தாய்மொழியின்றி கல்வியில்லை!

பொதுவாக உயிர் இருந்தால்தான் உடம்பு உரிய மரியாதையைப் பெறுகிறது. உயிர் இல்லையென்றால் அது சவம்.

பொதுவாக உயிர் இருந்தால்தான் உடம்பு உரிய மரியாதையைப் பெறுகிறது. உயிர் இல்லையென்றால் அது சவம். சவத்திற்கு ஒரே மரியாதைதான். அது இறுதி மரியாதைகடவுளைப் பற்றிச் சிந்தித்த திருவள்ளுவர், ஒரு கல்லால் இரண்டு கனிகளை உதிர்த்தவர்.
இந்த உலகம் இறைவன் முதலாகத்தான் இயங்குகிறது. இது ஒரு கனி. இன்னொரு கனி, தமிழ் மொழியின் எழுத்துக்கள் எல்லாமே அகரத்தை முதலாகக் கொண்டு இயங்குகின்றன. ஒன்று, இறை முதன்மை. மற்றொன்று அகரத்தின் மொழி முதன்மை.
முதல் கருத்தை வாசித்து வள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று மட்டும் வரையறை செய்வது வள்ளுவருக்குச் செய்கிற நீதியாகாது. அவருடைய இன்னொரு கருத்து, அகர முதல். அதை ஆழக் கற்றால் உடம்புக்கு எப்படி உயிர் முதன்மையானதோ, அதுபோல வாழ்வதற்கு மொழி முதன்மையானதெனச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
இறைவனுக்கு இணையாக வள்ளுவர் நினைத்திருந்தால், வேறு ஏதோ உவமானத்தைச் சொல்லியிருக்க முடியும். நமக்கு அகர முதலான மொழி இல்லையெனில் நாம் ஜடம்தான்.
பாரதிதாசன், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று எழுதிய கவிதையில், வள்ளுவரின் அகரத்தின் குரல்தான் ஒலிக்கிறது. யோசித்துப் பாருங்கள். நாம் ஒரு நாளைக்கு 21,200 முறை சுவாசிக்கிறோம். நமது சுவாசக் காற்றின் மூலம்தான் நாம் உயிர் வாழ்கிறோம்.
இந்தச் சுவாசக் காற்று நமது ரத்த ஓட்டத்தில் கலந்து மூளைக்குள் ஓயாமல் பாய்ந்து கொண்டிருந்தால்தான் மூளை வேலை செய்கிறது. சில நிமிடங்கள் தவறினாலும் நாம் தவறிவிடுவோம். அதனால் மூச்சுக் காற்று ஒரு மனிதனுக்கு முதன்மையானது. ரத்த ஓட்டம் இரண்டாம் பட்சம்தான்.
இவ்வாறு, உயிர் வாழ்தலுக்குச் சுவாசிப்பது தவிர்க்க முடியாதது. இதனை நாம் சிந்தனையே செய்வதில்லை. 'நான் சுவாசிக்கிறேன்' என்று யாரும் இன்னொருவரிடத்தில் சொல்வதில்லை. 'நீங்கள் சுவாசிக்கிறீர்களா' என்று நாம் கேட்பதுமில்லை.
சுவாசித்தல் என்பது அனிச்சையாக நடக்கிறது. நம்மை அறியாமல் தொடர்ந்து நடக்கிறது. நமது கவனத்திற்குள்ளும் அது வருவதில்லை. அப்படி அதைக் கவனிப்பதும் நமது சுபாவமில்லை.
இவ்வளவு அம்சங்களும் கொண்ட சுவாசத்திற்கு இணையாக உள்ளதுதான் நமது பேச்சு. பேச்சு மொழி ஆரம்பத்தில் சப்தங்களாகவும் இரைச்சல்களாகவும் மட்டுமே இருந்தது. ஆதிகாலத்தில் இருந்த இதன் எச்சம்தான் இப்போதும்கூட ஆச்சரியத்திலும் அச்சத்திலும் நாம் ஆ..., ஊ... என்று இரைச்சலிடுகிறோம்.
இந்த சப்தங்கள்தான் காலத்தின் மீது சவாரி செய்து ஒலிகளை வென்றெடுக்கின்றன. ஒலிகளின் அடையாளங்களைத்தான் நாம் எழுத்துகள் என்கிறோம். அவை வெறும் குறியீடுகள்தான். ஒலியில்தான் மெய்யான மொழி இருக்கிறது. உயிர் இருக்கிறது.
