அச்சமூட்டும் தண்ணீர் தட்டுப்பாடு!

நமது நாட்டில் ஏழு மிகப்பெரிய நதிகளும், அவற்றிலிருந்து உருவாகி பரந்துவிரிந்து ஓடும் சிறு, குறு நீரோடைகளும்

நமது நாட்டில் ஏழு மிகப்பெரிய நதிகளும், அவற்றிலிருந்து உருவாகி பரந்துவிரிந்து ஓடும் சிறு, குறு நீரோடைகளும், இவை எல்லாவற்றிற்கும் நீர் வழங்கும் இமாலய பனிமலை கூட்டமைப்பும் இருந்தபோதிலும் நீர் வற்றிய வாழ்க்கையில் நாம் உழலுகிற நிலைமை ஆச்சரியமளிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் நீரை நமது வாழ்க்கைச் சூழல்கள் மாசுபடுத்துவதுதான்.
எடுத்துக்காட்டாக, நீர் பற்றாக்குறையில் வாடும் நகரங்களில் ஒன்றான பெங்களூருவின் பரிதாப நிலைமையை ஆராய்ந்தால், நம் நாட்டின் மற்ற எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்களின் நீர் பற்றாக்குறை நிலைமையை புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையினால் பெங்களூரு நகரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பசுஞ்சோலைகளின் நகரம் என அழைக்கப்படும் இந்த நகரில் பூமியை 1050 அடி தோண்டிய பின்பும் நீர் கிடைப்பதில்லை என்ற உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. அப்படியே கிடைக்கும் கொஞ்சம் நீர்கூட தூய்மையான நீர் அல்ல. காரணம், நீரில் எல்லா மட்டத்திலும் பாதிக்கப்படும் வகையில் சுத்தமற்ற கழிவு நீர் சேர்ந்து விடுகின்றது.
கர்நாடக மாநில அரசின் கனிமத்துறை மற்றும் நீர்வளத்துறையினர் அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 30 மாவட்டங்களை ஆராய்ந்தபோது, 12 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் புளோரைடு, ஆர்செனிக் மற்றும் நைட்ரேட் போன்ற ரசாயனப் பொருள்கள் கலந்து அவை உப்பு நீராக மாறியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதற்கான முக்கியமான காரணம், நகர்ப்புறத்து குடியிருப்பு பகுதிகளில் உருவாகும் மனிதக் கழிவுகள் அடங்கிய சாக்கடைகள் சரியான குழாய்களில் செலுத்தப்படாமல், தரையில் ஓடும் சிறு கால்வாய்களில் செல்வதால் அவை பூமிக்கடியில் ஊடுருவுகின்றன என்பதே.
இதனுடன் சேர்த்து, தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகளை சரியான விஞ்ஞான முறைப்படி சுத்திகரிக்கப்பாதக் கூறி உரிமம் பெற்ற தொழிற்சாலைகள்கூட கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடைகளுடன் கலந்து வெளியேற்றுகின்றன.
இதே நிலைமை தொடர்ந்தால் 2025-ஆம் ஆண்டு வாக்கில் இந்த நகரின் பல பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலைமை உருவாகிவிடும் என கூறப்படுகிறது. இதே நிலைமை பெங்களூருவில் மட்டுமல்ல, நம் நாட்டின் பல நகரங்களிலும் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய நதிகள் பலவும், பூமிக்கடியில் உருவாகும் நீராதாரங்களும் மனிதர்களின் நடவடிக்கைகளினால் கெட்டுப்போய் விட்டன.
"மெக்கின்ஸி' எனப்படும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில், இன்றைக்கு கிடைக்கும் நீரின் அளவில் 50 சதவீதம்தான் 2030-ஆம் ஆண்டில் கிடைக்கும் என தெரியவந்திருக்கிறது. இதனால், சுமார் 10 கோடி மக்களுக்கு அப்போது குடிதண்ணீர் கிடைக்காத நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, நமது நீர் நிலைகளுக்கும் நிலத்தடி நீர் ஊற்றுகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை களைய உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டங்கள் மூலமாகவும், கடல் நீரை குடிநீராக மாற்றும்
திட்டங்களைத் தொடங்கியும் நமது நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்ய
முடியும்.
