விளைந்தும் விலையில்லா நிலை

இந்த ஆண்டு உணவு உற்பத்தி உயர்ந்தும் விலை இல்லாத காரணத்தால் வட மாநில விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர்.
விளைந்தும் விலையில்லா நிலை

இந்த ஆண்டு உணவு உற்பத்தி உயர்ந்தும் விலை இல்லாத காரணத்தால் வட மாநில விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர். இதற்கு நேர்மாறாக வரலாறு காணாத வறட்சியால் தமிழ்நாட்டு விவசாயிகள் கொதித்துப் போய் போராடுகின்றனர்.
எனினும், விளையாமல் கெடுத்ததைவிட விளைந்தும் கெடுத்த கொடுமையே கொடூரமாயுள்ளது. விளையாத வறட்சி மாவட்டங்களை விட விளைந்த மாவட்டங்களில்தான் விவசாயிகளின் தற்கொலை அதிகமாயுள்ளது.
2013-15 காலகட்டத்தில் இந்தியாவில் 36,670 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைப் பட்டியலில் முன்னணி மாநிலமான மகாராஷ்டிராவில் 11,441 தற்கொலைகள், இரண்டாம் நிலையில் கர்நாடகம் 3,740, மூன்றாவது மத்தியப் பிரதேசம் 3,578, நான்காவது ஆந்திரம் 3,562, ஐந்தாவது தெலங்கானா 2,747, ஆறாவது சத்தீஸ்கர் 1,709, ஏழாவதாக தமிழ்நாடு 1,606 என்றும் அறிக.
இதர மாநிலங்களில் 1,000-க்கும் குறைவானவர்களே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகளில் பெரும்பாலும் பருத்தி சாகுபடியில் நன்கு விளைந்தும் விலைவீழ்ச்சியால் ஏற்பட்டவை.
அதேசமயம், பாரம்பரிய விவசாயத்தைத் தொடரும் ஒடிஸா, பிகார், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் அற்ப சொற்பம்தான்.
விவசாயிகளின் தற்கொலைகளுக்கு அடிப்படையான காரணம், வறட்சியைவிட நல்ல விவசாயப் பருவத்தில் அறுவடையை நம்பி வாங்கிய கடனை அறுவடை முடிந்ததும் திருப்பிச் செலுத்த முடியாமல் அதனால் வட்டி உயர்ந்து ஏற்படும் மன உளைச்சல்தான்.
தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சியால் விவசாயமே செய்யாமல், 'வறட்சி நிவாரணம் வேண்டும், கடன் தள்ளுபடி வேண்டும், நதிநீர் இணைப்பு வேண்டும். காவிரியில் தண்ணீர் விட வேண்டும்' என்று பல தரப்பட்ட கோரிக்கைகளை வைத்துக் கோவணாண்டிகளாகவும், கோவணமே கட்டாமலும் உருண்டு புரண்டு தில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து உண்ணாமலும், உண்டும், பலவித வேஷம் போட்டும், போராடியதை மறந்துவிட முடியாது.
'உங்கள் பிரச்னைகளை மாநில அரசு மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று மத்திய அரசு கைவிரித்தவுடன், மாநில முதலமைச்சர் நிகழ்த்திய சமாதானப் பேச்சுக்குப் பின் போராட்டம் வாபசானது.
தில்லியில் தமிழ்நாட்டு விவசாயிகள் நிகழ்த்திய போராட்டத்திற்கு பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். ஏனெனில் அம்மாநிலங்களில் விவசாயிகள் கடனும், விவசாயம் என்ற பெயரில் வாங்கப்பட்ட கடனும் மிக அதிகம்.
ஒரு பக்கம் வறட்சியால் ஏற்பட்ட கடன் காரணமாக எழுந்த போராட்டத்தில் தமிழ்நாடு அடங்கியதும், மத்தியப் பிரதேசம் களத்திற்கு வந்தது. அங்கு தண்ணீர் பிரச்னை இல்லை.
மாறாக பம்ப்பர் அறுவடை. நல்ல உற்பத்தி. நல்ல மகசூல். ஆனால் விலை இல்லை. நாசிக் பெரிய வெங்காயம் 25 பைசாவுக்கும், பருப்பும் கோதுமையும் 4 ரூபாய்க்கும் விலை விழுந்துவிட்டால் விவசாயிகள் பொறுத்துக் கொள்வார்களா?
போராட்டம் உச்ச கட்டம். போலீஸ் துப்பாக்கிச் சூடு. ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆடிப் போன முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தானும் களத்துக்கு வந்து உண்ணாவிரதம் இருந்தார்.
உடனடியான தீர்வுகளை வழங்கி விவசாயிகளை அமைதிப் படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலைக்கு வெங்காயத்தையும், பருப்பு வகைகளையும் அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.
விளையாமல் கெடுத்த விவசாயம், விளைந்து கெடுத்தது மத்தியப் பிரதேசத்தில். விலை வீழ்ச்சிக்கு அடிப்படை இடைத்தரகர்கள் மட்டுமல்ல.
நுகர்வோர் நலன் பாராட்டும் அரசு நல்ல உற்பத்தி உள்ள விளைபொருள்களை இறக்குமதி செய்யும் மதியற்ற போக்கு என்றால் மிகையில்லை. அடுத்த பிரச்னை விவசாயக் கடன்.
