தேவை விழிப்புணர்வு

பேருந்து, ஆட்டோ, கார்களில் செல்வோரும், இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்வோரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

பேருந்து, ஆட்டோ, கார்களில் செல்வோரும், இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்வோரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போதே, காலி தண்ணீர் பாட்டிலை வெளியே வீசுவது, தின்பண்டங்கள் வாங்கி வந்த நெகிழி பைகளை வெளியே வீசியெறிவது, சாப்பிட்டு விட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்து கொண்டே ஜன்னல் வழியாக கைகளை கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுவும் சாலை விதிமீறலே.
நாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் பாதிக்கப்படக்கூடும். மேலும் இதுபோன்ற செயல்கள் பெரிய விபத்துகள் நிகழவும் காரணமாக அமையும்.
எனவே பேருந்து, கார்களில் பயணம் செய்வோர் வாகனம் நிற்கும்போது மட்டும் தண்ணீர் பாட்டில், தின்பண்ட பொட்டலங்களை வெளியே போடலாம். அதுவும் அதற்குரிய தொட்டியில் போடுவது சாலச் சிறந்தது. அதேபோல் பயணத்தின் போது எச்சில் துப்புவதும் தவறான செயலாகும். இதுகுறித்து விழிப்புணர்வு நம்நாட்டில் மிகக் குறைவான அளவிலேயே உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி என பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்துவது போன்று, இதுகுறித்தும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட
வேண்டும்.
பேருந்து நடத்துநர்கள் பயணிகளிடம் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அல்லது பேருந்தினுள்ளே சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை அமைத்து பயணிகள் அதனைப் பயன்படுத்துமாறு கூறலாம்.
பொதுமக்களும் நாம் தான் பேருந்தில் அமர்ந்திருக்கிறோமே, சாலையில் செல்பவர்களுக்கு என்னவானாலும் பரவாயில்லை என்ற மனப்பாங்கை கைவிட வேண்டும். சாலையில் செல்பவர்களும் நம்மைப்போல் மனிதர்கள் என்ற எண்ணம் வர வேண்டும்.
இதுபோன்ற நல்ல அணுகுமுறைகளை நாம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதேபோல் 18 வயதுக்கு குறைவானவர்களை இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை இயக்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.
இதேபோன்று பேருந்தில் சீட்டின் பின்புறம் பேனாவால் எழுதுவது, கிறுக்குவது போன்ற செயல்களிலும் பெரும்பாலான இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது அநாகரிகமான செயல் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
மேலும் சுற்றுலா தலங்களின் அழகை இதுபோன்று ஒரு சிலர் செய்யும் செயல் கெடுத்துவிடுகிறது. கொடைக்கானல், மூணாறு போன்று மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றால், அங்கு ஒரு சில பாறைகளில் சிலர் தங்களது பெயர் மற்றும் உறவினர்களின் பெயரை எழுதி வைத்திருப்பர்.
இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பாறைகளில் கிறுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் நம் நாட்டின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவர்.
தஞ்சை பெரியகோயில், திருமயம் கோட்டை, வேலூர் கோட்டை போன்ற வரலாற்றுச் சின்னங்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அதுபோல கட்டடங்களை நம்மால் உருவாக்க இயலாது. அதை பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
சுற்றுலா செல்லும் பயணிகள் சுற்றுலா தலங்களின் அழகைப் பார்த்து ரசிக்கலாமே தவிர, சுற்றுலா தலங்களை சேதப்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
காரில் பயணம் செய்பவர்கள் கார் கதவுகளை திறக்கும் போது பின்னால் வாகனங்கள் அல்லது பாதசாரிகள் வருகிறார்களா என கவனிக்க வேண்டும். அப்படி பார்க்காமல் கார் கதவை திறக்கும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக இருப்பதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நம் நாட்டில் சாலை விபத்துகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 43 பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5,01,423 எனவும், இது கடந்த 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015-இல் தமிழகத்தில் 69,059 வாகன விபத்துகளும் அதன் மூலம் 15,642 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2014-இல் 15176 இறந்துள்ளனர்.
இதில் சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் 886 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக கோவையில் 245
பேரும், திருச்சியில் 161 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 1214 சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 25% இருசக்கர வாகனங்களால் நிகழும் விபத்துகள். அதிக அளவிலான விபத்துகள் சாலை சந்திப்புகளில் நிகழ்கின்றன.
நாம் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடித்து வருகிறோம். இருந்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.
நாம் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com