பொருளாதாரச் சுழலில் வெனிசூலா!

தென் அமெரிக்க நாடுகளில் அரசியல் குழப்பங்களும், ஆட்சி மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. வெனிசூலா எண்ணெய் வளம்

தென் அமெரிக்க நாடுகளில் அரசியல் குழப்பங்களும், ஆட்சி மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. வெனிசூலா எண்ணெய் வளம் மிக்க நாடு. அதன் பொருளாதாரம் முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் உற்பத்தி, அதன் ஏற்றுமதி மூலம் கிடைக்கிற வருமானத்தைச் சார்ந்தே இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயருகிறபொழுது அல்லது வீழ்கிற பொழுது வெனிசூலாவின் பொருளாதாரமும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
வெனிசூலாவின் அரசியல் வரலாற்றில் 1980 மற்றும் 1990 மிகவும் கொந்தளிப்பான காலம். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் எண்ணெய் நிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே சென்றது. பெரும் செல்வத்தில் கொழித்த அம்முதலாளிகள் தலைநகர் கராகஸில் பெரிய பெரிய மாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். தங்கள் செல்வத்தைக் கொண்டு அமெரிக்காவின் மயாமி தீவில் மாளிகைகளை, உல்லாசக் கப்பல்களை வாங்கிப் போட்டு களிப்போடு வாழ்ந்து வந்தனர்.
ஆனால் மறுபுறம், அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாமல் அதே காரகாஸ் நகரில், பாரிஸ்ஸோ என்றழைக்கப்படும் நெருக்கடி மிக்க குடிசைப்புறங்களில் கல்வி, மருத்துவ வசதியற்று மக்கள் வாழ்ந்து வந்தனர். பல பத்தாண்டுகளாக வெனிசூலாவின் ராணுவமும், அரசு அமைப்புகளும் லஞ்ச ஊழலில் ஊறிப்போயிருந்தன. சொல்லப்போனால் அவை தனது முதலாளிகளுக்குச் சேவை செய்வதோடு மட்டுமல்லாமல் எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்க கொள்ளையிலும், கொலையிலும் ஈடுபட்டு குற்றமயமாகிப் போயிருந்தன.
1980}களின் துவக்கத்தில் அரசியலில் ஈடுபடத் துவங்கிய ஹியூகோ சாவேஸ் வெனிசூலாவின் சுரண்டல் அரசியல் பொருளாதார அமைப்புக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார்; சிறை சென்றார். தனது அரசியல் போராட்டங்களின் உச்சமாக சாவேஸ் பல இடதுசாரிக் கட்சிகளை ஒன்றிணைத்து 1997}இல் வெனிசூலா யுனெடெட் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினார். கடும் அதிருப்தியில் இருந்த ஏழை எளிய மக்கள், முதலாளித்துவத்திற்கு எதிராக சோஷலிஸமே தனது கொள்கை என்று முழங்கிய சாவேஸின் கரங்களில் 1999}இல் ஆட்சியை ஒப்படைத்தார்கள்.
மக்கள் சார்ந்த நீண்ட அரசியல் போராட்ட அனுபவங்களின் பின்னணியில் 1999}இல் வெனிசூலாவின் தலைவரான சாவேஸ் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதோடு, நாட்டின் பொருளாதாரத்தை சோஷலிஸலிப் பாதையில் கட்டி எழுப்பினார். எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்கினார். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் அரசுக்கு வந்து சேர்ந்ததும் பள்ளிக்கூடங்களை, மருத்துவமனைகளை நிறுவினார். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மக்களே பங்கேற்கிற "கொம்யூனல் கவுன்சில்" என்ற அமைப்புகளை உருவாக்கி ஏழை எளிய மக்களுக்கு அரசின் நிதி போய் சேர்வதை உறுதி செய்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சொந்த வீடு கிடைக்க நீண்டகாலத் திட்டங்களை அவை உருவாக்கிக் கொள்ள ஊக்குவித்தார். உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு வீட்டில் இருந்துகொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு அரசு ஊதியம் அளிக்கும் என்று அறிவித்து அதனைச் செயல்படுத்தினார். சாவேஸின் இந்த நடவடிக்கைகள் வெனிசூலாவின் அடித்தட்டு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்கள் சாவேஸை தங்கள் நாயகனாகக் கொண்டாடினார்கள்.
