நீர்நிலைகள் போனதெங்கே?

"நீரின்றி அமையாது உலகு', "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' போன்ற சொலவடைகள் நம்மிடையே உண்டு.

"நீரின்றி அமையாது உலகு', "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' போன்ற சொலவடைகள் நம்மிடையே உண்டு.
அருங்குளம், பெருங்குளம், பெரியகுளம், தல்லாகுளம், தெப்பகுளம், ஐயங்குளம் - இப்படிக் குளத்தால் பெயர் கொண்ட ஊர்கள் ஏராளம்.
"கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பர். இது கோயிலுக்காக சொல்லப்பட்டது மட்டுமல்ல, கோயில் இருந்தால் குளமிருக்கும். குளமிருந்தால் வளமிருக்கும். வளமிருக்கும் ஊரில்தான் மக்களின் நலமிருக்கும்.
இதனை நன்கு உணர்ந்தவர்கள் பல்லவர்கள். அதனால்தான் அவர்களால் மாபெரும் பேரரசை நிர்மானிக்க முடிந்
திருக்கிறது.
பல்லவர்கள் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லப்படும் வட தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் வெட்டிய ஏரிகளும், குளங்களும், அதற்கு நீர் செல்லும் வழியான வாய்க்கால்களும் கணக்கிலடங்காதவை.
காஞ்சிபுரம் ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படுவதே இதற்குச் சான்று. இந்த மாவட்டத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன.
ராச தடாகம், திரளய தடாகம், மகேந்திர தடாகம் (மகேந்திரவாடி ஏரி), சித்ர மேக தடாகம் (மாமண்டூர் ஏரி), வைரமேகத் தடாகம் (உத்தரமேரூர் ஏரி), பரமேஸ்வர தடாகம், மூன்றாம் நந்திவர்மன் நிர்மானித்த காவேரிப்பாக்கம் ஏரி, தாமல் ஏரி, மதுராந்தகம் ஏரி இப்படிப் பேரேரிகளும், அது நிரம்பி வழிந்தோடி நிரம்பும் சிற்றேரிகளும், குளங்களும் ஏராளம் ஏராளம்.
காவிரியில் எந்நேரம் நீர்வருவதைப்போல (இப்போது வருவதில்லை), வட தமிழ்நாட்டில் முக்கிய நதியான பாலாற்றில் எந்நேரமும் நீர் வரத்து இருக்காது. மழை பெய்தால், கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அதனால்தான் "பாலாறு எப்போதும் மணலாறு, தலைகீழாக நின்றாலும் தண்ணீர் தலைக்குமேல் போகாது' என்று பாலாற்றைப் பற்றிப் பகடி பாடுவதுண்டு.
காடுகளை அழித்து நாடுகள் உருவாக்கிய பல்லவர்கள், அவ்விடங்களில் ஏரிகள், குளங்கள் உருவாக்கத் தவறியதே இல்லை.
இன்றைக்கு நாம் நீருக்காக கையேந்தி நிற்கின்றோம். மற்ற மாநிலத்தவர் அணைகட்டி ஆற்றின் நீராதாரத்தை தடுத்து நம்மை வஞ்சிப்பதாகப் போராடுகிறோம்.
ஆந்திராவில் சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு ஓடிவரும் பாலாறு, தமிழகத்தில் 225 கிமீ தொலைவுக்கும் ஓடுகிறது.
ஆந்திராவில் ஓடும் 40 கி.மீ. தொலைவு ஆற்றில், அவ்வரசு 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியுள்ளதாகச் சொல்லப்படும் அதே வேளையில், 225 கி.மீ. தொலைவுக்கு ஓடும் தமிழ்நாட்டில் எத்தனை தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கியுள்ளோம்?
காஞ்சிபுரம் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டக் கோரி சுமார் 30 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.
மழையளவை எடுத்துக் கொண்டாலும் ஆண்டுக்குச் சராசரியாக கர்நாடகத்தில் 722 மி.மீட்டர், ஆந்திரத்தில் 908 மி.மீட்டர், தமிழகத்தில் 950 மி.மீட்டர் மழைப் பொழிவும் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.
இப்படிப் பெய்யும் மழையை தேக்கி வைத்துப் பாதுகாக்கிறோமா?
2015-ஆம் ஆண்டில் பெய்த பெருமழையில் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால், நீர் முழுவதும் கடலில் கலந்து வீணானது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்று ஓடோடிச் சென்று, அங்கு கட்டப்பட்ட பாலங்களில் நின்று கைப்படம் எடுத்துக் கொண்டு சமாதானம் அடைந்துவிட்டு, முகநூலில், வெள்ளப் பெருக்கு வீணானது அழுது வடித்தவர்கள் நாம்.
ஆனால், ஆற்றைக் கூறுபோட்டதையோ, வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதையோ, ஏரிகள் முகவரி இல்லாமல் தொலைந்து போனதையோ குறித்து எந்த அளவுக்குப் புரிதல் பெற்றுள்ளோம் என்று தெரியவில்லை.
2008-இல் தமிழக அரசின் கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி அமைப்புகளில் 16,477 சிறு குளங்கள், 3,937 நடுத்தரக் குளங்கள், பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் 5,627 குளங்கள் மழைநீரை ஆதாரமாகக் கொண்டிருந்தன என்றும், நதிநீரை ஆதாரமாகக் கொண்டு, 3,627 பொதுக் குளங்கள், 9,886 தனியார் குளங்கள் இருந்தன என்றும் கூறிய கணக்கெடுப்பு 2014-இல் அவை 40% குறைந்தன எனக் கூறியுள்ளது.
இப்போது அவை 30 சதவீதமா? 20 சதவீதமா? தெரியவில்லை.
ஏரிகள், குளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகி விட்டன. கால்வாய்கள் எல்லாம் தூர்க்கப்பட்டு, நிலங்களாகவும், வீட்டுமனைகளாகவும் ஆகிவிட்டன. ஆறுகள், மணல் கொள்ளைக்கும், தொழிற்சாலைக் கழிவுக்குமாகிவிட்டன.
பாலாற்றின் கிளை நதியான வேகவதி ஆறு காஞ்சிபுரத்துக்காகவே பல்லவர்கள் நிர்மானித்தது. சுமார் 1,300 அடி அகலமுள்ள, காஞ்சிபுரத்துக்குள்ளே பாயும் இந்நதி, தற்போது அது 30 அடியாகி, இறுதியில் 3 அடியாக சுருங்கிவிட்டது.
2015 வரையான கணக்கெடுப்பில் வேகவதி மீது சுமார் 3,348 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று மாவட்ட நிர்வாகமே கூறுகிறது.
நதியின் மேலெல்லாம் கட்டடங்கள். வெள்ளம் வந்துவிட்டால், எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்ததென கூப்பாடு. இந்த ஆக்கிரமிப்புக்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தானே?
நதிகளும், ஏரிகளும், குளங்களும் இந்த மண்ணின் ஆதாரம். அவற்றை நம் முன்னோர் உணர்ந்திருந்தனர்; நாம் மறந்துவிட்டோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com