ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி

மொழிக் கல்வி வேறு; மொழி வழிக் கல்வி வேறு. மொழி, மற்ற பாடங்களைவிட முக்கியமானது. ஏனென்றால், நாம் மொழியைக் கற்று, மொழி வழியாகத்தான் மற்ற பாடங்களையும் கற்கிறோம்.

மொழிக் கல்வி வேறு; மொழி வழிக் கல்வி வேறு. மொழி, மற்ற பாடங்களைவிட முக்கியமானது. ஏனென்றால், நாம் மொழியைக் கற்று, மொழி வழியாகத்தான் மற்ற பாடங்களையும் கற்கிறோம். அதேபோல் கணிதம், மற்ற அறிவியல் துறைக் கல்விக்கு வழியாகவும் துணையாகவும் உள்ளது. விழிகளால் மற்றவற்றை நாம் பார்ப்பதுபோல, மொழியாலும், கணிதத்தாலும் மற்ற துறைகளைப் பார்க்கலாம்; அறியலாம். எனவேதான், ''எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' என்றனர் ஆன்றோர். கண்கள் புற உலகுக்கும், எண்ணும் எழுத்தும் அக உலகுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்குகள்.
ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியும், தாய்மொழிவழிக் கல்வியும் வலுப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகள் வீட்டுச் சூழலிலே தாய்மொழியை நன்கு பேசக் கற்றுக் கொண்டாலும், அதன் இலக்கணத்தை நனவிலி (unconcies) மனத்தில் உள்வாங்கி உரையாடினாலும், அதன் இலக்கணத்தையும் எழுத்து வடிவத்தையும் பள்ளிகளில்தான் கற்கிறார்கள். அனுபவ நிலையிலிருந்து அறிவு நிலைக்கு மொழி வளர்ச்சியடைகிறது.
இந்த அடிப்படையில் பார்த்தால், அண்மையில் தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள வரைவுக் கல்விக் குறிக்கோள் பட்டியலில், ஆங்கில மொழிக் கல்வியை முதல் வகுப்பிலே தொடங்குவது வியப்பாகவும், விவாதத்துக்குரியதாகவும் உள்ளது. யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே, இரு மொழியறிவின் முக்கியத்துவம் பற்றியும் இரண்டாம் மொழியை எப்போது, எப்படிக் கற்பிக்கலாம் என ஆய்வு நடத்தியுள்ளன.
இருமொழியறிவு மாணவனின், படைப்பாற்றலையும், வித்தியாசமாகச் சிந்திக்கும் ஆற்றலையும், பரந்த மனப்பான்மையையும் வளர்ப்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை மிக இளம் பருவத்திலேயே அறிமுகப்படுத்துவதில் சாதகங்களும் சிக்கல்களும் இருப்பதாகவும் உணரப்பட்டுள்ளது.
பொதுவாகச் சிறார்கள் மொழிகளை எளிதாக மட்டுமின்றி, மகிழ்ச்சியுடன் கற்கிறார்கள். குழந்தைகளுக்குத் தடையுணர்வுகள் இல்லை. அவர்கள் புதிய சொற்களை உச்சரிப்பதில் ஆனந்தம் அடைகிறார்கள். ஒரு புதிய உலகினை உருவாக்குவதோடு, புதிய மொழியில் தங்கள் சூழலை அறிகின்றபோது விந்தையுணர்வு பெறுகிறார்கள். ஒரு புதிய 'தான்' (self) பெறுவதாகவும் கருதுகிறார்கள்.
ஆனால், ஆரம்பகாலத்தில் தாய்மொழியையும் இரண்டாம் மொழியையும் இணைத்தே கற்பித்தலில் சிரமங்களும், அதனால் சில சீர்கேடுகளும் உள்ளன என்பதையும் மறக்கக் கூடாது. தாய்மொழித் தளம் உறுதியான பின்தான் அடுத்த மொழியை ஆரம்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், கற்போரின் அறிவாற்றலிலும், தன்னுணர்விலும் பிளவு ஏற்படும் அபாயம் உள்ளது. கூட்டு இரட்டை மொழித் திறன் சிறார்களின் ஆளுமையிலும், மொழியாற்றலிலும் ஒருவகை பிளவையும் இரட்டை நிலையையும் உருவாக்கும்.
