இதுவா மக்கள் விருப்பம்?

கடந்த நூற்றாண்டில் அறிமுகமான திரைப்படக் கலை நமது நாட்டுக் குடிமக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பிரம்மாண்டமானது.

கடந்த நூற்றாண்டில் அறிமுகமான திரைப்படக் கலை நமது நாட்டுக் குடிமக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பிரம்மாண்டமானது.
குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் திரை நாயக - நாயகிகளைத் தங்களை ரட்சிக்க வந்த கடவுளராகவே நம்பி அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வாரிக்கொடுத்திருக்கின்றனர். இவ்வகையில் ஆந்திரா முதலிய பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவே தமிழ்நாடு விளங்கி வருகிறது.
இதன் காரணமாகவே, வெவ்வேறு கால கட்டங்களில் முன்னணித் தமிழ் நட்சத்திரங்களாக விளங்கும் ஒரு சிலருக்கு நாமும் அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்தால் என்ன என்ற ஆசை ஏற்படுவதையும் பார்த்து வருகிறோம்.
திரைத்துறையினரின் அரசியல் முயற்சிகள் ஒரு புறம் இருக்கட்டும்.
முன்னணிக் கதாநாயக நாயகிகளின் நடை உடை பாவனைகளை நிஜமென்று நம்பி அப்படியே பின்பற்றும் வளரிளம் பருவத்தினர் இங்கு ஏராளம். ஆடை, சிகையலங்காரம், குளிர்க்கண்ணாடி, புகைபிடித்தல் என திரைநட்சத்திரங்களைத் தங்களது நிஜவாழ்வில் காப்பியடிக்கும் வழக்கம் இன்று வரை நின்றபாடில்லை.
நடிகையரைப் போலத் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் இளம் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
இன்றைய தலைமுறையினரும், தற்கால நாயக நாயகியரின் நடை உடை பாவனைகளைப் பின்பற்றுவது தொடரவேசெய்கிறது.
திரைத்துறை என்பது வெறும் நாயக நாயகியரை மட்டும் கொண்டதல்ல.
தயாரிப்பாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இசைஅமைப்பாளர், நடன இயக்குனர், துணை நடிக - நடிகையர், நகைச்சுவை நடிகர்கள் மற்றும் அவர்களுக்கான தனி வசனங்களையும் காட்சிகளையும் அமைக்கும் (டிராக்) எழுத்தாளர்கள் என அனைவரையும் கொண்ட ஒரு தனி உலகமே திரைத்துறையாகும்.
இளைய சமூகத்தினரின் மீது திரைத்துறையின் தாக்கம் எத்தகையது என்பதை அறியாத இயக்குனரோ கதை - வசன கர்த்தாவோ இருக்க முடியாது.
வித்தியாசமான கதை என்ற பெயரில் நெறியற்ற ஆண்-பெண் உறவு, வெறித்தனமான ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், கள்ள உறவு போன்றவற்றைக் காட்சிப் படுத்தும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு.
'இதெல்லாம் பிஞ்சு மனங்களைக் கெடுக்காதா' என்று கேள்வி எழுப்பப்பட்டால் - 'நாங்கள் என்ன ஊர் உலகத்தில் நடக்காததையா படமாக்கி விட்டோம்?, சினிமா என்பது ஒரு கலை மட்டுமல்ல, வியாபாரமும் கூட இதில் மக்கள் எதிர்பார்ப்பதைத்தான் நாங்கள் கொடுக்க முடியும்' என்று இயக்குனரும் கதை, வசனகர்த்தாவும் நீட்டி முழக்குவார்கள்.
தாங்கள் எடுத்துள்ள விரசமான காட்சிகளுக்குக் கத்திரி போடும் தணிக்கைத் துறையினரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதும் உண்டு.
இவர்கள் இதுவரை வெறும் நெறியில்லா உறவுகளை மட்டுமா கொடுத்தார்கள்....
மது குடிப்பதை நியாயப் படுத்தும் காட்சிகளையும் வசனங்களையும் சேர்த்தல்லவா இவர்களது திரைப்படங்களில் கொடுத்தார்கள்.
காதல் தோல்வி, காதலில் வெற்றி, பரிட்சையில் தேர்ச்சி, வேலைக்குத் தேர்வு, இறப்பு, இழப்பு, கல்யாணம், பிறந்த நாள்.... இதில் எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் ஓர் ஆண் மகன் தனது மகிழ்ச்சியையும் சோகத்தையும் குடித்துத் தீர்த்துக் கொள்வதையல்லவா காட்சிப் படுத்தினார்கள்.
மது அருந்துவது ஆண்பிள்ளைத்தனம் என்று நிறுவுகின்ற காட்சிகள்தாம் எத்தனை. மது அருந்தும் பழக்கமில்லாதவனை, 'நீயெல்லாம் பச்சப்புள்ளை, பாட்டிலை முகர்ந்து பார்த்தாலே மயக்கமாயிடுவே' என்று உசுப்பும் வசனங்களைக் கேட்டு நம் காதுகள் மரத்துப் போய்விட்டன.
அஜீரணத்திற்கு ஒரு தம்ளர் மிளகு ரசம் குடித்தால்கூட, 'என்னடா ராவா சரக்கடிக்கிறியா' என்ற வசனம் இடம் பெறுமளவிற்கு மதுகுடிப்பதை ஊக்குவிக்கும் திரைப்படங்களைப் பிரசவிக்கும் இயக்குநர்களும் வசனகர்த்தாக்களும் சற்றே யோசிக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.
'நாட்டில் நடக்காததையா சொல்லிவிட்டோம்?' 'மக்கள் விரும்புவதைத்தான் தர முடியும்' என்றெல்லாம் நியாயம் பேசிவந்த திரைத்துறையினர், இன்று மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எழுச்சியுடன் நடைபெறும் போராட்டங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
மதுக்கடைகளைத் திறந்து வகைதொகையில்லாமல் மது குடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் வழங்கின என்றால், கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் மது அருந்தச் சொல்லித் தந்தவை திரைப்படங்கள் ஆகும்.
மகிழ்ச்சியை கொண்டாடவும், சோகத்தை மறக்கவும் மது அருந்துவதே சிறந்த வழி என்பதைக் காட்சிகளாலும் வசனங்களாலும் இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் எழுத்தாணி கொண்டு எழுதிய 'பெருமை' திரைத் துறையையே சாரும். சின்னத்திரைக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மது அருந்துபவர்கள் தாமும் கெட்டுத் தமது குடும்பத்தினரின் நல் வாழ்வையும் சிதைத்துவருவதை உணர்ந்த தாய்மார்கள் தன்னெழுச்சியுடன் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடை திறப்புக்கெதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் -இளைய தலைமுறையினரை மதுவுக்கு அடிமைப்படுத்தும் காட்சிகளையும் வசனங்களையும் கொடுப்பதில்லை என்று திரைத்துறையினர் அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும்.
தங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நன்றிக் கடனாக இந்தச் சபதத்தைத் திரைத் துறையினர் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com