வேலையிழப்பும் வேலைவாய்ப்பும்

"நவீனமயமாக்குதல்' என்ற சொல் அனைத்து துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"நவீனமயமாக்குதல்' என்ற சொல் அனைத்து துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது காலத்தின் கட்டாயம் என்றும் நியாயப்படுத்தப்படுகிறது. இதற்கு தொழில் துறையும் விதிவிலக்கல்ல. குறைந்த பணியாளர்களைக் கொண்டுள்ள தொழிலகங்களும் நவீனமயமாக்கம் என்ற பெயரில் இயந்திரங்களைப் பயன்படுத்தி, பொருள்களை உற்பத்தி செய்து, மனித உழைப்புக்கு வேலையில்லாமல் செய்து விடுகின்றன.
தாராளமயமாக்கம் எப்போது இந்தியாவுக்குள் நுழைந்ததோ, அப்போதிருந்தே இந்தப் பிரச்னை எழத்தொடங்கி விட்டது. மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் ஏற்கெனவே வேலையில்லா பிரச்னை அதிகமுள்ள நிலையில், பணியில் இருப்போர் திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்படுவது இன்று சாதாரணமாகி விட்டது. இதற்கு, இயந்திரமயம்தான் காரணம். 10 மனித உழைப்புகள் 8 மணி நேரத்தில் செய்யும் ஒரு பணியை ஓர் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் செய்துவிடுகிறது. அதனால், அதிகமானோரைப் பணியில் அமர்த்த வேண்டிய அவசியமில்லை.
தற்போது நிறுவனங்களில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதும் குறைந்து வருகிறது. பெரும்பாலும், ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகின்றனர். இதன் மூலம் வேலை நிறுத்தம், தொழிலாளர் பிரச்னை ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் நிர்வாகத்துக்கு இல்லை. 
தற்போது, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியதால், பொருள் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு, ஏற்றுமதி குறைந்தது. அதனால் வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் இயந்திரமய மாக்கலால், இந்தியா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் பணியில் இருப்போர் கட்டாயமாகப் பணியில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படும் என்ற அபாயச் சங்கு தற்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இப்பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று ஓர் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 
அதாவது, 2030-களில் தொழில் நிறுவனங்களில் முக்கியப் பணிகளை இயந்திரங்களே மேற்கொள்ளும். அதிகளவில் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இயந்திரங்களின் பங்கு அதிகம் இருக்கும். இதனால், அந்த நாடுகளில் வேலையிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பன்னாட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2030-களில் இந் நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 10 சதவீதப் பணியை இயந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் மேற்கொள்ளும். இவை பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளும் என்றும், குறுகிய காலத்தில் இவற்றின் பங்கு சுமார் 20 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 100 பேர் பணிபுரியும் ஒரு தொழில் நிறுவனத்தில் 20 பேரின் பணியை இந்த ரோபோக்கள் எடுத்துக்கொண்டு, அந்த 20 பேருக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும். 
பத்தாண்டுகளில் நிறுவனம் வளர்ச்சியடைந்தாலும்கூட தேவைப்படும் பணியாளர்களின் தேவையை இயந்திரங்கள் ஈடு செய்யும். இப்படிக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, உலக அளவில் சுமார் 40 கோடி பேர் வேலை இழக்கக்கூடும். இதில், ஜப்பானில் 26% பேரும், ஜெர்மனியில் 24 % பேரும், அமெரிக்காவில் 23% பேரும், சீனாவில் 16 % பேரும், இந்தியாவில் குறைந்தபட்சமாக 9 % பேரும் வேலையிழப்பர். 
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையில், வேலைவாய்ப்பு பெருகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவில் தொழில்நுட்பவியலாளர்கள், ஆசிரியர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் தேவை அதிகமாக இருக்கும்.
சுமார் 60 லட்சம் புதிய தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதே காலகட்டத்தில் ஜப்பானில் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களின் தேவை குறையும். அதுபோல, ஜெர்மனி, சீனா, அமெரிக்காவில் சாதாரண வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளைச் செய்வோரின் தேவை குறையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியா தொழிலாளர்கள் சார்ந்த நாடு, அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதனால், வேலையிழப்பு சதவிகிதம் என்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதாவது, அதிகமாக ஊதியம் அளிக்கும் சீனா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள்தான் அதிகளவில் இயந்திரங்களைப் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில் தற்போது 5 சதவீதமாக உள்ள 65 வயதைக் கடந்தோர் எண்ணிக்கையானது, அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 8 சதவீதமாகவே அதிகரித்திருக்கும். சீனாவில் இந்த சதவீதமானது இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவில் வரும் ஆண்டுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை 
அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள் வரும் காலாண்டில் தங்களது நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன. நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் 15 சதவீத அளவுக்கு பணியாளர்களை புதிதாக நியமிக்க உள்ளன. அதுபோல, உற்பத்தித் துறையைச் சார்ந்த நிறுவனங்களும் 16 சதவீத அளவுக்கு பணியாளர்களை நியமிக்கவுள்ளன. சுரங்கம், கட்டுமானம், பொது நிர்வாகம், கல்விப் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் 17 சதவீதமும், சேவைத் துறை 25 சதவீத அளவுக்கும், மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் 18 சதவீத அளவுக்கும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன. இப்போதைக்கு வேலைவாய்ப்பு இழப்பை நாம் எதிர்கொள்ளத் தேவையில்லை என்றாலும், வேலைவாய்ப்பை அதிகரித்து வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தம் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com