விக்கிரமாதித்தனும் வேதாளமும்

குஜராத் மாநிலத் தேர்தலையொட்டி ஆமதாபாத் நகரமே தேர்தல் பிரசாரக் களைகட்டியிருந்தது. பொதுவாகத் தேர்தல் வந்தாலே மக்கள் என்ன நினைப்பார்கள்?

குஜராத் மாநிலத் தேர்தலையொட்டி ஆமதாபாத் நகரமே தேர்தல் பிரசாரக் களைகட்டியிருந்தது. பொதுவாகத் தேர்தல் வந்தாலே மக்கள் என்ன நினைப்பார்கள்? ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருவது வழக்கமானதுதான். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் போட்டியிடும். தேர்தலில் வென்றவர்கள் ஆட்சியமைக்கப் போகிறார்கள். மற்றபடி என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது? என்றுதான் நினைக்கத் தோன்றும்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது மாநிலத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினார். அவரை தேசத்தின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட மனிதராகவே குஜராத் மக்கள் பார்க்கின்றனர்.
குஜராத் வளர்ச்சிக்காக அப்போது முதலமைச்சராக இருந்த மோடி செய்த நல்ல காரியம் என்ன தெரியுமா? மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை நிறுவ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி ஆவேசத்துடன் கூறி, டாடா நிறுவனத்தை விரட்டி
யடித்தபோது மோடி, டாடா நிறுவனத்தின் தலைவருக்கு குறுஞ்செய்தி மூலம் 
அழைப்பு விடுத்தார். அதில் "உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம். உங்கள் நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்கு குஜராத்தில் நாங்கள் இடம் தருகிறோம்' என்று கூறியதுடன், சன்ஸôத் நகரில் அந்த தொழிற்சாலைக்குத் தேவையான நிலத்தையும் ஒதுக்கித் தந்தார். அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைக்கு உரிமம் வழங்கியதுடன் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். 
இன்று சன்ஸôத் நகரம் ஆட்டோமொபைல் தொழிலில் முக்கிய கேந்திரமாக விளங்கி வருகிறது.
மகாராஷ்டிரம், தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் முறையே 10.8 சதவீதமாகவும், 10.3 சதவீதமாகவும் இருந்தாலும் குஜராத்தில் வளர்ச்சி விகிதம் 10.1% என்ற அளவிலேயே இருந்தது. இருப்பினும் தேசிய சராசரியை விட இது அதிகம்தான். இன்னும் சொல்லப்போனால் மாநிலத்தில் வேகமான வளர்ச்சி இருப்பதைக் காணமுடிந்தது. 
ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது தொழில் செய்வதற்கான நிலத்தைக் கொடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. தொழில் நடத்துவதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதிலும்தான் உள்ளது.
சாலை மேம்பாட்டு வசதி, மின்னுற்பத்தியில் தன்னிறைவு, குடிநீர் பிரச்னை எனப் பல்வேறு விஷயங்களில் மோடி கவனம் செலுத்தி, மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார். ஆனால், அவர் செய்த ஒரே தவறு மனித ஆற்றலை மேம்படுத்தாததுதான்.
மனிதர்களின் சராசரி ஆயுட்காலம், குழந்தைகள் இறப்பு விகிதம், மகளிர் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை. இதில் கேரளம், மகாராஷ்டிரம் , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. குஜராத் இவற்றில் பின்தங்கியுள்ளது. அதாவது, ஹிமாசல மாநிலத்தின் வளர்ச்சியைக்கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்தன. கல்வி மேம்பாட்டில் அரசு போதிய கவனம் செலுத்தாததால் இடைநிலைக் கல்வியில் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். அதாவது, பள்ளிப் படிப்பை கைவிட்டவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 48 சதவீதத்தைவிட அதிகம். 
பொது சுகாதாரமும் முறையாகப் பேணப்படவில்லை. கர்நாடகம், ஆந்திரம் போல் அல்லாமல் குஜராத் மக்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றுதான் கூறவேண்டும். சூரத், ராஜ்காட், ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தரமான மருத்துவர்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், திறன் மிகுந்த பணியாளர்கள்தான் இன்றைய தேவை.