ஊடகங்களுக்கு சாவேஸ் முழு சுதந்திரம் அளித்திருந்தார். ஆனால் அவை சாவேஸுக்கு எதிரான முதலாளிகளின் கையில் இருந்தது. ஊடகங்கள் அனைத்தும் சாவேஸை கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி என்று வசை பாடியதோடு அவர் தொடர்ந்து ஆட்சியிலிருப்பது நாட்டுக்குக் கேடு என்றும் திரும்பத் திரும்பப் பேசின. எதிர்க்கட்சிகளுக்கு ரகசியமாக நிதி உதவிகள் செய்யப்பட்டன. கிறிஸ்தவத்துக்கும், கிறிஸ்துவுக்கும் எதிரானவர் சாவேஸ் என்றுகூட வெறிப் பிரசாரம் செய்யப்பட்டது. அதன் உச்சமாக ஏப்ரல் 2011-இல் தலைநகர் கராகஸில் சாவேஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பேரணி நடத்தப்பட்டது. 
அப்பேரணியில் கலந்துகொண்ட அப்பாவிகளை சாவேஸின் கட்சியினரே சுட்டுக் கொன்றுவிட்டதாக ஊடகங்களில் பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்துவிட்டனர். சி.ஐ.ஏ. அமைப்பினால் முன்னரே செய்யப்பட்ட ஏற்பாட்டின்படி வெனிசூலா ராணுவத்தின் 20 உயரதிகாரிகள் ஒன்று சேர்ந்து சாவேஸைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ராணுவத்தின் ஒரு சிறு படையை வைத்து சாவேஸை கைது செய்து ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.
பெட்ரோ கார்மனோ என்கிற பெரும் பணக்காரர் அதிபராக அறிவிக்கப்பட்டார். சாவேஸின் அனைத்து திட்டங்களையும் ரத்து செய்தார் புதிய அதிபர். ஆனால், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழாதது நிகழ்ந்தது. லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தலைநகர் கராகஸின் வீதிகளில் இறங்கித் தலைவர் சாவேஸை ஒப்படைக்கக் கோரி முழங்கினர். அவர்களுக்கு ஆதரவாக வெனிசூலா ராணுவத்தின் அடித்தட்டு படைவீரர்கள் களத்தில் இறங்கினர். பெட்ரோ கார்மனோ அதிபர் பதவியை உதறித்தள்ளிவிட்டு விமானம் ஏறி அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
ஹியூகோ சாவேஸ் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2012 முதல் இரண்டாண்டுகள் துணை அதிபராகவும் இருந்த நிக்கோலஸ் மடூரோ கடந்த 2013 முதல் வெனிசூலாவின் அதிபராக இருந்து வருகிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றும், 2016}இல் இவருக்கு எதிராகப் போராட்டம் நடந்தும்கூட அவரை அதிகாரத்திலிருந்து இறக்க முடியவில்லை. உச்சநீதிமன்றமும், ராணுவமும் அவருக்குத் துணை நிற்கின்றன.
2003 முதல் 2007 வரை வெனிசூலா அரசு தனது வருமானத்தை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து சோஷலிஸலி பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தொடர்ந்த சதி வேலைகளால் சாவேஸுக்கு எதிராக ஒரு பகுதி மக்களை எதிர்க் கட்சிகள் கணிசமாகத் திரட்ட முடிந்திருக்கிறது எனவும் அவர்கள் கருதுகிறார்கள். உலகின் பல பகுதிகளில் குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெட்ரோலியத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் வியாபாரம் செழிப்பாகவே இருந்து வந்துள்ளது. 2010}க்குப் பின்னர் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் ஏற்பட்ட ஒற்றுமையின்மையினாலும், போட்டியினாலும் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் தாங்கள் ஒப்புக்கொண்ட அளவுக்கு மேல் அதிக எண்ணெய் உற்பத்தியில் ரகசியமாக ஈடுபடத் துவங்கியதாகப் பொருளாதாரப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இது தேவைக்கு அதிகமாக உற்பத்தி என்ற நிலைக்குப் போய், 2014 முதல் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரியத் துவங்கியது. இன்று மூன்றில் ஒரு பங்காகக் குறைந்த கச்சா எண்ணெயின் விலையினாலும் இதர எண்ணெய் உற்பத்தி நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு விற்பதனாலும் வெனிசூலாவின் எண்ணெய் உற்பத்தியும், ஏற்றுமதியும் தடைபட, வருமானம் பெருமளவுக்கு சரிந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் வெனிசூலா சிக்கிக்கொண்டுள்ளது. 
அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் வெனிசூலாவுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது எனக் கைவிரித்து விட்டன. 
தற்போது வெனிசூலாவிலிருந்து வரும் செய்திகள் கூறுவது என்னவெனில், அரசிடம் செலவழிக்கப் பணமில்லை; அங்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; தண்ணீருக்கும், மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது; உணவு மற்றும் நுகர்பொருள்களுக்கு இறக்குமதியை நம்பியுள்ள வெனிசூலா தன் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
உணவுப் பொருள்கள் ரேஷன் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. அரசு திறந்து வைத்திருக்கிற கடைகளின் முன் கிலோ மீட்டர் கணக்கில் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணவீக்கம் 700 விழுக்காடு உயர்ந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் அது 1000 விழுக்காடாக உயரும். ஒரு பெரிய மனித அவலம் வெனிசூலாவில் அரங்கேறிக்கொண்டிருப்பதாக அரசியல் சமூக விமர்சகர்கள் கருதுகிறார்கள். 
ஆனால் உலக நாடுகள் ஏனோ அமைதி காக்கின்றன. செஞ்சிலுவைச் சங்கம் (ரெட்கிராஸ்) போன்ற தொண்டு அமைப்புகள்கூட வெனிசூலாவுக்கு உதவி அளிக்க மறுப்பதாகக் கூறுகிறார்கள். குவாதமாலா, நிகராகுவா போன்ற சிறிய நாடுகளின் தலைவர்களாக இடதுசாரிகள் இருக்கிறார்கள். தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பைப் பயன்படுத்தி வெனிசூலாவின் இன்றைய அவல நிலையைப் போக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் பிரேஸில், ஆர்ஜென்டீனா போன்ற பெரிய நாடுகள் வெனிசூலாவின் உதவிக்கு வரத் தயங்குகின்றன. கராகஸ் உலகிலேயே அதிக வன்முறைகள் நிகழும் நகரமாக மாறிவிட்டிருக்கிறது. ராணுவத்தினரின் ஒரு பகுதியினரே உணவுக் கடத்தலில், பதுக்கலில் ஈடுபடுகிறார்கள். மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். உணவுக்காக கடத்தல், கொள்ளை, கொலைகள் நடக்கின்றன. 
வெனிசூலாவின் அடித்தட்டு மக்கள் சாவேஸை இன்னும் நேசிக்கிறார்கள். மடூரோவை ஆதரிக்கிறார்கள். அவர்கள் பட்டினி கிடந்தாலும் வெனிசூலாவின் அரசு தங்கள் அரசு என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக இதுவரை போராடவில்லை. மாறாக அரசை அவர்கள் காத்து நிற்கிறார்கள்.
ஆனால், இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது பெரிய கேள்விக்குறி. அமெரிக்காவில் உள்ள மடூரோவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவர் அமெரிக்காவில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சர்வாதிகாரி என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். ஒருபுறம், வீழ்ச்சி கண்டிருக்கும் வெனிசூலா பொருளாதாரம், இன்னொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பகை. உதவிக்கு வரத் தயங்கும் பிரேஸில், ஆர்ஜென்டீனா உள்ளிட்ட அண்டை நாடுகள். எப்படி, எத்தனை காலம் சமாளிக்கப் போகிறார், அதிபர் நிக்கோலஸ் மடூரோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com