தண்ணீரை மிக அதிக அளவில் உபயோகிக்கும் பயிர்களை நஞ்சை நிலங்களில் பயிரிடும் பழக்கம் இருக்கிறது. இங்கெல்லாம் குறைவான நீர் உபயோகிக்கும் மாற்றுப் பயிர்களை பயிரிடும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பின்பற்றும்படி செய்ய வேண்டும்.
இதன் பலனாக, நீர் தேவை நிச்சயமாகக் குறையும். அது மட்டுமன்றி பருவமழை பொய்ப்பித்துப் போன காலங்களில்
விவசாயிகள் அவதியுறுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.
ரசாயன பாடத்தில் நாம் படித்த திரவங்களில் மிகவும் எளிதானது தண்ணீர்தான். இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் உள்ளடக்கிய (ஹெச்2ஓ) திரவம்தான் தண்ணீர். ஆனால் உலகில் மனித வாழ்க்கையை ஆராயும்போது, மிகவும் கடினமான திரவம் தண்ணீரே.
காரணம், 97 சதவீத தண்ணீர் உப்புநீர், 2 சதவீத நீர் பனியாகவும், ஐஸ் கட்டியாகவும் உள்ளன. மீதமுள்ள 1 சதவீத நீர்தான் மனித வாழ்க்கைக்கு கிடைக்கிறது உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக தண்ணீர் ஒரே அளவிலும் தரத்திலும் இருக்கிறது. அதை புதிதாக உற்பத்தி செய்யாமலும், அழிக்காமலும் இருக்கிறது இயற்கை.
நல்ல நீர் சுற்றுச்சூழல்களினாலும், மிருகங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளினாலும் கெட்டுப்போய் உபயோகத்திற்கு பயன்படாமல் போய்விடுகிறது.
"உயிரினங்களின், மெய்ப்பொருள், அன்னை மற்றும் அடிப்படை தண்ணீர்தான். அது இல்லாமல் உயிர் கிடையாது' எனக் கூறினார் ஆல்பர்ட்
ஃகையார்கி. உலகின் மிகப்பெரிய பிரச்னையும் அதே தண்ணீர்தான். உலகின் 100 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதியுறுகிறார்கள். தினமும், சுமார் 3,900 குழந்தைகள் தண்ணீரால் பரவும் நோய்களால் பீடிக்கப்பட்டு மரண
மடைகிறார்கள்.
தண்ணீர் கிடைப்பதில் எல்லா நாட்டு மக்களுக்கும் சரிசமமான நிலைமை இல்லை. ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க பிரஜை சராசரி 560 லிட்டர் தண்ணீரை உபயோகிக்கிறார். ஆனால், ஒரு இந்தியரின் சராசரி நீர் பயன்பாடு ஒரு நாளைக்கு சுமார் 50 லிட்டரே!
இன்றைய நிலைமையில், இந்தியாவில் 1,12,300 கோடி கன அடி நீர் கிடைக்கிறது. இதில் 69,000 கோடி கன அடி நீர், நீர்நிலைகளிலும் மீதி 43,300 கோடி கன அடி நீர் நிலத்தடியிலும் கிடைக்கிறது. 2015}இல் நமது நீர் தேவை 1,09,300 கோடி கன அடியாக இருந்தது. இது 2050}ஆம் ஆண்டில் 1,44,700 கோடி கன அடியாக உயரக்கூடும் என்று தெரிகிறது.
இந்த கணக்கீடுகளுக்கு மத்தியில் உலக உபயோகப் பொருள்கள் மையம் எனும் அமைப்பின் கணக்கீட்டின்படி, இன்னும் 15 ஆண்டுகளில் நம் நாட்டின் நீர் தேவையில் 50 சதவீதம்தான் கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் பரவியுள்ளது.
நம் நாட்டின் நிலத்தடி நீரை ஒரு ஆண்டில் சுமார் 3 கோடி ஆழ்துளை கிணறுகள் வெளியேற்றுகின்றன. அந்நீரின் அளவு சுமார் 25 கோடி கன மீட்டர். இந்த அளவு நீர் மழை நீராலும் நீரோடைகளினாலும் தரையில் ஊடுருவி இழந்த நீரை சரி செய்வதில்லை. இதன் காரணமாகத்தான் நமக்கு வறட்சி நிலைமை அடிக்கடி உருவாகிறது.
