இல் ரணதிவே பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு நிலைமை சீரடைவதற்குள் கட்சி அடைந்த இழப்புகள் மிக அதிகம். சுதந்திர இந்தியாவில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தனது நம்பகத்தன்மையை இழக்க வித்திட்ட முதல் நிகழ்வு அது.
அடுத்து, 1962-இல் இந்திய- சீனப் போரின்போது, மக்கள் மனநிலைக்கு மாறாக சீனாவுக்கு ஆதரவாக தலைவர்கள் சிலர் குரல் கொடுத்ததால், கம்யூனிஸ்ட் கட்சியே இரண்டாக உடைந்தது. இன்றும் அந்தச் சிக்கல் நீடிக்கிறது.
1975-இல் நாட்டில் நெருக்கடிநிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தியபோது அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து பெரும் பிழை செய்தது.
அதேபோல, மதச்சார்பின்மையைக் காப்பதற்காக என்று காரணம் கூறி, கரைகாணா ஊழல்களில் திளைத்த மன்மோகன் சிங் அரசை 2004 முதல் 2009 வரை தாங்கிப் பிடித்து தவறு செய்தன இடதுசாரிக் கட்சிகள்.
2016-இல் நாடு முழுவதும் ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் ஆதரிக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்கிறார்கள் இடதுசாரிகள். ராஜாஜி கூறியதுபோல, "கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றை எதிர்க்கிறார்கள் என்றால், எதிர்க்கப்படுவது நல்லதாகவே இருக்கும்' என்பது உண்மைதான் போலிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com