வேண்டுமானால், ஆரம்ப (முதல், இரண்டாம்) வகுப்புகளில் ஆங்கிலத்தைக் கேட்கவும், சிறு சிறு சொற்களையும், தொடர்களையும் பேசவும் கற்பிக்கலாம். 
இதற்கு முதற்காரணம் தாய் மொழியிலேயே வரிவடிவத்தை மாணவர்கள் முதல் வகுப்பிலேதான் கற்கிறார்கள். மேலும் தமிழ், ஆங்கில வரி வடிவத்தில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மேலும் ஆங்கிலத்தில் எழுத்துக்கும் ஒலிக்கும் முழுமையான ஒருமைப்பாடு இல்லை. ஓர் எழுத்து பல ஒலிகளைக் குறிப்பதும், ஓர் ஒலியைப் பல எழுத்துகள் குறிப்பதும் கற்போருக்குச் சிக்கலை அதிகரிக்கிறது. இந்தச் சிக்கலைப் பற்றி ஆங்கில மேதை பெர்னாட்ஷாவே விரிவாக எழுதி, ஆங்கில மொழி எழுத்துச் சீர்திருத்தத்துக்காக பெரு நிதியம் விட்டுச் சென்றார்.
எனவே, முதல் வகுப்பில் நர்சரி ரைம்களை மாணவர்கள் இசையோடு சொல்லலாம். அது ஆங்கிலச் சொற்களின் அழுத்தங்களை  (stress) யும், வாக்கியங்களின் சந்தத்தையும் மாணவர்கள் இயல்பாகக் கற்க உதவும். ஏவல் வாக்கியங்களை ஆசிரியர்கள் சொல்ல, மாணவர்கள் அவற்றின்படி செய்து காட்டலாம்.
இரண்டாம் வகுப்பில் கதைப் பாடல்களைப் பாடி, அவற்றை ஒட்டிய கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் கற்பிக்கலாம். உரையாடல் மாணவர்களிடையே நிகழ்த்தவும் செய்யலாம். கதைகளை நாடகமாக்கி நடித்தும் பேசலாம். மூன்றாம் வகுப்பிலிருந்து முதலில் படிக்கவும், பிறகு எழுதவும் கற்பிக்கலாம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் அடிப்படை வாக்கியங்களை, பேசவும், படிக்கவும், எழுதவும் கற்பிக்கலாம்.
மொத்தத்தில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் பேசவும், வாசிக்கவும், எழுதவும் படிப்படியாக, செயல்முறையிலும், உரையாடல், பாடல், கதைகள் மூலமாகவும் கற்பிக்கலாம். படங்கள் வழியாகவும், விடியோ காட்சிகள் மூலமாகவும் கற்பிக்கலாம். ஆனால், ஆசிரியர்களின் மூலம் கற்பதற்கு இணையாக எந்த இயந்திர உபகரணங்களும் உதவ முடியாது. எதையும் அறிந்து கொண்டு செய்வதைவிட, செய்வதன் மூலம் அறிவதே சாலச்சிறந்தது.
தமிழ்வழி ஆரம்ப வகுப்புகளில் உலகைப் புரிந்துகொள்ளவும், படைப்புத்திறனை வெளிப்படுத்தவும் செய்ய வேண்டும். ஆங்கிலம் வழி, கருத்துப் பரிமாற்றத்துக்கும், செய்திகளை அறிந்து கொள்ளவும் செய்யலாம். மாணவர்களுக்கு அறஉணர்வையும் பண்பாட்டுணர்வையும் தாய்மொழி வழி தான் புகட்ட முடியும்.
சென்ற நூற்றாண்டில் அறுபதுகளில் ஆரம்பப் பள்ளியில் இடைநிலைக் கல்வியில் ஆங்கிலப் பயிற்சியை மேம்படுத்த, தமிழக அரசு பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன் சென்னை ஆங்கில மொழி 'காம்பெயின்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தியது. அப்போது, மாணவர்கள் மொழிபெயர்ப்பு முறையிலிருந்து மாறி நேரடியாக ஆங்கில வாக்கியக் கூறுகள் வழியாகக் கற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போது கருத்துப் பரிமாற்ற முறையில் பல மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயன்பாட்டு மொழியாகக் கற்க வழி வகுக்க வேண்டும். எந்த நிலையிலும் தாய்மொழிக் கல்விக்கு அது இடையூறாகக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com