சிறு தானிய உற்பத்திக்கு முன்னுரிமை

வரும் 2018-ஆம் ஆண்டை "உலக சிறு தானியங்கள் ஆண்டாக' அறிவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் 2018-ஆம் ஆண்டை "உலக சிறு தானியங்கள் ஆண்டாக' அறிவிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பான பரிந்துரையையும் மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளது. 
இந்தியா முன்வைத்துள்ள இக் கோரிக்கை ஏற்கப்படுமானால், நுகர்வோர், கொள்கைகளை வகுப்போர், தொழில் துறையினர் மற்றும் வேளாண் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு சிறு தானியங்கள் குறித்தும், அவற்றின் தேவை, பயன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும் என்பது திண்ணம்.
தற்போது நாட்டில் உணவுப் பொருள்கள் தேவை அதிகமாக உள்ளது. மக்கள் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் அரிசியையே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. உணவு தானிய வரத்துக் குறைவால், விலைகள் உயர்ந்துள்ளன என்று அவ்வப்போது காரணம் சொல்லப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டித் தரும் குறிப்பிட்ட சில உணவு தானியங்களை மட்டும் விவசாயிகள் சாகுபடி செய்வதும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந் நிலையில் பரந்துபட்ட தானியங்களை சாகுபடி செய்ய வேண்டியது அவசியம் என்பதை விவசாயிகளும் அதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை மக்களும் உணர வேண்டும்.
சிறு தானியங்கள் எனப்படும் வரகு, சாமை, மாப்பிளை சம்பா, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம் முதலியவை தற்போது நாம் பயன்படுத்தி வரும் அரிசி, கோதுமைக்கு மாற்றாக விளங்கும். இவை ஒன்றும் புதிய பயிர்கள் அல்ல. நம் முன்னோர்கள் எல்லாம் விடியற்காலையில் கம்பங்கூழைக் குடித்துவிட்டுத்தான் வயலுக்குச் சென்று நாள் முழுவதும் உழைத்துவிட்டு, மாலையில் வீடு திரும்புவர். இத்தகைய சிறு தானியங்களே அவர்களது பிரதான உணவாக இருந்தது. காலமாற்றத்துக்கேற்ப, இவையெல்லாம் வழக்கொழிந்துவிட்டன.
இன்று ஏதோ புதிய வகை உணவு தானியமாக நம்முன் காட்சியளிக்கின்றன. தற்போது உணவுத் தேவையை சமாளிக்க சிறு தானியங்களை அதிக அளவில் பயிரிட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளது. வேளாண் துறையினர் இதைப் பெரிதும் வலியுறுத்தி வருகின்றனர்.
வளரும் நாடுகளிலேயே சிறு தானியங்கள் பெருமளவு பயிரிடப்படுகின்றன. இந்தியா, ஆப்ரிக்காவில் இவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகின்றன. இருந்தாலும், உற்பத்திப் பரப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.
நமது நாட்டில் சுமார் 130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத் தொழிலையே தங்களது பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனர். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, வேளாண் ஆராய்ச்சிப் பணிகளில் இந்தியா வலுவாகவும் முன்னிலையிலும் உள்ளது. நெல், கோதுமை, பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பால், பால் பொருள்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றுள்ளது. இருந்தாலும், பருவநிலை மாறுபாடு, இயற்கைச் சீற்றம், மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. முதல் பருவத்தில் அதிக உற்பத்தி, அடுத்த பருவத்தில் குறைவான உற்பத்தி என சமநிலையற்ற போக்கு நிலவுகிறது. மேலும், விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவரும் நிலையில், சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது. 
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.3 சதவீதமாக அதிகரித்திருந்த உணவு தானிய உற்பத்தி, இரண்டாவது காலாண்டில் 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், தேவை அதிகரித்து வருகிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். மாற்றுப் பயிருக்கு மாற வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. 
வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை சோறு, களி, கூழ் என்று பல்வேறு வடிவங்களில் உணவுப் பொருள்களாக இருந்த நிலை மாறி, இன்று மருந்துப் பொருள்களாகக் காட்சியளிக்கின்றன. சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் சாப்பிட வேண்டிய பொருள்களாகிவிட்டன. தமிழகத்தைப் பொருத்தவரையில் பரவலாக இவை சாகுபடி செய்யப்படவில்லை. குறைந்த அளவிலேயே இவை சாகுபடி செய்யப்படுவதால், இவை அதிக அளவில் சந்தைக்கு வருவதில்லை. மானாவாரிப் பயிர்களான இவை, குறைந்த காலத்தில் அதிக மகசூலைத் தரக்கூடியவை என்று விவசாயிகளுக்குப் போதிய விழிப்புணர்வு அளிக்கப்படவில்லை.
மேலும், பெரு நகரங்களில் உள்ள பெரிய அங்காடிகளில் இவற்றுக்கென தனிப் பிரிவை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதுபோல, இயற்கை உணவகங்கள் என்ற பெயரில் நகரங்களில் இவை செயல்படுகின்றன. அங்குதான் பல்வேறு வகையான உணவு வகைகள் கிடைக்கின்றன.
மத்திய - மாநில அரசுகள் சிறு தானியங்கள் சாகுபடி செய்வது குறித்தும், அவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த பத்தாண்டுகளில், ஏதாவது ஓராண்டை "உலக சிறு தானியங்கள் ஆண்டு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாகுபடி முறையில் ஆகட்டும், உணவாகப் பயன்படுத்துவதில் ஆகட்டும் சிறு தானியங்கள் எளிதானவையே, சிறந்தவையே என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றை சாகுபடி செய்ய அதிக நீர் தேவைப்படாது. பராமரிப்புச் செலவும் குறைவே. இவை பசி தாங்கும் தானியங்கள். அரிசியை விட கம்பு அதிக இரும்புச்சத்து கொண்டது. இதில் கால்சியம், புரதம் ஆகியவை அதிகம் உள்ளன. கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு.
சீனாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தினைப் பயிரானது இதயத்தை வலுப்படுத்தப் பெரிதும் உதவும். உடல் எடையைக் குறைக்க வரகு சிறந்த உணவுப் பொருள் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள், மானியங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். விளைந்த சிறு தானியங்களை சந்தைப்படுத்த உரிய வழிமுறைகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அனைத்து பகுதிகளிலும் இவை தாராளமாகக் கிடைக்க சிறப்பு அங்காடிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் இவற்றை உணவாகப் பயன்படுத்த, இவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com