காவிரி - திட்டமிட்ட வஞ்சனை!

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டமும், நதிநீர் வாரியம் அமைப்பதற்கான சட்டமும் 1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
காவிரி - திட்டமிட்ட வஞ்சனை!

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டமும், நதிநீர் வாரியம் அமைப்பதற்கான சட்டமும் 1956-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக பன்மாநில நதிகளுக்கான வாரியம் ஒன்றினை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இச்சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து கடந்த 61 ஆண்டு காலமாக பன்மாநில நதிநீர் பிரச்னை எதிலும் மத்திய அரசு வாரியம் அமைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்ய எந்தக் கட்சியைச் சார்ந்ததாக இருந்தாலும் மத்திய அரசு தயங்கி வருகிறது.
தமிழகம் - கருநாடகம், கேரளம் - புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள காவிரிப் பிரச்னை இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
1968-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை 22 ஆண்டு காலமாக இம் மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசின் முயற்சியால் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றிபெறாமல் போனதற்குக் கீழ்க்கண்டவையே காரணமாகும்.
பேச்சு வார்த்தையைத் திட்டமிட்டு கருநாடகம் இழுத்தடித்தது. இடைக்காலத்தில் காவிரியின் துணை நதிகளான ஏமாவதி, ஏரங்கி, கபினி, யாகச்சி, சுவர்ணவதி ஆகியவற்றில் அணைகளைக் கட்டி முடித்து 70 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் வசதியைப் பெற்றுவிட்டது.
சட்டத்திற்குப் புறம்பாக கருநாடகம் அணைகளைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என தமிழக அரசு செய்த முறையீட்டுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் வெற்றியை இது பாதிக்கும் என்பதினால் அப்போதிருந்த மத்திய காங்கிரசு ஆட்சி இவ்வாறு செய்தது.
1968-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. அக்கோரிக்கையை சட்டப்படி உடனேயே ஏற்காமல் மத்திய காங்கிரசு அரசு காலங்கடத்தியது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. 02-6-1990 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் விளைவாக மத்திய அரசு நடுவர் மன்றத்தை அமைக்க முன்வந்தது. இதற்கிடையே 22 ஆண்டுகள் கழிந்து விட்டன.
25-7-1991 அன்று நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைச் செல்லாததாக்கும் வகையில் கருநாடக அரசு காவிரிப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு செய்த முறையீட்டின் பேரில் 22-11-91 அன்று கருநாடகத்தின் அவசரச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு 11-12-1991 அன்று நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. ஆனாலும் அதை மதித்துத் தமிழகத்திற்கு உரிய நீரைத் தர கருநாடகம் மறுத்தது.
2007-ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் ஆணையிட்டது. 9 ஆண்டு காலமாக அதை அமைக்க மத்திய காங்கிரசு அரசு முன்வரவில்லை. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டு 2016 செப்டம்பரில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒருங்கிணைப்புக் குழுவையும் அமைக்க வேண்டும் என்கிற ஆணையைத் தமிழகம் பெற்றது.
பன்மாநில ஆற்றுப் பிரச்னைகள் சட்டத்தில் 2002-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் 6-9-2002ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
இத்திருத்தச் சட்டம் 6(2) பிரிவின்படி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும். உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் போன்று இதுவும் மதிக்கப்பட வேண்டும்.
ஆனால், நடுவர் மன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்த வழக்கின் விளைவாக 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆணைப் பிறப்பித்த பிறகே 2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
10-6-2014 அன்று பிரதமர் மோடியை கருநாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கருநாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வற்புறுத்தினார்கள்.
கருநாடகத்திலிருந்து நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் இக்குழுவில் இணைந்து சென்றார்.
அரசியல் சட்டத்தின் மீது ஆணையிட்டு பதவியை ஏற்ற வெங்கையா நாயுடுவும் பிற மத்திய அமைச்சர்களும் அச்சட்டத்திற்கு எதிராக நடக்கும்படி பிரதமரை வற்புறுத்தியதும், இத்தூதுக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி முன்வராததும் அப்பட்டமான அரசியல் சட்ட மீறலாகும்.
