பூனை புலியாகிவிடாது!

எழுதி அச்சிடப்பட்ட புத்தகம் பொதுவெளிக்கானது. அந்தப் புத்தகத்தைப் படிக்கிற எவரும் தன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. சாதகமாகத்தான் கருத்து சொல்ல வேண்டும் என்பது 

எழுதி அச்சிடப்பட்ட புத்தகம் பொதுவெளிக்கானது. அந்தப் புத்தகத்தைப் படிக்கிற எவரும் தன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. சாதகமாகத்தான் கருத்து சொல்ல வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. பாதகமாகவும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது.
ஒரு புத்தகம் வன்முறையைத் தூண்டுகிறது; சமயங்களுக்கிடையில் பகைமையை உண்டாக்குகிறது; ஆபாசமாக இருக்கிறது; பெண்களை இழிவுப்படுத்துகிறது என்று வாசகர்களுக்குப் படுமானால், எதிர்த்து குரல் கொடுக்க எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது. அந்தக் கடும் விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்றுபடுமானால் அரசு அந்தப் புத்தகத்தின் மீது தடை போடுகிறது; புழக்கத்தில் இருக்கும் புத்தகங்களைப் பறிமுதல் செய்கிறது.
எந்த நாட்டிலும் குடிமக்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் என்பது இல்லை. அரசியல் சாசனத்தால் கொடுக்கப்பட்ட சுதந்திரம்தான் இருக்கிறது. அதில் அடிப்படையாக இருப்பது பேசும் சுதந்திரம்; எழுதும் சுதந்திரம். சுதந்திரம் என்பது பூரணமாக வரையறுக்க முடியாதது. சொல்லப்படும் சொல்லில் இருந்து, சொல்லப்படாததையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. எனவே, சில நேரங்களில் சரியாகவும், பல நேரங்களில் தவறாகவும் அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. எனவேதான் ஒரு புத்தகம் சிறப்பானது என்று பாராட்டி, பரிசு வழங்கப்படுகிறது. அதுபோலவே மோசமான புத்தகம், எங்கள் மாண்புகளை குலைக்கிறது; எங்கள் பெண்களை அவதூறு செய்கிறது; அதனை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஒரு புத்தகம் உன்னை பாதிக்கிறது என்றால், உன் சமூகத்தின் பழக்கவழக்கங்களை நிந்தனை செய்கிறது என்றால், அந்தப் புத்தகத்தைப் படிக்காதே. கைகளில் கிடைத்தால் தூக்கி எறிந்து விடு. உனக்கு விருப்பமானதை மட்டும் படி என்று அறிவுரை வழங்குவது அடாவடித்தனம்.
ஒரு வாசகனின் தனிப்பட்ட விருப்பம், எதிர்ப்பு என்பனவற்றின்படி ஒரு புத்தகம் எதிர்க்கப்படுவதில்லை. ஒற்றை மனிதன் தன் சமூகத்தின் குரலாகப் பேசுகிறான். அந்தப் பொதுப் பண்பே கவனத்தில் கொள்ள வேண்டியது.
எழுதும் எழுத்தாளன், சமூகப் பொறுப்பு கொண்டவனாக எல்லோரையும் ஒன்றாகப் பாவித்து எழுதுகிறவனாகச் சமூகம் கருதுகிறது. சமூகத்தின் நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் விதமாக பழக்கவழக்கங்களுக்குப் புது அர்த்தம் கற்பித்து நிந்தனை செய்யும் விதமாக எழுதிப் பணம் சம்பாதிக்க; பரிசுகள் வாங்க முயலும்போது பிரச்னைகள் வருகின்றன.
அசலான எழுத்தாளன் தன் கருத்துக்கும், படைப்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று சமூகம் நெடுங்காலமாக நம்பிக்கொண்டு வருகிறது. அந்த நீண்ட வரலாற்றில்தான் புதிய நூல்களை, படைப்புகளைப் பார்க்கிறது. அந்த நம்பிக்கையை எழுத்தாளனே பொய்ப்பித்து, புகலிடம் தேடி ஓடுகிறபோது சமூகம் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறது. அது அற்பர்கள், கோழைகள் வழக்கமாகச் செய்யும் காரியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
சமூகத்தில் இருந்துதான் எழுத்தாளன் வருகிறான். அதோடு அவன் எங்கிருந்தோ வந்த அறிவு ஜீவி இல்லை. சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளைவிட, தனக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதுதான் முக்கியம். சமூகம் தவறான பிரச்னைகளில் சிக்க வைத்தாலும், தைரியமாக எவ்வாறு 
நடந்து கொள்கிறான் என்று சமூகம் பார்க்கிறது. ஏனெனில், சமூகம் அறிந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் தன்னந்தனியாகவே போராடியிருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார்கள். சிறைக்கும், சாவுக்கும் சிலர் ஆட்பட்டார்கள். ஆனால், அவர்கள் ஒருபொழுதும் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை. அரசிடம், சமூகத்திடம் மண்டியிடவில்லை.