உயிர் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ, அதுபோல மொழி இல்லாமலும் ஒருவரால் வாழ முடியாது. அவன் வாய் பேசாத மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவனுக்கு மொழி தேவைப்படுகிறது. கேட்கும் திறன் இல்லாதவனுக்கு அவன் பார்வையே பாஷையாகி விடுகிறது.
மொழி என்பது பேச்சு. ஒரு மனிதன் பேச்சில்லாமல் இருக்கிற காலம் அவன் உறங்குகிற காலம்தான். உறங்குபவன் கூட கனவு கண்டு உளறினால், தமிழனாய் இருந்தால் ஆங்கிலத்தில் உளறமாட்டான். தமிழில்தான் உளறுவான்.
ஆங்கிலேயனாக இருந்தால் ஹிந்தியில் உளறமாட்டான். ஆங்கிலத்தில்தான் உளறுவான். ஆகவே, மொழி என்ற பேச்சு இல்லாமல் எவரும் உயிர் வாழ முடியாது.
பிறந்த குழந்தைகூட அழுவதாகக் கூறுகிறோம். அந்த அழுகையை ஓர் ஒலியாகத்தான் நாம் கேட்கிறோம். பிறந்து பைய நாவசைத்த நாள் முதலாக மழலையில் தொடங்கிய பேச்சுத்தான் மெல்ல மெல்லச் செப்பமாகிச் சிந்தனை வாகனம் ஏறுகிறது.
அறிஞர்கள் சொல்கிறார்கள். மனிதனுடைய சிந்தனையே வார்த்தையாகத்தான் பதிவாகிறது என்று. பாலுக்கு நிறமுண்டு. வடிவம் இல்லை. பால் எதில் ஊற்றி வைக்கப்படுகிறதோ, அந்த வடிவத்தை அது பெறுகிறது. பாத்திரத்தில் ஊற்றினால் பாத்திர வடிவத்தில்தான் பால் இருக்கும். அதுபோலத்தான் சிந்தனையும் பால் போன்றது. அது வார்த்தைகளாகத்தான் இருக்கிறதே தவிர, வெறும் சிந்தனைக்கு ஏது வரி வடிவம்?
இவ்வாறு சிந்தனை, பேச்சு இவையில்லாமல் ஒரு மனிதனால் இயங்க முடியாது. அவன் அரசனாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் இவை இரண்டும் அவசியம். பேச்சு நமது வாழ்வில் பிரதானப் பாத்திரம் வகிக்கிறது.
பேச்சு காதலாகிறது, கண்டனமாகிறது, கவிதையாகிறது, பிணக்காகிறது, பிரச்சினையாகிறது, சமாதானமாகிறது, சந்தோஷமாகிறது. பேச்சில்லாத நிலை சம்பவிக்குமானால், அநேகமாக அவன் மூச்சில்லாத நிலைக்குப் போவதற்கு முன்புதான் சம்பவிக்கும்.
அதனால், பேச்சு என்பதை விநாடிப் பொழுதுகூட மனிதனால் விலக்கி வைக்க முடியாது. இத்தகைய பேச்சு என்பதை முறையாக ஒருவன் கற்றால்தான் தெளிவாகப் பேசவும், எழுதவும் முடியும். இந்தத் தெளிவு அறிவுக்கு மேலானது.
ஏனெனில், அறிவு அனைத்தையும் குவித்துக் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். குழப்பத்தில் நமது தேர்வுதான் தெளிவாகிறது. அதனால்தான் மகாகவி பாரதி பராசக்தியிடம் வேண்டியபோது, 'அறிவிலே தெளிவு வேண்டும்' என்றான்.
அதனால், இப்பேச்சு என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பாடத்திட்டம் வகுத்துப் பள்ளியில் ஆசிரியர் கற்றுத் தந்தால்தான் அவன் சரியாக, முறையகாகப் பேசுவான்.
நமது சமூகம் குடும்பங்களால் ஆன சமூகம். குடும்பங்களில் கணவன் - மனைவி தாய் தகப்பனாகும்போது குழந்தைகளும் இடம்பெறுகிறார்கள். குடும்ப வாழ்க்கைதான் நமது சமூகக் கட்டமைப்பின் முதல் அலகு.
இதில் இடம்பெற்றுள்ள குடும்பத்தார் உழைப்பது, உண்பது, உறங்குவது என்பதுபோல உரையாடுவதும் ஓர் அம்சம். அந்த உரையாடல் அந்தக் குடும்ப மொழியில் இருந்தால் எளிதாகக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் அது உதவும். அதைத்தான் தாய்மொழி என்கிறோம்.
