உறவுகளை அறிவோம்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கோடை கால விடுமுறை தொடங்கிவிட்டிருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கோடை கால விடுமுறை தொடங்கிவிட்டிருக்கிறது.
கல்வியாண்டு துவங்கும் போதிலிருந்து ஆண்டு இறுதி வரை அதாவது ஜூன் மாதம் முதல் மறு ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை மாணவர்கள் தங்கள் வகுப்புத் தேர்வுகளில் மூழ்கியிருந்து கல்வியாண்டை நிறைவு செய்கிறார்கள்.
பொதுவாக இப்போதெல்லாம் தேர்வு முடிந்தாலும் மாணவர்கள் கோடை விடுமுறையைக் கழிக்க உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்பது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக இன்டர்நெட், கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அல்லது பல்வேறு தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு செல்கிறார்கள்.
பொதுத் தேர்வு என்றால் முந்தைய ஆண்டின் நடுப்பகுதியிலேயே (பத்தாம் வகுப்பு என்றால் 9-ஆம் வகுப்பின் நடுவில், பிளஸ் 2 என்றால் பிளஸ் 1 வகுப்பின் நடுவில்) அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுக்காகப் பாடம் நடத்துவதைத் தனியார் பள்ளிகள் தொடங்கி விடுகின்றன.
தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் பொதுத் தேர்வு பாடத்திட்டத்தை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர்கள் படிக்கிறார்கள். இதனால் பாடத்தின் மீது மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.
மாணவ, மாணவியர் எப்போதுமே பாடத்திட்டத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றனர். நாட்டு நடப்புகளைக் கூடத் தெரிந்து கொள்வதில்லை. இதனால் அவர்கள் தடம் மாறிப் போகவும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
கோடை விடுமுறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதற்குப் பிள்ளைகளைப் பெற்றோர் பழக்க வேண்டும். அப்போதுதான் உறவுகளின் அறிமுகமும் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழும் பழக்கமும் தெரியவரும்.
அத்தை, மாமா, சித்தி, பெரியம்மா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி என உறவுகளின் அருமையையும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் குழந்தைகளின் செல்லச் சண்டைகளுடன் கூடிய வாழ்க்கை முறையையும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
ஆறு, கிணறு, ஏரி அல்லது குளத்தில் குளித்துவிட்டு வருவதும் பல்வேறு விஷயங்களில் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையைப் பிறருக்குத் தெரிய வைப்பதும் வாழ்க்கை ரசிக்கும் தருணங்கள்.
கோயில் திருவிழா என்பது உறவுகளை இணைக்கும் பாலம். அப்போதுதான் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீடும் பல்வேறு வகையான சிறப்பு விருந்துகளுடன் களைகட்டும், உறவுகளின் நெருக்கமும் அதிகரிக்கும்.
ஆனால் இப்போதோ பூட்டிக் கிடக்கும் வீட்டுக்குள், கையடக்கக் கணினியை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் தாய், தந்தையர். வெறுத்துப் போகும் குழந்தைகளும் அதையே பழகிக் கொள்கின்றன. இதனால் உறவுகளின் அருமையும் பெருமையும் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. அவர்கள் உலகம் வெறுப்புடன் கூடியதாக மாறிவிடுகிறது.
குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அவர்களை நீச்சல் பயிற்சிக்கு அனுப்பலாம். கிணறுகளிலும் ஆறுகளிலும் குளிப்பதற்கு வாய்ப்பிருப்பவர்கள் அங்கு அழைத்துச் செல்லலாம்.
முன்பெல்லாம் வீடுகளுக்கு வெளியில்தான் விளையாட்டு. ஆனால் இப்போது டிவி அல்லது கணினியைத் தவிர வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை.
இப்போதும் கிராமப்புறங்களில் கூடும் வாரச் சந்தைகளுக்கு அழைத்துச் சென்று அவற்றின் நடைமுறையை அறியலாம். விவசாயம் குறித்தும் அதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் தெரியப்படுத்தலாம்.
இப்போதைய சூழ்நிலையில் வீட்டு உபயோகப் பொருள்களைப் பழுதுபார்க்கும் பயிற்சியை மாணவ, மாணவியர் கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் படிக்கும்போதே பொருளீட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
பிள்ளைகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் விருப்பத்தை அவர்களிடம் திணிக்கக் கூடாது. ஆனால் அவர்களின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும்.
பெற்றோர் பிள்ளைகளுடன் கோடை விடுமுறையில் ஏதாவது ஓரிடத்துக்குச் சுற்றுலாச் செல்ல வேண்டும்.
பிள்ளைகள் தவறே செய்தபோதும் பெற்றோர் அவர்களை விரோதிகளாக பாவிக்கக் கூடாது.
நண்பர் ஒருவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருடனே இருந்த அவருடைய தந்தை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை. தன் மகன் இறந்துவிட்டதாக தந்தை சொல்வதை நண்பரின் மகன் கேட்டுவிட்டான். ஆனால் நண்பர் உயிர் பிழைத்துவிட்டார். தாத்தா சொன்ன ஒரு வார்த்தைக்காக அவருடைய பேரன் கடந்த சில ஆண்டுகளாக அவருடன் பேசுவதேயில்லை.
அந்த நண்பரின் தங்கை மகளுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியின் சேர்த்தனர். மகன்வழிப் பேரனுக்கும் பணம் கொடுத்துச் சேர்த்துவிடலாம் என்றார் தாத்தா.
ஆனால் பேரனோ, தாத்தா பணம் கொடுத்தால் கண்டிப்பாகப் படிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.
பேரன் மீது அதிக பாசமாக இருக்கும் தாத்தா அதற்காக மிகவும் வருத்தப்பட்டார் இப்போது வருந்தி என்ன பயன்?
ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு வெளியே செல்வதென்பது மனக்கசப்பை மாற்றும். இதுவரை இல்லாவிட்டாலும் இனிமேலாவது குடும்பத்துடன் ஒவ்வோராண்டும் சுற்றுலா சென்று மனம் விட்டுப்
பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com