மழை நீர்தான் நம் நாட்டின் நீராதாரத்திற்கு அடிப்படை. உலக சீதோஷ்ண மாற்றத்தினால் மழைக்காலம் குறுகி, சரியான அளவு மழை பெய்யாமல் வறட்சி உருவாகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 4 முறை இதுபோன்ற அசாதாரண வறட்சி நிலை உருவாகியுள்ளது. 1965, 66-ஆம் ஆண்டுகளில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதியில் குறைந்த மழை பெய்ததால் நீராதாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால் 2016-ஆம் ஆண்டில் வறட்சியில், நீர்நிலைகள் செழித்த இடங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு மழை பற்றாக்குறையை விடவும், மனித நடவடிக்கைகளும், அரசின் வறட்சி நிவாரணத் திட்டங்கள் இல்லாமையுமே காரணம்.
2100-ஆம் ஆண்டில் 1.8 செல்ஷியஸ் அளவில் நமது பூமியின் உஷ்ணம் அதிகமாகி இமாலயத்தின் பனி அடுக்குகள் 45 சதவீதம் குறைந்துபோகும் எனவும், பூமியின் உஷ்ணம் 3.7 செல்ஷியஸ் அளவில் அதிகமானால் 68 சதவீத பனி அடுக்குகள் சுருங்கிவிடும் எனவும் சீதோஷ்ணமாற்ற கட்டமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது.
உஷ்ணம் அதிகரித்தால் பனி அடுக்குகள் உருகி நீரோட்டமாகி நிறைய தண்ணீர் மற்றும் குப்பைகள் மண் சரிவுகளை வெள்ளமாக பாய்ச்சும்.
"நமது கவனக்குறைவினால், ஆண்டுதோறும் அதிக மழையின் நீர் வங்காள விரிகுடாவிற்குள்ளும், அரேபிய கடலுக்குள்ளும் சென்று விடுகிறது' என ஒருமுறை நமது தேசப்பிதா மகாத்மா காந்தி கூறினார். நமது கலாசாரத்தில் நிறைய தண்ணீரை வீடுகளில் உபயோகித்து வீணாக்கும் பழக்கம் உருவாகிவிட்டது.
சுமார் 85 சதவீத தண்ணீர் நம் வீடுகளில் தேவையற்ற வகையில் உபயோகிக்கப்பட்டு கழிவுநீராக வெளியேற்றப்படுகிறது. நீரை உபயோகிக்காமல் சுத்தப்படுத்தும் செயல்களுக்கு கழிவறைகளிலும், உணவு அறைகளிலும் காகிதங்களை மேலைநாடுகளில் உபயோகிக்கிறார்கள்.
ஆனால், சிறுநீர் கழிப்பிடங்களில் நமது ஆட்கள் உபயோகிக்கும் நீர் பல குடும்பத் தேவைகளை விடவும் அதிகமாக உள்ளதை நாம் காணலாம்.
இதுபோன்ற கழிவுநீரை சுத்தப்படுத்தி பல தொழிற்சாலைகளிலும், மற்ற இடங்களிலும் குடிநீர் அல்லாமல் பிற உபயோகங்களுக்கு உபயோகப்படுத்த முடியும். மத்திய - மாநில அரசுகள் மட்டுமன்றி, பொதுநல விரும்பிகள் பலரும் நமது நீர் தேவைகளை உணர்ந்து, முழுக்கவனம் செலுத்தி அதை எல்லா மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியம்
தமிழகத்தைப் பொருத்தவரையில், கடந்த 142 ஆண்டுகளில் இல்லாதவகையில், இந்த ஆண்டு பருவமழை, 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் சுத்தமான தண்ணீர் வீணடிக்கப்படுவதும், அசுத்தப்படுத்தப்படுவதும் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நடத்தப்படவில்லை. இந்நகரங்களில் வசிக்கும் மக்களாகிய நமக்கு இந்த நிலவரங்கள் நன்றாக புரியும் என்பதால், நாம் கர்நாடகத்தைவிட அதிக அளவில் நீர் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திக் கூற முடியும்.

கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com