சமூகத்தின் மனசாட்சியாகவே இருந்தார்கள். எதிர்ப்பு இலக்கியம் என்பது தமிழில் நீண்ட நெடிய மரபு கொண்டது. அது ஓர் எழுத்தாளன் படைப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; வாழ்க்கையும் சம்பந்தப்பட்டது. கவி சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படும் கம்பர்க்கு, சோழ மன்னனோடு முரண்பாடு ஏற்பட்டது. அது படைப்பு சம்பந்தப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், கம்பர் மன்னனிடம் பணிந்திருக்கவில்லை.
'மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ' என்று கேட்டுவிட்டு வெளியில் போய்விட்டார். இது கல்லூரிகளில் பாடமாகப் போதிக்க, பட்டிமன்றங்களில் பேசி களிக்கக் கூடியதில்லை. எழுத்தாளன் சுயமரியாதை, தன்மானம் பற்றியது.
மகாகவி பாரதியார் 'இந்தியா' பத்திரிகையில் எழுதிய அரசியல் கட்டுரைகளுக்காக அவர் மீது தேசத் துரோக வழக்குப் போட்டு, சிறையில் அடைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு வந்தது. எழுத சுதந்திரமில்லாத நாட்டில் வாழ வேண்டாமென்று பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரிக்குத் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டார்.
எழுத்தாளர்கள் தன்னைத்தானே நாடு கடத்திக்கொள்வது என்பது, அரசுக்கு எதிராகப் போராடுவது மாதிரிதான். பிரெஞ்சு மொழியின் மகத்தான எழுத்தாளர் விக்டர் யூகோ. லூயிஸ் நெப்போலியன் அதிரடி நடவடிக்கைகள் வழியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி கொண்டான். சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. ஒரு சர்வாதிகாரி நாட்டில் தன்னால் வாழ முடியாதென்று விக்டர் யூகோ தன்னைத்தானே நாடு கடத்திக்கொண்டு 'கொரன் சீ' என்ற பிரிட்டீஷ் தீவில் பதினைந்து ஆண்டுகள் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார். சர்வாதிகாரியான மன்னன் இறந்துபோனதும் நாடு திரும்பினார். பிரெஞ்சு மக்கள் பெரும் திரளாகக் கூடி அவரை வரவேற்றார்கள்.
சுதந்திரம் விரும்பிகள் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள். கால வேறுபாடு எல்லாம் கிடையாது.
சுதந்திரம் என்பதன் பூரணத்துவத்தை அறிந்தவர்கள் எதன் பொருட்டும் அடிமையாவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் சுதந்திரம் விரும்பிகளைக் கொண்டாடுவதற்குக் காரணம், அவர்கள் எல்லோருடைய சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் என்பதால்தான். அவர்கள் தன்னைத்தானே நாடு கடத்திக் கொள்வது என்பது அதிகாரத்தின் மீதான வெறுப்புதான். எல்லாவிதமான அதிகாரத்தையும் எதிர்க்கும் அவர்கள் அராஜகவாதிகள் இல்லை. இயற்கையான சட்டத்திற்குப் பணிந்து எல்லோரும் இன்புற்றிருக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
சுதந்திரம் என்பது இன்னொருவர் கொடுக்கக்கூடியது இல்லை. அது அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதால் கிடைத்ததில்லை. அது இருக்கிறது. எனவே, எழுதப்பட்டிருக்கிறது. எழுதப்படாத காலத்தில் இருந்தே மக்கள் சுதந்திரத்தைப் பேணிக் காக்கப் பலரும் தன்னுயிர் இழந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில் ஜீவிக்கக் கூடியவர்கள் என்றால் அவர்கள்தான்.
சுதந்திரத்தைப் பறிக்கின்ற அரசுகள் இருப்பதுபோல, விற்கின்ற தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய பேசுகிறார்கள், ஊடகங்களில் நேர்காணல் கொடுக்கிறார்கள், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இணையம் வந்துவிட்டதால் ஆள் வைத்து சுட்டுரையில் கருத்து சொல்கிறார்கள். சிலர் ஏற்கெனவே சொல்லப்பட்ட நல்ல கருத்துகளை புதிய மொழியில் சொல்கிறார்கள்.