விவசாயக் கடன்களில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவதாக, மாநில அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள். இரண்டாவது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இரண்டாம் நிலைத் தனியார் வங்கிகள் மூலம் பெறப்படுபவை. மூன்றாவதாக தனியார் கந்து வட்டி.
இவற்றில் கூட்டுறவு வங்கிக் கடன் மட்டுமே விவசாயக் கடன். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் பிற தனியார் வங்கிகளில் நகையை அடமானம் வைத்து வேறு செலவுகளுக்கு வாங்கப்படும் கடன்களும் விவசாயக் கடனாக ஏற்கப்பட்டு குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது.
ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுவோர்களும், மனை வணி கத்தில் ஏராளமாக பணம் ஈட்டும் கோடீஸ்வரர்களும் விவசாயம் சாராத கோழி வளர்ப்பு என்ற பெயரில் விவசாயக் கடன் வாங்கியுள்ளனர்.
இன்று ரிசர்வ் வங்கி மூலம் பெறப்படும் வங்கிக் கடன் வாராக்கடன்களாக பற்பல லட்சம் கோடி அளவில் ஒவ்வொரு வங்கியிலும் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை மீறி விவசாயக் கடன்களை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை.
ஆகவே பொறுப்பு மாநில அரசுக்குத்தான். கந்து வட்டி வழங்குவோரைக் கட்டுப்படுத்துவதும் மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமே. எது எப்படியென்றாலும் விவசாயிகளுக்குக் கடன் நிவாரணம் அவசியம்.
அவ்வாறு கடன் நிவாரணம் வழங்கும் முன் நிவாரணம் ரியல் எஸ்டேட்டுக்கும், மணல் கொள்ளைக்கும் போய்விடாமல் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்க வழிகோலுவது மாநில அரசின் கடமை.
விவசாயக் கடன் பற்றிய புள்ளிவிவரம் பொதுவானது. ஏழைக் கடன், பணக்காரக் கடன் என்று வித்தியாசப்படுத்த இயலாவிட்டாலும் அது குறித்த பார்வை கவனத்திற்குரியது.
2015-16 புள்ளிவிவர அடிப்படையில் நமது விவசாய உணவு உற்பத்தி 25.22 கோடி டன். மொத்த விவசாயக் கடன் 1,26,000 கோடி ரூபாய். சராசரியாக இந்திய விவசாயக் குடும்பத்தின் கடன் ரூ.47,000. விவசாயிகளில் 51 சதவீதம் பேர் கடனாளிகள். சராசரி விவசாயக் குடும்ப வருமானம் ரூ.6,426.
மாநில வாரியாகப் பகுத்துப் பார்த்தால் இந்தியாவில் இன்று மத்தியப் பிரதேசத்தின் விவசாய உற்பத்தியே நல்ல வளர்ச்சியுடன் குறைந்த கடனில் இயங்குகிறது. மத்தியப் பிரதேச உணவு உற்பத்தி சுமார் 3 கோடி டன். சராசரி குடும்பக் கடன் ரூ.32,100.
தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி 1.2 கோடி டன். இந்திய உற்பத்தியில் 4 சதவீதமே. ஆனால் சராசரி குடும்பக் கடன் 1,16,000 ரூபாய். சுமார் 90 சதவீத விவசாயிகள் கடன் சுமையில் உள்ளனர்.
இந்தப் புள்ளிவிவர அடிப்படையில் கவனித்தால் கடன்பட்ட நபர்களில் நிஜமான விவசாயிகள் குறைவு என்றும் புரிந்து கொள்ளலாம். விவசாயக் கடன் விஷயத்தில் வடக்கு மாநிலங்களைவிடத் தெற்கு மாநிலங்களே கூடுதல் கடன் சுமையில் உள்ளன.
வட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா நீங்கலாக மற்ற எல்லா மாநிலங்களிலும் கடன் சுமையும், விவசாயிகளின் தற்கொலைகளும் கவலைப்படும்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தில் பாரம்பரியங்களை ஓரளவு காப்பாற்றி வரும் ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கிழக்கு உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் உற்பத்திக்கும் கடனுக்கும் உள்ள நல்லுறவு போற்றும்படி உள்ளது.
விவசாயக் கடன் விஷயத்தில் பஞ்சாப் முதலிடம். தமிழ்நாடு இரண்டாவது இடம். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மாநில அரசின் பொறுப்பில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள கடன் சுமை தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அளவில் மூன்றில் ஒரு பங்குதான்.
ஆகவே, உ.பி.யைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டுக்கு ஏன் மைய அரசு உதவவில்லை என்று கேட்பது நியாயம் இல்லை. அந்தந்த மாநில அரசுகள்தான் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
எனினும், இப்போதுள்ள பிரச்னை விளைந்தும் விலையில்லாமல் நஷ்டப்படும் விவசாயிகளின் துயரம்தான். இது தணிந்துவிட்டால் கடன் என்பது பிரச்னையாக இருக்காது.
அறுவடை சமயத்தில் ஏற்படும் விலைவீழ்ச்சிக்கு காணப்பட வேண்டிய தீர்வே நிரந்தரமான தீர்வு. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் பாதுகாப்பான சந்தைத் திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டால் நல்ல விளைச்சல் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெற்று அதிக உற்பத்தி அதிக ஊக்கம் என்ற நிலை ஏற்படும். விவசாயத்தில் விளைந்தும் ஏற்படக்கூடிய நெருக்கடி தவிர்க்கப்படும்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com