தாயின் கருவிலிருந்து குழந்தை வருவதைப் போல, தாயின் வாயிலிருந்து இந்தப் பேச்சு வருகிறது. தொப்புள்கொடி உறவோடு வந்த சிசுவுக்கு, தாயின் இந்த எச்சில் பேச்சுதான் சிந்தனையை வளர்க்கும் அமிழ்தம். தாய்ப்பால் உடல் வளர்க்கத்தான். அறிவை வளர்க்க அல்ல.
ஒவ்வொரு தாயும் தன் சிசுவைப் பேச்சாலும் வளர்க்கிறாள். இதனை உணர்ந்த மகாகவி தாகூரும், மகாத்மா காந்தியும் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று தவம் இயற்றினார்கள். பாரதி இதற்காக நோன்பிருந்தார்.
ஏனோ ஏகாதிபத்தியத்தின் அடிமை நாடாக இருந்த இந்தியாவில் சென்னை மாகாணவாசிகள் ஆங்கிலேயனை விரட்டினாலும், ஆங்கில மொழியை விடமாட்டேன் என்று அந்த விலங்கை இன்னும் பூட்டிக் கொண்டிருக்கிறார்களே என்று பாரதி, 'என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்' என்றான்.
ஆங்கில மோகம் நம்மை ஆட்டிவைக்கிறது. சிந்தனையோட்டத்திற்குத் தடுப்பணைக் கட்டுகிறது. தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழ் மொழி ஐந்தாவது வகுப்பு வரைகூடக் கட்டாய மொழியாக்கப்படவில்லை என்பது பெரிய சோகம்.
ஆங்கில மொழியில்தான் மெட்ரிக் பள்ளிகளில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. அதனால் அம்மா என்று அழைப்பதே அபச்சாரம் ஆகிவிட்டது. தமிழ்
வழிக் கல்வி தரும் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் திறன் வளர்க்கும் போதனை என்பது சுத்தமாக இல்லை. 5-ஆம் வகுப்பு மாணவனுக்குத் தனது பெயரைக்கூட எழுதத் தெரியவில்லையென ஆய்வுகள் காட்டுகின்றன.
சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு, பேரூர் தமிழ்க் கல்லூரி இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் தலைமை யில் உண்ணா நோன்புப் போராட்டத்தை கோயமுத்தூர் சிவானந்தா காலனி முனையில் நடத்தி ஐந்தாவது வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கு என்று திரள் முழக்கமிட்டனர். ஆனாலும் அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை.
ஆனால், கோயமுத்தூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மலையாளம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சென்ற வாரம் நிறைவேறியுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழியானது கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டுமென்று கேரள அரசு அவசரச் சட்டம் இயற்றியிருக்கிறது. இந்தச் சட்டத்திற்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளத்திலுள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாவது வகுப்பு வரை மாணவர்களுக்கு மலையாள மொழிக் கட்டாயமாகப் பயிற்றுவிக்க வேண்டுமென்று ஆணைப் பிறப்பித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, அது உடனடியாக அமலுக்கு வருகிறது. மலையாளம் பேசக் கூடாது, எழுதக் கூடாது என்று ஆங்கிலப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகள் அகற்றப்பட்டுவிட்டன.
மலையாளத்தைக் கட்டாயமாக்காத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும், புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் முதல்வருக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு மலையாளம் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் இது அமலாகிப் பல ஆண்டுகளாகிவிட்டன. இப்போது கேரளாவில் அது தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டிலோ 10-ஆவது வகுப்புவரை அல்ல, 5-ஆவது வகுப்பு வரைகூடத் தமிழ் கட்டாயமில்லையே! தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டாமா?
தமிழகத்திலுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் 40 ஆயிரம் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சேர்ந்து சுமார் 2.50 லட்சம் பேர் இருப்பார்கள்.
அவர்களின் மகன்கள், மகள்கள் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்றும் உத்தரவிட வேண்டும். ஆசிரியர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்தால்தான், அரசுப் பணியாளர்களும் பின்பற்றுவார்கள்.
இந்த கல்வியாண்டு தொடங்க இன்னும் ஒரே மாதம்தான் மிச்சமிருக்கிறது. கேரளாவைப் போல தமிழக அரசு தைரியமாக இதை நிறைவேற்றுமா?

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com