கருத்து, சுதந்திரம் என்பது பழையது, புதியது என்பது கிடையாது. அவை ஒருபொழுதும் பழையதாவது இல்லை. எந்த மொழியில் சொல்லப்பட்டாலும், எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது மானிட சமூகம் முழுவதற்கும் உரியதாக இருக்கிறது. அதற்குப் பங்கம் வருகிற போதெல்லாம் படைப்பு எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகள் எளிதாகப் புறந்தள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது எதிர்த்தெழுத சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு நாடு எத்தனைதான் செல்வ வளம் கொழிக்கும் நாடாக இருந்தாலும் சரி, மக்களுக்குச் சுதந்திரம் இல்லையென்றால் அது அப்பட்டமாக வறுமையுற்ற நாடு. மனித வளமற்ற நாடு. மனிதர்களின் இயற்கையான குணங்களில் முதலில் இருப்பது தன்னலம் இல்லை, பொதுநலந்தான். அதனைப் பேணிக் காக்கவே எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.
எதிர்ப்பு இலக்கியம் என்பது அராஜகம் புரிய, அவதூறு செய்யக் கூடியதில்லை. அதற்காகக் கூட்டம் போடுவதும், நீதிமன்றம் சென்று வழக்காடுவதும் கிடையாது. எதிர்ப்பு இலக்கியம் ஏற்கெனவே சொல்லப்பட்டது; அங்கீகாரம் பெற்றது என்பதற்காக மூடத்தனத்தையோ, மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதையோ ஏற்பதில்லை. அது மக்களை இணைந்து வாழச் சொல்வது; ஒற்றுமை காண வைப்பது. அதுதான் பன்முகக் கலாசாரம். பன்முகக் கலாசாரம் என்பது மனிதர்களின் கலாசாரம். அது பழையதோ; தோற்றுப்போன தத்துவமோ கிடையாது. ஆனாலும் அதைத் தோற்கடிக்கத் தன் கலாசாரமே உயர்ந்தது; மேன்மையானது என்று தனிப்பட்ட ஆள்களும், அரசுகளும் செயல்படுவதும் தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது.
ஒன்றுபோல் உருவத்தில் இருக்கும் மனிதர்கள் மகாபுத்திசாலிகள். தங்களை - தங்கள் நாட்டை, தங்கள் குடும்பப் பாரம்பரியத்தை நிலைநிறுத்துக் கொள்ளவும் அது நீடுழி இருக்க வேண்டுமென்ற பேரவாவும் கொண்டவர்கள். அதற்காகத் தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு காரியங்கள் செய்வார்கள். அதனை வேர் அறுக்க எழுதப்படுவதுதான் எதிர்ப்பு இலக்கியம். அது வெறுப்பில் உருவானது இல்லை. மானிட வர்க்கத்தின் மீது கொண்ட மாசற்ற பரிவால் ஏற்பட்டது. எல்லோருடைய சுதந்திரத்தையும் நிலைநாட்ட எழுதப்படுவதாகும். அசலான படைப்பு எழுத்தாளர்களுக்கு இவர் தன்னவர், இவர் அந்நியர் என்ற பாகுபாடும் கிடையாது. மானிடப் பரப்பு முழுவதும் அவர்களுக்குச் சொந்தம். அதுவே எதிர்ப்பு இலக்கியத்தின் அடிப்படை.
எதிர்ப்பு இலக்கியம் என்பது எதிர்மறையான அர்த்தம் கொண்டது. சொல்லப்பட்டதன் வழியாகச் சொல்லப்படாததை அறிய வைப்பது. எனவேதான் அசல் எழுத்தாளர்கள் தத்துவஞானிகள் அதில் இயல்பாகவே சேர்ந்துகொண்டு விடுகிறார்கள். எதிர்ப்பு இலக்கியத்திற்கு அங்கீகாரம் இருக்கிறது. அதனை முன்னிறுத்தி பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதினால் சர்வதேச அளவில் கவனிப்பு பெறலாம், பரிசுகள், பாராட்டுகள் பெறலாம் என்று சிலர் எல்லா நாடுகளிலும் கிளம்பி இருக்கிறார்கள்.
அவர்கள் பெண்களை இழிவுபடுத்துவது; அவர்கள் மாண்புகளை நிந்தனை செய்வது, பழக்க வழக்கங்களைப் பரிகாசம் செய்வதுபோல சில காரியங்கள் செய்கிறார்கள். அவற்றில் பிரச்னைகள் வந்தால் ஓடி மறைந்துபோய் விடுகிறார்கள்.
எதிர்ப்பு இலக்கியம் என்பது எழுதப்படுவது, சொல்லப்படுவது மட்டுமல்ல. வாழ்க்கையும் எதிர்ப்பு இலக்கியந்தான். சாக்ரடீஸ் தன் வாழ்நாளில் ஒருவரிகூட எழுதவில்லை. ஆனால், அவர்தான் எதிர்ப்பு இலக்கியம் என்பதில் அறியப்பட்ட முன்னோடி.
புலி பூனையின் குடும்பத்தைச் சார்ந்தது. ஆனால், பூனையால் ஒருபொழுதும் புலியாகிவிட முடியாது. அது எதிர்ப்பு இலக்கியத்திற்கும் பொருந்திப் போய் விடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com