மத்திய பா.ச.க. அரசு, உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த முன்வரவில்லை. இதற்கெதிராக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு 48 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் போராடிப் பெற்றத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்குப் பதில் அவற்றை அடியோடு செல்லாததாக்கும் முயற்சியில் மத்திய பா.ச.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
மத்திய அமைச்சரவை அண்மையில் கூடி முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. இதுவரை அமைக்கப்பட்டுள்ள அத்தனை நடுவர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அனைத்து பன்மாநில நதிநீர்ப் பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு நடுவர் மன்றத்தை அமைப்பது என்பதுதான் அந்த முடிவு.
இதன் மூலம் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வழியேற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக 1956-ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்த நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்படுவார். அவசியமானால் ஒவ்வொரு நதிநீர்ப் பிரச்னைக்கும் தனித்தனி நடுவர்களைக் கொண்ட அமர்வுகள் அமைக்கப்படும். மூன்றாண்டு காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கியவுடன் இவை கலைக்கப்பட்டு விடும்.
நடுவர் மன்றத்திற்குத் துணையாக குழு ஒன்றும் அமைக்கப்படும். இக்குழுவில் நீரியல் வல்லுநர்களும், கொள்கை வகுப்பாளர்களும் இடம் பெறுவார்கள். நடுவர் அமர்வுகள் அளிக்கும் தீர்ப்பை எந்த மாநிலமும் ஏற்க மறுத்தால் நடுவர் மன்றத்திடமும் முறையீடு செய்யலாம்.
நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு உடனடியாக அரசு கெசட்டில் வெளியிடப்பட்டுவிடும். இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை.
2002-ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளியிடப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்புகளை இப்புதிய சட்டம் கட்டுப்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளியான தீர்ப்புகள் செல்லாததாகிவிடும். இத்தீர்ப்புகளை வழங்கிய நடுவர் மன்றங்களும் கலைக்கப்பட்டுவிடும். புதிய ஒற்றை நடுவர் மன்றத்திடம்தான் மாநிலங்கள் முறையிட வேண்டியிருக்கும்.
மேலே கண்டவாறு மத்திய பா.ச.க. அரசு முடிவு செய்துள்ளது.
பா.ச.க. அரசு கொண்டுவரவிருக்கும் இந்தச் சட்டம் ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். காவிரிப் பிரச்னையில் தமிழகம் போராடிப் பெற்ற நீதி உரிமைகளை அடியோடு பறிப்பதாகும்.
நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை இட்ட ஆணைகளின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தி இறுதியாக ஒற்றை நடுவர் மன்றம் அமைக்கும் சட்டத்தின் மூலம் தமிழகம் 48 ஆண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து மீண்டும் போராட வேண்டிய நியாயமற்ற சூழ்நிலையை மத்திய அரசு திட்டமிட்டு ஏற்படுத்த உள்ளது.
தனது தவறை மூடி மறைக்கவும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவுமே புதிய சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பா.ச.க. ஆனாலும் காங்கிரசு கட்சியானாலும் கருநாடகத்தில் வரவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றியைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டுகின்றனவே தவிர தமிழக விவசாயிகளுக்கு நீதி வழங்க இரு கட்சிகளும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு கடைப்பிடித்த நெறியற்றப் போக்கின் விளைவாக அரசியல் சட்டம் செயலற்றுவிட்டது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவற்றால் வழங்கப்பட்ட நீதியைக் குழி தோண்டிப் புதைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் புதிய சட்டத்தின்படி ஒற்றை நடுவர் மன்றம் அமைக்கப்பட்டாலும் காவிரிப் பிரச்னை மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பிரச்னைகள் எதையுமே தீர்க்க முடியாது. அரசியல் சட்டப்படி நடுவர் மன்றங்களும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்புகளைக் கடமை உணர்வுடன் நிலைநாட்டுவதற்கும் அரசியல் ஆதாயம் தேடும் போக்கைக் கைவிட்டு நடுநிலை பிறழாமல் நேர்மையுடன் செயல்படவும் மத்திய அரசு முன்வந்தால் ஒழிய பிரச்னைகள் தீராது. மேலும், மேலும் அதிகமாகும்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடில்லாமல் இணைந்து நின்று மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் புதிய சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராகவும் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும். காவிரிப் பாசன விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நேரம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com