இதனால்தானோ என்னவோ குஜராத் இளைஞர்கள் பலரும் வர்த்தகத்தில் இறங்கி விட்டனர். திறன் இல்லாததால் வேலையின்மை அதிகரித்ததை அடுத்து, அவர்கள் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் படேல் சமூகத்தினர். இவர்கள் அரசு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு கோரி ஹார்திக் படேல் தலைமையில் போராடி வருகின்றனர். பா.ஜ.க.வினர் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காதலால் இந்தத் தேர்தலில் காங்கிரஸýடன் இவர்கள் கைகோர்த்துள்ளனர். எனினும், இவர்களில் ஒரு பகுதியினரே காங்கிரஸýக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அது தங்கள் தேர்தல் வெற்றியை பாதிக்காது என்று பா.ஜ.க.வினர் கருதுகின்றனர். 
இதேபோல மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வாக்குகள் காங்கிரஸ், பா.ஜ.க. என பிரிந்து கிடக்கிறது. இதர பிற்பட்ட வகுப்பு மக்களின் தலைவராகக் கருதப்படும் அல்பேஷ் தாக்கூர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதால், பா.ஜ.க.வுக்கு சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் தலைவராகக் கூறிக்கொள்ளும் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார். தலித் மக்கள் 6.7 சதவீதம்தான் என்றாலும் தங்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாகவும், சமூக ரீதியில் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறிவருகின்றனர்.
மாநிலத்தில் பழங்குடி வகுப்பினர் 15 சதவீதம்பேர் உள்ளனர். இவர்கள் வழக்கமாகக் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருவார்கள். ஆனால் இந்தத் தேர்தலில் அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அரசு இவர்களுக்கு எனப் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தியுள்ளதுதான் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் ஹார்திக் படேல் மற்றும் தாக்கூர் ஆதரவாளர்கள் எதிர் எதிரான நிலையைக் கொண்டுள்ளனர். ஹார்திக் படேலுக்கு தனித்துவ அடையாளம் ஏதும் இல்லை. அவரது அமைப்புக்குப் பின்புலமும் இல்லை. மேலும், தாக்கூரின் ஆதரவாளர்களான இதர பிற்பட்ட வகுப்பினர் குஜராத்தின் வடக்குப் பகுதியில் மட்டுமே செல்வாக்காக உள்ளனர். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுல் காந்தி சுறுசுறுப்புடன் தேர்தல் பிரசாரம் செய்தாலும் அவருக்குப் பக்கபலமாக துணை நிற்கும் தலைவர்கள் இல்லை. இதனால் தொண்டர்கள் சோர்ந்துபோய் உள்ளனர். 
குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட வளர்ச்சி இப்போது ஆட்டம் காண்கிறதா என்று கேட்டால், "ஆம்' என்று சொல்லலாம். ஆனால், இதனால் எல்லாம் பா.ஜ.க.வின் 22 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துவிடுமா என்று கேட்டால் "ஆம்' என்று சொல்லிவிடமுடியாது. 
ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பு இல்லை. மேலும் காங்கிரஸýடன் கூட்டு வைத்துள்ள மூன்று இளைஞர்களான ஹார்திக் படேல், தாக்கூர், ஜிக்னேஷ் மேவானி ஆகிய மூவருக்குமே அரசியல் அனுபவம் போதாது. ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு மக்கள் கூட்டம் வரலாம். ஆனால் அவையெல்லாம் வாக்கு வங்கிகளாக மாறுமா என்பது சந்தேகமே.
குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் மாதவ்சிங் சோலங்கி காலத்தில் அக்கட்சி தேர்தலில் சாதனையாக 149 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், அந்த சாதனையை இந்தத் தேர்தலில் அமித்ஷாவால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே.
சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களைப் போல் நரேந்திர மோடிக்கும் மக்களிடையே இன்றனவும் செல்வாக்கு நீடிக்கிறது. எனவே, ராகுல் தலைமையில் காங்கிரஸ் என்கிற வேதாளம் எத்தனை முறை முயன்றாலும் மோடி என்கிற விக்கிரமாதித்தனை வெல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது.

கட்டுரையாளர்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் அரசியல் விமர்சகர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com